Monetize Your Website or Blog

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, 26 August 2016

கூடா நட்பு கேடாய்தான் முடியும்..! வில்லங்கத்தில் முடிந்த விபரீதக் காதல்

கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட காதலால் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் சென்னையை சேர்ந்த பேராசிரியை ஒருவர். கணவன் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார் பேராசிரியை.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மகன் அரவிந்த்குமார். இவர், செம்பாக்கத்தில் உள்ள அத்தை ராஜேஸ்வரி வீட்டில் தங்கி கௌரிவாக்கத்தில் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அரவிந்த்குமாருக்கு பாடம் கற்றுக்கொடுத்தவர் பேராசிரியை கனிமொழி. இவரும் செம்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். கனிமொழிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் ஹரிகரன், இன்ஜினீயர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி கனிமொழியின் வீட்டுக்குச் சென்ற அரவிந்த்குமார் அவரை ஒருதலையாக காதலித்துள்ளார். முதலில் காதலை ஏற்றுக் கொள்ளாத கனிமொழி, அரவிந்த்குமாரின் பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகு காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.


ஒருக்கட்டத்தில் கனிமொழி, தன்னுடைய கணவரின் பைக்கில் கூட அமர சம்மதிக்காத அரவிந்த்குமார், அதுதொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளார். இவ்வாறு இவர்களது காதல் இலைமறை காயாக இருந்து வந்தது.  தன்னுடனே வாழும்படி அரவிந்த்குமார், கனிமொழியிடம் சொல்ல.... அது அவர்களுக்குள் தகராறாக மாறியது. இந்த சமயத்தில் அரவிந்த்குமார் எடுக்கும் அஸ்திரம், தற்கொலை முயற்சி. உடனே கனிமொழி, அவரை சமரசப்படுத்துவது வழக்கம். இவ்வாறு சென்ற இவர்களது காதல் பயணத்தில் சமீபத்தில் சிக்கல் எழுந்தது. அதாவது, ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டை விட்டு கனிமொழியும், அரவிந்த்குமாரும் வெளியேறினர். பாண்டிச்சேரிக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து தூத்துக்குடி, மேல்மருவத்தூர், திண்டிவனம் என பல ஊர்களுக்கு ஒன்றாக பயணித்தனர். கனிமொழி மாயமானதால் அவரது கணவர் ஹரிகரன் சேலையூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸார், விசாரணை நடத்திய நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி கனிமொழி வீட்டுக்கு திரும்பினார். பிறகு சேலையூர் போலீஸில் ஆஜராகி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். இதன்பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதன்பிறகு கடந்த 21ம் தேதி சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே அரவிந்த்குமார், தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கனிமொழியும், அரவிந்த்குமாரும் பேராசிரியை, கல்லூரி மாணவர் என்ற மரபை மீறி காதலித்துள்ளனர். இதற்கு கனிமொழியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரவிந்த்குமாரின் காதலை நிராகரிக்கத் தொடங்கினார் கனிமொழி. ஆனால் விடாமல் அவரை காதலித்துள்ளார் அரவிந்த்குமார். இந்த சமயத்தில் தான் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தூத்துக்குடியிலிருந்து பஸ்சில் திண்டிவனத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

அப்போது கால் டாக்சி மூலம் கனிமொழி வீட்டுக்கு திரும்பி விட்டார். ஆனால் அரவிந்த்குமார், மீண்டும் பாண்டிச்சேரிக்கு சென்று ஒரு லாட்ஜில் ஆகஸ்ட் 20ம் தேதி தங்கினார். அன்று மாலையே அவர் லாட்ஜை காலி செய்து விட்டு மேல்மருவத்தூர் வந்துள்ளார். கால்போல போக்கில் அவர் சென்றுள்ளார். அவர் கடைசியாக வந்த இடம் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம். அங்கு அதிகாலை நேரத்தில் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் என்பதை தெரிந்த அரவிந்த்குமார், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக காலில் அணிந்திருந்த ஷுவை கழற்றி, பேக்கில் வைத்துவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார். கனிமொழி தன்னை விட்டு பிரிந்து சென்றதே அவரது தற்கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கனிமொழியும், அரவிந்த்குமாரும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் காதலித்தற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை கனிமொழி ஒப்பு கொண்டு வாக்குமூலமாக எங்களிடம் தெரிவித்துள்ளார். கனிமொழியை பலமுறை காதலிக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார். ஜூலை 9ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் அமர்ந்து கொண்டு 'உடனடியாக தனியாக நீ (கனிமொழி) வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று கனிமொழி செல்போனுக்கு மெஜேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெஜேஜை கனிமொழி அரவிந்த்குமாரின் அத்தை ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த தகவலையும் கனிமொழி எங்களிடம் சொன்னார்.

இவர்களது காதல் விவகாரம் கனிமொழியின் கணவருக்கு தெரிந்த பிறகு அவருடன் வாழ விரும்பவில்லை என்று அவர் தெரிவித்து விட்டார். இதனால் வேளச்சேரியில் உள்ள தாய்வீட்டில் தற்போது கனிமொழி இருக்கிறார். தான் செய்த தவறை இப்போது அவர் உணர்ந்தாலும் தனிமையில் குழந்தைகளை பிரிந்து தவிக்கிறார். கனிமொழியின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் கனிமொழி மீது அரவிந்த்குமார் தரப்பில் யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும் இருவரும் மேஜர். அதோடு, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அரவிந்த்குமாரை அவர் தற்கொலைக்கு தூண்டியதாக எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார். 



சசிகலா புஷ்பாவுக்கு உச்ச நீதிமன்றம் 'செக்'..! மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பாலியல் புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரரின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரிய மூவரும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டதாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூவரும் சிங்கப்பூரில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போதும் அவர்கள் வெளிநாட்டில் தான் உள்ளனர். முன்ஜாமீன் பெறுவதற்கான சில வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும், அவ்வாறு கையெழுத்திட வர முடியாத பட்சத்தில் அதற்கென தனி மனு தாக்கல் செய்யப்படுவது அவசியம், இல்லையெனில் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.  இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இது போலியான மனு என்ற எண்ணம் எழுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சசிகலா புஷ்பாவின் அறிவுறுத்தலின்படியே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்களைப் பெற்றுத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இல்லையெனில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி வேலுமணி, வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் சசிகலா புஷ்பா, தமிழகம் வந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.



இந்தியா ஏழாவது பணக்கார நாடு! எப்படி தெரியுமா..?

மீபத்திய நாடுகளின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா 5,600 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 48,900 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் சீனாவும், ஜப்பானும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியை முந்தி இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.


டாப் 10 பணக்கார நாடுகள்!

1. அமெரிக்கா  (48,900 பில்லியன் டாலர்) 2. சீனா (17,400 பில்லியன் டாலர்) 3. ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) 4. இங்கிலாந்து (9,200 பில்லியன் டாலர்), 5. ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) 6. பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) 7. இந்தியா (5,600 பில்லியன் டாலர்) 8. கனடா (4,700 பில்லியன் டாலர்) 9. ஆஸ்திரேலியா (4,500 பில்லியன் டாலர்) 10. இத்தாலி (4,400 பில்லியன் டாலர்).

எப்படி என்கிறீர்களா?
இந்தச் சொத்துக் கணக்கானது, அசையாத சொத்துக்கள், இருப்புப் பணம், பங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்தத் தொகையில் இருந்து கடன் மதிப்பு கழிக்கப்பட்ட பிறகு வரும் மதிப்புகள்தான் இவை. அது சரி, ஏழாவது இடத்தை இந்தியா எப்படிப் பிடித்தது? ஒரே காரணம், மனிதவளம்.
இந்தியாவின் மனிதவளம்தான் இந்த வளர்ச்சிக்கான மூலதனம். நகரமயமாதலும் உலகமயமாதலும் புதுப்புது தொழில்களைச் செய்வதற்கான கதவுகளை இந்தியாவுக்குத் திறந்துவிட்டன. வெளிநாட்டினர் இங்கு எளிதில் தொழில் செய்வதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் முதலீடுகள் குவிந்தன. அதுவரை விவசாயத்தில்தான் 70 சதவிகித வேலை வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மெல்ல அது சேவைத் துறைக்கு மாறியது.
புதிதாய் முளைத்த துறைகள்!

