Monetize Your Website or Blog

Showing posts with label ஜீரோ பட்ஜெட். Show all posts
Showing posts with label ஜீரோ பட்ஜெட். Show all posts

Thursday, 18 August 2016

நெல்லிலிருந்து பூவுக்கு... அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய்... செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி..!

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை... பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.

பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ''ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.
'பசுமை விகடன்' படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.
இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.  
நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்... அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு... நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.

தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.
'இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்'' என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.
அது இங்கே பாடமாக...
ஒரு விதை... ஒரு நாற்று!
செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.
ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து... ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).
எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2 அடி இடைவெளி !
நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !
18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து... பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.
50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ''இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.
என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்'' என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு...
40 ஆயிரம் லாபம் !
''நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.
நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.

வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.
புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்... நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்'' என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,
''வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்'' என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
 தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 98659-38452.

Saturday, 2 July 2016

ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டரை லட்சம்... செலவில்லா வருமானம்!

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை... ‘பத்மஸ்ரீ’ சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்ற பல்லாயிரம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கையிலெடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில முன்னோடி விவசாயிகள் தங்கள் வயலையே மாதிரிப் பண்ணையாக்கி, நேரடி களப்பயிற்சி கொடுத்து, மேலும் பல புதிய ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா. 

கர்நாடகா மாநிலம், மைசூரூ மாநகரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பன்னூர். அங்கு, நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கரையின் ஓரத்தில் உள்ளது, கிருஷ்ணப்பாவின் 5 ஏக்கர் நிலம். நெல்லும், கரும்பும்தான் பிரதானப் பயிர்கள். அதனுள் 3 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் வனத்தை உருவாக்கியுள்ளார், கிருஷ்ணப்பா. அது, மழையீர்ப்பு மையமாக மட்டுமல்லாமல், வருமானம் கொடுக்கும் வனமாகவும் விளங்குகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறுவடை முடிந்த வயல்வெளிகள். அதில் மேய்ந்து வலம் வரும் கிடை ஆடுகள். இடையிடையே தோகை சாய்த்து ஆடும் கரும்புத்தோட்டங்கள். வரப்பில் வரிசை கட்டிப் போகும் விவசாயப்பெண்கள். முகம் பார்க்கும் தெளிவில் ஓடும் வாய்க்கால் தண்ணீர். இப்படியான இயற்கை கொஞ்சும் இடத்தில் இருக்கிறது, அந்த ஜீரோ பட்ஜெட் வனம்.

பச்சைத்துண்டு முண்டாசு தலையில் கட்டி, ஜீவாமிர்தம் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கிருஷ்ணப்பாவைச் சந்தித்தோம். இடையிடையே தமிழ் கலந்த கன்னடத்தில் பேசினார், கிருஷ்ணப்பா. 

“என் முழுப்பெயர், கிருஷ்ணப்பா தாசே கவுடா. பன்னூர்தான் சொந்த ஊர். பரம்பரை விவசாயக்குடும்பம். நல்ல வண்டல் மண்வளம், நீர்வளம் இரண்டும் நிறைந்த ஊர். நெல், கரும்பு, வாழை... என பணப்பயிர் சாகுபடி செய்யும் வளமான பூமி. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்குள்ள விவசாயிகள் வசதியாக இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. கடன் தொல்லை, ஜப்தி, தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லா வளமும் இருந்தும் தற்கொலையை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை என்றாலும், பச்சைத்துண்டை தோளில் போட்டபடி போராடக் கிளம்பி விடுவேன். கர்நாடக மாநில விவசாய சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறேன். மாதத்தில் பாதி நாள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என்று போய் விடுவேன். அப்படி போகும்போதுதான் 2003-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, பயிற்சி எடுத்தேன். அப்போதுதான், எல்லா வளமும் இருந்தும், ரசாயன விவசாயத்தால்தான் எங்கள் ஊர் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விஷயம் பொட்டில் அடித்தது போல உறைத்தது” என்று நிறுத்திய கிருஷ்ணப்பா, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி தொடர்ந்தார்.  

“கண்டபடி ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வயலில் கொட்ட ஆரம்பித்து, உற்பத்திச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு... அறுவடையான பொருளைக் கட்டுப்படியாகாத விலைக்கு விற்று, கடைசியில் கடனாளியானதுதான் மிச்சம். அந்தச் சிக்கலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரே வழி ஜீரோ பட்ஜெட் விவசாயம் மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டேன். விவசாயிகள் சங்கக் கூட்டங்களிலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து வலியுறுத்தினேன். ஒரு சிலரைத் தவிர யாரும் இதைக் காது கொடுத்து கேட்கவில்லை. ‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. யூரியா, பொட்டாஷ் என்று போட்டோமா... வெள்ளாமையை எடுத்தோமா? என்று இருப்பதுதான் நிம்மதி’ என்றனர்.

இதுகுறித்து பாலேக்கரிடம் புலம்பினேன். ‘எதையும் பேசுவதை விட செய்து காட்டுவதுதான் நல்ல பதிலாக இருக்கும். நேரத்தை ஒதுக்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார், பாலேக்கர். உடனே, விவசாய சங்க வேலைகளைக் குறைத்துக் கொண்டு, ஜீரோ பட்ஜெட் பண்ணை உருவாக்கும் வேலையில் இறங்கினேன். 2006-ம் ஆண்டு, மூன்று ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையைத் தொடங்கினேன். இடையில் பலமுறை பாலேக்கரைத் தொடர்புகொண்டு எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.
பாலேக்கர் சொன்ன வன விவசாயம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று மகசூல் விவசாயம். இன்னொன்று வன விவசாயம். நெல், கரும்பு, வாழை என ஆண்டுப் பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் விவசாயம் மேற்கொள்ளலாம். வன விவசாயம் என்பது, ‘டூ நத்திங் ஃபார்மிங்’. அதாவது, எதுவும் செய்யாத விவசாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுவது. இதை ‘சுயச்சார்பு விவசாயம்’ என்று பாலேக்கர் சொல்வார். இந்த வன விவசாயத்தில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மண் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும். செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் வனத்தில் இருந்தே கிடைக்கும். அந்த வன விவசாயத்துக்கு ‘பாலேக்கர் மாடல்’ என்று பெயர். நான் மூன்று ஏக்கர் நிலத்தில் வன விவசாயத்தை மேற்கொண்டேன்.

தினமும் 6 லிட்டர் தண்ணீர்!

