Monetize Your Website or Blog

Saturday, 14 May 2016

விவசாயி ஜெயலலிதா... சமூக சேவகர் கருணாநிதி... சுயதொழில் விஜயகாந்த்! - உங்கள் வேட்பாளர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?



உங்கள் தொகுதியின் வேட்பாளரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் மீது என்ன வழக்கு இருக்கிறது? தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒருவர், கடந்த சில வருடங்களில் எவ்வளவு சொத்து குவித்திருக்கிறார்?

அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இத்தகவல்கள், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்! ஆனால், இப்படி.. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் சொத்து விவரம், குற்றப் பின்னணி போன்ற அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால், எப்படி இருக்கும்?
மலைக்க வைக்கும் இந்த வேலையை அசாத்திய உழைப்புடன் சாதித்திருக்கிறார்கள் ‘அறப்போர் இயக்கத்தினர்’. உழைப்பின் களைப்பும் மகிழ்ச்சியின் மலைப்புமாகப் பேசினார் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ்...

 
’’ 'ஜனநாயக சீர்திருத்த அமைப்பு',  இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படும் அமைப்பு. அந்த அமைப்புடன் இணைந்தே நாங்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டோம். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம், குற்றப் பின்னணி, அவரது தொழில் விவரம், கல்வித் தகுதி, முந்தைய தேர்தலில் அவருடைய சொத்துமதிப்பு போன்ற தகவல்களை அவர்கள் தாக்கல் செய்த மனுக்களிலிருந்து சேகரித்தோம்.
இத்தகவல்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடத் தாமதமானது. ஆனால், 135 தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து இரவும் பகலுமாகப் பணி புரிந்து, தேர்தலுக்கு முன்னரே அனைத்து தகவல்களையும் ‘வாட்ஸ் அப் கார்டு’ வடிவில் உருவாக்கினோம். தகவல் அளிக்காதவர்களின் விவரங்கள் மட்டும் இடம்பெறவில்லை.  

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது தொழில் சமூக சேவை, ஜெயலலிதாவுக்கு வருமானம் தரும் தொழில் விவசாயம், விஜயகாந்த் சுய தொழில் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது. இப்படி பல தகவல்கள். அதே சமயம் கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயம் செய்தே ஜெயலலிதா 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சர்ய அதிசயமாக இருந்தது. அந்த தொழில் ரகசியங்களை தமிழக விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டாலே, அவர்கள் வாழ்விலும் வளம் பொங்குமே!’’ என்று கலகலவென சிரிக்கிறார் ஜெயராம் வெங்கடேஷ். 

மேலும் இது குறித்து பேசிய அறப்போர் இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான சுபத்ரா,  ''தேர்தல் ஆணையத் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அது சாமான்ய மக்களுக்கும் புரியும் விதமாக தமிழில் மாற்றுவது அசகாய சவாலாக இருந்தது. இதற்காக பகலில் இந்தியாவில் இருக்கும் அணியினரும், இரவில் அமெரிக்காவில் உள்ள தன்னார்வத் தொண்டர்களும் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாகப் பணியாற்றினார்கள். இதன் நோக்கம் என்னவெனில், ஒருவர் வாக்களிக்குமுன் அவரது தொகுதி வேட்பாளரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்!’’ 

பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்து, குற்றப் பின்னணிகளே இவ்வளவு என்றால், கணக்கில் வராதவை எவ்வளவோ...!

நம் வேட்பாளர் குறைந்தபட்ச ஒழுங்குடன், நேர்மையுடன் இருக்கிறாரா என்பதை இந்த தகவல்கள் அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்கிறது.
நம் வேட்பாளர் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்... 100 சதவிகித நேர்மையானவரைத் தேர்ந்தெடுப்போம்! ஏனெனில், நம் எதிர்காலம்... நம் கைகளில்தான் இருக்கிறது! 

பின்குறிப்பு: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றிய நல்லது/கெட்டதுகளை பகிர்ந்து கொள்ள, அவரைப் பற்றிய தகவல் அடங்கிய கார்டினை #WhoIsMyCandidate என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் பகிருங்கள். இணைவோம்... விழிப்பு உணர்வு பரவச் செய்வோம்! 



No comments:

Post a Comment