Monetize Your Website or Blog

Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Friday, 26 August 2016

காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

த்திய அரசின் பாராமுகம், கர்நாடகா அரசின் தந்திரம், தமிழக அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றால் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது.
210 ஆண்டுகளைக் கடந்தும் கொதிநிலையில் இருக்கிறது காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அந்த மாநிலத்துக்குள்ளேயே 800 கி.மீ பயணித்து, தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியே பயணத்தைத் தொடங்குகிறது. ஒகேனக்கல் அருவி வழியே மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.


இயற்கை தந்த கொடையான காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான தகராறு நீண்ட நெடிய காலமாக முடிவுக்கு வராமல் நீடித்துவருகிறது. தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்பப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, வெளிவந்து 10வது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு, பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்து நாளுக்குநாள் விலகிச் செல்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தில் தொடர்புடைய காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான சிக்கலை, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பு, தீர்ப்புக்குப் பின்பு என்றே அணுகலாம்.
காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கு முன்பு...

காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பிருந்தே மைசூர் அரசாக இருந்தபோதிலிருந்தே தமிழகத்துக்கான உரிமையைத் தருவதில் கர்நாடகா மாநிலத்தின் பிடிவாதங்களும், மறுப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 1807-ம் ஆண்டு அப்போது இருந்த மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையேதான் காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 87 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஆங்கில அரசின் கீழ் 1892-ல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அந்தத் திட்டத்தைச் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 1910-ல் மைசூர் அரசு, கன்னம்பாடி என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கேட்டது. (இந்த இடத்தில்தான் பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைக்கப்பட்டது.) இதற்கு, சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆங்கிலேய அரசு தலையிட்டு, ‘கன்னம்பாடியில் 11 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவைப் புறந்தள்ளிய மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட ஆரம்பித்தது. இரு அரசுகளுக்குமிடையே முரண்பாடு உருவானதால் கிரிஃபின் என்பவரை நடுவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. ஆனால், அவராலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. மீண்டும் இரண்டு அரசுகளுக்கும் பிரச்னை வெடித்தது. 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1929-ல் ஒரு துணை ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன்படி, ‘மைசூர் அரசு தனது எல்லைக்குள் திட்டமிட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைப்பது என்றும், சென்னை மாகாண அரசு மேட்டூர் அணை கட்டிக்கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரியின் சிக்கல்கள் மேலும் தீவிரத்துடன் தொடர்ந்தன.
1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 1972-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்படி 1976-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரி இரு மாநிலங்களும் சேர்த்து 393 டி.எம்.சி முதல் 414 டி.எம்.சி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதை அமல்படுத்த கர்நாடகா அரசு முன்வரவில்லை.

நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசால் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு மே மாதம் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னது என்ன?

இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் முதல் பிப்ரவரி வரை 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்கள். தமிழகத்தின் பங்கில் இருந்து பாண்டிச்சேரிக்கு 6 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.


மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தங்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்றத்தின் நீதிபதிகள் அப்போதே கூறினர். அதுதான் இப்போது நடக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்பு...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான உடன் அதற்கு கர்நாடகா அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இங்கிருந்துதான் கர்நாடகா அரசின் இழுத்தடிக்கும் அரசியல் தொடங்கியது என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், நடுவர் மன்றத்தில்தான் அப்பீல் செய்து தீர்வுகாண வேண்டும். நடுவர் மன்றத்திலேயே கர்நாடகா அரசு அப்பீல் செய்திருந்தால் 6 மாதங்களுக்குள் பிரச்னை முடிவடைந்திருக்கும். பிரச்னையைத் உடனடியாகத் தீர்க்க விரும்பவில்லை என்பதால்தான் கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அமல்படுத்தப்படாததற்கு கர்நாடகா அரசின் தந்திரம்தான் காரணம்.
காவிரிப் பிரச்னை இப்போது...

தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகா அரசு தராததால், காவிரி டெல்டா பாசன சாகுபடிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகக் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி நடக்கவில்லை. இப்போது 6-வது ஆண்டாகவும் குறுவைச் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் இந்த ஆண்டும் தீவிரம் அடைந்துள்ளன. சுதந்திர தினத்தன்று பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “மேகதாட்டூ அணை கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் மாநிலத்தில் மழை இல்லை. தண்ணீர் இல்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியும்” என்று கைவிரித்திருக்கிறார்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கம்போல உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. மறுப்புகளும், பிடிவாதங்களும், வழக்குகளும் எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுமா, என்கின்றனர் விவசாயிகள்.
நடுவர் மன்றத்துக்குப் போகாதது ஏன்?
காவிரிப் பிரச்னையில் என்ன நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘காவிரிப் பிரச்னையில் முக்கியமான திருப்பமாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. தீர்ப்பு வந்த உடன் அப்போது இருந்த தி.மு.க அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘தீர்ப்பில் குறைபாடு இருக்கிறது. நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்’ என்று கூறினர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க பிரதிநிதி, ‘உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். மேலும், கர்நாடகா தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். எனவே, தமிழகம் மட்டும் காவிரி நடுவர் மன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்காது என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது.

அதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. முதலில் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றம் போனது தவறானது. இதனால்தான் தமிழக அரசும் போனது. அப்போதே உச்ச நீதிமன்றம், இரண்டு அரசுகளிடமும், நீங்கள் நடுவர் மன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதைச் சொல்லவில்லை.
அரசிதழில் வெளியிட்டு என்ன பயன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதனால் என்ன பயன் விளைந்தது என்பதுதான் எங்கள் கேள்வியாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் கடந்த 40 வருடங்களில் 12 வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இந்தப் பணத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியிருக்கலாம். கர்நாடகா அரசு இப்போது புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, அங்கு உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளையும், பாசன மேம்பாட்டையும் அதிகரித்துவிட்டது.
அரசியல் ஆதாயம் கருதும் மத்திய அரசு!

ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணையைக்கூடத் தூர்வாரவில்லை. அதன் உயரத்தையாவது அதிகரித்திருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. காவிரிப் பாசனப்பகுதி வாய்க்கால்களையும் தூர் வாரவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும் ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ‘நான்தான் செய்கிறேன்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். ஆனால், எங்கு அரசியல் வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு இருக்கிறது” என்றார்.
தமிழகம் என்ன வடிகாலா?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு சொல்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அந்த மாநிலத்தில் கபினி அணை உள்ளிட்ட 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. நமக்கான உரிமையை அவர்கள் தர வேண்டும். ஆனால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரைத்தான் அவர்கள் திறந்துவிடுகிறார்கள். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். நடுவர் மன்றத் தீர்ப்பை அவர்கள் கடுகளவுகூட மதிப்பதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசும் ஏற்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு ஏற்பட உதவி செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறது.
ராஜதந்திரம் இல்லை!

‘நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல் ஒன்றும் செய்யமுடியாது’ என்று முன்பு மத்திய அரசு கூறி வந்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நீர் திறப்பு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிரச்னை இருக்காது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது கர்நாடகா அரசுடன் ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசுடன் பேசி இருக்கிறார்” என்றார்.
செயலற்ற தமிழக அரசு!
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும்” என்கிறார். மேலும் அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழில் செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிழைப்புத்தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தச் சூழலில் நமது தமிழக அரசு காவிரிப் பிரச்னையை ஒரு கிளரிக்கல் வேலையைப் போலத்தான் அணுகுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 28-ல் வழக்கு விசாரணை நடந்தபோது, அடுத்த விசாரணை ஜூலை 18-க்குத் தள்ளிவைக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றோ, அதற்குள் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. ஜூலை 18-ம் தேதி வழக்கு வந்தபோது, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போதும் தமிழக அரசு வக்கீல் ஒன்றும் பேசவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறியாளர் குழுவை கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி, அங்குள்ள அணைகளின் நிலவரத்தை ஆய்வு செய்து நமக்கான உரிமையை கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


ஆக, காவரி நதிநீர் விவகாரம் அப்போதும், இப்போதும் தீர்வை நோக்கி நகராததற்குக் கர்நாடகா அரசின் பிடிவாதம் மட்டும்தான் காரணம். அந்தப் பிடிவாதத்தை அரசியல் ஆதாயம் கருதி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக அரசோ, இதனை ஒட்டுமொத்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதாமல் தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறது.
- கே.பாலசுப்பிரமணி
காவிரி டெல்டா பகுதிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 14.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்றன. காவிரி டெல்டாவில், குறுவை பருவத்தில் (மே - ஜூலை) 1.68 லட்சம் ஹெக்டேரிலும், தாளடிப் பருவத்தில் (பிப்ரவரி - ஏப்ரல்) 1.44 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் - ஜனவரி) 2.99 லட்சம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல் தவிர, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
காவிரியின் கிளை நதிகளில் கர்நாடகா அமைத்த அணைகள்!

காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான ஹேமாவதி ஆற்றில், ஹேமாவதி அணையை கட்டி இருக்கின்றனர். அதேபோல Harangi என்ற கிளை ஆற்றின் குறுக்கே, Harangi அணையை அமைத்துள்ளனர். கேரளாவில் உற்பத்தி ஆகி கர்நாடகா வழியே பாயும் கபினி ஆறு, காவிரி ஆற்றில் சேருகிறது. இந்த இடத்தில்தான் கபினி அணையை கர்நாடகா அரசு அமைத்துள்ளது. இப்போது மேகதாட்டூ என்ற இடத்தில், மேலும் ஓர் அணைகட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் தண்ணீர் மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52.65 டி.எம்.சி-யாகவும் இருக்கும்போது பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர், ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். 236 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.




Thursday, 25 August 2016

இத்தாலி நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது!

இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.


இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பீதி அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து கொண்டு இன்னமும் வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு 247 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அம்ரியா, மார்சே, லாஸியோ ஆகிய பகுதிகள், கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவை. அந்த நிலநடுக்கத்தில் 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.




Thursday, 18 August 2016

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.


கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.


ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.


தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.



நெல்லிலிருந்து பூவுக்கு... அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய்... செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி..!

