Monetize Your Website or Blog

Showing posts with label கிராமவாழ்க்கை. Show all posts
Showing posts with label கிராமவாழ்க்கை. Show all posts

Thursday, 25 August 2016

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !


பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...


                                          
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       
மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           
சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


                                                       
பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ’லுகூமியா’ எனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      
புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.




Thursday, 18 August 2016

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.


கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.


ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.


தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.



25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் ! மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...

'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  


'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!  
''எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் இருக்கு. மணல் கலந்த செம்மண் பூமி. மஞ்சள், மக்காச்சோளம், கடலை, கரும்பு, புகையிலைனு எதைப் போட்டாலும் நல்லா வரும். ஆனா, தண்ணிதான் கொஞ்சம் பத்தாக்குறை. கிணறு, போர் ரெண்டும் இருந்தாலும், கொஞ்சம் தட்டுப்பாடுதான். கிடைக்கிற தண்ணியை வெச்சு நாலு ஏக்கர்லயும் ஒரே சமயத்துல சாகுபடி பண்ண முடியாது. 'குறைவான தண்ணியை வெச்சு என்ன பயிர் பண்ணலாம்?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப மல்பெரி விவசாயத்தைப் பத்தி என் மனைவி மகேஸ்வரி சொன்னாங்க'' என முன்னுரை கொடுத்த மூர்த்தி தொடர்ந்தார்.
''பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கியமானது, மல்பெரி. மனைவி கொடுத்த தைரியத்துல இதை வளக்க ஆரம்பிச்சு பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கி, வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மல்பெரி செடிகள்ல பல ரகங்கள் இருக்கு.
ஆரம்பத்துல 'எம்.ஆர்-2’ங்கிற ரகத்தைத்தான் வளத்தோம். அப்பறம், 'வி-1’ங்கிற ரகத்தை பட்டுவளர்ச்சித் துறை விஞ்ஞானிங்க வெளியிட்டாங்க. இதுல புரதம் அதிகமா இருக்கறதோட, மகசூலும் அதிகம் கிடைக்குது. இதை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். ஏழு வருஷம் வரைக்கும் அறுவடை செய்யலாம்'' என்றவரை இடைமறித்து, தான் பேச ஆரம்பித்தார், மகேஸ்வரி.
''இன்னிய தேதியில் வெண்பட்டு உற்பத்தியில கொடிகட்டி பறக்கிறது, கோபிச்செட்டிப்பாளையம் ஏரியாதான். ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வெண்பட்டு உற்பத்தியில ஈடுபட்டு இருக்காங்க. அதனால மல்பெரி செடி சாகுபடியும், தேவையும் அதிகரிச்சுட்டே வருதுங்க. குறிப்பா, வி-1 ரகத்துக்கு அதிக தேவை இருக்கு.
பொதுவா, மல்பெரிக்கு விதைக் கரணைகளைத்தான் நடுவாங்க. ஆனா, விதைக்கரணைகளை நடும்போது நிறைய பேருக்கு சரியா வளர்றதில்லை. அதுக்கு தீர்வு கேட்டப்போ 'நாற்று முறையில நடவு செஞ்சா நல்லா வரும்’னு அதிகாரிகள் சொன்னாங்க. நாமளே ஏன் நாத்து உற்பத்தி பண்ணக்கூடாதுனு தோணுச்சு. அதை வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ ரெண்டு பேருக்குமே அது சரினு பட்டது. அதனால, வீட்டுக்குப் பக்கமா இருக்குற 25 சென்ட் நிலத்துல வி-1 ரகத்தை நட்டு நாத்து உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம்' என்ற மகேஸ்வரி நிறைவாக,
'இந்த ரகத்துல அதிகமான புரதச்சத்து இருக்கறதால கறவை மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதை தீனியா கொடுக்குறாங்க. இதைச் சாப்பிடுற மாடுகள் அதிகமா பால் கறக்கும். ஆடுகள் வேகமா வளரும். அதனால, நிறைய பேருக்கு தேவை இருக்கறதால, நாத்து விற்பனைக்கு பிரச்னையே இல்லை. ஒரு நாத்து 2 ரூபாய்னு வித்துகிட்டிருக்கோம்.
25 சென்ட் மூலமா அஞ்சு மாசத்துல ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக 80 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடை கொடுத்தார்.


 'இப்படித்தான் நாத்து உற்பத்தி செய்யணும்...’
நாற்று உற்பத்தி செய்யும் முறையைப் பற்றி மூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...
நாற்று உற்பத்திக்காக விதைக் கரணைகளை நடவு செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. தென்னை நிழல் இருக்கும் பகுதியில்கூட நாற்றங்கால் அமைக்கலாம். 25 சென்ட் நாற்றங்காலில் 4 டன் தொழுவுரம், 5 கிலோ நுண்ணுயிரி உரம் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிலத்தை சமப்படுத்தி, அரையடி இடைவெளியில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரில், 4 அங்குல இடைவெளியில், விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். பாசனத்துக்கு தெளிப்புநீர் முறையை அமைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை பாசனம் செய்து வர வேண்டும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, களை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக, எந்த ரசாயன உரங்களையும் செடிகளுக்கு இடக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வேர் அழுகல் நோய் தாக்கிவிடும். தெளிப்புநீர்ப் பாசன முறையில் பூச்சிகள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லிகள் தேவையே இல்லை. அப்படியே பூச்சிகள் தாக்கினாலும், ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டி கட்டுப்படுத்தி விடலாம்.
130 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளைப் பறித்து விற்பனை செய்யலாம். அனைத்து நாற்றுக்களையும் ஒரே சமயத்தில் பறிக்கக் கூடாது. உதாரணமாக, 50 ஆயிரம் நாற்றுகள் இருந்தால்... முதலில் 20 ஆயிரம், அடுத்து 10 ஆயிரம், கடைசியாக 20 ஆயிரம் என்ற கணக்கில் பறிக்க வேண்டும்.