என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்குகளின் மூலம்... கார்பன், நைட்ரஜன் உற்பத்தி ஆகிறது. மண்ணின் ஹியூமஸ், பூமியில் கார்பன் அளவைக் கூட்டுகிறது. இதனால், தினமும் 6 லிட்டர்  தண்ணீர் அளவுக்கு ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இது தினமும் ஆறு லிட்டர் மழை நீரைச் சேமிப்பதற்குச் சமம். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து எதுவும் செய்யாத தானியங்கு விவசாயமாக எனது வன விவசாயம் மாறியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் வன விவசாயத்தில், அறுவடை செய்ய மட்டுமே நாங்கள் உள்ளே செல்கிறோம். மற்ற வேலைகளை எல்லாம் இயற்கை செய்து கொள்கிறது. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது வன விவசாயத்தில் தென்னை, பாக்கு, மிளகு, காபி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் இருந்து இப்போதைக்கு வருமானம் வருகிறது” என்ற கிருஷ்ணப்பா, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
பாலேக்கரின் பாராட்டு!

“சில ஆண்டுகளுக்கு முன் பண்ணையைப் பார்வையிட்ட பாலேக்கர், சில திருத்தங்கள் சொன்னார். அதில் முக்கியமானது இரண்டடுக்கு உயிர்வேலி. எனது பண்ணையைச் சுற்றிலும் சில்வர் ஓக், தேக்கு, மலைவேம்பு மரங்கள் ஒரு அணியாகவும், அடுத்த வரிசையில் அகத்தி, சீத்தா, முருங்கை என்று உயிர் வேலிகளை அமைக்குமாறு சொன்னார். அதன்படியே நடவு செய்தேன். அவை இப்போது வளர்ந்து உயிர்வேலியாக நிற்கின்றன. சமீபத்தில் பண்ணைக்கு வந்த பாலேக்கர், ‘முழுமையான ஜீரோ பட்ஜெட் வன விவசாயம் என்பதற்கான மாதிரிப்பண்ணையாக மாறிவிட்டது’ என்று பாராட்டிச் சென்றார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று பலரும் எனது வன விவசாயப் பண்ணைக்கு வந்து பல விஷயங்களைத் தெரிந்து செல்கிறார்கள்” என்று பெருமையுடன் சொன்ன கிருஷ்ணப்பா நிறைவாக,
“2007-ம் ஆண்டு ‘பசுமை விகடன்’ மூன்றாவது இதழில் என்னைப்பற்றிய கட்டுரை வந்துள்ளது. அன்று சாதாரண ஜீரோ பட்ஜெட் பண்ணையாக இருந்த நிலம், இந்த 9 ஆண்டுகளில் மகசூல் விவசாயத்துடன் வன விவசாயம் அடங்கிய மாதிரிப்பண்ணையாக மாறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் மைசூரூ மாவட்டத்தில் மட்டும் 500 விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நான் பிறந்த இந்த மாவட்டத்தை முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாய மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைத் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி ‘ஜீரோ பட்ஜெட் ஹீரோ’வாக ஆக்கியது, பசுமை விகடன்தான். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல விவசாயிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். பசுமை விகடனுக்கு நன்றி”  என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

இந்த கிருஷ்ணப்பா தன் அனுபவங்களை, திருச்சியில் பிப்ரவரி 12 அன்று துவங்க இருக்கும் ‘பசுமைவிகடன்’ அக்ரி எக்ஸ்போ-2016 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன் அனுபவங்களை நேரடியாக பகிர இருக்கிறார்.
தொடர்புக்கு,
கிருஷ்ணப்பா,
செல்போன்: 098805 87545.

முக்கியமானது,  மூடாக்கு!

மூடாக்குகள் குறித்துப் பேசிய கிருஷ்ணப்பா, “ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மூடாக்கு ரொம்ப முக்கியமான ஒன்று. என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்கின் பங்களிப்பு அபரிமிதமான ஆற்றலைக் கொடுத்து வருகிறது. மண் மூடாக்கு, இலை மூடாக்கு, உயிர் மூடாக்கு, இயற்கை மூடாக்கு ஆகிய நான்கு வகை மூடாக்குகள்தான், எங்களது கலப்பு மர விவசாயத்துக்கான உரச்செலவை மிச்சப்படுத்தி வருகின்றன” என்கிறார். இதோ அந்த மூடாக்குகள் குறித்த விளக்கம்...

மண் மூடாக்கு: நிலத்தில் 25 அடி நீளத்தில், 3 அடி ஆழ, அகலத்தில் பள்ளம் வெட்டி அதில் காய்ந்த மரக்கிளைகள், தென்னை ஓலைகள், பழக்கழிவுகள் போன்றவற்றைப் போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். சில மாதங்களில் எல்லாம் மட்கி செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் சத்துக்களை பல ஆண்டுகளுக்குக் கொடுக்கும். இது, நீண்ட காலம் பலன் தரும் மூடாக்கு. இந்த வகை மூடாக்கு,  நடவுக்கு முன்னரே அமைக்கப்படவேண்டும். செடிகள் வளர்ந்த பிறகு, அமைத்தால், வேர்கள் அறுந்து விடும்.

இலை மூடாக்கு: செடிகளில் இருந்து விழும் இலைகள், தரை முழுதும் பரவிக் கிடக்கும். தொடர்ந்து விழும் இலைகள், மட்கி மட்கி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உரமாகும். இது இலை மூடாக்கு.

உயிர் மூடாக்கு: தட்டைப்பயறு, உளுந்து... போன்ற இரு இலைத் தாவரப்பயிர்களை விதைப்பதுதான் உயிர் மூடாக்கு. இப்பயிர்கள், செடிகளுக்குத் தேவையான நைட்ரஜனை காற்றில் இருந்து கிரகித்துக் கொடுக்கும்.

இயற்கை மூடாக்கு: மரங்களின் நிழல் தோட்டத்தினுள் பரவி அதிக வெயிலைத் தடுத்து மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் இருக்கும்படி செய்கிறது. வெளியில் இருந்து வரும் நச்சுக்காற்றை தடுத்து நிறுத்துகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு வழி வகுக்கிறது.

வருமானம் வரும் வழிகள்...!

தனது வருமானம் குறித்துச் சொன்ன கிருஷ்ணப்பா, “ஒரு ஏக்கர் நிலத்தில் 528 பாக்கு மரங்கள், 30 தென்னை மரங்கள், 30 சாத்துக்குடி மரங்கள், 250 காபிச்செடிகள் இருக்கின்றன. 

ஒவ்வொரு பாக்கு மரத்திலும் 10 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பாக்கு 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 300 ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சத்து, 58 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 

ஒரு தென்னையில் இருந்து 150 காய்கள் வீதம், 30 தென்னையில் இருந்து ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 காய்கள் கிடைக்கின்றன. ஒரு காய் 9 ரூபாய் என விலை போகிறது. அதன் மூலம் 40 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. 

ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 50 கிலோ வீதம் 30 சாத்துக்குடி மரங்களில் இருந்து 1,500 கிலோ மகசூல் கிடைக்கிறது. கிலோவுக்கு 10 ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 250 காபிச்செடிகளில் இருந்து தலா 2 கிலோ வீதம் 500 கிலோ காபிக்கொட்டை கிடைக்கிறது. கிலோ 60 ரூபாய் என விற்பனை செய்வதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆக, பாக்கு, தென்னை, சாத்துக்குடி, காபி ஆகிய பயிர்களில் இருந்து மட்டுமே ஆண்டு வருமானமாக, ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய் கிடைக்கிறது. குறுமிளகு, ஆரஞ்சு, இஞ்சி உள்ளிட்ட மற்ற பயிர்களில் அடுத்த ஆண்டு முதல் வருமானம் கிடைக்கும்” என்கிறார், கிருஷ்ணப்பா.