குறைந்த ஊதியத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் கிடைத்ததால் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்பமும், சேவையும் கொண்டு செல்லப்பட்டன. மனிதவளத்தை மட்டுமல்லாமல் மின்சாரம், தண்ணீர், கனிமங்கள் என அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்தது... இந்திய மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. அதே நேரத்தில், நுகர்வுத் தன்மையும் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறத் தொடங்கின. செல்போன், மல்டி ஃப்ளெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் என இந்தியாவே டிஜிட்டல் மயமானது. இதனால் அனைத்துத் தொழில்களிலும் இ-காமர்ஸ் என்ற இணைய வணிகம் அதிகரித்தது. மிக இளம் வயதிலேயே ஏராளமானோர் பணக்காரர்களாக விஸ்வரூபம் எடுத்தார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை மட்டுமேவைத்து பில்லியனர் ஆனவர்களில் ஓலா நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் பாட்டி, பாவிஷ் அகர்வால், ஸ்னாப்டீல் நிறுவனர் குனால் பால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வயது 28 - 32-க்குள்தான். அம்பானிகளும், பியானிகளும் ஆண்டாண்டுகளாய் சேர்த்த பணத்தை, ஐந்தே ஆண்டுகளில் இவர்களால் சேர்க்க முடிந்ததுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்திக்குச் சான்று.
இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை!

2011 - 62,000
2012 - 81,000
2013 - 1,00,900
2014 - 1,17,000
2015 - 1,37,100

இங்கு எல்லோரும் பணக்காரர்களா?

இந்தியா ஏழாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 375 லட்சம் கோடி. இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 1,37,100 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்காரர்கள் மட்டுமே 8.5 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எனில், மிச்சமுள்ள 1,37,090 மில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? 130 கோடி பேரில் இவர்கள் தவிர, மிச்சமுள்ள நபர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?


புள்ளிவிவரங்களின்படி 130 கோடி பேர் கொண்ட இந்த நாட்டில் 1.6 கோடி பேர் மட்டுமே வருடத்துக்கு ரூ.17 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். 16 கோடி பேர் வருடத்துக்கு 3 லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்க்கும் மிடில் க்ளாஸ் மக்கள். 36 கோடி பேர் வருடத்துக்கு 1.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். 70 கோடி பேர் 1.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மீதமுள்ள 5 கோடி பேர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள்.
காணி நிலம் வேண்டும்!

கிரெடிட் சூயிஸி சொத்து அறிக்கை 2014-ன்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினர், 49 சதவிகித இந்திய நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர், 25 சதவிகித நிலத்தையும், 40 சதவிகிதத்தினர், 21.5 சதவிகித நிலத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்திய மக்கள் வெறும் 4.5 சதவிகித நிலங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் இந்தியாவில் சொத்துக்களின் பரவல், பணப்புழக்கத்தின் அளவு இருக்கிறது. இந்தியாவின் 80 சதவிகிதச் சொத்துக்கள் 20 சதவிகித மக்களிடம் இருக்கிறது. மிச்சமுள்ள 20 சதவிகிதச் சொத்துக்களைத்தான் 80 சதவிகித மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
உணவின்றி உயிர் போகிறது!

மொத்த மதிப்பீட்டில் இந்தியா வளர்ந்து இருப்பது வெளிநாட்டினரிடம் பெருமையடித்துக்கொள்ள பயன்படலாம். ஆனால், உள்நாட்டில் நிலை என்ன? நேஷ்னல் சர்வே புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில், நகரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு ஒருவர் செய்யும் செலவு ரூ.88, கிராமங்களில் ரூ.48. இன்றைய விலைவாசியில் இந்தத் தொகையில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியுமா? இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 53 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நடக்கும் உயிரிழப்புகள் ஆகும்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவு இல்லாததால் எந்த நோய் எதிர்ப்புத் திறனும் இன்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். மொத்தத்தில், ‘இந்தியா உலக அரங்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஏழாவது அழகான பங்களா’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் பட்டினியில் கிடக்கிறார்கள். அது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தெரியுமா என்ன?
இங்கு என்ன வளம் இல்லை, ஆனால் ஏன் இந்த நிலை?

வளங்களின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சீனாவால் மட்டும் எப்படி உலகில் இரண்டாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக சீனா வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம், சீனா தனக்கென தனி வியாபாரக் கொள்கைகளை வகுத்தது. எந்தவொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் போட்டியாகத் தனது நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்தது. உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கான சந்தையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிடித்த நிலையில், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கான சந்தையைச் சீனா பிடித்தது. வால்யூம் அடிப்படையிலான ஓட்டத்தில் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட இடைவெளியில் ஓடி வென்றது.


சீனப் பொருட்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், இந்தியாவில் இல்லாத நாடுகளின் பொருட்களே இல்லை. இந்தியா வெளிநாட்டினரின் கூடாரம். பிராண்டுகள் என்று நாம் மயங்கும் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதிகள். இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதே நம்முடைய வளர்ச்சிக் குறைவாக இருக்கக் காரணம். மேலும் இங்கு ஈட்டப்படும் பெரும்பாலான வருவாய் வெளிநாட்டு முதலீடுகளால் வருபவை என்பதால், அவை இங்கே தங்குவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் ஊதியம் மட்டும்தான் மிச்சம்.

ஆனால், வெளிநாட்டினரை நுழையவிடாமல் இருந்திருந்தால், நமது அரசியல்வாதிகளால் நமக்கு இந்த வளர்ச்சிகூடக் கிடைத்திருக்காதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது?


Thursday, 25 August 2016

'காதலும் கார்ஃபைடு கல்லைப் போலத்தான்!' -முதல்வர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸின் கடிதம்

போயஸ் கார்டனில் முதல்வரிடம் கொடுப்பதற்காக கடிதம் ஒன்றைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ' முதல்வரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே மனு கொடுத்தோம்' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 


தமிழக பிரச்னைகள் குறித்து தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். நேற்று மாலை அவரது சார்பாக முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தார் பா.ம.க செய்தித் தொடர்பாளர் பாலு. ' திடீரென்று முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு என்ன நேர்ந்துவிட்டது' என அரசியல் மட்டத்தில் விவாதம் எழுந்தது. இதுகுறித்து பா.ம.க தலைமையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பாலுவிடம் பேசினோம். " முதல்வரை சந்திக்கச் சென்று மனு கொடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு அவரை சந்திக்க முடியவில்லை. முதல்வரின் செயலாளர் ஒருவரிடம் மருத்துவர் அய்யா கொடுத்தனுப்பிய கடிதத்தைக் கொடுத்தோம். பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது. இதேபோல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் கொடுத்து வருகிறோம். அரசியல் காரணங்கள் எதுவுமில்லை" என்றவர், முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கடிதத்தின் நகலை நமக்குக் கொடுத்தார். 
அதன் சாராம்சம் இதுதான்....
அன்புள்ள முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்!
தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை  கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது  அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும் வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள்.
சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல்  தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை 'ஒருதலைக் காதல்' என்று சொல்ல முடியாது. நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின்  சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது. இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன என்ற புரியாமையும்,  சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும்  தான் என்பதில் உள்ள உண்மையை  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். 
கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும். காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்' என விவரித்தவர், 


தொடர்ந்து, பெண் ஏன் அடிமை ஆனாள் புத்தகத்தில் பெரியார் குறிப்பிடும் சில வார்த்தைகளை விவரித்துவிட்டு, காதல் தெய்வீகமானது அல்ல... அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில்  பெரியார் கூறியிருக்கிறார். காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரசாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.  ஆனால், காதலாலும் கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?  காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும்  விடை கிடைக்கவில்லை. காரணம்... காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். 
அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (அரசியல் கட்சித் தலைவரின் வாசகங்களை விவரிக்கிறார்) இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது. பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை. மாறாக, பெண்கள்  எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி  விடும் ஆபத்திருக்கிறது. இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்' என விவரித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 




எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி


சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம். ' மதுரைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதும் தெரியும். உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது ஜாமீன் வாங்குவேன்' எனக் கொதிக்கிறார் சசிகலா. 