தொடர்புக்கு, மூர்த்தி, அலைபேசி: 98427-23677

Wednesday, 10 August 2016

காவல் நிலையமும் ஏ.டி.எம்மும் எப்படி இயங்குகிறது?' -அசர வைக்கும் சிவகங்கை அரசுப்பள்ளி


'ர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும்' என்பதை விளக்குகிறது பள்ளிக் கல்வித்துறையின் யூ டியூப் வீடியோ காட்சி ஒன்று. ' கள ஆய்வுகள், வாரத் திருவிழா, அதிகாரிகளுடன் கலந்துரையாடல்' என மாதிரிப் பள்ளியை அடையாளம் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுமையான கற்றல் வீடியோக்களை யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில், வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஒருபுறம் என்றால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள். குறிப்பாக, சிவங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,320 பள்ளிகளில் இந்தப் பள்ளி மட்டுமே, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் யூ டியூப் வீடியோ பதிவுக்காக தேர்வாகியுள்ளது. ' மாணவர்களின் பங்களிப்புடன் வகுப்பறையை சிறப்பானதாக மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற்றதையும்' முன்வைக்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம். கூடவே, தாங்கள் கற்றுத் தேர்ந்த விஷயங்களைப் பற்றியும் யூ டியூப்பில் பேசுகின்றனர் மாணவர்கள்.


தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.
" மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து படிக்க வருபவர்கள். வகுப்பறை நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ, அதைக் கற்றுக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒரு வாரம் வெற்றி பெற்ற மாணவர், அடுத்த வாரம் பார்வையாளனாகத்தான் அமர்ந்திருக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வகுப்பறைகளில் பேச்சுப் போட்டி நடந்து முடிந்ததும், தேர்வான மாணவர்கள் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பேச வேண்டும். இதன்பின்னர் நடக்கும் மாதத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். இது ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கிரீன் கார்டு என்றால் என்ன? ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன? ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? வங்கி செலான்களை எப்படிப் பூர்த்தி செய்வது என வங்கி அதிகாரிகளின் துணையோடு செயல் விளக்கம் அளிக்கிறோம்.

கடந்த வாரம் தேவகோட்டை தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். காவல்துறை மீதான பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், ஒரு காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது எனவும் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாணவர்களும் அவர்களிடம், ' படத்தில் காட்டுவது போல ஒரு பிஸ்டலை அழுத்தினால் ஐம்பது தடவை சுட முடியுமா' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தொடக்கக் கல்வியிலேயே மாணவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு, கள ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.


தவிர, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களும் கேள்வி கேட்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். இதுவரை எங்கள் பள்ளிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, ராஜேந்திரன், ஆல்பி ஜான், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்  உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, களஆய்வு, மாணவர் பங்களிப்பு என அனைத்து நிலைகளிலும் மனதளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களின் முயற்சிக்கு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றனர்" என்றார் உற்சாகமாக.




Friday, 5 August 2016

எங்களை மன்னிக்காதே நவீனா..! - ஒரு மரணம் உணர்த்தும் உண்மை


ப்போது எல்லோராலும் விவாதிக்கப்பட்டது. கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. ஊரே பரபரப்பாக இருந்தது. சாதிக் கலவரம் ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என்றும் மக்கள் அச்சப்பட்டார்கள். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.


இந்த அனைத்து பரபரப்பிற்கும் காரணம், 'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் கை கால், சாதி இந்துக்களால் (Caste Hindus) வெட்டப்பட்டது' என்று பரவிய செய்திதான்.  செந்தில் மீது அப்போது அனைவருக்கும் ஒரு பரிதாபம் ஏற்பட்டது. அவருக்கு நீதி வேண்டுமென்று செயற்பட்டாளர்கள் களத்தில் இறங்கினார்கள்; தொடர்ந்து போராடவும் செய்தார்கள்.  ஆனால், அப்போது கொஞ்சம் நிதானித்து, தீர விசாரித்து இந்த பிரச்னையை அணுகி இருந்தால், இன்று ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆம், அரிதாரமற்ற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பக்கம் இருக்கிறோம் என்று,  உண்மையை தீர விசாரிக்காமல் செயல்பட்டவர்களால்தான் இன்று நவீனா ’கொல்லப்பட்டு’ இருக்கிறாள். நிச்சயம் அவள் மரணத்திற்கு செந்தில் மட்டும்தான் காரணம் என்று நாம் தப்பிவிட முடியாது.
யார் இந்த செந்தில்...?
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் பிற்பகுதி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில், பாண்டிச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையில் கை, கால் அற்ற நிலையில் அனுமதிக்கப்படுகிறார். இந்தச் செய்தி பாண்டிச்சேரியில் உள்ள ஒரு அரசியல் பிரமுகருக்கு தெரியவருகிறது. அந்தப் பிரமுகர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கட்சியில் அண்மையில்தான் இணைந்து இருந்தார். தனக்கான அடையாளங்களுக்காக போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பவம் தெரியவந்ததும், இதை வைத்து தன் காய் நகர்த்தலை துவங்குகிறார்.  செந்திலைச் சந்திக்கிறார். செந்திலும், “நான் ஒரு  பெண்ணை காதலித்தேன். அந்த பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என் கை, காலை வெட்டிவிட்டார்கள்...” என்கிறார்.
இதை வைத்து வெகு தீவிரமாக தன் அரசியல் நகர்வுகளை அந்தப் புள்ளி நகர்த்துகிறார். இந்த செய்தி ஊடகங்களை எட்டுகிறது. இன்னொரு ஆணவக் கொலைக்கு முயற்சியா என்று செய்திகள் வெளியாகின்றன. அப்போது, செந்திலின் நிலையைப் பார்த்தவர்கள், அதுதான் உண்மை என்றும் நம்பினார்கள்.  