36 அடியிலே...

3 ஏக்கர் பரப்பளவில் வன விவசாயம் மேற்கொண்டாலும், அதை, ‘பாலேக்கர் மாடல்’ முறையில் 36 அடிக்கு 36 அடி என்கிற எல்லைக்குள் வடிவமைத்திருக்கிறார் கிருஷ்ணப்பா. இதுகுறித்து பேசும்போது, “36 அடிக்கு 36 அடி என்கிற சதுரத்தில் 130 மரங்கள் நடவேண்டும். அதில் ஒரு தென்னை, ஒரு ஆரஞ்சு, ஒரு சாத்துக்குடி, பாக்கு, காபி அல்லது கோகோ, கிளரிசீடியா, மிளகு, வெனிலா, முருங்கை ஆகியற்றில் தலா 21 மரங்கள் இருக்கும்படி நடவு செய்யவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான முறையில் தண்ணீர்ப் பாசனம் செய்து, அதில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலை கலந்து விடவேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பா.

ஆப்பிரிக்காவிலும் ஜீரோ பட்ஜெட்!

பன்னூர் கிராமத்தை, சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி சேத்தன் கெம்பே கவுடா. இவர், கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்திலிருக்கும் ருவாண்டா நாட்டில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த சேத்தனிடம் பேசினோம்.

“என்னோட நண்பர், 300 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். உதவிக்கு என்னையும் அழைத்தார். இப்போது அவரோடு பங்குதாரராக இருந்து நெல் விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். அங்கு முழுக்க முழுக்க ரசாயன விவசாயம்தான். அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அங்கும் மேற்கொள்ள விரும்பினேன். நண்பரின் அனுமதியுடன் 10 ஏக்கர் நிலத்தில் மட்டும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறேன். அங்குள்ள நாட்டு மாடுகளைப் பயன்படுத்தி இடுபொருட்கள் தயாரிக்கிறேன். அங்குள்ள விவசாயிகள் பலருக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைச் சொல்லித் தருகிறேன். வயலுக்கு வந்து பார்த்து வியந்து போகிறார்கள். இந்த ஆண்டு அறுவடை முடிந்ததும் ஜீரோ பட்ஜெட் அரிசியில் சமைத்த உணவை விருந்து வைக்க இருக்கிறேன். கண்டிப்பாக அந்த ருசி அவர்களை ஈர்க்கும். தொடர்ந்து, அங்கு பாலேக்கர் உள்ளிட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய வல்லுநர்களை அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க வைக்கும் யோசனையும் இருக்கிறது” என்றார், மகிழ்ச்சி பொங்க.

Friday, 3 June 2016

மாத்தி யோசித்தார், மாற்றத்தை கண்டார்; வறண்ட நிலத்தை வென்று காட்டிய பிப்லாப் கேடன்!

பிப்லாப் கேடன் பால்​ ​(Biplap Ketan Paul), 40,000 ஏக்கர் வறண்ட நிலத்தை இன்று விவசாய பூமியாக மாற்றி இருப்பவர்! 

ஆம், குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான பிப்லாப் கேடன் பால்​ ​ புதிதாக ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதன் பெயர் "புங்க்ரூ". புங்க்ரூ என்றால் பைப் என்று அர்த்தம். புங்க்ரூ பைப்களை நிலத்தில் செருகி ஒரு குறிப்பிட்ட முறையில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம், நிலத்தில் உள்ள உப்புத்தன்மையைக் குறைக்க முடியும். இதுதான் பிப்லாப் கேடனின் கண்டுபிடிப்பு. 

 2012ல் வறண்ட வட குஜராத்தை, வளம் மிக்க ஒரு மாநிலமாக மாற்றியதற்காக, இவருக்கு 'அணில் ஷா கிராம் விகாஸ் பரிதோஷிக்' என்ற விருது வழங்கப்பட்டது. இவரது புங்க்ரூ என்ற திட்டத்தின் கீழ், நிலத்தில் உள்ள உப்புத்தன்மையை நீக்குவதோடு, குறைந்தளவு நீரைப் பெறும் நிலத்தில் செழுமையாக விவசாயம் செய்ய முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தால், வருடத்திற்கு மூன்று விதமான பயிர்களை விளைவிக்க முடிவதால், விவசாயிகள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர்.

இவரது திட்டத்தின்​மூலம் சுமார் 14,000 விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். 40,000 ஏக்கர் வறண்ட நிலத்தை விளைநிலமாக மாற்றியுள்ள பிப்லாப் கேடன் தன் சாதனையைப்பற்றி அலட்டிக்கொள்ளாத மனிதராக இருக்கிறார். " நீர் மிகவும் சக்திவாய்ந்தது. அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது!". என்று கூறும் பிப்லாப் கேடனின் வயது 46.

புங்க்ரூ திட்டத்தின்​மூலம் 40 மில்லியன் லிட்டர் மழை நீரை நிலத்தடியில் சேமிக்க முடியும். ஒரே ஒரு புங்க்ரூவில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நீர் சேமிக்கப்படுகிறது. காரணம், குஜராத்தில் மழை பொழியும் நாட்கள் மிகவும் குறைவு. ஆனால், இந்த நீரை உபயோகித்து, ஏறத்தாழ 25 வருடங்களுக்கு, ஒரு போகத்திற்கு இரு வகைப் பயிர்களை அறுவடை செய்து, விவசாயிகளின் குடும்பங்கள் கவலையின்றி வாழலாம். மேலும், புங்க்ரூவால் நிலத்தின் உப்புத்தன்மை குறைக்கப்படுவதால், விவசாயத்திற்கு மேலும் மேலும் அது பயன்படுகிறது.

தற்போது, புங்க்ரூ பைப் 17 வடிவமைப்பில் ரூ.4 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. மழை, பயிர், மண்வளம் உள்ளிட்ட 29 காரணிகளுக்கு தக்கபடி இந்த வடிவமைப்புகள் மாறுபடுகின்றன. ஒரு புங்க்ரூ யூனிட் 15 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நீரைச் சேமிக்கிறது.

பிப்லாப் தனது சாதனைகளுக்காக Ashoka Globaliser Award for Innovation, மற்றும் World Bank, Commonwealth, United Nations Framework Convention on Climate Change, Asian Development Bank முதலிய சர்வதேச அமைப்புகளில் இருந்து பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். பிப்லாப் கேடன் விவசாயத்திற்கு செய்த நற்செயல்களைக்காட்டிலும் இன்னொரு விஷயத்திலும் பாராட்டுக்குரியவர். ஆம்...இத்திட்டத்தை முதன்மையாகச் செயல்படுத்துவது முழுக்க முழுக்க பெண்கள்.​

காலத்திற்கேற்றபடி விவசாயத்தில் நவீனமுறைகளை புகுத்தாமலும் விவசாயம் பொய்த்துப்போவதில் உள்ள சிக்கல்களை களையாமலும் விவசாயம் தழைக்கவில்லையென்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட பிப்லாப் கேடன் நிச்சயம் விவசாயிகளின் நண்பன்தான் அதில் சந்தேகமில்லை!