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை... பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.


பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ''ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.
'பசுமை விகடன்' படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.
இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.  
நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்... அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு... நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.


தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.
'இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்'' என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.
அது இங்கே பாடமாக...
ஒரு விதை... ஒரு நாற்று!
செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.
ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து... ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).
எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2 அடி இடைவெளி !
நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !
18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து... பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.
50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ''இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.
என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்'' என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு...
40 ஆயிரம் லாபம் !
''நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.
நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.


வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.
புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்... நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்'' என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,
''வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்'' என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
 தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 98659-38452.



25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் ! மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...

'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  


'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!  
''எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் இருக்கு. மணல் கலந்த செம்மண் பூமி. மஞ்சள், மக்காச்சோளம், கடலை, கரும்பு, புகையிலைனு எதைப் போட்டாலும் நல்லா வரும். ஆனா, தண்ணிதான் கொஞ்சம் பத்தாக்குறை. கிணறு, போர் ரெண்டும் இருந்தாலும், கொஞ்சம் தட்டுப்பாடுதான். கிடைக்கிற தண்ணியை வெச்சு நாலு ஏக்கர்லயும் ஒரே சமயத்துல சாகுபடி பண்ண முடியாது. 'குறைவான தண்ணியை வெச்சு என்ன பயிர் பண்ணலாம்?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப மல்பெரி விவசாயத்தைப் பத்தி என் மனைவி மகேஸ்வரி சொன்னாங்க'' என முன்னுரை கொடுத்த மூர்த்தி தொடர்ந்தார்.
''பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கியமானது, மல்பெரி. மனைவி கொடுத்த தைரியத்துல இதை வளக்க ஆரம்பிச்சு பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கி, வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மல்பெரி செடிகள்ல பல ரகங்கள் இருக்கு.
ஆரம்பத்துல 'எம்.ஆர்-2’ங்கிற ரகத்தைத்தான் வளத்தோம். அப்பறம், 'வி-1’ங்கிற ரகத்தை பட்டுவளர்ச்சித் துறை விஞ்ஞானிங்க வெளியிட்டாங்க. இதுல புரதம் அதிகமா இருக்கறதோட, மகசூலும் அதிகம் கிடைக்குது. இதை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். ஏழு வருஷம் வரைக்கும் அறுவடை செய்யலாம்'' என்றவரை இடைமறித்து, தான் பேச ஆரம்பித்தார், மகேஸ்வரி.
''இன்னிய தேதியில் வெண்பட்டு உற்பத்தியில கொடிகட்டி பறக்கிறது, கோபிச்செட்டிப்பாளையம் ஏரியாதான். ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வெண்பட்டு உற்பத்தியில ஈடுபட்டு இருக்காங்க. அதனால மல்பெரி செடி சாகுபடியும், தேவையும் அதிகரிச்சுட்டே வருதுங்க. குறிப்பா, வி-1 ரகத்துக்கு அதிக தேவை இருக்கு.
பொதுவா, மல்பெரிக்கு விதைக் கரணைகளைத்தான் நடுவாங்க. ஆனா, விதைக்கரணைகளை நடும்போது நிறைய பேருக்கு சரியா வளர்றதில்லை. அதுக்கு தீர்வு கேட்டப்போ 'நாற்று முறையில நடவு செஞ்சா நல்லா வரும்’னு அதிகாரிகள் சொன்னாங்க. நாமளே ஏன் நாத்து உற்பத்தி பண்ணக்கூடாதுனு தோணுச்சு. அதை வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ ரெண்டு பேருக்குமே அது சரினு பட்டது. அதனால, வீட்டுக்குப் பக்கமா இருக்குற 25 சென்ட் நிலத்துல வி-1 ரகத்தை நட்டு நாத்து உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம்' என்ற மகேஸ்வரி நிறைவாக,
'இந்த ரகத்துல அதிகமான புரதச்சத்து இருக்கறதால கறவை மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதை தீனியா கொடுக்குறாங்க. இதைச் சாப்பிடுற மாடுகள் அதிகமா பால் கறக்கும். ஆடுகள் வேகமா வளரும். அதனால, நிறைய பேருக்கு தேவை இருக்கறதால, நாத்து விற்பனைக்கு பிரச்னையே இல்லை. ஒரு நாத்து 2 ரூபாய்னு வித்துகிட்டிருக்கோம்.
25 சென்ட் மூலமா அஞ்சு மாசத்துல ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக 80 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடை கொடுத்தார்.