பின் செயற்பாட்டாளர்கள் அ. மார்க்ஸ், கோ. சுகுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழு,  செந்திலைச் சந்தித்தது. செந்திலை மட்டும் அல்ல, முதன்முறையாக செந்தில் யார் தன்னைச் சிதைத்தவர்கள் என்று குற்றம் சுமத்தினாரோ, அவர்களையும் சந்தித்தது.  இந்தப் புள்ளியில்தான் உண்மைகள் வெளியே வர துவங்கின.  செந்திலை யாரும் தாக்கவில்லை என்று அ. மார்க்ஸ் குழு மிக தெளிவாக அறிக்கை வெளியிட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்போது மார்க்ஸையும் விமர்சித்தார்கள். அவருக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டார்கள். ஆனால், மார்க்ஸ் மிக உறுதியாக இருந்தார்.
அதன் பின்னர்தான், செந்தில் குறித்த செய்திகள் ஒவ்வொன்றாக வெளியே வரத் துவங்கின. செந்தில் ஏற்கெனவே, கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதற்காக, நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளானவர். இப்போதும் ஜாமீனில்தான் இருக்கிறார் என்ற செய்தி வெளியே வந்தது. அடுத்து வந்த மருத்துவ அறிக்கை, செந்திலுக்கு ஏற்பட்ட காயங்கள் நிச்சயம் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதால் ஏற்பட்டது அல்ல. அது ரயில் ஏறியதால் ஏற்பட்ட விபத்து என்று குறிப்பிட்டது.  பின் காவல்துறையும், இந்தக் கோணத்தில் தீவிரமாக விசாரித்ததில் அது ரயில் விபத்தினால் ஏற்பட்ட காயங்கள்தான் என்று தெரியவந்தது.
அதன்பின், அந்த சமயத்தில் செந்திலுக்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட சில கட்சிகள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தன.  
நவீனா காப்பற்றப்பட்டு இருப்பாள்!
செந்திலுக்காக செயற்பாட்டளர்கள், கட்சிகள் உணர்ச்சிவசப்பட்டதற்கும், இன்று நவீனா இறந்ததற்கும் என்ன தொடர்பு...? நெருங்கிய தொடர்பு இருக்கிறது. செந்தில்,  தான் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அதனால்தான், தன்னைத் தாக்கினார்கள் என்றும் சொன்னார் அல்லாவா...? அந்த பெண்தான் நவீனா.  அப்போது பள்ளிப் படிப்பையே முடிக்காத அந்தப் பெண்ணை, ஒரு தலையாகக் காதலித்திருக்கிறார் (இதை காதல் என்றே குறிப்பிடக் கூடாது!). நவீனா மறுத்தும், அவரை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில், தனது ஊனம் காரணமாகத்தான் தன் காதலை நவீனா ஏற்க மறுக்கக் காரணம் என்று தாழ்மை உணர்ச்சியில் உழன்ற செந்தில், ஜுலை 30 ம் தேதி, தன் மீது தீ வைத்துக் கொண்டு, நவீனா மீது பாய்ந்து இருக்கிறார். செந்தில் சம்பவ இடத்திலேயே இறக்க, நேற்று நவீனா இறந்து இருக்கிறாள்.
சாதி, மதங்களற்றது  உண்மை!
நியாயமாக அன்று செந்திலுக்காகப் போராடியவர்கள் அனைவரும், உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்னையை ஆராய்ந்து, செந்திலுக்கு அறிவுரை கூறி இருந்தால், நிச்சயம் இன்று செந்திலும், உயிரோடு இருந்திருப்பார். நவீனாவும், அவள் விரும்பியது போல் செவிலியர் ஆகி இருப்பாள். ஆனால், அப்போது யாருக்கும் இந்த உண்மைகளைக் கண்டறிய நேரம் இருக்கவில்லை. உண்மையைக் கண்டறிந்து சொன்னவரையும் நம்பத் தயாராக இல்லை.  


நாம் அனைவரும் நியாயத்தைதான் நேசிக்கிறோம், நீதியின் பக்கம்தான் இருக்க விரும்புகிறோம். ஆனால், எது நீதி, உண்மை என்பதை அறிய, நம் முன்முடிவுகள் அனுமதிக்க மறுக்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒன்றை அணுகுகிறோம். அந்தப் பண்புதான் இன்று இருவரின் உயிரை காவுவாங்கி இருக்கிறது.  பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முன்முடிவுகளோடு அல்லாமல், உண்மையாக அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று ஆராய்ந்த பின் செய்தல் நலம். ஏனெனில் உண்மைக்கு சாதி, மதம் இல்லை! 

Wednesday, 3 August 2016

இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

ஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15  பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு ரிமாண்ட் செய்ய வைத்திருக்கிறது.



கலைச்செல்வியின் உறவினர்கள் நம்மிடம், " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க" என வேதனைப்பட்டனர். கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கதறி அழுதார்.

எவிடென்ஸ் கதிர் நம்மிடம், " என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.


ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என  அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ' சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும்' என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.



Monday, 1 August 2016

உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!

ரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தால், வங்கியின் மூத்த அதிகாரிகள்கூட வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார்கள். ஆனால், இன்று ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்தால்தான் அந்த மரியாதை நமக்கும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது. எனவே, எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி, அதாவது கோடீஸ்வரராக மாறுவது எப்படி என்பதை பற்றி விரிவாகவே பார்ப்போம்.
முதலில் ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?
சேமிப்பு!
ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய வேண்டுமெனில், பணத்தைச் சேமிக்க வேண்டும் என்றுதான் நமக்குத் தெரியும். இது சரியான பதில்தான். ஆனால் எது உண்மையான சேமிப்பு...? உங்களுக்கு அடிப்படையான செலவுகள் போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்பு. முதலில் சொன்ன சேமிப்புக்கும், இரண்டாவதாகச் சொன்ன உண்மையான சேமிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா...?