Thursday, 26 May 2016

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..!

மாடு மறுவருஷம்... ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொலவடை சொல்வார்கள். அதாவது, மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி... ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.

இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.  
வழிகாட்டிய கருத்தரங்கம்!
''விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன்.  ஆரம்பத்துல இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத்தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா 'பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன்.
அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்கற முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படிச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக்கிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார்.
செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி!
''ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள்கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை வாங்குறது, விக்கிறதுல இருக்குற நடைமுறை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எப்படி ஆடுகளைத் தேர்வு செய்றது, எந்த சமயத்துல ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்குங்கிறது மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.
இரண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை. நான் கிடாக்களை வாங்கி வளர்த்து வித்துட்டு இருக்கேன். இதுல கொஞ்சம் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம். ஒவ்வொரு முறையும் சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து வித்துட்டிருக்கேன். 25 சென்ட்ல சூபாபுல்,

20 சென்ட்ல வேலிமசால் பயிர் பண்ணியிருக்கேன். இதைத்தான் பசுந்தீவனமா கொடுத்துட்டு இருக்கேன். தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமா இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தான் அதிக கிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமா வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாத்தான் வளர்க்குறேன்' என்ற பரமசிவம் ஆடு வளர்ப்பு முறை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
கொட்டகையே போதும்!
''கிடாக்களை வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செல வில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.
புதிய ஆடுகள் கவனம்!
புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கெனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்து களைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக் கொட்டகையில் வைத்திக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.  
கொட்டகை சுத்தம் அவசியம்!
கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக் காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக
5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்
சுழற்சி முறையில் நல்ல லாபம்!

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், ''30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். 'கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1,750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்கலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்'' என்ற பரமசிவத்துக்கு 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சிறந்த ஆடு வளர்ப்பு விவசாயி’ விருது கிடைத்திருக்கிறது.
''ஆடு வளர்ப்பு விருது வாங்க டெல்லி போய், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கையால வாங்கினேன். டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோபிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்'' என்று பெருமையோடு சொன்னார்.
தொடர்புக்கு, பரமசிவம், செல்போன்: 97879-82183.

Monday, 23 May 2016

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

லிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க,  கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலகநாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்துகொண்டிருந்தவர்...ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts) உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru) அந்த நவீன விவசாயி.

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’. உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்துவிட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள் மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும். 

ஆந்திரப்பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​ எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு​முடித்தார் கடாரு.

​கூகுள் அலர்ட்ஸ்

2003​ ம் ஆண்டு, ​​கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனை​அங்கீகரிக்கவில்லை. இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான​ Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள்,  அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்பு​மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர். 

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு,  வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.  ​ ​

இப்போது இவரின் புதிய அவதாரம், ​'​விவசாயி​'​.... ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக வாங்கிப்போட்ட அந்நிலத்தை,  5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான் விவசாயம் செய்யும் திட்டம். தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றி​ விட்டார். இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம் விவசாயியாக கடாரு விளங்குகிறார்.

"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது. இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன்​.​ எனது முயற்சியால்  இன்று ​இந்த நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும் விளைவிக்கிறேன்.  என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  ​'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ​ ரீதியாகக் கொண்டு செல்வதற்கே​,​ இந்த படிப்பை படிக்கிறேன்" என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்டபடியே சொல்கிறார் நாக கடாரு. 

விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !

Wednesday, 18 May 2016

ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டரை லட்சம்... செலவில்லா வருமானம்!

காவிரிக்கரையில் ஒரு ஜீரோ பட்ஜெட் வனம்
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை... ‘பத்மஸ்ரீ’ சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்ற பல்லாயிரம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கையிலெடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில முன்னோடி விவசாயிகள் தங்கள் வயலையே மாதிரிப் பண்ணையாக்கி, நேரடி களப்பயிற்சி கொடுத்து, மேலும் பல புதிய ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா. 

கர்நாடகா மாநிலம், மைசூரூ மாநகரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பன்னூர். அங்கு, நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கரையின் ஓரத்தில் உள்ளது, கிருஷ்ணப்பாவின் 5 ஏக்கர் நிலம். நெல்லும், கரும்பும்தான் பிரதானப் பயிர்கள். அதனுள் 3 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் வனத்தை உருவாக்கியுள்ளார், கிருஷ்ணப்பா. அது, மழையீர்ப்பு மையமாக மட்டுமல்லாமல், வருமானம் கொடுக்கும் வனமாகவும் விளங்குகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறுவடை முடிந்த வயல்வெளிகள். அதில் மேய்ந்து வலம் வரும் கிடை ஆடுகள். இடையிடையே தோகை சாய்த்து ஆடும் கரும்புத்தோட்டங்கள். வரப்பில் வரிசை கட்டிப் போகும் விவசாயப்பெண்கள். முகம் பார்க்கும் தெளிவில் ஓடும் வாய்க்கால் தண்ணீர். இப்படியான இயற்கை கொஞ்சும் இடத்தில் இருக்கிறது, அந்த ஜீரோ பட்ஜெட் வனம்.

பச்சைத்துண்டு முண்டாசு தலையில் கட்டி, ஜீவாமிர்தம் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கிருஷ்ணப்பாவைச் சந்தித்தோம். இடையிடையே தமிழ் கலந்த கன்னடத்தில் பேசினார், கிருஷ்ணப்பா. 

“என் முழுப்பெயர், கிருஷ்ணப்பா தாசே கவுடா. பன்னூர்தான் சொந்த ஊர். பரம்பரை விவசாயக்குடும்பம். நல்ல வண்டல் மண்வளம், நீர்வளம் இரண்டும் நிறைந்த ஊர். நெல், கரும்பு, வாழை... என பணப்பயிர் சாகுபடி செய்யும் வளமான பூமி. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்குள்ள விவசாயிகள் வசதியாக இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. கடன் தொல்லை, ஜப்தி, தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லா வளமும் இருந்தும் தற்கொலையை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை என்றாலும், பச்சைத்துண்டை தோளில் போட்டபடி போராடக் கிளம்பி விடுவேன். கர்நாடக மாநில விவசாய சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறேன். மாதத்தில் பாதி நாள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என்று போய் விடுவேன். அப்படி போகும்போதுதான் 2003-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, பயிற்சி எடுத்தேன். அப்போதுதான், எல்லா வளமும் இருந்தும், ரசாயன விவசாயத்தால்தான் எங்கள் ஊர் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விஷயம் பொட்டில் அடித்தது போல உறைத்தது” என்று நிறுத்திய கிருஷ்ணப்பா, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி தொடர்ந்தார்.  