அ.தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தொடர் வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. பணிப்பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மனுத் தாக்கலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, அரசுத் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, ' முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றார் சசிகலா. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்போது, 'இம்மனுவை தாக்கல் செய்ய நான் அறிவுறுத்தினேன்' என ஜாமீன் கோருபவரின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன' என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி முன்வைத்த வாதங்களை அடுத்து, ' ஆகஸ்ட் 29-ம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார் நீதியரசர். 


மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் சசிகலா பார்வைக்குக் கொண்டு சென்றனர் அவரது வழக்கறிஞர்கள். அவர்களிடம் பேசியவர், " கையெழுத்து என்னுடையதுதானா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் கேட்டுள்ளனர். இதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது வாங்குவோம். ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க மாட்டேன்" என்றவர், " கார்டனுக்குள் நடந்த கொடுமைகளை நான் மறக்கவில்லை. அவர்கள் என்னை அடித்தது மட்டுமல்ல, கார்டன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள். இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் மேல்-சபையில் பேசினேன். இப்போது சமரசம் என்ற பெயரில் பேசுகிறார்கள். அவர்களின் சமரசத்திற்கு உடன்பட்டால், நான் அடி வாங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கட்சியில் இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கும் பதவிகள் பெற்றதற்கும் கடவுள்தான் காரணம். ஜெயலலிதா அல்ல. முன்ஜாமீன் வாங்குவதற்காக மதுரைக்குள் வந்தால், என்ன செய்வார்கள் என்பதும் தெரியும். அதற்கு இடம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. சட்டரீதியாகவே போராடுவோம்" எனப் பேசியிருக்கிறார். 


ஆகஸ்ட் 29 அன்று நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் உத்தரவை அடுத்தே, சட்டரீதியான போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிரான ஆட்டத்தையும் அவர் கைவிடுவதாக இல்லை. 


வண்டலூர் ராஜநாகம் உயிரிழந்தது ஏன்?

ண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு இராஜநாகங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி, அதில் ஒரு ஆண் ராஜநாகம் உயிரிழந்தது. மிகவும் அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றான இராஜநாகம் உயிரிழந்தது, விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம்.



"இறந்த ஆண் இராஜநாகம், 2015 அக்டோபர் மாதம், கர்நாடகாவின் பிலிக்குலா பூங்காவில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு இராஜநாகங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் தற்போது இறந்துள்ளது. பாம்புகள் வளரும் போது, தோலுரிப்பது இயல்பு. பாம்புகள் வளர, வளர தோல் உரிப்பதும் கூடும். இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆனால் இந்த இராஜநாகம் இப்படி தோல் உரிக்கவில்லை. இதனால் தலையின், கண் பகுதியையும் சேர்த்து தோல் மூடியது. எனவே பாம்பினால், இரையை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் பாம்பின் இறப்பிற்கு காரணம். தோலுரிப்பது என்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால், இந்த இராஜநாகத்திற்கு தோல் உரியவில்லை. எனவே அதற்கு உதவுவதற்காக அதன் மீது வெந்நீர் தெளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தோம். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. தோல் உரியவில்லை என்பதற்காக நாம் செயற்கையாக அதைச் செய்யவும் முடியாது. மற்ற பாம்புகளைப் போல, ராஜநாகங்களை கையில் எடுத்தெல்லாம் கையாளவும் முடியாது. மிகவும் விஷம் அதிகமான பாம்பு இராஜநாகம். அதற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது.
ஒருவேளை தலைப் பகுதியில், தோல் உரிந்து, உடல்முழுக்க நிகழாமல் இருந்தால் கூட , மீதித் தோலை உரிப்பதற்காக நாம் உதவ முடியும். ஆனால் இந்த இராஜநாகத்திற்கு தலையிலும் அது நிகழவில்லை. எனவே நாம் செயற்கையாக அதைச் செய்யும் போது, அதன் கண்களும் சேர்ந்து உரிந்திட வாய்ப்புண்டு. அது மேலும் பாம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த மரணம் இயற்கையாக நடந்த ஒரு விஷயம்தான்.  தகுந்த காலநிலை, உணவு, பராமரிப்பு இல்லாமல் எந்த விலங்காவது இணை சேருமா? ஆனால் இங்கே எத்தனையோ மான்கள், உயிரினங்கள் புதிதாகப் பிறக்கின்றன. பூங்காவைப் பொறுத்தவரை இதுதான் பெரிய விஷயம். ஆனால் இராஜநாகம் என்பது அரிதான விலங்குகளில் ஒன்று என்பதால் இது மட்டும் அதிக கவனம் பெறுகிறது" எனக் கூறினர்.
இராஜநாகங்கள் மிகவும், குளிர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும். பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். ஒரு காலத்தில், அதிகம் வேட்டையாடப்பட்ட இனம் என்பதால், தற்போது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த இராஜநாகங்களின் சிறப்பு குறித்து, கோவை 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த திரு.காளிதாஸ் அவர்களிடம் பேசினோம்.


"நச்சுபாம்புகளிலேயே மிகவும் பெரிய பாம்பு, இந்த இராஜநாகம். இந்தியாவில் பல விஷப்பாம்புகள் இருந்தாலும் கூட, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் நாகப்பாம்பு ஆகிய நான்கு வகைப் பாம்புகளால்தான் 95% உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்த நான்கு வகைப் பாம்புகளுக்கும் விஷமுறிவு மருந்து உண்டு. ஆனால் அதைவிடப் பல மடங்கு விஷமுள்ள, இராஜநாகத்திற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது. அதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாதது அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட, ராஜநாகம் கடித்து இறந்ததாக வரலாறு இல்லை. இதனை 'Gentle Man Snake' என்பார்கள். இதுதான் நிஜமான நல்லபாம்பு! அதுமட்டுமில்லாமல் பாம்புகளை மட்டுமே, உணவாகக் கொள்ளக் கூடிய ஒரு பாம்பு இது. அதே போல கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாக்கும் ஒரே பாம்பு இந்த இராஜநாகம்தான்.  
பெண் இராஜநாகம், முட்டையிட்டு 100 நாட்கள் வரை அடைகாக்கும். அதுவும் உணவு எதுவும் உட்கொள்ளாமல் அடைகாக்கும். பெண் ராஜநாகம், முட்டையில் இருந்து நாளை குட்டிகள் வெளிவரும் என்ற நிலையில், இன்று கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன்பிறகு அது கூட்டிற்கு திரும்பாது. காரணம் என்ன தெரியுமா? ஒருவேளை பசியில், தனக்கே தெரியாமல் தனது குட்டிகளையே உண்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு தாய்மை உணர்வு நிறைந்த உயிரினமும் கூட! இவை மழைக் காடுகளில் அதிக அளவில் காணப்படும். கர்நாடாகாவில் ஆகும்பே என்ற இடத்தில் இவை அதிகளவில் காணப்படுகின்றன" எனக் கூறினார்.



