ஒரு சாதாரண சேல்ஸ்மேனில் துவங்கி வங்கி மேலாளர், ஹோட்டல் நிறுவனர், தொழில் முனைவோர் என எவ்வித நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியமான விஷயங்கள் இருக்கும். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் போது வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மற்ற வேலைகளில் இருப்பவர்களை விடச் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் கட்டாயம் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
1.திட்டமிடல்!
சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் என்ன வேலை உள்ளது, அந்த வேலைகளில் எதைக் கட்டாயம் முடிக்க வேண்டும், எந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அட்டவணைப்படுத்திக் கொள்வது அவசியம். அதாவது தன்னுடைய வேலைகளை டைரியில் அல்லது கேட்ஜட்களில் அதில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.
2. கருவிகள்
இன்றைய சூழ்நிலையில் அனைத்து வேலைகளையுமே வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால்கூடிய வெற்றி வாய்ப்பு உங்களின் கையை விட்டுப் போகக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை எப்போதுமே வைத்திருப்பது நல்லது. அதாவது லேப்டாப், செல்போன், சேல்ஸ் கிட் என தேவையானவற்றை நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. உடை! சொந்தமாகத் தொழில் செய்யும் போது பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவலக உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங்களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் என நினைக்கத் தோன்றும். தொழில் முனைவோர் கோட், சூட் வைத்துக்கொள்ள நல்லது. சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது இதை அணிவது சிறப்பு. மேலும் அதற்கேற்ப உங்களுடைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
4. பிசினஸ் கார்ட்ஸ்
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரும் உங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் பிசினஸ் கார்ட் வழங்குவது முக்கியம். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாகத் தொடர்பு பிசினஸ் கார்ட் அவசியம் தேவை.பிசினஸ் கார்ட் என்பது வேறு ஒன்றும் இல்லை, விசிட்டிங் கார்ட்தான்.
5. கற்பனை திறன்! ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம்.
6. விடாநம்பிக்கை
தொழிலில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நஷ்டம் ஏற்படும் போது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அந்தச் சூழ்நிலையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் உங்களின் உற்பத்தி பொருளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
7. எதிர் கால இலக்கு
தொழிலில் எப்போதுமே எதிர்கால இலக்குகளை வைத்திருக்க வேண்டும். அதாவது அடுத்த ஒருவருடத்தில் நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும். லாபம் எவ்வளவு இருக்க வேண்டும், உற்பத்தி அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே இலக்குகளைத் தீர்மானிப்பது அவசியம். இலக்குகளை அதை நோக்கிய பயணச் செய்வது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
8. சுய அறிவு..!
தொழில் குறித்து எடுக்கும் முடிவுகள் என்பது உங்களின் முடிவாக இருப்பது அவசியம். அதாவது நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலின் பேரில் எந்தவிதமான முடிவையும் எடுக்கக் கூடாது. ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவு சரியாக இருக்குமா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது.
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை... ‘பத்மஸ்ரீ’ சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்ற பல்லாயிரம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கையிலெடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில முன்னோடி விவசாயிகள் தங்கள் வயலையே மாதிரிப் பண்ணையாக்கி, நேரடி களப்பயிற்சி கொடுத்து, மேலும் பல புதிய ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா.
கர்நாடகா மாநிலம், மைசூரூ மாநகரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பன்னூர். அங்கு, நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கரையின் ஓரத்தில் உள்ளது, கிருஷ்ணப்பாவின் 5 ஏக்கர் நிலம். நெல்லும், கரும்பும்தான் பிரதானப் பயிர்கள். அதனுள் 3 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் வனத்தை உருவாக்கியுள்ளார், கிருஷ்ணப்பா. அது, மழையீர்ப்பு மையமாக மட்டுமல்லாமல், வருமானம் கொடுக்கும் வனமாகவும் விளங்குகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறுவடை முடிந்த வயல்வெளிகள். அதில் மேய்ந்து வலம் வரும் கிடை ஆடுகள். இடையிடையே தோகை சாய்த்து ஆடும் கரும்புத்தோட்டங்கள். வரப்பில் வரிசை கட்டிப் போகும் விவசாயப்பெண்கள். முகம் பார்க்கும் தெளிவில் ஓடும் வாய்க்கால் தண்ணீர். இப்படியான இயற்கை கொஞ்சும் இடத்தில் இருக்கிறது, அந்த ஜீரோ பட்ஜெட் வனம்.