“கண்டபடி ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வயலில் கொட்ட ஆரம்பித்து, உற்பத்திச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு... அறுவடையான பொருளைக் கட்டுப்படியாகாத விலைக்கு விற்று, கடைசியில் கடனாளியானதுதான் மிச்சம். அந்தச் சிக்கலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரே வழி ஜீரோ பட்ஜெட் விவசாயம் மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டேன். விவசாயிகள் சங்கக் கூட்டங்களிலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து வலியுறுத்தினேன். ஒரு சிலரைத் தவிர யாரும் இதைக் காது கொடுத்து கேட்கவில்லை. ‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. யூரியா, பொட்டாஷ் என்று போட்டோமா... வெள்ளாமையை எடுத்தோமா? என்று இருப்பதுதான் நிம்மதி’ என்றனர்.

இதுகுறித்து பாலேக்கரிடம் புலம்பினேன். ‘எதையும் பேசுவதை விட செய்து காட்டுவதுதான் நல்ல பதிலாக இருக்கும். நேரத்தை ஒதுக்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார், பாலேக்கர். உடனே, விவசாய சங்க வேலைகளைக் குறைத்துக் கொண்டு, ஜீரோ பட்ஜெட் பண்ணை உருவாக்கும் வேலையில் இறங்கினேன். 2006-ம் ஆண்டு, மூன்று ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையைத் தொடங்கினேன். இடையில் பலமுறை பாலேக்கரைத் தொடர்புகொண்டு எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

பாலேக்கர் சொன்ன வன விவசாயம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று மகசூல் விவசாயம். இன்னொன்று வன விவசாயம். நெல், கரும்பு, வாழை என ஆண்டுப் பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் விவசாயம் மேற்கொள்ளலாம். வன விவசாயம் என்பது, ‘டூ நத்திங் ஃபார்மிங்’. அதாவது, எதுவும் செய்யாத விவசாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுவது. இதை ‘சுயச்சார்பு விவசாயம்’ என்று பாலேக்கர் சொல்வார். இந்த வன விவசாயத்தில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மண் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும். செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் வனத்தில் இருந்தே கிடைக்கும். அந்த வன விவசாயத்துக்கு ‘பாலேக்கர் மாடல்’ என்று பெயர். நான் மூன்று ஏக்கர் நிலத்தில் வன விவசாயத்தை மேற்கொண்டேன்.
தினமும் 6 லிட்டர் தண்ணீர்!

என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்குகளின் மூலம்... கார்பன், நைட்ரஜன் உற்பத்தி ஆகிறது. மண்ணின் ஹியூமஸ், பூமியில் கார்பன் அளவைக் கூட்டுகிறது. இதனால், தினமும் 6 லிட்டர்  தண்ணீர் அளவுக்கு ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இது தினமும் ஆறு லிட்டர் மழை நீரைச் சேமிப்பதற்குச் சமம். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து எதுவும் செய்யாத தானியங்கு விவசாயமாக எனது வன விவசாயம் மாறியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் வன விவசாயத்தில், அறுவடை செய்ய மட்டுமே நாங்கள் உள்ளே செல்கிறோம். மற்ற வேலைகளை எல்லாம் இயற்கை செய்து கொள்கிறது. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது வன விவசாயத்தில் தென்னை, பாக்கு, மிளகு, காபி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் இருந்து இப்போதைக்கு வருமானம் வருகிறது” என்ற கிருஷ்ணப்பா, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
பாலேக்கரின் பாராட்டு!

“சில ஆண்டுகளுக்கு முன் பண்ணையைப் பார்வையிட்ட பாலேக்கர், சில திருத்தங்கள் சொன்னார். அதில் முக்கியமானது இரண்டடுக்கு உயிர்வேலி. எனது பண்ணையைச் சுற்றிலும் சில்வர் ஓக், தேக்கு, மலைவேம்பு மரங்கள் ஒரு அணியாகவும், அடுத்த வரிசையில் அகத்தி, சீத்தா, முருங்கை என்று உயிர் வேலிகளை அமைக்குமாறு சொன்னார். அதன்படியே நடவு செய்தேன். அவை இப்போது வளர்ந்து உயிர்வேலியாக நிற்கின்றன. சமீபத்தில் பண்ணைக்கு வந்த பாலேக்கர், ‘முழுமையான ஜீரோ பட்ஜெட் வன விவசாயம் என்பதற்கான மாதிரிப்பண்ணையாக மாறிவிட்டது’ என்று பாராட்டிச் சென்றார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று பலரும் எனது வன விவசாயப் பண்ணைக்கு வந்து பல விஷயங்களைத் தெரிந்து செல்கிறார்கள்” என்று பெருமையுடன் சொன்ன கிருஷ்ணப்பா நிறைவாக,
“2007-ம் ஆண்டு ‘பசுமை விகடன்’ மூன்றாவது இதழில் என்னைப்பற்றிய கட்டுரை வந்துள்ளது. அன்று சாதாரண ஜீரோ பட்ஜெட் பண்ணையாக இருந்த நிலம், இந்த 9 ஆண்டுகளில் மகசூல் விவசாயத்துடன் வன விவசாயம் அடங்கிய மாதிரிப்பண்ணையாக மாறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் மைசூரூ மாவட்டத்தில் மட்டும் 500 விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நான் பிறந்த இந்த மாவட்டத்தை முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாய மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைத் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி ‘ஜீரோ பட்ஜெட் ஹீரோ’வாக ஆக்கியது, பசுமை விகடன்தான். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல விவசாயிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். பசுமை விகடனுக்கு நன்றி”  என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

இந்த கிருஷ்ணப்பா தன் அனுபவங்களை, திருச்சியில் பிப்ரவரி 12 அன்று துவங்க இருக்கும் ‘பசுமைவிகடன்’ அக்ரி எக்ஸ்போ-2016 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன் அனுபவங்களை நேரடியாக பகிர இருக்கிறார்.

முக்கியமானது,  மூடாக்கு!

மூடாக்குகள் குறித்துப் பேசிய கிருஷ்ணப்பா, “ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மூடாக்கு ரொம்ப முக்கியமான ஒன்று. என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்கின் பங்களிப்பு அபரிமிதமான ஆற்றலைக் கொடுத்து வருகிறது. மண் மூடாக்கு, இலை மூடாக்கு, உயிர் மூடாக்கு, இயற்கை மூடாக்கு ஆகிய நான்கு வகை மூடாக்குகள்தான், எங்களது கலப்பு மர விவசாயத்துக்கான உரச்செலவை மிச்சப்படுத்தி வருகின்றன” என்கிறார். இதோ அந்த மூடாக்குகள் குறித்த விளக்கம்...