உதாரணமாக, நான்கு பேர் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். மாதச் செலவு ரூ.30,000 ஆகிறது. இரு சக்கர வாகனத்துக்கான ெட்ரோல் செலவு ரூ.2,500 ஆகிறது. இந்த 2,500 ரூபாய் செலவை 1,500 ரூபாயாகக் குறைத்து, மீதமுள்ள 1,000 ரூபாயைச் சேமிக்க முடிவு செய்கிறோம். ஆனால், இந்த சேமிப்பு அடுத்த சில மாதங்களுக்குக்கூட தொடர முடியாமல் போய்விடும். அதுதான் செலவின் வலிமை. அத்தியாவசியமான செலவைக் குறைக்கவே முடியாது. எனவே அத்தியாவசிய செலவு போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்புத் தொகை. அதை கண்டிப்பாகச் சேமிக்க வேண்டும்.
எமர்ஜென்சி ஃபண்ட்!
சரி, சேமிக்கத் தொடங்கி விட்டோம். கையில் சில ஆயிரங்கள் சேர்ந்துவிட்டது. இந்த சமயத்தில் திடீரென ஒரு பெரிய செலவு வருகிறது. இதனால் ஏற்கெனவே சேமித்த பணமெல்லாம் கரைந்து போய்விடும் இல்லையா? இதற்குத்தான் முதலில் எமர்ஜென்சி ஃபண்டுக்கான பணத்தை நாம் சேர்த்து வைக்க வேண்டும். நம் வருமானத்தில் அடிப்படையான செலவுகள் போக 20,000 ரூபாய் இருக்கிறது எனில், அதில் 5,000 ரூபாய் எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்து வைத்துவிட வேண்டும். நம் சேமிப்பு இடையூறு இல்லாமல் தொடரவும், எதிர்பாராமல் வரும் நல்ல விஷயங்கள், விபத்துக்கள் போன்றவற்றுக்கு இந்த எமர்ஜென்சி ஃபண்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதவிர, வேறு எதற்கும் இந்த பணத்தை பயன்படுத்தக்கூடாது,
இன்றைய தேதிக்கு உங்களிடம் 3 - 5 லட்சம் ரூபாய் வரை எமர்ஜென்சி ஃபண்டாக இருக்க வேண்டும். இதுவே 6 சதவிகித பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 12 வருடத்துக்குப்பின் அதாவது 2027-ல் எமர்ஜென்சி ஃபண்ட் 6 - 10 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆக, 12 வருடத்துக்கு ஒருமுறை 6 சதவிகித பணவீக்கத்தில் உங்கள் செலவுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஒருவேளை உங்கள் எமர்ஜென்சி ஃபண்ட் பணவீக்கத்தைக் கணக்கிட்ட பின்னும் கூடுதலாக இருந்தால், உங்கள் ஒரு கோடி ரூபாய் என்கிற லட்சிய சேமிப்பிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
கூட்டு வட்டி!
எமர்ஜென்சி ஃபண்ட் போகப் பாக்கி உள்ள 15,000 ரூபாயை எத்தனை மாதங்களாகச் சேர்த்தால், 1 கோடி ரூபாய் வரும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். இதை உண்டியலில் போட்டு வந்தால், ஏறக்குறைய 56 வருடம் நீங்கள் சேமிக்க வேண்டும். அதைவிட குறைந்த காலத்தில் உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டும் எனில், அதை சரியான வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
சரியான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன பயன்?
பல பயன்கள் உண்டு. அதில் முக்கியமானது, கூட்டு வட்டி. நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய நாளிலிருந்து, ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடையும் அந்தப் பொன்னான நாள் வரை உங்கள் பணம், பணத்தை ஈட்டும். அதுதான் கூட்டு வட்டி. உதாரணமாக, ஒருவர் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை, 10 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய முதலீட்டில் முதலீடு செய்கிறார் என்றால் 10 வருட முடிவில் அவருக்கு 20,48,450 ரூபாய் கிடைக்கும். இதையே அவர் முதலீடு செய்யாமல், வெறுமனே சேமித்து வைத்தால், 10 வருட முடிவில் வெறும் 12 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். இப்போது புரிகிறதா கூட்டுவட்டியின் மகிமை?


எதில் முதலீடு?
சேமித்தால் மட்டும் போதாது. அதை முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் 1 கோடி ரூபாய் என்கிற இலக்கை நாம் அடைய முடியும். ஆனால், எதில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எத்தனை ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்வது?
இந்த கேள்விகளுக்கான சிதம்பர ரகசிய பதில்தான் 15 : 15 : 15 என்கிற சூப்பர் பார்முலா. அது என்ன 15 : 15 : 15..?
நீங்கள் சேமிக்க நினைக்கும் 15,000 ரூபாயை, எஸ்ஐபி முறையில் 15 வருடத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்து, அதற்கு 15 சதவிகிதம் வருமானம் கிடைத்தால், உங்கள் கையில் 1,00,27,600 ரூபாய் கிடைக்கும். இந்த 1 கோடியில் நீங்கள் செய்த முதலீடு வெறும் 27 லட்சம் ரூபாய்தான். ஆனால், கூட்டுவட்டியின் மகிமையால் நான்கு மடங்கு பெருகி இருக்கிறது உங்கள் சேமிப்பு.
உங்கள் முதலீட்டைப் பணவீக்கத்தைவிடக் கூடுதலான வேகத்தில்  பெருக்கித் தரும் வல்லமை பங்குச் சந்தைக்கு உண்டு. பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்து தங்கள் இலக்கை அடையலாம். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் முக்கியமான விஷயம், இப்படி நீங்கள் சேர்க்கும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
நீங்களும் கோடீஸ்வரர் ஆக..!
இன்றைக்கு 30 வயதிலேயே பலரும் 50,000 ரூபாயை சம்பாதிக்கிறார்கள். இதிலிருந்து 15,000 ரூபாயை எப்பாடுபட்டாவது எடுத்து முதலீடு செய்தால், உங்களது 45-வது வயதில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இப்படி நீங்கள் சேர்த்த 1 கோடி ரூபாயை 8 சதவிகிதம் நிலையான வருமானம் தரக்கூடிய லிக்விட் ஃபண்டுகளிலோ அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளிலோ முதலீடு செய்தால்கூட ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
30 வயதில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் நீங்கள், 15 ஆண்டுகள் கழித்து தோராயமாக 75,000 ரூபாய் சம்பளம் வாங்குவீர்கள். 30 வயதில் செய்த 30,000 ரூபாய் செலவு 15 வருடம் கழித்து, அதாவது உங்கள் 45-வது வயதில் 72,000 ரூபாயாக அதிகரித்திருக்கும். உங்கள் சம்பளத்தை வைத்தே உங்கள் செலவுகளை செய்து சமாளித்துவிடலாம். ஆனால், நீங்கள் சேர்த்து வைத்த 1 கோடி ரூபாய் உங்களுக்கு சம்பாதித்துத் தரும் பணமோ ஆண்டுக்கு சுமார் ரூ.8,00,000. இந்த வருமானத்தை வைத்தே உங்கள் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பை கல்விக் கடன் வாங்காமலே முடித்துவிடலாம்.


ஆக, கோடீஸ்வரராகும் எண்ணம்கொண்ட அனைவரும் இந்தச் சுலபமான ஃபார்முலாவைப் பின்பற்றித் தங்கள் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும். நீங்களும் கோடீஸ்வரர் ஆகும் முயற்சியை இன்றே தொடங்கலாமே!