தொடர்ந்து கண்டனங்களுக்கு ஆளாகும் தமிழக அரசு!

‘‘நீங்கள் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர். விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்று ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டி இருக்கிறது. தமிழக அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘‘மக்கள் இங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதல்வர் மட்டும் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறார்’’ என்று பேசினார். இதற்காகத் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

‘‘விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!’’
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகப்பன் மற்றும் நீதிபதி பிரபுல்லா சி.பன்ட் அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. அப்போது, ‘‘பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தமிழ்நாடு அரசைப்போல வேறு எந்த அரசும் மாநில அரசு இயந்திரத்தை, இதுபோல தேவையில்லாத விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதில்லை’’ என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுபோல நீதிமன்ற கண்டனத்துக்குத் தமிழக அரசு ஆளாவது முதல்முறை கிடையாது. கடந்த மாதம்கூட, “இத்தனை அவதூறு வழக்குகள் எல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவை. விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி இருந்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியின்போது, பலமுறை சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் என வரிசையாகப் பல இடங்களில் தமிழக அரசு குட்டு வாங்கி இருக்கிறது. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நீதிமன்றம் கண்டித்துக்கொண்டே இருந்தாலும், ‘டோண்ட் வொரி.. பீ ஹேப்பி’ பாணியில் இருந்து வருகிறது தமிழக அரசு.

இதற்குமுன் எத்தனை முறை தமிழக அரசு கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தெரியுமா?
கண்டனம்-1:
கடந்த முறை 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க கொண்டு வந்த சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழக அரசின் நிபுணர் குழு அறிக்கை அளித்தது. இதில், பதிலளித்த உயர் நீதிமன்றம், ‘‘ ‘சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும்’ என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது தமிழக அரசின் இந்த நடவடிக்கை கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது’’ என்று சொல்லியது.
கண்டனம்-2:
தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தைக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பதில் சொல்ல அரசு ஆறு மாதம் காலம் அவகாசம் கேட்டு இழுத்தடித்தது. ‘‘நூலகத்தை மாற்ற, ஒரு நொடியில் முடிவெடுத்த உங்களுக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசமா?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நூலகத்தை மாற்றவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-3:
‘‘2014 மவுலிவாக்கம் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும், நீதிபதி ரெகுபதி விசாரணை கமிஷனின் அறிக்கையையும் வெளியிட வேண்டும்’’ எனவும் ஸ்டாலின் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய காலதாமதம் செய்தால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்’’ என்று எச்சரித்தது.
கண்டனம்-4:
மின்வாரியத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் இறந்தபோது, அவரது பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லி வாரிசு வேலை தர மறுத்தனர் அதிகாரிகள். இதை விசாரித்த நீதிபதி பரந்தாமன், ‘‘ ‘வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்க வேண்டும்’ என்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் சொல்கிறது. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையில், பாலினப் பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆகவே, பெற்றோர் மூலம் கிடைக்கும் உரிமையிலும் பாலினப் பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, அந்தப் பெண்ணுக்கு வேலை வழங்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.


கண்டனம்-5:
தர்மபுரி பேருந்து தீ வைப்பு வழக்கில் கைதாகி 2 வருடம் சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின்படி, ஜெயில் தண்டனை பெற்றவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகக்கூடப் பதவி வகிக்க முடியாது. இதை விசாரித்த நீதிபதி மணிக்குமார், ‘‘சிறைத் தண்டனை பெற்றவர் எப்படிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டார்?’’ என்று தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
கண்டனம்-6:
அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதற்குப் பதில் கேட்டு பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதில் வரவில்லை. இதற்கு நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததோடு 2 துறைகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அடுத்தமுறையும் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் பள்ளிக்கல்வித் துறைக்குக் கண்டனத்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கண்டனம்-7:
சென்னையில் விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு எதிராக டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் அந்தத் தவறு தொடர்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்தது.
கண்டனம்-8:
பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்புக் குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யாமல் தாமதித்து வந்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘பள்ளி வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. இது முக்கிய விஷயமாகத் தமிழக அரசுக்குத் தெரியவில்லையா?’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-9:
சட்டவிரோதமாகக் கழிவுநீர் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு அபராதம் என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதற்கு அதிகாரிகள், ‘‘ரூ.100 முதல் 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்று பதிலளித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதத் தொகையை அதிகரிக்கச் சொல்லி உத்தரவிட்டது.
கண்டனம்-10:
மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, மருத்துவக் கல்லூரிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்குக் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல’’ என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-11:
மதுரை சிறார் சிறைச்சாலை வசதி குறைவாக இருக்கிறது என்பதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கு சமூகநலத் துறை, ‘திருச்சி சிறார் காப்பகம் சிறந்த முறையில் கட்டப்பட்டு இருக்கிறது’ என்று பதிலளித்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘மதுரையைப் பற்றிக் கேட்டால் திருச்சி பற்றித் தகவல் தருகிறீர்கள். இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-12:
ஆறாவது சம்பள கமிஷன்படி, சம்பளம் தரசொல்லி சேலம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருந்தும் சம்பளம் வழங்காததால், ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டனர். அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் இனி சிறைக்கு அனுப்பபடுவார்கள்’ என்று கண்டித்தனர்.
கண்டனம்-13:
மழலையர் பள்ளி விதிமுறைகளை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கும் கால அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். அதற்கு அடுத்த முறை விசாரணையின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-14:
‘‘நெடுஞ்சாலை பணிகளின்போது, 200 ஆண்டுகள் பழமையான மரங்களை வேறொரு இடத்தில் நடவேண்டும்’’ என்று வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும். ஆனால், தமிழக அரசு ஜே.சி.பி வாகனத்தைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டிச் சாய்த்து, வேறு ஓர் இடத்தில் நட்டுள்ளனர். இதுவா தொழில்நுட்பம்? தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மரங்களை எப்படி வேறு இடங்களில் நட்டனர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் படித்துவந்து, அந்த முறையை இங்கு பயன்படுத்துங்கள்’’ என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-15:
காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களைத் தாக்குவது தொடர்பான சி.சி.டி.வி கேமரா வைக்கக்கோரிய வழக்கில், நான்கு வார கால அவகாசம் கொடுத்தது நீதிமன்றம். வழக்கம்போல பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை அரசு. அதற்காகக் கண்டனத்தோடு உள்துறைச் செயலருக்கும், டி.ஜி.பி-க்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கண்டனம்-16:
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை செய்ய சகாயம் தலைமையில் குழு அமைத்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, அது தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனுப் போட்டது தமிழக அரசு. அதை விசாரித்த நீதிபதிகள், ‘‘சகாயம் விசாரித்தால் உங்களுக்கு என்ன பயம்? நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை’’ என்றதோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதுமட்டுமில்லாமல், பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் தொடர்பான வழக்கு, மாநகராட்சி மீது தொடரப்பட்ட வழக்கு, பார்வையற்றோருக்குப் பணி தராது தொடர்பான வழக்கு எனப் பலமுறை நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை வேறு எந்த அரசும் இந்த அளவுக்குக் கண்டனங்களைச் சந்தித்தது இல்லை.
‘‘விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வழி!’’
இதுதொடர்பாக வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம், ‘‘இதுவரை தமிழக அரசின் சார்பில் 213-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே கிரிமினல் சட்டத்துக்கு உட்பட்டவை. கிரிமினல் சட்டத்தின் 499-வது பிரிவின்படி, பொதுவாழ்வில் இருப்பவர்களின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பது அவதூறு வழக்கு ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த அரசு அவதூறு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காகவே தனியே ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இருப்பதன்மூலம் அனைவரையும் மிரட்டப் பார்க்கிறது. விமர்சனம் என்பதும் ஜனநாயகத்தின் ஒரு வழிதான். அதன்மூலம் தன் தவறுகளை ஓர் அரசு திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க அரசு தனக்கு எதிராக யாரும் வாயை திறக்கக் கூடாது என்கிற முடிவில் இருப்பது பத்திரிகைகளின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது. நீதிமன்றத்தின் கண்டனத்தைக் கருத்தில்கொண்டாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் ஜெகனிடம் பேசினோம். ‘‘அவதூறு வழக்கை நாங்கள் எங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவதுபோல ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்தது இல்லை. பதியப்பட்ட வழக்குகள் அனைத்திலும் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. நடவடிக்கைகளை விமர்சிக்கலாம் என்று சொல்கிறார்கள். துணைவேந்தர்கள் நியமனத்தில் முதல்வர் லஞ்சம் வாங்கிவிட்டார், அரசு செயல்படாமல் இருக்குகிறது என்று எழும் விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்வது? கருத்துச் சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஆகிவிடாது. சட்டசபைக்குள் ஆக்கபூர்வமான விஷயங்களை விவாதிக்கலாம். ஆனால், வெளியே நின்றுகொண்டு மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, தவறாகப் பேசுபவர்களின் மீதுதான் நாங்கள் அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறோம்’’ என்றார்.