மண் மூடாக்கு: நிலத்தில் 25 அடி நீளத்தில், 3 அடி ஆழ, அகலத்தில் பள்ளம் வெட்டி அதில் காய்ந்த மரக்கிளைகள், தென்னை ஓலைகள், பழக்கழிவுகள் போன்றவற்றைப் போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். சில மாதங்களில் எல்லாம் மட்கி செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் சத்துக்களை பல ஆண்டுகளுக்குக் கொடுக்கும். இது, நீண்ட காலம் பலன் தரும் மூடாக்கு. இந்த வகை மூடாக்கு,  நடவுக்கு முன்னரே அமைக்கப்படவேண்டும். செடிகள் வளர்ந்த பிறகு, அமைத்தால், வேர்கள் அறுந்து விடும்.
இலை மூடாக்கு: செடிகளில் இருந்து விழும் இலைகள், தரை முழுதும் பரவிக் கிடக்கும். தொடர்ந்து விழும் இலைகள், மட்கி மட்கி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உரமாகும். இது இலை மூடாக்கு.

உயிர் மூடாக்கு: தட்டைப்பயறு, உளுந்து... போன்ற இரு இலைத் தாவரப்பயிர்களை விதைப்பதுதான் உயிர் மூடாக்கு. இப்பயிர்கள், செடிகளுக்குத் தேவையான நைட்ரஜனை காற்றில் இருந்து கிரகித்துக் கொடுக்கும்.

இயற்கை மூடாக்கு: மரங்களின் நிழல் தோட்டத்தினுள் பரவி அதிக வெயிலைத் தடுத்து மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் இருக்கும்படி செய்கிறது. வெளியில் இருந்து வரும் நச்சுக்காற்றை தடுத்து நிறுத்துகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு வழி வகுக்கிறது.

வருமானம் வரும் வழிகள்...!

தனது வருமானம் குறித்துச் சொன்ன கிருஷ்ணப்பா, “ஒரு ஏக்கர் நிலத்தில் 528 பாக்கு மரங்கள், 30 தென்னை மரங்கள், 30 சாத்துக்குடி மரங்கள், 250 காபிச்செடிகள் இருக்கின்றன. 

ஒவ்வொரு பாக்கு மரத்திலும் 10 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பாக்கு 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 300 ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சத்து, 58 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 

ஒரு தென்னையில் இருந்து 150 காய்கள் வீதம், 30 தென்னையில் இருந்து ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 காய்கள் கிடைக்கின்றன. ஒரு காய் 9 ரூபாய் என விலை போகிறது. அதன் மூலம் 40 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. 

ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 50 கிலோ வீதம் 30 சாத்துக்குடி மரங்களில் இருந்து 1,500 கிலோ மகசூல் கிடைக்கிறது. கிலோவுக்கு 10 ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 250 காபிச்செடிகளில் இருந்து தலா 2 கிலோ வீதம் 500 கிலோ காபிக்கொட்டை கிடைக்கிறது. கிலோ 60 ரூபாய் என விற்பனை செய்வதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆக, பாக்கு, தென்னை, சாத்துக்குடி, காபி ஆகிய பயிர்களில் இருந்து மட்டுமே ஆண்டு வருமானமாக, ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய் கிடைக்கிறது. குறுமிளகு, ஆரஞ்சு, இஞ்சி உள்ளிட்ட மற்ற பயிர்களில் அடுத்த ஆண்டு முதல் வருமானம் கிடைக்கும்” என்கிறார், கிருஷ்ணப்பா.

36 அடியிலே...

3 ஏக்கர் பரப்பளவில் வன விவசாயம் மேற்கொண்டாலும், அதை, ‘பாலேக்கர் மாடல்’ முறையில் 36 அடிக்கு 36 அடி என்கிற எல்லைக்குள் வடிவமைத்திருக்கிறார் கிருஷ்ணப்பா. இதுகுறித்து பேசும்போது, “36 அடிக்கு 36 அடி என்கிற சதுரத்தில் 130 மரங்கள் நடவேண்டும். அதில் ஒரு தென்னை, ஒரு ஆரஞ்சு, ஒரு சாத்துக்குடி, பாக்கு, காபி அல்லது கோகோ, கிளரிசீடியா, மிளகு, வெனிலா, முருங்கை ஆகியற்றில் தலா 21 மரங்கள் இருக்கும்படி நடவு செய்யவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான முறையில் தண்ணீர்ப் பாசனம் செய்து, அதில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலை கலந்து விடவேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பா.

ஆப்பிரிக்காவிலும் ஜீரோ பட்ஜெட்!

பன்னூர் கிராமத்தை, சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி சேத்தன் கெம்பே கவுடா. இவர், கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்திலிருக்கும் ருவாண்டா நாட்டில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த சேத்தனிடம் பேசினோம்.
“என்னோட நண்பர், 300 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். உதவிக்கு என்னையும் அழைத்தார். இப்போது அவரோடு பங்குதாரராக இருந்து நெல் விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். அங்கு முழுக்க முழுக்க ரசாயன விவசாயம்தான். அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அங்கும் மேற்கொள்ள விரும்பினேன். நண்பரின் அனுமதியுடன் 10 ஏக்கர் நிலத்தில் மட்டும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறேன். அங்குள்ள நாட்டு மாடுகளைப் பயன்படுத்தி இடுபொருட்கள் தயாரிக்கிறேன். அங்குள்ள விவசாயிகள் பலருக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைச் சொல்லித் தருகிறேன். வயலுக்கு வந்து பார்த்து வியந்து போகிறார்கள். இந்த ஆண்டு அறுவடை முடிந்ததும் ஜீரோ பட்ஜெட் அரிசியில் சமைத்த உணவை விருந்து வைக்க இருக்கிறேன். கண்டிப்பாக அந்த ருசி அவர்களை ஈர்க்கும். தொடர்ந்து, அங்கு பாலேக்கர் உள்ளிட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய வல்லுநர்களை அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க வைக்கும் யோசனையும் இருக்கிறது” என்றார், மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு,
கிருஷ்ணப்பா,
செல்போன்: 098805 87545.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

நெல், வாழை மாதிரியான பயிர் வகைகளையோ அல்லது ஆடு, மாடு மாதிரியான கால்நடைகளையோ தனித்தனியாக வளர்க்கும்போது, நஷ்டம் ஏற்பட்டால் அவற்றை ஈடுகட்டுவது சிரமம்தான். ஆனால், வேளாண் பயிர்களையும், கால்நடைகளையும் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்தால், செலவைக் குறைத்து அதிகமான லாபம் பார்க்கலாம்” என்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி.
வேளாண்மைத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள சக்கரபாணியின் தோட்டம், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆவூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இறால் குளத்தில் இருக்கும் கழிவுகளை மிதவை இயந்திரம் சுத்தம் செய்துகொண்டிருக்க, அதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சக்கரபாணியைச் சந்தித்தோம்.