 'இப்படித்தான் நாத்து உற்பத்தி செய்யணும்...’
நாற்று உற்பத்தி செய்யும் முறையைப் பற்றி மூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...
நாற்று உற்பத்திக்காக விதைக் கரணைகளை நடவு செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. தென்னை நிழல் இருக்கும் பகுதியில்கூட நாற்றங்கால் அமைக்கலாம். 25 சென்ட் நாற்றங்காலில் 4 டன் தொழுவுரம், 5 கிலோ நுண்ணுயிரி உரம் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிலத்தை சமப்படுத்தி, அரையடி இடைவெளியில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரில், 4 அங்குல இடைவெளியில், விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். பாசனத்துக்கு தெளிப்புநீர் முறையை அமைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை பாசனம் செய்து வர வேண்டும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, களை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக, எந்த ரசாயன உரங்களையும் செடிகளுக்கு இடக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வேர் அழுகல் நோய் தாக்கிவிடும். தெளிப்புநீர்ப் பாசன முறையில் பூச்சிகள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லிகள் தேவையே இல்லை. அப்படியே பூச்சிகள் தாக்கினாலும், ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டி கட்டுப்படுத்தி விடலாம்.
130 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளைப் பறித்து விற்பனை செய்யலாம். அனைத்து நாற்றுக்களையும் ஒரே சமயத்தில் பறிக்கக் கூடாது. உதாரணமாக, 50 ஆயிரம் நாற்றுகள் இருந்தால்... முதலில் 20 ஆயிரம், அடுத்து 10 ஆயிரம், கடைசியாக 20 ஆயிரம் என்ற கணக்கில் பறிக்க வேண்டும்.


தொடர்புக்கு, மூர்த்தி, அலைபேசி: 98427-23677

Tuesday, 16 August 2016

மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம்!


மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. மனிதர்களின் எதிர்காலத்தை காப்பீடு முடிவுசெய்வதுபோல் பயிர்களுக்கும் காப்பீடு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.அந்த வரிசையில் மரங்களுக்கான இன்சூரன்ஸ் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


அடிப்படை நிபந்தனைகள்
* இன்சூரன்ஸ் என்றதும்,  'இருக்கிற செலவில் இதுவேறயா' என எரிச்சலாகாதீர்கள். உற்பத்திச் செலவில் வெறும் 1.25 சதவீத தொகையை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது.
* தமிழ்நாட்டில் ஏழு வகையான மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. தைலம், சவுக்கு, சூபாபுல், சிசு, மலைவேம்பு, தீக்குச்சி , குமிழ் போன்ற மரங்களை பயிர் செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
* இயற்கையாக ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள், வன விலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், புயலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டம் பொருந்தும்.
* இவை மட்டுமல்லாது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டமானது பொருந்தும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம்.
* 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டிற்கான பிரிமியம் தொகையை நாம் இன்சூரன்ஸ்  நிறுவனத்திடம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட இடர்ப்பாடுகள் நமக்கு நேரிடும்போது நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் நமது நஸ்டத்தை சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


* தமிழகத்தில் இந்தத் திட்டமானது தமிழ்நாடு காகிதக் கூழ் நிறுவனம் மூலம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறை சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி இது வரை சுமார் 5000 ஏக்கர் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் பரப்பளவும் அதிகரித்ததோடு மரங்களின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரத் தேவைகளை தாமே நிவர்த்தி செய்து கொள்கின்றன.
* இத்திட்டத்தில் பயன்பெற நாம் ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.
இதில் உறுப்பினராக சேர விரும்புவோர், முதல்வர், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், மேட்டுப்பாளையம் – 641 301 ஐ தொடர்பு கொள்ளலாம்.




Saturday, 13 August 2016

ஆனால்... அது வெறும் யானைகளின் அழிவாக மட்டும் இருக்காது...!

ஹூம்ம்ம்ம்ம்... ஓய்வாக இருக்கிறீர்களா...? வெள்ளிக்கிழமை, எல்லோரும் டெட்லைன் டென்செனில் இருப்பீர்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்து இருப்பீர்களென்றால், டிக்கெட் போடுகின்ற அவசரத்தில் இருப்பீர்கள். அதுவும் உங்கள் தேவையை மனதில் வைத்து, பேருந்து சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் நிர்ணயித்து இருப்பதை பார்த்து கையறு நிலையில் கோபம் அடைந்து இருப்பீர்கள்.  உங்க வேலை நெருக்கடி புரிகிறது, ஆனால்,  ஒரு மூன்று நிமிடம் ஒதுக்க முடியுமா...?


“என்ன தலை போற விஷயமா...அப்புறம் பேசிக்க முடியாதான்னு கேட்கிறீங்களா...?”- ஆமாம், உயிர் போகிற விஷயம்தான். உங்க கவனத்தை ஒரு மூணு நிமிடம் மட்டும் தாங்க. உங்க கணிணியில் alt + tab கீயை அழுத்தாமல், ஒரு மூன்று நிமிடத்தை மட்டும் தாருங்கள். உங்க எதிர்காலத்தை, நம்ம எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்.
“என் எதிர்காலத்தை பற்றி பேச நீ யாரு...?” ன்னு நீங்க சொல்றது கேட்கிறது. எதிர்காலம்ன்னு நான் குறிப்பிடுவது, உங்க கனவுகள், அபிலாஷைகளை இல்லை. அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்காலம் என்று  குறிப்பிடுவது, இந்த புவியில நம் இருப்பு குறித்த எதிர்காலத்தை. நம் பிள்ளைகளின் புன்னகை குறித்த எதிர்காலத்தை. நம் சந்ததியின் நல்வாழ்வு குறித்த எதிர்காலத்தை. இதைப்பற்றி இப்ப நாம பேசியே ஆக வேண்டும்.
இதைப் படிக்கிற உங்களுக்கும் எனக்கும் எந்த நேரடியான தொடர்பும் இல்லை என்றாலும், இந்த காற்றை, கடலை, புவியை நாமதான் பங்கிட்டுக் கொள்கிறோம். அதனால நாமதான் இதைப் பற்றி விவாதித்தே ஆக வேண்டும்.இன்று உலக யானைகள் தினம். தேச எல்லைகள் தாண்டி கொண்டாடப்படுகிறது. அதனால், இந்த விஷயத்தை இன்று பேசுவதுதான் பொருத்தமா இருக்கும்.