Saturday, 30 July 2016

கைதாவார்களா வனத்துறை அதிகாரிகள்?' -வழக்கைப் பதிய வைத்த வருஷநாட்டு பழங்குடிகள்


டமலைக் குண்டு ஆதிவாசி பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வன அதிகாரிகளின் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ' காவல்துறையும் வனத்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். மாநில போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட பெரிய சுருளி மலைப் பகுதியில் தேன், வேர்க்கிழங்கு, நன்னாரி வேர் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுமி உள்பட நான்கு ஆதிவாசி பெண்களிடம், வனத்துறை அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதுகுறித்து வருஷநாடு வனச்சரக அலுவலகத்திற்கு நியாயம் கேட்கச் சென்றனர் ஆதிவாசி இளைஞர்கள் சிலர். அவர்கள் மீது ' வன அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக' வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து நொறுக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக சட்டமன்றத்தில் கடமலைக் குண்டு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், " மேகமலையில் எறும்புதின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்,  அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதும்,  விசாரணை மட்டுமே நடத்தினார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார். ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கை எடுக்காமல், வனத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் அதிர்ந்து போனார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். 

 
இதையடுத்து, மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம், சி.பி.எம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுத்தன. நேற்று கடமலைக் குண்டு பகுதியில் ஆதிவாசி மக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கினார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
' வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் ஓய மாட்டோம். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் ரேஞ்சர் சேகர், ஃபாரஸ்டர் பிரின்ஸ் உள்பட அடையாளம் தெரிந்த இரண்டு நபர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளான 342, 294(பி), 354, 379 உள்ளிட்ட பிரிவுகளும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவானது.


" ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறிய ஆறுதல் மட்டுமே. ஆதிவாசி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், துணைக்குச் சென்ற ஆண்களை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். 'இவர்களுக்கு நியாயம் கேட்க யார் வருவார்' என்ற மனநிலையில், வன அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியாயம் கேட்கச் சென்ற ஆதிவாசிகள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில், எந்த இடத்திலுமே 'எறும்புத் திண்ணி கடத்தப்படுவதைக் கண்காணிக்கச் சென்றபோது சம்பவம் நடந்தது' என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே எறும்புத் திண்ணியைக் கடத்தினார்கள் என்பது முழுப் பொய் எனத் தெரிகிறது. 13 வயது சிறுமி உள்பட நான்கு பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்தாலே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வேர்க் கிழங்கும் தேனும் எடுக்கச் சென்றவர்களை வேண்டுமென்றே அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொதுவாக, ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டுத்தான் விசாரணை நடத்துவார்கள். ஆதிவாசிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், விசாரணையை நடத்திவிட்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அமைச்சரும் செயல்படுகிறார். வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்றார் கொந்தளிப்போடு. 

" ஆதிவாசி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், பத்து நாட்கள் கடந்த பின்னரே, வன அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. தேன், கடுக்காய்தானே சேகரிக்கச் சென்றார்கள். தேசத் துரோகமா செய்துவிட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 




நெல்லு விதைக்கலாமா... கரும்பு போடலாமா?' விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கும் விசித்திர கிராமம்


ன்றைய, ‘போக்கிமான் கோ’ உலகத்தில், நம்ம ஊரில் ஜோசியமும், ஜாதகமும் இன்னமும் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது, என்பதை ஜீரணித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் உள்ளது.  பிள்ளைக்கு பேர் வைப்பது, பள்ளியில் சேர்ப்பது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, உள்ளிட்டவைகளுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறோம் அல்லது பார்ப்பதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அடுத்துள்ள பெரமனூர் என்கிற கிராம மக்கள்,  விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கிறார்கள். பொருத்தம் சரி இல்லையென்றால், அந்தப் பயிரையே பயிர் செய்ய மாட்டார்கள்... அப்படி மீறி செய்தால், அவர்கள் குடும்பத்தில் உயிர்பலி வரைக்கும் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை" என்று நண்பர் ஒருவர் சொல்ல, பெரமனூருக்கு புறப்பட்டோம்...


பச்சைப்பசேல் வயல்வெளிகளில், செழித்து நின்ற பயிர்கள் நம்மை வரவேற்றன. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார், ராமலிங்கம். அவரிடம் விவசாய ஜோசியத்தை பற்றி விசாரித்தோம்.
படபடவென பேச ஆரம்பித்தவர், ''ஆமாங்க நீங்க கேள்விபட்டது உண்மைதான். எங்க ஊர்ல என்ன பயிர் பண்ணாலும் 'குறி' ( ஜோசியம்) பார்த்துதான் செய்வோம். குறிப்பா மஞ்சள், கரும்பு, எள் இந்த மூன்றையும் சாமிகிட்ட 'குறி' கேக்காம பயிர் பண்ணவே மாட்டோம். இந்த ஊர்ல விவசாயம் பண்ற எல்லாருமே அப்படித்தான். எங்க ஊர்ல சம்பத்னு ஒரு சாமியார் இருக்கார். அவர்கிட்ட 'குறி' கேட்டுதான் இந்த முறை என் தோட்டத்துல நான்  வாழை போட்ருக்கேன். நல்லா வந்துருக்கு.
'நீ இந்த வருஷம் மஞ்சள் போட்டா சரி வராது' னு சாமி சொல்லிட்டாருன்னா, அதை பயிர் பண்ணக்கூடாது. ஒண்ணு விளைச்சல் இல்லாமப் போயிடும்... இல்ல நம்ம வீட்ல, ஆடோ மாடோ ஏதாவது உயிர்ப் பலிகள் ஏற்பட்டுடும். அதற்கு பிறகு நாம மீள்றது கஷ்டம். ஏன்... சமயத்துல மனுஷங்களே செத்துப் போயிடுவாங்க. எங்க குல தெய்வத்துக்கு கருப்பு ஆகாது. அதையும் மீறி ஒரு வருஷம் எள் பயிர் பண்ணோம்.  அறுவடை சமயத்துல எங்க அப்பா செத்துப் போயிட்டாரு. அதுல இருந்து சாமிக்கிட்ட குறி கேக்காம எதையும் செய்யுறது இல்லை.
எந்த பயிர் பண்றமோ அந்த பயிர் நம்ம பேருக்கு ஒத்துவருமானு பாக்கணும். நம்ம பேருக்கு ஒத்து வராட்டியும் நம்ம வீட்ல யாருக்காவது ஒத்து வந்தாக்கூட பயிர் பண்ணலாம். ஒருமுறை எங்க வயல்ல நெல் போடலாமானு சாமிகிட்ட கேட்டேன். என் பேருக்கு ஒத்துவரல... என் பொண்டாட்டி பேருக்கும், ஒத்துவரல... பொறந்து ஒரு வருஷமான என் மகனுக்கு ஒத்து வந்துச்சி. அதனால கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு போய், அவன் கையால முதல் விதையை போட்டோம். நல்ல விளைச்சல் அந்த வருஷம். வைக்கோல் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சி. நான் முற்போக்குவாதிதான். ஆனா, இந்த விஷயத்துல இப்படி பண்ணினாதான் சரியா வருது''. (நமக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ஆனாலும், ராமலிங்கம் சளைக்காமல் தொடர்ந்தார்...)
''அவ்வளவு ஏன்... அந்த சம்பத் சாமியவே எடுத்துக்கோங்க. அவர் வயலும் அவங்க அண்ணன் வயலும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு. ஒரே தண்ணி ஒரே மண்ணுதான். சம்பத் சாமிக்கு மஞ்சள் ஒத்துவரும். ஆனா, அவங்க அண்ணனுக்கு ஒத்து வராது. அவங்க அண்ணன் காய்கறி மட்டும்தான் பயிர் பண்ணுவார். இந்த ஊர்ல எல்லாருக்குமே அவங்க அவங்களுக்கு  நம்பிக்கையான சாமியாருங்க இருக்காங்க. அவுங்ககிட்ட ரகசியமா குறி கேட்டுத்தான் பயிர் பண்ணுவாங்க. வெளில யாருக்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.'' என்று நிறுத்தினார்.