'தர்மதுரை'யில் ராதிகாவை அவமானப்படுத்தவில்லை... சீனு ராமசாமி விளக்கம்!

மீபத்தில் ராதிகா நடித்த 'தர்மதுரை' திரைப்படத்தைப் பார்த்த சரத்குமார் கோபமானார். 'தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான ராதிகாவுக்கு டைட்டில் கார்டில் உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தி விட்டனர் 'என்று கொந்தளித்து இருக்கிறார், சரத்குமார். 'தர்மதுரை' படத்தின் இயக்குநரான சீனு ராமசாமியிடம் சரத்குமார் கோபம் குறித்து விளக்கம் கேட்டோம். 


''ராதிகா மேடத்தை நான் எந்தளவுக்கு மதிக்கிறேன் என்பதை 'தர்மதுரை' படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை பார்த்தாலே புரியும். இந்தப்படம் அந்தம்மாவின் மரியாதையில் மணிமகுடம் சூட்டும். ராதிகா மேடத்தோடு பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு கதை எழுதிவிட்டு அம்மா கேரக்டரில் மேடம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ராதிகா மேடத்தின் ராடன்டிவி ஆபீஸுக்கு ஒரு வருஷம் அலையாய் அலைந்தேன்.  அவரை என்னால்  பார்க்கமுடியாமலே போய்விட்டது.  அதன்பின் 'தென்மேற்கு பருவக்காற்று' ரிலீஸாகி சரண்யாவுக்கு தேசீயவிருது கிடைத்தது. அப்போது ஒருமுறை ராதிகா மேடத்தை சந்தித்தேன். 'மேடம் சரண்யா நடிச்ச கேரக்டர்ல நீங்க நடிக்க வேண்டியது. உங்களைத்தேடி ராடன்டிவி ஆபீஸுக்கு வந்தேன் பார்க்க முடியலை' என்கிற தகவலை சொன்னேன். 
'தர்மதுரை' படத்துக்காக 25-நாட்கள் அவுட்டோர் ஷுட்டிங்கில் மேடம் கலந்து கொண்டார். அப்போது ஐந்து நாட்கள் மட்டுமே அவர்கள் நடிக்கும்காட்சிகளை படமாக்கினேன்.  அதன்பின் சென்னைக்கு அனுப்பி விடுவேன். அப்புறம் இடைவெளிவிட்டு ஐந்து ஐந்து நாட்களாகத்தன் படம்பிடித்தேன். ஏனென்றால் அவர்கள் ஒரு  இல்லத்து அரசி ராடன்டிவி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவி என்கிற நிலைகளை எல்லாம் உணர்ந்துதான் அவர்களுக்கு உரிய மாரியாதையை படப்பிடிப்பில் கொடுத்தேன்.


என்னுடைய உதவி டைரக்டர்களிடம் சீனியர் நடிகரான ராஜேஷ் பெயருடன் ராதிகா மேடத்தின் பெயரை போடச் சொன்னேன்.  தனித்து டைட்டில் கார்ட்யில் போட்டு இருக்க வேண்டும் என்பது சரத்சாரின் விருப்பம் முன்பே சொல்லி இருந்தால் செய்து இருப்போம்.  நானே ராதிகா மேடத்துக்கு ' இது இப்போ பேச வேண்டிய விஷயமே கிடையாது. ஏதோ கவனக்குறைவால் நடந்துவிட்ட ஒன்று. சரத்சார் இப்படி கருத்து தெரிவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று மெசேஜ் அனுப்பினேன்" என்று  தனது தரப்பைச் சொன்னார்.

Wednesday, 24 August 2016

தலைவர் இல்லாவிட்டால், இப்படித்தான் செயல்படுவதா?' -நிர்வாகிகளிடம் கொந்தளித்த ஈ.வி.கே.எஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யமூர்த்திபவன் கலகலக்கத் தொடங்கிவிட்டது. ' நான் இல்லாவிட்டால் அறையை உடைக்கும் அளவுக்குச் சென்றுவிடுவீர்களா?' என நிர்வாகிகளிடம் கொந்தளித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 


தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்தார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன். அவருடன் வந்தவர்கள், பூட்டிக் கிடந்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா அறையை உடைக்க முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு விரைந்தார். ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை இல்லை. சாவியைக் கேட்டதால் யாரும் கொடுக்கவில்லை. எனவே உடைக்கிறோம்' என சுத்தியலுடன் வந்தவர்கள் பதில் அளிக்க, கொதித்துப் போனார் ஈ.வி.கே.எஸ். அவர்களிடம், ' அறையை உடைக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? நான் இருக்கும்வரையில் அப்படி எதுவும் நடக்கவிட மாட்டேன். புதிய தலைவரை மேலிடம் நியமனம் செய்யட்டும். அதன்பிறகு யாருக்கு அறை ஒதுக்குவது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இனியொரு முறை இவ்வாறு நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்' எனக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர். 
காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். " தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். அவரோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எதிராகச் சிலர் செயல்படுகின்றனர். தினம்தோறும் என்னுடைய அறைக்குள் அமர்ந்து கட்சி அறிக்கையைத் தயார் செய்து வருகிறேன். ' அந்த அறைக்குள் நான் இருக்கக் கூடாது' என்பதற்காக, அறையை உடைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். என்னுடைய அறையைப் பறிக்கும் நோக்கில், ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை வேண்டும்' என்று சென்னா ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும், ' புதிய தலைவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். ' அதற்குள் அறையைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்' என்ற முனைப்பில் சிலர் வந்துள்ளனர். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ் ராஜினாமா செய்துவிட்டாலும், புதிய தலைவர் வரும் வரையில் அவர் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கும். அதற்குள் தேவையற்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராக இருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை" என்றார்.