அழிவின் விளிம்பில் யானைகள்:
நம்ம எல்லோருக்கும் யானைகள் குறித்து ஒரு அனுபவம் இருக்கும்தானே... சிறு வயதில் யானையை பார்த்து சிரித்து இருப்போம், பயந்து அழுது இருப்போம்... கம்பீரமா அது மேல உடகார்ந்து பெருமைபட்டு இருப்போம். அதுவும் குறிப்பா அடர் காட்டுல பயணம் போகும் போது, நாம யாராவது கூட்டமா ஒரு யானைக் கூட்டத்தை பார்த்து இருந்தா... எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்போம்... எவ்வளவு பெருமையா நம் நண்பர்கள் கூட பகிர்ந்து இருப்போம். அதுவும் நாம் அப்போது ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து இருந்தோம் என்றால், அது நம்ம பொக்கிஷமாக இருந்திருக்கும்தானே...?
எப்போதுமே யானைகள் நமக்கொரு அலாதியான அனுபவத்தையே தந்து இருக்கிறது. ஆனால், நமக்கு சந்தோஷத்தை தரும் யானைக் கூட்டம் இப்போது சந்தோஷமாக இல்லை. சரி, சந்தோஷத்தைக் கூட  விடுங்கள்... அதில் பெரும்பாலும் இப்போது உயிரோட கூட இல்லை.
ஒரு காலத்தில்... மன்னிக்கவும். ஒரு காலத்தில் என்று உரையாடலை துவங்கினால், நீங்க சங்க காலம் என்ற பொருளில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  ஒரு நூறு வருஷத்துக்கு முன்புதான்,  நாம வாழுற இதே உலகத்துல, மில்லியன் கணக்கில் ஆப்ரிக்க யானைகளும், லட்சத்திற்கும் மேலாக ஆசிய யானைகளும் இருந்தன. ஆனால், இப்போது அதனுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா, ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்திற்கும் கீழ், ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35,000 க்கும் கீழ்தான்.  இதே வேகத்துல இன்னும் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துக் கொண்டு இருக்கிறது. சொல்லமுடியாது, நம் பேத்தியோ, பேரனோ பிறக்கும்போது. இங்க ஒரு யானைக் கூட இல்லாமல் போகலாம். ஆனால், யானைகள் இல்லாமல் போவது வெறும் யானைகளின் அழிவாக மட்டும் இருக்காது. அது இந்த சூழலியலின் மொத்த அழிவாகவும் இருக்கலாம்.
இதை ஏதோ நான் மேம்போக்காக சொல்லவில்லை. இதை ஆராய்ந்து சொல்வது ஃப்ளோரிடா பல்கலைகழகத்தை சேர்ந்த சூழலியலாளர் டிரிவோர் காவ்லின் . சூழலியல் அழிவுனா... அது வேற்றுக் கிரகவாசிகளின் அழிவு இல்லை. அது நம்ம அழிவு.
யானைகள் அழிவும், நம்ம அழிவும் வெவ்வேறானது அல்ல:


ஏன் யானைகள் அழிவும், நம்ம அழிவும் வெவ்வேறானது இல்லை என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள்...? இன்று நாம பயணிக்கிற பல பாதைகள் யானைகள் உண்டாக்கியவை. ஆமாம், யானைகள் பாதைகளை மட்டும் உண்டாக்கவில்லை. காட்டையே உருவாக்கியது யானைகள்தான்.  இதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் யானைகளின் உணவு பழக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு உண்பவை. இவ்வளவு உண்பதால், அது மற்ற விலங்கினத்தின் உணவை பறித்துக் கொள்கிறது என்று அர்த்தம் இல்லை. ஆம், அவை வனத்தில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு செரிக்காத உணவை உண்பவை. அவை சாப்பிட்ட உணவு செரித்து, அது சாணமாக, காடுகளில் அது பயணிக்கும்  பல இடங்கள் விழும். அதில் உள்ள விதைகள்தான் காடெங்கும் பரவி, செடிகள் துளிர்விட்டு, மரமாகி, காடாகும். ஆக, யானைகளின் அழிவென்பது காட்டின் அழிவு.
இது ஏதோ, உங்களுக்கு யானைகளின் மீது ஒரு பரிதாபத்தையோ அல்லது பச்சாதாபத்தையோ ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக எழுதப்பட்ட வரிகள் இல்லை. தாய்லாந்தில் யானைகள் அழிய அழிய அரிதான மர வகைகளும் அழிந்து இருக்கின்றன. யானைகளின் அழிவு, மரத்தின் அழிவு என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஆம், இப்புவியை ஒரு அடர்ந்த மரமாக நீங்கள் உருவகப்படுத்தினீர்கள் என்றால், இப்போது அதன் வேர் கருக துவங்கி இருக்கிறது. வேர் கருகினால், அந்த மரத்தின் ஒரு இலையாக இருக்கும் இந்த மனித குலமும் சருகாகி மொத்தமாக விழும்.
மக்களை காட்டை விட்டு வெளியேற்றுங்கள்:
“ஆமா... நீங்க சொல்றது சரிதான்... காட்டுல வாழ்ற மக்கள்தான் யானைகளை கொல்றாங்க. அவங்களை காட்டைவிட்டு வெளியேத்திட்டா எல்லாம் சரியாகிடும்..” என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். ஆம், உலகம் முழுவதும் உள்ள பல தரவுகளை பார்த்ததில், காட்டில் பல காலமாக வாழ்கிற அதன் பூர்வகுடிகளுக்கும், யானைகளுக்கும்  எந்த முரண்பாடுகளும் பெரிதாக இருந்ததாக தெரியவில்லை. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய காட்டில் மக்கள் வாழ்ந்தபோதுதான், ஆசிய யானைகள் அதிக அளவில இருந்து இருக்கின்றன. பல காரணங்கள் சொல்லி மண்ணின் மக்களை, பழங்குடிகளை வெளியேற்றிய பின்னர் கவலைப்படுவது போன்றுதான் அவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. அதனால், வழக்கமாக நமது பிழைகளுக்காக,  நாம் வேறு யார் மீதாவது பழியை போட்டுவிட்டு தப்பிக்க எண்ணுவோம் அல்லவா...? அது போல இந்த விஷயத்தில் வேண்டாம். அப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.
'யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டூழியம்' என்பதே ஒரு வக்கிரமான சொல்லாடல் என்பது மனசாட்சி உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். யானைகள் மிக புத்திசாலியான விலங்கினம், அதன் நினைவாற்றல் அபாரமானது. அது சராசரியாக ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர் நடக்கும். அது, முன்பு ஒரு காலத்தில் பயணித்த பாதையில், அது மீண்டும் பயணிக்க முற்படும் போது... நாம் புதிதாக எழுப்பி உள்ள  ‘பாரடைஸ் அப்பாட்மெண்டுகள்’ அதற்கு நரகமாக தெரியும்... எத்திசையில் பயணிப்பது என்ற குழப்பம் தான்... அடுத்த நாள் ஊடகங்களில், “யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டூழியம்...” என்ற தலைப்பு செய்தி  வரும்.
மக்களை காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் நாம் தீர்க்கமாக இருந்தால்... எந்த மக்களை வெளியேற்றப் போகிறோம் என்ற தெளிவும் வேண்டும்.
 'சரி... மக்கள் தொகை பெருகி விட்டது... வளர்ச்சி அடைந்து இருக்கிறோம்... அதனால், நம் பல வேலைகள் இலகுவாகி இருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ளாமல், காடுகளை ஆக்கிரமிக்கிறோம்' என்று பொத்தாம் பொதுவாக பேசுவது சரியாக இருக்காதுதான். ஆனால், அந்த வளர்ச்சி நம் எதிர்காலத்தை அழிக்கவும் அனுமதிக்க முடியாதுதானே...?
யானைகள் அழிகின்றன, காடுகள் அழிகின்றன.... நாளை நாமும் அழியக் கூடும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், தீர்வென்ன...? எளிய மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் தீர்வு, நம் நுகர்வை குறைத்துக் கொள்வதுதான். நம் நுகர்வை குறைத்து கொள்வோமானால், புதுப் புது தொழிற்சாலைகள் துவங்க காடுகள் அழிக்கப்படாது. இன்னொன்று, நாம் காடுகளை அழித்து, அங்கு புதுப் புது சொகுசு நகரியங்களை சமைப்பதையும், ரயில் பாதை அமைப்பதையும் இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். யானைகளை வேட்டையாடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.  இன்னொரு பக்கம், அரசுகள் யானைகள் குறித்து கவனம் செலுத்த நாம் அழுத்தம் தர வேண்டும். இதற்கெல்லாம் மேல், இப்போதாவது இது குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்களை நாம் துவங்க வேண்டும்.



அடுத்த தலைமுறை,  யானைகளை பார்த்தால்தான், அதற்கும் அடுத்த தலைமுறை இப்புவியில் வசிக்க முடியும். அதற்கு இந்த தலைமுறையாகிய நாம், ஏதாவது செய்ய வேண்டும்.


Saturday, 30 July 2016

சதுரகிரி மலைக் கோயில்... பக்தர்களை மீண்டும் மிரட்டிய காற்றாற்று வெள்ளம்!



விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். சித்தர்கள் வாழ்ந்த பூமியாக கருதப்படும் இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடக்கும்.


தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வழியாக, 10 கி.மீ., தூரம் மலை ஏறிச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். அதுபோல் மதுரை மாவட்டம் சாப்டூர் வழியாகவும், தேனி மாவட்டம்  வருசநாடு மலைப்பகுதி வழியாகவும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு நடந்த ஆடி அமாவாசை விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசல் காரணமாக மலையில் இருந்து இறங்க முடியாமல் 2 லட்சம் பக்தர்கள் மலைப்பகுதியிலேயே சுமார் 3 மணி நேரம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதியன்று அமாவாசை என்பதால், சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், என்பதால் மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்பு மீட்பு படையினர் என்று பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வழக்கமான விசேஷ நாட்களைத் தவிர,  பிற நாட்களில் மலை ஏறுவதற்கு வனத்துறை தடை விதித்திருந்த நிலையில், வரவிருக்கும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி,  ஜூலை 28 ம் தேதி ( நேற்று ) முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை, வனப்பகுதியில் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.


இதனால் நேற்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரியில் மலையேறி, மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
சதுரகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்களும் மலை ஏறிச் சென்று வருகின்றனர். நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுரகிரி மலைப்பகுதியில் கனத்த மழை பெய்தது. இதனால் சங்கிலிப்பாறை ஓடையில் 5 அடி உயரத்திற்கு மேல் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பிய 10 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் ஓடையை கடக்க முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து ஆற்றைக் கடந்து சென்ற தீயணைப்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு, மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். இதற்கிடையே மனோகரன், மகேந்திரன், கிருஷ்ணன், கண்ணாயிரம் ஆகிய 4 பக்தர்கள் சங்கிலிப்பாறை ஓடையை கடந்து சென்றனர். குதிரை ஊத்து என்ற இடத்திற்கு வந்த போது வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு, " ஐயோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்..." என்று குரல் கொடுத்தனர். அருகில் இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, வெள்ளத்தில் தவித்த அவர்களை, கயிறு மூலம் கட்டி இழுத்து காப்பாற்றினர். பிறகு மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேரும் வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர், பத்திரமாக தீயணைப்பு படையினர் உதவியுடன் ஓடையை கடந்து வந்து, மலையில் இருந்து இறங்கினர்.




கைதாவார்களா வனத்துறை அதிகாரிகள்?' -வழக்கைப் பதிய வைத்த வருஷநாட்டு பழங்குடிகள்


டமலைக் குண்டு ஆதிவாசி பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வன அதிகாரிகளின் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ' காவல்துறையும் வனத்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். மாநில போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட பெரிய சுருளி மலைப் பகுதியில் தேன், வேர்க்கிழங்கு, நன்னாரி வேர் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுமி உள்பட நான்கு ஆதிவாசி பெண்களிடம், வனத்துறை அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதுகுறித்து வருஷநாடு வனச்சரக அலுவலகத்திற்கு நியாயம் கேட்கச் சென்றனர் ஆதிவாசி இளைஞர்கள் சிலர். அவர்கள் மீது ' வன அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக' வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து நொறுக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக சட்டமன்றத்தில் கடமலைக் குண்டு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், " மேகமலையில் எறும்புதின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்,  அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதும்,  விசாரணை மட்டுமே நடத்தினார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார். ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கை எடுக்காமல், வனத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் அதிர்ந்து போனார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். 

 
இதையடுத்து, மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம், சி.பி.எம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுத்தன. நேற்று கடமலைக் குண்டு பகுதியில் ஆதிவாசி மக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கினார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
' வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் ஓய மாட்டோம். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் ரேஞ்சர் சேகர், ஃபாரஸ்டர் பிரின்ஸ் உள்பட அடையாளம் தெரிந்த இரண்டு நபர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளான 342, 294(பி), 354, 379 உள்ளிட்ட பிரிவுகளும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவானது.


" ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறிய ஆறுதல் மட்டுமே. ஆதிவாசி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், துணைக்குச் சென்ற ஆண்களை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். 'இவர்களுக்கு நியாயம் கேட்க யார் வருவார்' என்ற மனநிலையில், வன அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியாயம் கேட்கச் சென்ற ஆதிவாசிகள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில், எந்த இடத்திலுமே 'எறும்புத் திண்ணி கடத்தப்படுவதைக் கண்காணிக்கச் சென்றபோது சம்பவம் நடந்தது' என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே எறும்புத் திண்ணியைக் கடத்தினார்கள் என்பது முழுப் பொய் எனத் தெரிகிறது. 13 வயது சிறுமி உள்பட நான்கு பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்தாலே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வேர்க் கிழங்கும் தேனும் எடுக்கச் சென்றவர்களை வேண்டுமென்றே அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொதுவாக, ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டுத்தான் விசாரணை நடத்துவார்கள். ஆதிவாசிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், விசாரணையை நடத்திவிட்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அமைச்சரும் செயல்படுகிறார். வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்றார் கொந்தளிப்போடு. 

" ஆதிவாசி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், பத்து நாட்கள் கடந்த பின்னரே, வன அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. தேன், கடுக்காய்தானே சேகரிக்கச் சென்றார்கள். தேசத் துரோகமா செய்துவிட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 




புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?