" நாங்க சம்பத் சாமியை பார்க்கலாமா...?" என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நம்மை அழைத்துச் சென்றார்.
சம்பத் சாமியிடம் பேசினோம். ''நான் 8 வருஷமா குறி பாக்குறேன். இந்த ஊர்ல இருந்து நிறைய பேர் என்கிட்ட பார்ப்பாங்க. அவங்கவங்க பேருக்கு இன்ன பயிர் ஒத்து வருமானு பொருத்தம் பார்த்து சொல்லுவேன். அதுபடிதான் கேப்பாங்க. நானே பொருத்தம் பார்த்துதான் இந்த முறை மஞ்சள் போட்ருக்கேன்'' என்றார்.
திரும்பும் வழியில் ரவி என்பவரிடம் பேசினோம். ''நான் இந்தமுறை மஞ்சள் போடலாம்னு இருந்தேங்க. எங்க வீட்ல யாரு பேருக்குமே ஒத்து வரல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... பார்ப்போம்'' என்று நடையைக் கட்டினார்.
என்னத்த சொல்ல..?




Wednesday, 27 July 2016

விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மரண வழக்கின் நிலவரம் என்ன?

விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்ம மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் ' சீல் வைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி இயங்க ஆரம்பித்துவிட்டது. கவுன்சலிங்கில் அந்தக் கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மாணவிகள் மரணம் தொடர்பான விசாரணையை போலீஸார் வேகப்படுத்த வேண்டும்' என்கின்றனர் மாணவர்கள். 



விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரி. 'இங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லை; கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றனர்; எதிர்த்துக் கேட்கும் மாணவர்களுக்கு அடி உதை விழுகிறது' என ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறி, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர் மாணவர்கள். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கல்லூரி எதிரில் இருந்த கிணற்றில் சடலமாக மிதந்தனர். தமிழகத்தையே உலுக்கிய மூன்று மாணவிகளின் மர்ம மரணத்தில், பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.வி.எஸ் கல்லூரியில் படித்து வந்த மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், 'ஹோமியோபதி உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் பயின்று வந்த ஐம்பது மாணவர்களுக்கு அரசு இடம் கொடுக்கவில்லை' என்று கூறி, அவர்கள் சில நாட்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த மாணவர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.
மூன்று மாணவிகள் மரணம் தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், " தற்போது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார் கல்லூரி தாளாளர் வாசுகி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம். மாணவிகள் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும்" என்றார். 

 


மாணவிகள் கொல்லப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சீல் வைக்கப்பட்டக் கல்லூரியை திறக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கிறார் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேசன். அவர் நம்மிடம், " மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கை வேகப்படுத்த போலீஸார் விரும்பவில்லை. தொடக்கத்தில் கல்லூரி தாளாளருக்கு பிணை கொடுப்பதில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு காட்டினர். பின்னர் பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மாணவிகள் தற்கொலைதான் செய்து கொண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் பதிவு செய்த சந்தேக மரணம் என்ற வார்த்தை இன்னமும் அப்படியே இருக்கிறது.
கல்லூரியைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த பிறகுதான், அந்த மாணவிகள் மர்மமான முறையில் இறந்து போனார்கள். வி.ஏ.ஓ முதல் துணைவேந்தர் வரையில் கல்லூரிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். தற்போது மருத்துவக் கவுன்சலிங்கில் எஸ்.வி.எஸ் கல்லூரி பெயரும் இடம்பெற்றுள்ளது. ' நேச்சுரோபதி நடத்துவதற்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. யோகா, ஹோமியோ நடத்துவதற்குத் தடை இல்லை' என்ற உத்தரவை வாங்கிவிட்டனர். மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கு, முடிவுக்கு வருவதற்கு முன்பே கல்லூரி செயல்படத் தொடங்கிவிட்டது. இது மிகுந்த வேதனையளிக்கிறது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்யப் போகும் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் விரிவாக. 




Friday, 15 July 2016

புதிய அணை கட்டியே தீருவோம்:கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி!


முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தில் எந்த மாற்றம் இல்லை என்று கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அணை பலமாக உள்ளது என ஆய்வு குழுவினர் அளித்த அறிக்கையின் பேரில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.





கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, அதற்குப் பதிலாக புதிய அணை கட்டப்போவதாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கூறி வந்தது. இந்நிலையில், கேரளாவின் புதிய முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக பேட்டி அளித்தார்.

இதனால், அவருக்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, அவர் தனது நிலைப்பாட்டைத் திடீரென மாற்றி கொண்டார்.

இந்நிலையில், கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று இந்த பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டது. அப்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது,


''கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. இதைக் கட்டுவதற்கான தொழில் நுட்ப சாத்திய கூறுகள், சட்ட வி‌ஷயங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி வசிக்கும் வகையில் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்திரவாதம் அளிக்கும் செயல்களில் இந்த அரசு உறுதியாகச்  செயல்படும்" என்றார்.




வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நாள்தோறும் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக்கூடாது?


மது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.
 


செய்யக்கூடியவை 
 
* தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம். 
 
* வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும். 
 
* வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். 
 
* பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். 
 
* தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும். 
 
* பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் நல்லது.
 
* வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம். 
 
* பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். 
 
வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும். 
 
வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு. 
 
* பூஜை அறையிலோ, வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.
 


* சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். 
 
செய்யக்கூடாதவை
* காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது. 
 
* சாமி படங்களுடன், நமது முன்னோரின் படங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது. 
 
* வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக் கூடாது. 
 
* பூஜையின்போது, விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. 
 
* துண்டைக் கட்டிக்கொண்டோ, துண்டை தோளில் போட்டுக்கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக்கூடாது. 
 
* விளக்கேற்றி வழிபடும்போது, விளக்கில் இருந்து திரி எரியக்கூடாது.
 
* தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது. 
 
* இயற்கைப் பூக்களுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது. 
 
* குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம். 
 
* வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம் தருமம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல. 
 
* நிவேதனம் செய்த தேங்காயைச் சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 
 


* பூஜை அறையில், அல்லது சாமி படங்களில் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது. 


அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை

வன் பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம்.  வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். அதனால் இயல்பாக அவனுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு அதிகம். பறவைகளுடன் பேசுவான், விளையாடுவான். மனிதர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பும் பறவைகளும், அவனுடன் விளையாடும். 


பறவைகள் மீது கொண்ட அலாதி காதலால், அவனுக்கு பறவையியல் (Ornithology) படிக்க வேண்டுமென்று விருப்பம் வந்தது. இந்த விருப்பம் வந்த போது, அவன் ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இணையத்தில் எப்படியோ தேடி சலீம் அலி மையத்தை பற்றியும் தெரிந்து கொண்டான்.  

ஆனால், அவன் பெற்றோர்களுக்கு எப்போதும் பறவைகளை பிடித்ததில்லை. தங்கள் நிலத்தில் விளையும் சோளப் பயிர்களை சிதைக்கும் வில்லன்கள்தான் பறவைகள். இந்த புரிதலுடன் அணுகியதால், அவர்களால் பறவைகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை, பறவைகளின் காதலனான சரவணனையும் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவன் மருத்துவர் ஆக வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார்கள்.  கல்வி நிலையமும் அவன் பெற்றோருடன் இணைந்து கொண்டது. அவனால் அழுத்தங்களை தாங்க முடியவில்லை. முதலில் வீட்டார்களுடன் பேசுவதை நிறுத்தினான். பின் பள்ளியையும், பெற்றோரையும் பழி வாங்க எண்ணி, பத்தாவது வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தான். 

சமீபத்தில் அவனை ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்தேன். இறுக்கமான ஒரு மெளனத்திற்கு பின், அவன் பேசினான். பறவைகளை குறித்து துவங்கிய நிறைய பேசினான். அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. 

அப்போது அவன், “ உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை நீங்க கொல்லுவீங்களா சார்..? " என்றான். “நிச்சயம் முடியாது... என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது...” என்றேன். " இல்லை சார்... அதெல்லாம் ச்சும்மா... இங்க எல்லாரும் அவங்களுக்கு மிகவும் பிடிச்சவங்களை தினமும் கொன்னுட்டுதான் இருக்கிறாங்க.... கொல்றதுன்னா ரத்தம் தெறிக்க கொல்றது இல்ல சார்... அவங்க கனவுகளை கொல்றது... என்னை என் பெற்றோர் கொன்ன மாதிரி...” என்றவன்,  தன் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டான். 

ஆம், உண்மைதானே..?  ஒருவரின் வாழ்வென்பது அவர்களின் கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கனவுகளைக் கொன்றால், அவர்கள் உயிர் வாழ்வார்கள்தான். ஆனால், அது அவர்கள் வாழ்வாக இருக்காது. 

சரி கட்டுரைக்கு வருவோம். இது கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலின் மூன்றாவது பகுதி. 

விஜய் அசோகன்.  ஒரு சிறு கிராமத்தில், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர். மத்திய தர குடும்பத்திற்கே இருக்கும்  அபிலாஷைகளை எதிர் கொண்டவர். கடும் காதலால் (ஆம். முயற்சி என்ற சொல்லை வெறுக்கிறார்) ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். நானோ தொழிற் நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இப்போது சீனாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவை மட்டும் அவர் அடையாளங்கள் அல்ல.  இவர் தொடர்ந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். 

அவருடனான உரையாடலில் இருந்து...

 
கல்வி குறித்து, அறிவு தளத்தில் உங்களின் தொடர் செயல்பாடுதான், உங்களை பேட்டி எடுக்க என்னை தூண்டியது. உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள், அரசுப் பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் மெளனம் காக்கின்றபோது, உங்களுக்கு இதில் இயங்க வேண்டும் என எப்படி விருப்பம் வந்தது...?


என் பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரமும்... பின் நான் படித்த தனியார் பள்ளியும்தான் முதன்மையான காரணங்கள்.