சொந்த நிலத்தில் சோதனைத் திடல்!
“1971-ம் வருஷம் பி.எஸ்சி அக்ரி படிச்சேன். படிப்பை முடிச்சதும் வேலை கிடைச்சது. செங்கல்பட்டுல வேளாண்மைத்துறை அலுவலரா வேலையில சேர்ந்தேன். அப்படியே பதவி உயர்வுல துணை வேளாண்மை இயக்குநர் வரைக்கும் வேலை பார்த்திட்டு, 2006-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். வேலையில இருக்கிறப்போ, வேளாண்மைத்துறையில உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்தாங்க. அதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம். அதைச் செயல்படுத்தும்போது வர்ற பிரச்னைகளை விவசாயிகள் சொல்றப்போ அதை எப்படித் தீர்க்கிறதுனு எங்களுக்குப் புரியலை. அப்பறம்தான் அரசாங்கம் சொல்ற திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் நம்ம நிலத்துலேயே செய்து பார்த்தா என்னானு முடிவு பண்ணி, அந்த முயற்சியில இறங்கினேன். அப்போதான், நடைமுறையில இருக்கிற பிரச்னைகள் தெரிய வந்தது. அந்தப் பிரச்னைகளை சரி பண்ணனுங்கிறதுக்காகவே தொடர்ச்சியா விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.
 நானே விவசாயியாவும், அதிகாரியாவும் இருக்கும் போது நடைமுறைப் பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு விவசாயிகளுக்குத் தீர்வு சொல்ல முடிஞ்சது” என்ற சக்கரபாணி, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகச் சொல்லி வேலையாட்களிடம் பணித்துவிட்டு, நம்மிடம் மீண்டும் தொடர்ந்தார்.
வழிகாட்டிய ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம்!
“பயிற்சிக்காக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைத்துக்கு ஒரு தடவை போயிருந்தேன். அந்த சமயத்துல, மீன் வளர்ப்புக் குளத்துக்கு மேலே கோழி வளக்கிற முறையைப் பார்த்தேன். அதுக்கு பிறகு பல முன்னோடி விவசாயிகளோட பண்ணைகளைப் பார்த்த பிறகு, ஒருங்கிணைந்த பண்ணைய முறையில விவசாயம் பார்க்கணுங்கிற ஆசை வந்துச்சு. ஆனா, வேலை நெருக்கடி காரணமா அதைச் செயல்படுத்த முடியலை. ரிட்டையர்டு ஆன பிறகு விவசாயத்துல முழுமையா இறங்கினா... தொடர்ச்சியா ரெண்டு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. அதுல படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிடுச்சு.
அதுக்கப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு விவசாய வேலைகளை ஆரம்பிக்கிறப்போ, இன்ஜினீயரிங் முடிச்சுட்டு திருப்பதியில வேலை பார்த்துக்கிட்டிருந்த என்னோட மகனும் விவசாயம் பார்க்கறேன்னு வந்தான். உடனே ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கான வேலைகள்ல இறங்கிட்டேன். அப்போ இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவு பண்ணினேன். அதுக்கு ஏற்ற மாதிரி ‘பசுமை விகட’னும் எனக்கு உதவியா இருந்துச்சு” என்ற சக்கரபாணி, ஒருங்கிணைந்த பண்ணையைச் சுற்றிக்காண்பித்துக் கொண்டே, அதை உருவாக்கிய முறைகள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.
பரணுக்கு ஏற்ற தலைச்சேரி!
“முதல் கட்டமா 20 கறவை மாடுகள், 7 எருமை மாடுகள், 40 நாட்டு ஆடுகள், ஒரு போயர் கிடானு வாங்கிட்டு வந்து 2012-ம் வருஷம் பண்ணையை ஆரம்பிச்சேன். அதுல செம அடி விழுந்துச்சு. பால் மாடுகளுக்கு கோமாரி தாக்குதல் வந்துச்சு. நான் ஆரம்பிச்ச சமயம், பாலுக்கும் சரியான விலை கிடைக்கல. அதனால, தாக்குப்பிடிக்க முடியாம ஒரே வருஷத்துல மாடுகளை விற்பனை செய்துட்டேன். முரா எருமைனு நினைச்சு வாங்கின எருமைகள் எல்லாம் நாட்டு எருமைகள். அதுலயும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை. அதனால, எருமைகளையும் விற்க வேண்டியதாயிடுச்சு. பரண் அமைச்சு நாட்டு ஆடுகளை வளர்த்தேன். ஆனா, பரண் முறையில நாட்டு ஆடுகளுக்கு சரியா எடை கூடலை. தீவனச் செலவு அதிகமாகிக்கிட்டே போச்சு. அந்தளவுக்கு பலன் இல்லை. அதனால, அந்த ஆடுகள் மூலமா கிடைச்ச கலப்புக் குட்டிகளை மட்டும் வெச்சுக்கிட்டு, தாய் ஆடுகளை விற்பனை செஞ்சிட்டேன். அதுக்கப்பறம், தலைச்சேரி, பெங்கால் பிளாக் பெட்டை ஆடுகளை வாங்கினேன். இந்த ஆடுகள் கொட்டில் முறையில நல்லா வளருது.
நன்னீர் இறால் வளர்ப்பு!