லகிலேயே அதிகளவில் புலிகள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்குதான் முதலிடம். அண்மைக் காலத்தில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். கடந்த 2014 ம் ஆண்டு 2,226 புலிகள் இருந்தன. தற்போது அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.   இதில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்திலும் புலிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்திருக்கிறது.  2006ம் ஆண்டு கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. 2010 ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. 2014 ம் ஆண்டு 229 ஆக அதிகரித்து,  தற்போது அது இன்னும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் தனி ஆவர்த்தனம் நடத்தும் மற்றோர் இனம் புலி. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். புலிகளை கூட்டம் கூட்டமாக காண்பது அரிது. 'சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்' என்ற டயலாக்குக்கு நேர் எதிர் புலி. சிங்கங்கள் குழுக்களாக வாழும். ஐந்து ஆறு சிங்கங்கள் சேர்ந்து, ஒரு விலங்கினை வேட்டையாடுவதைக் காண முடியும்.  ஆனால் ஆண் புலிகள் தனிமை விரும்பிகள். பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். அதனால்தான் வீரத்தின் அடையாளமாக புலிகளைக் கூறுவது உண்டு.  ஆண் புலிகள் எல்லை வகுத்துக் கொண்டு 'உன் ஏரியாவுக்கு நான் வரமாட்டேன் என் ஏரியாவுக்கு நீ வராதே'னு  கோடு போட்டுக் கொண்டு வாழும் தன்மையுடையவை. புலிகள் மரம் ஏறும். பிரமாதமாக நீச்சல் அடிக்கும். மான்கள் பிடித்த உணவு.


புலிகளின் கணக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

கால்தடம், எச்சம், மரங்களில் நகங்களால் கீறி வைப்பது போன்ற அடையாளங்களால் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். நவீன காலகட்டத்தில் கேமராக்கள் வழியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,  புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றன. 'பக் மார்க்'  ( கால்தடம் ) மூலமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது பழமையான பாணி. நம்பகத்தன்மை  குறைந்ததாக இருந்தது.  ஆனாலும் கேமரா வழியாக புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது  நம்பகத்தன்மையை அதிகரித்திருத்திருக்கிறது. இந்தியாவில்,  புலிகள் வசிக்கும் 18 மாநில வனச் சரணாலயங்களில் 9,730 கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் புலிகள் காப்பகம் கேஎம்டிஆர்


இந்தியாவில், 39 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப் பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மேல், இந்த காப்பகம் அமைந்துள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையில், கேஎம்டிஆர் என அழைக்கப்படும் 'களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்'தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம். கடந்த 1988 ம் ஆண்டு இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்குள் மட்டும் 14  நதிகள் சிறியதும் பெரியதுமாக ஓடுகின்றன. நதிகளின் சரணாலயம் என்றும் இதனை கூறலாம். சுமார் 895 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில்  கேஎம்டிஆர் அமைந்துள்ளது. 

எதிர்ப்பை மீறி புலிகள் காப்பகமான முதுமலை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கடந்த 2009 ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா  என மூன்று மாநில எல்லைப் பகுதியில் முதுமலை சரணாலயம் அமைந்துள்ளது. இதனையொட்டி கர்நாடகப் பகுதியில் பண்டிப்பூரிலும், கேரளத்தில் வயநாட்டிலும் புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. இந்த 3 வனச்சரணாலயங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. முதுமலையை  புலிகள் சரணாலயமாக மாற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது. சூழலியல் ஆர்வலர்களின் தொடர் போராட்டம் காரணமாகவே, முதுமலையை புலிகள் காப்பகமாக மாற்றி  அறிவித்தது மத்திய அரசு. இந்தப் பகுதி சுற்றுலாவுக்குப் பெயர் போனது என்பதால்,  புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டால், தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என உள்ளுர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


உதகையில் இருந்து முதுமலைக்கு இரு வழிகளில் செல்லலாம். மசினகுடி வழியாக சென்றால் ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும். கூடலூர் வழியாக சென்றால், இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாகும். புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு, குரங்கு, மான்கள் போன்ற விலங்குகளுக்கும், பூர்வீக பறவை இனமான இருவாச்சி உள்ளிட்ட 200 வகையான பறவைகளுக்கும் முதுமலை  முக்கிய வாழ்வாதாரம். 

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை இந்திராகாந்தி  புலிகள் காப்பகம், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், டாப்ஸ்லிப் என்ற இடத்தில் அமைந்துள்ளது.  அருகில் உள்ள கேரள மாநிலத்திற்குள், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் இருக்கிறது. ஏராளமான தமிழ் திரைப்படங்கள், இந்தப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சத்தியமங்கலம் வனச்சரணாலயமும் இப்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சம் 50 புலிகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
வேட்டைத் தடுப்பு நடவடிக்கை

உச்ச நீதிமன்றம், புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்த பிறகு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து  அதிகரித்தே வந்திருக்கிறது. வேட்டையை கட்டுப்படுத்துவதே புலிகளின் எண்ணிக்கை  இன்னும் உயர வழிவகுக்கும்.