நுணலும் தன் வாயால் கெடும். இது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ... வைகோவுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.
மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுகிறார், காவிரி உரிமையை நிலைநிறுத்தப் போராடுகிறார், முல்லை பெரியாருக்காக கேரள எல்லைக்கே சென்று முற்றுகையிடுகிறார், மதுக் கடைகளுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்று அவருடைய அனைத்து பாஸிடிவ் பக்கங்களையும், தன் உணர்ச்சிவசப்பட்ட பேச்சால் அவரே குலைத்துக் கொள்கிறார். அண்மை பேச்சு, கருணாநிதியை அவர் குலத்தொழிலை செய்ய பரிந்துரைத்தது. மன்னிக்கவும் வைகோ. இதை உங்கள் உணர்ச்சிவசப்பட்ட மற்றொரு பேச்சு என்று சுருக்கி கொள்ள முடியாது... இது பண்ணையார் மனோபாவம். தான் மட்டுமே சிறந்தவன், மேலானவன் என்று நினைக்கும் பண்ணையார் மனோபாவம் அன்றி வேறில்லை.
நீங்கள் எந்த வகை வைகோ...?
நீங்கள் எந்த வகை வைகோ...?
வரலாற்று தொடர்ச்சியில் மனித மனங்களில் சீல் படிந்துள்ள சாதிய உணர்வு, உங்களுக்குள்ளும் புதைந்து கிடக்கிறதா? அரசியலைத் தாண்டி உங்கள் மீது அபிமானம் வைத்தவர்கள் அனைவரும், ஒரு கணம் உங்களின் அந்த பேச்சை கேட்டதும், அதிர்ந்துதான் போயிருப்பார்கள். நீங்கள் மாற்றுத் தலைவர் அல்ல... மற்றுமொரு தலைவர் என்பதை உங்களின் உரையின் மூலமே கண்டு கொண்டுவிட்டார்கள்!
வைகோ பேசியது சரியா திருமா...?
ஊடகவியலாளர் சந்திப்பில், வைகோ பேசியது சரியா...? காட்சி ஊடகத்தில் பார்த்த எங்களை விட பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவருக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்த உங்களுக்கு அவர் பேசியது நன்கு கேட்டிருக்கும். கேட்கவில்லை என்றால், அவரது மொழிகளில் அப்படியே சொல்கிறேன், “அவர் நாதஸ்வரம் வாசிக்கிற தொழிலுன்னு தெரியும்... அதனால சொன்னேன்...” என்கிறார். மறைமுகமாக அவரது சாதியைக் குறிப்பிடுகிறார். “நீங்களே ஒன்றை நினைத்து கற்பிதம் செய்து கொள்ளாதீர்கள்...” என்று சொல்லாதீர்கள் திருமா. எங்கள் எல்லாரையும் விட, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியல் விடுதலையை முன்னெடுக்கும் உங்களுக்கு, அந்த சொற்களின் வலி நன்கு தெரியும். எந்த அரசியல் காரணங்களுக்காகவும் மூடி மறைத்து, சொற்கள் விளையாட்டில் ஈடுபடாமல், நேரடியாக சொல்லுங்கள் வைகோ பேசியது சரியா...?
வைகோ பேசியது சரியா இடதுசாரிகளே...?
வைகோ பேசியது சரியா இடதுசாரிகளே...?
வைகோ பேசியது சரியா விஜயகாந்த்...?
மக்கள் நலக் கூட்டணியினரே... தேர்தல் வெற்றியும், அதற்கான கூட்டணியும்தான் முக்கியமென்று, நீங்கள் கருதிவிட்டீர்களா...? கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டீர்களா...? நீங்களும் மற்றுமொரு அரசியல் அணியைப் போல்தான் நடந்து கொள்வீர்கள் என்றால், நீங்கள் எதற்கு...? இருக்கிற பிணிகளே போதுமே!
தேர்தல் வெற்றியை அறுவடை செய்வதை விட, மக்களின் நம்பிக்கையைதான் நீங்கள் அறுவடை செய்ய வேண்டும். மக்களுக்கு அரசியல் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியை நீங்களும் அதிகமாக்கிவிடாதீர்கள்!
No comments:
Post a Comment