100 அடிக்கு 100 அடி (22 சென்ட்) அளவுல பண்ணைக்குட்டை அமைச்சு அதுல, கெண்டை மீன் ரகங்களை வளர்த்தேன். அதுல பெருசா பராமரிப்பு இல்லாமலே போதுமான வருமானம் கிடைச்சது. இப்போ, குளத்தை 65 சென்ட் அளவுக்கு விரிவுபடுத்தி நன்னீர் இறால் வளர்ப்புல இறங்கி இருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைச்சது. அதனால, 1,700 சதுர அடியில கொட்டகை அமைச்சு வெண் பட்டுப்புழு வளர்ப்புல இறங்கினேன். ஒரு பேட்ச்ல மட்டும் நல்ல லாபம் கிடைச்சது. அடுத்து நோய் தொற்றுனால உற்பத்தி அதிகமா இல்லை. அதனால, இப்போ, மஞ்சள் பட்டுக்கூடு உற்பத்திக்கு மாறி இருக்கேன். இதுல லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
மொத்தம் இருக்கிற 15 ஏக்கர் நிலத்துல 7 ஏக்கர்ல தென்னை மரங்கள் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில் 4 ஏக்கர்ல ஊடுபயிரா வாழை இருக்கு. 3 ஏக்கர்ல ஊடுபயிரா தீவனப்புல் வகைகள் இருக்கு. 3 ஏக்கர்ல மல்பெரி இருக்கு. மூணரை ஏக்கரை மீன்குளம் வெட்டறதுக்காக தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். மீதி ஒண்ணரை ஏக்கர்ல இறால் வளர்ப்புகுளம், ஆட்டுக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை, வீடு, மண்புழு உரத்தொட்டி, பட்டுக்கூடு வளர்க்கும் அறைனு எல்லாம் இருக்கு” என்ற சக்கரபாணி வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
வீட்டுத்தேவைக்கு மாடு!
“இப்போ வீட்டுத்தேவைக்காக 3 மாடுகளை மட்டும் வெச்சிருக்கேன். அதோட,  ரெண்டு கிடேரி கன்றுகளும், ஒரு காளைக் கன்றும் இருக்குது. மாடுகளோட சாணத்தை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்துறேன்.
ஆண்டுக்கு 100 குட்டிகள்!
நாட்டு ஆடுகளுடன் போயர் கிடாவை கலந்து கிடைச்ச 30 குட்டிகள் இப்போ வளர்ந்து இருக்கு. அதோட 13 பெங்கால் பிளாக் ஆடுகள், 40 தலைச்சேரி ஆடுகள்னு சேர்த்து மொத்தம் 83 ஆடுகள் இருக்கு. ஆடுகளுக்கு காலையும், மதியமும் ஒரு கிலோ அளவுக்கு பசுந்தீவனம் (ஒரு ஆட்டுக்குரிய அளவு) கொடுப்பேன். மதியத்துக்கு மேல மேய்ச்சலுக்கு விட்டுடுவேன். அடர்தீவனமெல்லாம் கொடுக்கிறதில்லை. 83 ஆடுகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 100 குட்டிகள் கிடைக்கிது. குட்டிகளை ஆறு மாதம் வளர்த்து விற்பனை செய்றேன். ஒரு ஆடு, 3 ஆயிரம் ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். குறைந்தபட்சமா வெச்சுக்கிட்டாலும் வருஷத்துக்கு 100 ஆடுகள் மூலமா 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதில் 70 ஆயிரம் ரூபாய் செலவாகும். மீதி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். போன மூணு வருஷத்துல ஆரம்பத்துல வாங்கின நாட்டு ஆடுகள், குட்டிகள்னு 400 ஆடுகளை விற்பனை செய்திருக்கேன். அந்த வகையில 12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.
கோழியில் செலவில்லாமல் வருமானம்!
ஆடுகளுக்காக உள்ள பரணுக்கு கீழ் பகுதியில கோழி வளர்க்கிறேன். ஆரம்பத்துல வாங்கிய நந்தனம்-1 ரக கலப்பினக் கோழிகள் நோய் தாக்கி இறந்துடுச்சு. அதனால, சந்தையில் இருந்து 30 நாட்டுக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அது மூலமா கிடைச்ச முட்டைகளையும், கோழிக்குஞ்சுகளையும் விற்பனை செய்துக்கிட்டிருக்கேன். இதுவரை 200 கோழிகளையும், 2 ஆயிரம் முட்டைகளையும் விற்பனை செய்திருக்கேன். தற்சமயம் இருக்குற 25 கோழிகள் மூலமா வருஷத்துக்கு ஆயிரம் முட்டைகள் வரை கிடைக்கிது. அதுல 800 முட்டைகளை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துக்கிட்டிருக்கேன். அது மூலமா வருஷத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சா சராசரியா 120 குஞ்சுகள் வரை கிடைக்கும். அதுகளை ஒரு வருஷம் வளர்த்து ஒரு கோழி 150 ரூபாய்னு விற்பனை செய்தா 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தமா பார்த்தா... கோழி மூலம் வருஷத்துக்கு 26 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல செலவே கிடையாது. அவ்வளவும் லாபம்தான்.
பராமரிப்பு குறைவான தென்னை!

25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மொத்தம் 500 நெட்டை ரக தென்னங்கன்றுகளை நடவு செய்தேன். அதில், 100 மரங்கள் பழுதாகிடுச்சு. மீதி இருக்குற 400 மரங்களை  வருஷத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு விட்டிருக்கேன். தென்னையை இயற்கை விவசாய முறையில்தான் வளர்க்கிறேன். பராமாரிப்புச் செலவு போக தென்னை மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபமா கிடைச்சுக்கிட்டு இருக்கு.
தென்னைக்கு இடையில 4 ஆயிரம் கற்பூரவல்லி வாழை இருக்கு. வாழைக்கு தனியாக உரம் கொடுக்கிறதில்லை. மாட்டுச் சிறுநீர், ஆட்டுச்சாணம் மட்டும்தான். வாழையில பக்க கன்றுகளை நீக்காம அப்படியே விட்டிருக்ககிறதால தோப்பு முழுக்க சூரிய வெளிச்சம் தரையில படாத அளவுக்கு வாழை மரங்கள் அடர்த்தியாக இருக்குது. வாழை இன்னும் மகசூலுக்கு வரலை. பெரிய அளவுல பராமரிப்பு இல்லாததால காய்கள் அளவில சின்னதாதான் இருக்கு. அறுவடைக்கு வரும்போதுதான் அதுக்கான வருமானம் பத்தி சொல்ல முடியும்.
120 நாளில் வருமானம் கொடுக்கும் இறால்!
65 சென்ட் குளத்தில் தண்ணீர் கசியாமல் இருக்க பாலிதீன் ஷீட் விரிச்சு நாலு அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... 10 நாள் வயசுல 1 லட்சத்து, 50 ஆயிரம் இறால் குஞ்சுகளை வாங்கி விட்டிருக்கேன். இப்போ 50 நாட்கள் ஆகுது. 100 நாள்ல இருந்து 120 நாட்கள்ல இறால்களை அறுவடை செய்யலாம். இதுவரைக்கும் எந்த பிரச்னையும் இல்லாம நல்லாத்தான் வளருது. ஆனா, கடைசிக் கட்டத்துலதான் ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்றாங்க. அதனால, எவ்வளவு மகசூல் கிடைக்கும்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது.
தரத்தைப் பொறுத்து, ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்ல இருந்து 850 ரூபாய் வரை விலை கிடைக்குமாம். நல்லபடியா கிடைச்சா 2 டன் அளவுக்கு இறால் அறுவடையாகும். கிலோவுக்கு சராசரி விலையா 350 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 7 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுல தீவனம், பராமரிப்புச் செலவெல்லாம் போக பாதிக்குப் பாதி லாபமா கிடைக்கும். ஆனா, இந்த வருமானத்தை உறுதியா சொல்ல முடியாது. அறுவடை பண்ணும்போதுதான் தெரியும். இறால் வளர்ப்புக்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கேன். பட்டுப்புழு வளர்ப்புலயும் இன்னும் வருமானம் எடுக்கலை. அதனால அந்த வருமானத்தையும் உறுதியா சொல்ல முடியாது. முறையா வருமானம் கிடைச்சா பட்டுப்புழு வளர்ப்புல வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்னு சொல்றாங்க” என்ற சக்கரபாணி நிறைவாக,
ஆண்டுக்கு பல லட்சம்!

“இத்தனை வருஷம் விவசாயத்துறையில வேலை செய்த அனுபவம், விவசாயத்துல நேரடியா கத்துக்கிட்ட விஷயங்கள் எல்லாத்தையும் வெச்சு முழு நம்பிக்கையோட களம் இறங்கியிருக்கேன். எப்படியும் இந்த 15 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் எடுக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார்.
அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு வந்தோம்.