தலைவர் இல்லாவிட்டால், இப்படித்தான் செயல்படுவதா?' -நிர்வாகிகளிடம் கொந்தளித்த ஈ.வி.கே.எஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யமூர்த்திபவன் கலகலக்கத் தொடங்கிவிட்டது. ' நான் இல்லாவிட்டால் அறையை உடைக்கும் அளவுக்குச் சென்றுவிடுவீர்களா?' என நிர்வாகிகளிடம் கொந்தளித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 


தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்தார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன். அவருடன் வந்தவர்கள், பூட்டிக் கிடந்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா அறையை உடைக்க முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு விரைந்தார். ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை இல்லை. சாவியைக் கேட்டதால் யாரும் கொடுக்கவில்லை. எனவே உடைக்கிறோம்' என சுத்தியலுடன் வந்தவர்கள் பதில் அளிக்க, கொதித்துப் போனார் ஈ.வி.கே.எஸ். அவர்களிடம், ' அறையை உடைக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? நான் இருக்கும்வரையில் அப்படி எதுவும் நடக்கவிட மாட்டேன். புதிய தலைவரை மேலிடம் நியமனம் செய்யட்டும். அதன்பிறகு யாருக்கு அறை ஒதுக்குவது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இனியொரு முறை இவ்வாறு நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்' எனக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர். 
காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். " தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். அவரோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எதிராகச் சிலர் செயல்படுகின்றனர். தினம்தோறும் என்னுடைய அறைக்குள் அமர்ந்து கட்சி அறிக்கையைத் தயார் செய்து வருகிறேன். ' அந்த அறைக்குள் நான் இருக்கக் கூடாது' என்பதற்காக, அறையை உடைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். என்னுடைய அறையைப் பறிக்கும் நோக்கில், ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை வேண்டும்' என்று சென்னா ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும், ' புதிய தலைவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். ' அதற்குள் அறையைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்' என்ற முனைப்பில் சிலர் வந்துள்ளனர். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ் ராஜினாமா செய்துவிட்டாலும், புதிய தலைவர் வரும் வரையில் அவர் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கும். அதற்குள் தேவையற்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராக இருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை" என்றார்.



பெண் அரசியல்வாதிகள் சொல்லும் மன அமைதி மந்திரம்...!

ட்சி மேலிடம், பத்திரிகையாளர்கள், மக்கள், சக அரசியல்வாதிகள் என பலமுனைகளிலும் விமர்சனங்களை எதிர்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். குறிப்பாக பெண் அரசியல்வாதிகள்! பரபரப்பான அரசியல் களத்தில் கூடுதல் மன அழுத்தங்களையும் விமர்சனங்களையும் நாள்தோறும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது அவர்கள். இதனால் ஏற்படும் மனச் சோர்வினை பெண் அரசியல் தலைவர்கள் எப்படி வென்றெடுக்கிறார்கள்...?

இந்திய அளவில் பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தனிமை விரும்பியான அவரும் தனக்கான துணையாக தேர்ந்தெடுப்பது புத்தகங்களைத்தான். இளம் வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை  வளர்த்து  கொண்ட அவர், 'புத்தக வாசிப்பு என்பது பலநேரங்களில் தேவையற்றவர்களிடம் தேவையற்று பேசுவதை தவிர்க்கவும் உதவும்' என குறிப்பிட்டிருக்கிறார் தம் ஒரு பேட்டியில். பரபரப்பான அரசியல்வாதியாக அவர் மாறியபின் மக்கள் கூட்டங்களை கண்டுதான் தனக்கான நெருக்கடிகளிலிருந்து மீண்டார் என்பார்கள்.



எத்தனை டென்ஷன் ஆனாலும்,  தொண்டர்களை கண்டுவிட்டால் அவரது பேச்சில் உற்சாகமும் முகத்தில் மென்மையான  சிரிப்பும் குடிகொள்ளும். இப்படி வலிமையான   பெண்களையும்  ஏதோ ஒன்றை தேட வைக்கும்  அந்த  மன அழுத்தை  இன்றைய பெண் அரசியல்வாதிகள் எப்படி கையாளுகிறார்கள்...  அவர்கள்  மேற்கொள்ளும்  பயிற்சிகள்   என்ன  என்பது குறித்து அவர்களிடம் நேரிடையாக  உரையாடினோம்.   

"சிரித்து விடுவேன்..."!- தமிழிசை சவுந்தரராஜன், பாஜக, தமிழ்நாடு மாநிலத் தலைவர்

"உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் உடல் நிலையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படும் என்பது ஒரு மருத்துவராக எனக்குத் தெரியும் என்பதால் மன அழுத்தத்தை கையாள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பேன். சில உணர்வுகளைக் கையாள வேண்டிய அணுகுமுறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். சட்டென்று கோபப்படுவது குறித்து நாம் ஆராய வேண்டும். எனக்கு டென்ஷனோ அல்லது மன அழுத்தமோ ஏற்பட்டால் சில நிமிடங்கள் கழித்து சிரித்து விடுவேன் . நன்றாக வாய்விட்டு சிரித்து விடுவேன். விமர்சனங்களை பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னை நான் வலிமை உள்ளவளாக நிலை நிறுத்திக் கொள்வேன்.

எந்த விஷயத்தையும் நேர்மையுடன் அணுகும்போது எதற்கு விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டும். என் எதிரில் நின்று என்னை யார் திட்டினாலும் அதை நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நான் அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் விமர்சனங்களையோ, கோபங்களையோ நான் என்னிடம் நெருங்க விட்டதில்லை.

சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை சில பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். என் உருவத்தைப் பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். அதையெல்லாம் நான் ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. விமர்சனங்களைக் கண்டு கவலைகொள்ளும்போது தான் பெண்களுக்கு அரசியலில் சறுக்கல்கள் ஏற்படும். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு இன்றைய பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். அது தவறான கண்ணோட்டம். இந்த விமர்சனங்களையும், வசைகளையும் பொருட்படுத்திக் கொண்டே இருந்தால், பெண்களால் ஒன்றுமே செய்ய முடியாது. விமர்சனம் என்பது எல்லா இடத்திலும் உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ள வேண்டும்"

தியானமும் புத்தக வாசிப்பும்! - ஜோதிமணி காங்கிரஸ்
"அரசியல் என்பது கார்பரேட் நிறுவனம் அல்ல. சவாலான இடத்தில்தான் இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக குடும்பத் தளத்தில் உள்ள பெண்களாக இருந்தால் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு கொண்டு ஒரு சலுகையாகத்தான் அரசியல் பணிகளைக் கவனிக்க விடுவார்கள். அரசியலைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தில் இருந்து வரும் பெண்களுக்கு பெரும்பாலும் அரசியல்களம் என்பது பெரும் சிக்கல்தான். கொள்கை அடிப்படையிலோ அல்லது பிரச்னைகளின் அடிப்படையிலோ இயங்கும் பெண்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அத்தகையப் பெண்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நான் கோபத்தை குறைக்க தியானம் செய்கின்றேன். இதனால், அழுத்தமான அரசியல் நெருக்கடியான சமயங்களில் எனக்குள் எழும் கோபங்களை கட்டுப்படுத்த முடிகிறது.கோபப்பட்டால்தான் வேலை நடக்கும் என்ற நிலை வந்தால் அந்த இடத்தில், கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசுவேன். கோபப்படவில்லை என்றால் நம் உடல் நிலை சீராக இருக்கும். மன அழுத்தமாக உள்ள தருணங்களில் நிறையப் புத்தகங்களைப் படிப்பேன். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் ,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் என்னை அதில் இருந்து வெளியில் கொண்டு வந்துவிடும்.