என்ன தனியார் பள்ளியா...?
ஆம். அங்கு நான் பெற்ற சில கசப்பான அனுபவங்கள்தான். என்னை அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்க தூண்டுகிறது என நினைக்கிறேன். ‘பாருங்க... இவனுங்க நல்லா தனியார் பள்ளியில் படிச்சிட்டு நம்மை அரசு பள்ளியில சேருங்கன்னு புத்தி சொல்ல வந்துடுறாங்க...’ என்று எண்ணாதீர்கள். நான் என் பள்ளி வாழ்க்கையை தனியார் பள்ளியில் துவங்கினாலும், நான் அங்கு தொடரவில்லை. அந்தப் பள்ளி என்னிடம் இருக்கும் பிற ஆற்றல்களை பார்க்காமல், கல்வியை திணிப்பதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.  நான் சுதந்திரமாக சிந்திப்பதை, அப்பள்ளி விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் பள்ளிக்குமான இடைவெளி மனதளவில் தொலைவாகியாது. நல்லவேளையாக எனது அப்பா என்னை புரிந்துகொண்டார். அங்கிருந்து வெளியேறி  என் படிப்பை அரசு பள்ளியில் தொடர்ந்தேன். 

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்...?
எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது. இரண்டாவது மகன் கதிர் நிலவனுக்கு நான்கு வயது. இன்னும் இருவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆறு வயதில்தான் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அடுத்த மாதம் நான் சீனாவிலிருந்து வருகிறென். என் மனைவி தன் ஆராய்ச்சி படிப்பில் அடுத்த மாதம் கோவையில் சேர உள்ளதால், அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் நிச்சயம் சேர்த்துவிடுவேன். 

உங்கள் வீட்டில் புரிந்து கொள்கிறார்களா...?
முதலில் என் மனைவிக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கிடையேயான உரையாடல் அந்த தயக்கத்தை சரி செய்தது. ஆனால், சுற்றத்தாரின் பார்வைதான் மிக மோசமானதாக இருக்கிறது. 'அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறோம்' என்று சொன்னால் மிக பரிதாபமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ பணத்தை சேமிப்பதற்காக இது போல் செய்கிறோம் என்றும், வறட்டுப் பிடிவாதம் என்றும் பரிகாசம் செய்கிறார்கள். எங்களிடம் அந்த கிண்டல் பேச்சுகள் வந்தால், அதற்கு நாங்கள் உரிய எதிர்வினையை ஆற்றிவிடுவோம். ஆனால், எங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றார்கள் என்றால்...? இந்த பரிகாசங்கள் அவர்களை எவ்வளவு உளவியல் ரீதியாக பாதிக்கும்...? இதுதான் அச்சமாக இருக்கிறது.


உண்மையை சொல்லுங்கள்... தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாகவா இருக்கிறது....? 
100 சதவீதம் நன்றாக இருக்கிறது என்பது என் வாதம் அல்ல. இங்கு தனியார் பள்ளிகளும் நூறு சதவீதம் தரமாக இருக்கவில்லையே...? அரசு பள்ளிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதை புறக்கணிப்பதன் மூலம் சரி செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை நாம் மறுப்பதன் மூலம், கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதையும் மறுக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்த்து, அரசை கேள்வி கேட்பதன் மூலம்தான் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும். 

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குவதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் தான் இயங்குகின்றன. தீப்பெட்டி போன்ற வகுப்பறைகள்... இவ்வளவு  இறுக்கத்தில் குழந்தைகள் படித்தால், அவர்களின் சிந்தனை திறன் எப்படி வளரும்...?  தனியார் பள்ளிகளில் 1 சதவீதம்தான் அனைத்து வசதிகளுடன் தரமாக இருக்கின்றன. அது பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இருக்கிறது. இந்த கணக்குடன் ஒப்பிட்டு பார்த்தால், பெரும்பாலான அரசு பள்ளிகள் தரமானதாக இருப்பதாக தோன்றுகிறது. 

மீண்டும் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாது. 

ஹூம்... புரிகிறது. நீங்கள் தமிழ் வழிக்கல்வி குறித்தும் தொடர்ந்து எழுதி, பேசி வருகிறீர்கள்தானே...?


தமிழ் வழிக் கல்வியாக சுருக்கி பார்க்காதீர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்று அதனை பாருங்கள். இயல்பாக தாய்மொழி வழிக் கல்வியில் படித்தால், குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். இதனை நான் மேம்போக்காக சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். நான் ஐரோப்பாவில் ஏழு ஆண்டு காலம் வசித்திருக்கிறேன். சீனாவில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். அங்கு குழந்தைகள்  தங்கள் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. 

ஆனால், இந்த நவீனச் சூழலில் ஆங்கிலம் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்...?
இதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்னையே. தாய் மொழி வழிக் கல்வியில் படிப்பதென்பது பிற மொழிகளை புறக்கணிப்பதல்ல. ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, சீனம் என உங்களுக்கு விருப்பமான மொழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பள்ளிக் கல்வியை, அறிவியலை, உங்கள் தாய் மொழிக் கல்வி ஊடாக படியுங்கள். அப்போதுதான் நம் மண்ணிற்கு தேவையான படைப்புகள் வரும்.   

இதைத்தாண்டி அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா...?
உண்மையாக குழந்தைகள் தம் கனவுகளின் கரம் பிடித்து வளரும் இடமாக அரசுப் பள்ளிகள் மட்டும்தான் இருக்கின்றன. பாடப் புத்தகத்தை தாண்டி அவர்களால் அங்குதான் நிறைய சிந்திக்க முடிகிறது என்பது என் அனுபவத்தின் ஊடாக நான் கண்ட உண்மை. நாம் அனைவரும் கரம் கோர்த்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தால், நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் சமுகத்திற்கு அளப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள். 

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளியில் படிக்கும் போது, குழந்தைகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறைகின்றன. இதனால் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. சுதந்திரமான மனநிலையில் இருப்பவர்களால்தான், நன்றாக புரிந்து கொள்ள முடியும்.


சரி. எப்படி அரசு பள்ளிகளை மேம்படுத்துவது...?


உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்... மாதம் ஒரு முறையாவது ஆசிரியர்களை சந்திப்பீர்கள்தானே...? ஆசிரியர்களிடம் சந்தித்து உரையாடுங்கள். பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாவட்டக் கல்வி அலுவலரை சென்று சந்தியுங்கள். அரசியல் இல்லாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை கட்டமையுங்கள்.  

இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், துரதிருஷ்டமாக ஆசிரியர்களின் பங்களிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் குறைகூறிவிட முடியாது என்றாலும்,  பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.  

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்தால், நிச்சயம் மாற்றங்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.