நேர்மையாகவும் , தீவிரமாகவும் எதையும் கையாளும் போது தடைகள் இருக்கும் . அந்தத் தடைகள் என்பது எல்லா நாட்களிலும் தொடராது. என்றாவது ஒரு நாள் உடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையாக இருந்தால் போதும் எந்த சிக்கல்களிலிருந்தும் மீண்டு வர முடியும். பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் குடும்பத்துடனும், புத்தகங்களுடன், இயற்கையுடனும் என்னுடைய நேரத்தைக் கழித்துள்ளேன்"

"நேர்மையாக, தைரியமாக ...!”- பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

எங்கள் இயக்கத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கான ஜனநாயகம் உள்ளது. என்னைப் பற்றி கோபமூட்டுகிற கருத்தையோ யாராவது சொன்னால், அதற்கான விளக்கத்தைக் கொடுக்க எங்களுடைய கட்சிக்குள் அனுமதி உள்ளது. அப்போது நான் கோபமாகப் பேசினாலும் கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். கட்சிக்குள் நான் என்ன சொல்ல வருகிறேனோ அந்தக் கருத்தைச் சொல்லி விடுவேன். யாருக்காகவும் எதற்காகவும் தயங்க மாட்டேன். மற்றவர்கள் சொல்கிற, தனிநபர்கள் சொல்கின்ற விமர்சனங்கள் உண்மைக்கு மாறாக இருந்து, அது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேறு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பேன். அதை மற்றவர்கள் மீது எந்த நேரத்திலும் காட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பேன். அப்படியெல்லாம் நம்மை நாம் தேற்றிக் கொண்டால் கூட அந்தப் பிரச்னையின் அழுத்தம் அப்படியேதான் இருக்கும். அடுத்த செயல்பாட்டுக்குச் செல்லவிடாமல் நம்மைத் தடுக்கும். இந்த மாதிரியான நேரத்தில் எனக்கு இலக்கியம்தான் கைகொடுக்கும். வேறறொரு தளத்துக்குச் சென்று அங்கே உட்கார்ந்து இயற்கை பற்றிய கவிதையோ அல்லது சமூகத்தில் பார்த்த விஷயங்களையோ நான் எழுதிவிடுவேன். அப்போது எனக்கு ஒரு பதில் கிடைக்கும்.

எதையும் மனதுக்குள் அடைத்து புழுங்கினால் பிரச்னைதான். அதனை வெளிப்படுத்தி விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக அரசியலில், கருத்துக்களை மனம்விட்டுச் சொல்லாமல் தந்திர அரசியலைக் கையாளக்கூடியவர்கள் அதிகப் பிரச்னைளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தந்திர அரசியலுக்குள் நான் செல்வது கிடையாது. நேர்மையாக, தைரியமாக கருத்துக்களைச் சொல்கிறவர்கள் கலங்குவதில்லை.




இனி பி.இ படிப்பை யாரும் குறை சொல்ல முடியாது..!'- திசைகாட்டும் தமிழக முதல்வர்

பி.இ. மாணவர்கள் ஐ.இ.எஸ் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.


உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். "பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் Indian Engineering Service Exam-ல் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளி நாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும். இம்மையம் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் ஒருங்கிணைக்கும். சிறநஙத திட்டங்கள் காப்பீடு உரிமை பெறவும் இம்மையம் உதவி புரியும். நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்கள், அடைகாக்கும் மையம் பற்றிய விழிப்புணர்வு; தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் இம்மையத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.



போட்டி அ.தி.மு.க..! மதுரை எம்.ஜி.ஆர். ரவுசு

திமுகவில் என்ன நடக்கிறது...கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், பழுத்த அனுபவசாலி கருணாநிதியையே பெருமூச்சுவிடவைப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா...ஆனால் அதெல்லாம் நேற்றுவரை. அவரால் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் எம்.பி, நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று அவருக்கு எதிராக கோலை சுழற்றுகிறார். பரபரப்பான இந்த  அரசியல் படத்தின் இடைவேளை விடுவதற்கு முன்பே அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது.



எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஜெயலலிதா புறக்கணிப்பதாகக் கூறி அதிமுகவுக்கு எதிராக புதிய கட்சி ஒன்றை துவக்கியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவர். எம்.ஜி.ஆர் போன்ற தோற்றம் கொண்டவரான சக்ரவர்த்தி, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு நன்கு அறிமுகமானவர். சக்ரவர்த்தி திருமகன் என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பில், தானே கதாநாயகனாக நடித்து திரைப்படம் வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு படத்தின் தயாரிப்பு பணியில் இருக்கிறார். இந்த இடைவேளையில்தான் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கடந்த 6 ம்தேதி அழைப்பிதழ் போட்டு புதிய கட்சியை மதுரையில் துவக்கியிருக்கிறார்.

போட்டி சட்டமன்றத்தை நடத்தியதற்கே திமுக எம்.எல்.ஏக்கள் படாதபாடு பட்டுவரும் நிலையில் கட்சிக்குள் இருந்தபடியே போட்டி கட்சியை துவக்கியிருக்கும் சக்ரவர்த்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். சிரீயஷாகவே பதிலளிக்கிறார் மனிதர்.

கட்சியை துவக்கவேண்டிய நிர்பந்தம் ஏன் உங்களுக்கு...

எம்.ஜி.ஆர் அதிமுகவை துவக்கியபோது பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழந்த உயிர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுக என்ற கட்சியின் அடித்தளமே ரசிகர்கள்தான். அத்தனை கஸ்டங்களுக்கு இடையில் உருவான  கட்சி, இன்று முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. ஜெயலலிதாவை தெரிந்திருப்பவர்களைவிட , மன்னார்குடியைச் சேர்ந்த அந்த குடும்பத்து மனிதர்களை தெரிந்திருந்தால் மட்டுமே கட்சியில் மதிப்பும் பொறுப்பும் என்றாகிவிட்டது.

மதுரையில் அந்த கட்சியினர் சாதி அரசியலைதான் நடத்திவருகின்றனர். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆர் அபிமானிகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஒரு வட்டச்செயலாளர் பொறுப்பைக் கூட அதிமுக வழங்கவில்லை. இதுதான் எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு கட்சியில் உள்ள மரியாதை. அதனால்தான் என்னைப்போன்றவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியை துவக்கினேன்.

அப்படியானால் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாத  தனிப்பட்ட காரணத்தினால்தான் கட்சி துவக்கியிருக்கிறீர்களா...

தவறு... என்னை ஒரு உதாரணத்திற்காக சொன்னேன். என்னைப்போல் லட்சக்கணக்கான பேர் புறக்கணிக்கப்பட்டு, பெயருக்கு அந்த கட்சியில் அவமானங்களை சந்தித்துக்கொண்டு தொடர்கிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தேர்தலுக்காக கருவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டு பின்னர் துாக்கியெறியப்படுகிறார்கள். இதுதொடர்ந்ததே கட்சி துவக்க காரணம்.

இத்தனை வருடம் கட்சியில் இருந்தும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது நம்புகிற மாதிரி இல்லையே, என்ன காரணம்...

நான் எம்.ஜி.ஆர் உருவத்தில் இருப்பதுதான். பலர் செயற்கையாக எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டு தோற்றம் அளிப்பார்கள். எனக்கு இயல்பாகவே அந்த தோற்றம் உண்டு. இதனால் பொது இடங்களிலும் கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர் அபிமானிகள் என்னை சூழந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வர். இது உள்ளுர் தலைவர்களுக்கு ஒருவித எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. இந்த 30 வருடங்களில் மதுரையில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளுமின்றி கட்சிக்காக உழைத்திருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆர் போல் தோற்றமளிப்பதால் பொறுப்புகளை வழங்கினால் எங்கே இவன் வளர்ந்துவிடுவானோ என திட்டமிட்டு என்னை புறக்கணிக்கின்றனர்.

சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் நான் எடுத்தை படத்தை ட்ரெய்லருக்காக கட்சியின் தொலைக்காட்சிக்கு கொடுத்தேன். இன்று வரை அது ஒளிபரப்பாகவில்லை. வேறு ஒருவர் மூலம் காரணம் கேட்டபோது அவர் முகம் எம்.ஜி.ஆர் போல இருப்பதால் நிறுத்திவைக்கச் சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கின்றனர். இதுதான் எம்.ஜி.ஆரை பின்பற்றிவந்த எங்களைப்போன்றவர்களின் நிலை. எம்.ஜி.ஆர் புகழை குறைப்பதுதான் அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளரின் நோக்கம்.
எம்.ஜி.ஆர் அபிமானிகள் புறக்கணிக்கப்படுவதைவிட எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அவரது புகழை மறைப்பதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.
எந்த திட்டத்தை துவக்கினாலும் அதற்கு அம்மா பெயர்தான். உப்பாக இருந்தாலும் தண்ணீர் பாட்டிலானாலும் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொள்கிறார். எம்.ஜி.ஆர் தன்னை வளர்த்த அண்ணாவுக்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதா அப்படி செய்யவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை இருட்டடிப்பு செய்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமான புகழை தந்திருப்பது சத்துணவுத் திட்டம். அந்த திட்டத்தினால் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கும் புகழை இருட்டடிப்பு செய்வதற்காக இன்றைய அரசு சத்தமில்லாமல் ஒருவேலையை செய்துவருகிறது. அந்த துறையில் பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை. அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துவருகிறார்கள். இதனால் திட்டம் பாழாகி, அதை தமது பெயரில் வேறு ஒரு திட்டமாக மாற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கம். இப்படி எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை மக்கள் மறந்துவிடவேண்டும் என நினைக்கிறார் அவர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அபிமானிகள் எப்படி இந்த கட்சியில் தொடர முடியும். எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சி எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கானதாகவேண்டும். கட்சி துவங்க காரணம் இதுதான்.


அதிமுகவுக்கு அடித்தளம் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருக்கலாம்...அதற்காக அவர்களுக்கே முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கமுடியுமா...

எங்கள் கோரிக்கை, எம்.ஜி.ஆரை புறக்கணிக்காதீர் என்பதுதான். கட்சிக்காக கஷ்டப்பட்ட தலைவர் பெயரில் எந்த திட்டங்களும் இல்லை. கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசப்படுவதில்லை. பேனர்களில் எம்.ஜி.ஆர் படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் பெயர் சொன்னாலே ஏதோ மாற்றுக்கட்சிக்காரனை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். வெளிப்படையாக சொல்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதிமுக சாதிக்கட்சியாக முழுமையாக மாறிவிடும். ஜெயலலிதாவிற்குப்பின் எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சியை அனுபவிக்கப்போகிறவர்கள் யார்...இதற்காகத்தான் இத்தனை கஸ்டங்களை அனுபவித்தாரா எம்.ஜி.ஆர்...

புதிய கட்சிக்கு வரவேற்பு எப்படி.. 

நல்ல வரவேற்பு. மதுரையில் நடந்த கட்சித் துவக்கிவிழாவுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்தனர். அதுவே கட்சியின் முதல் வெற்றி. அவர்களிடம் பேசியதில் அவர்களும் அதே மனக்குறையை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சில தினங்களுக்கு முன் முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் அழைப்பு வந்தது. ஆச்சர்யமடைந்தேன். என் தைரியத்தை பாராட்டிய அவர், “எங்களால் இனி பல விஷயங்களை செயல்படுத்தமுடியாது. வெளிப்படையாக எதிர்க்கிற தைரியமும் இல்லை. ஆனால் என் ஆதரவு உண்டு” என வாழ்த்து தெரிவித்தார். கட்சியில் அவருக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.
கருணாநிதிக்கு எதிராக நெடுஞ்செழியனும், எம்.ஜி.ஆருக்கு எதிராக எஸ்.டி சோமசுந்தரமும் கட்சி துவங்கி காணாமல் போன கடந்த கால வரலாறுகள் உண்டே...மக்கள் பலம் கொண்ட ஒரு தலைவரை எதிர்த்து கட்சி நடத்தி அவரது செல்வாக்கை குறைக்க முடியுமா...

உண்மைதான்...நீங்கள் சொன்னவர்களில் எஸ்.டி.எஸ், எம்.ஜி.ஆரின் புகழை குறைக்க கட்சித்துவங்கியவர். அதனால் காணாமல்போனார். ஆனால் நாங்கள் இன்று கட்சி துவங்கியிருப்பதே அந்த எம்.ஜி.ஆரின் புகழை காக்கவேண்டும் என்றுதானே! எம்.ஜி.ஆரைவிட மக்கள்சக்தி கொண்டவர் வேறு யாரேனும உண்டா?...இந்த நுட்பமான விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்.
புரட்சித்தலைவரின் தொண்டர்கள் என்னுடன் தொடர்ந்துபேசிவருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் செய்து புறக்கணிக்கப்பட்ட தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறேன். புரட்சித்தலைவரின் சிந்தனைகளை எங்கள் கட்சி செயல்படுத்தும். எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கான கட்சியாக இது இருக்கும்.

புதிய கட்சிக்கு எதிர்ப்புகள் ஏதேனும் வந்ததா...

வராமலிருக்குமா...மதுரையின் முக்கிய புள்ளி ஒருவர் மூலம் நைச்சியமான மிரட்டல் வந்தது. 'கட்சிப் பேரை கெடுக்கப்பார்க்கறீயா' என கொந்தளித்தவர், 'எதையாவது பண்ணிக்க, ஆனா, எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தாதே' என எகிறினார். பதிலுக்கு நானும், “எம்.ஜி.ஆர் 1972 ல் கட்சி அதிமுகவை துவக்கியபோது கொடியிலும் கட்சியின் பெயரிலும்  அண்ணாவின் படத்தை இடம்பெறச் செய்தார். அதற்கு கருணாநிதியே ஒன்றும் செய்யமுடியவில்லை. எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் படத்தை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் படத்தை நீங்க முறையாக பயன்படுத்தியிருந்தீங்கன்னா நாங்க ஏன் தனியா கட்சி துவக்கிறோம்'னு பதில் சொன்னேன். 'பிரச்னை வராம பார்த்துக்கங்க...'என்றார். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்க அவரது ரசிகர்கள் தயாரா இருக்கோம். அதைவிட இழப்பு ஒன்று வருமா என்றேன். போனை வெச்சிட்டார்.
இன்றைய அரசியல் எப்படி உள்ளது...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அநாகரிக அரசியலை செய்கின்றன. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டனர். இன்று விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. காரணம் 100 நாள் வேலைதிட்டம். வேலை செய்யாமல் காசு வரும்போது வேலைக்கு ஏன் போக வேண்டும் என்ற மனநிலை வந்துவிட்டது பலருக்கு. சட்டசபை ஆடல் பாடல் என அரசவை போல் ஆகிவிட்டது. போட்டி சட்டமன்றம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகிறது திமுக. 'திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று காமராஜர் அன்று சொன்னது இன்று நிஜமாகி வருகிறது.

நேற்றுவரை 'அம்மா' புகழ்பாடிவிட்டு இன்று அதிமுகவுக்கு எதிராக கட்சி பொங்குகிறீர்கள்...திடீரென ஜெயலலிதா உங்களை அழைத்து சமாதானப்படுத்தினால் என்ன நிலை எடுப்பீர்கள்

அத்தனை சுலபமல்ல அது. சொன்னால் நம்பமாட்டீர்கள்...கட்சியில் இந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதாவை இதுவரை ஒருமுறை கூட சந்தித்ததில்லை. சந்திக்கவிட்டதில்லை. தோட்டத்திலும் அலுவலகத்திலும் உள்ள சில ஆட்கள் இதை சாமர்த்தியமாக செய்கிறார்கள். அவரை பார்ப்பதற்காக கொட நாட்டிலும், சென்னை வீட்டிலும் என பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். அவரை சந்திப்பதற்காகவே தேர்தல் சமயங்களில் விண்ணப்பிப்பேன். ஒரு பலனுமில்லை. போயஸ் கார்டனில் தீக்குளிக்க முயன்றால்தான் அவரை சந்திக்க முடியும் என்பதுதான் நிலை. அப்படிப்பட்டவர் இனி அழைப்பார் என்பதில் நம்பிக்கையில்லை.


ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் அழைத்தால் சில நிபந்தனைகளுடன்தான் சந்திப்பேன். எம்.ஜி.ஆர் புகழ்பரப்பும் பணியை செய்வது, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு முக்கியத்துவம், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டால் பரிசீலிக்கலாம்...ஆனால் இதில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அதுதான் ஜெயலலிதா!