பச்சைத்துண்டு முண்டாசு தலையில் கட்டி, ஜீவாமிர்தம் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கிருஷ்ணப்பாவைச் சந்தித்தோம். இடையிடையே தமிழ் கலந்த கன்னடத்தில் பேசினார், கிருஷ்ணப்பா.
“என் முழுப்பெயர், கிருஷ்ணப்பா தாசே கவுடா. பன்னூர்தான் சொந்த ஊர். பரம்பரை விவசாயக்குடும்பம். நல்ல வண்டல் மண்வளம், நீர்வளம் இரண்டும் நிறைந்த ஊர். நெல், கரும்பு, வாழை... என பணப்பயிர் சாகுபடி செய்யும் வளமான பூமி. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்குள்ள விவசாயிகள் வசதியாக இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. கடன் தொல்லை, ஜப்தி, தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லா வளமும் இருந்தும் தற்கொலையை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை என்றாலும், பச்சைத்துண்டை தோளில் போட்டபடி போராடக் கிளம்பி விடுவேன். கர்நாடக மாநில விவசாய சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறேன். மாதத்தில் பாதி நாள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என்று போய் விடுவேன். அப்படி போகும்போதுதான் 2003-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, பயிற்சி எடுத்தேன். அப்போதுதான், எல்லா வளமும் இருந்தும், ரசாயன விவசாயத்தால்தான் எங்கள் ஊர் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விஷயம் பொட்டில் அடித்தது போல உறைத்தது” என்று நிறுத்திய கிருஷ்ணப்பா, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி தொடர்ந்தார்.
“கண்டபடி ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வயலில் கொட்ட ஆரம்பித்து, உற்பத்திச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு... அறுவடையான பொருளைக் கட்டுப்படியாகாத விலைக்கு விற்று, கடைசியில் கடனாளியானதுதான் மிச்சம். அந்தச் சிக்கலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரே வழி ஜீரோ பட்ஜெட் விவசாயம் மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டேன். விவசாயிகள் சங்கக் கூட்டங்களிலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து வலியுறுத்தினேன். ஒரு சிலரைத் தவிர யாரும் இதைக் காது கொடுத்து கேட்கவில்லை. ‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. யூரியா, பொட்டாஷ் என்று போட்டோமா... வெள்ளாமையை எடுத்தோமா? என்று இருப்பதுதான் நிம்மதி’ என்றனர்.
இதுகுறித்து பாலேக்கரிடம் புலம்பினேன். ‘எதையும் பேசுவதை விட செய்து காட்டுவதுதான் நல்ல பதிலாக இருக்கும். நேரத்தை ஒதுக்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார், பாலேக்கர். உடனே, விவசாய சங்க வேலைகளைக் குறைத்துக் கொண்டு, ஜீரோ பட்ஜெட் பண்ணை உருவாக்கும் வேலையில் இறங்கினேன். 2006-ம் ஆண்டு, மூன்று ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையைத் தொடங்கினேன். இடையில் பலமுறை பாலேக்கரைத் தொடர்புகொண்டு எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.
பாலேக்கர் சொன்ன வன விவசாயம்!
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று மகசூல் விவசாயம். இன்னொன்று வன விவசாயம். நெல், கரும்பு, வாழை என ஆண்டுப் பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் விவசாயம் மேற்கொள்ளலாம். வன விவசாயம் என்பது, ‘டூ நத்திங் ஃபார்மிங்’. அதாவது, எதுவும் செய்யாத விவசாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுவது. இதை ‘சுயச்சார்பு விவசாயம்’ என்று பாலேக்கர் சொல்வார். இந்த வன விவசாயத்தில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மண் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும். செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் வனத்தில் இருந்தே கிடைக்கும். அந்த வன விவசாயத்துக்கு ‘பாலேக்கர் மாடல்’ என்று பெயர். நான் மூன்று ஏக்கர் நிலத்தில் வன விவசாயத்தை மேற்கொண்டேன்.
தினமும் 6 லிட்டர் தண்ணீர்!
என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்குகளின் மூலம்... கார்பன், நைட்ரஜன் உற்பத்தி ஆகிறது. மண்ணின் ஹியூமஸ், பூமியில் கார்பன் அளவைக் கூட்டுகிறது. இதனால், தினமும் 6 லிட்டர் தண்ணீர் அளவுக்கு ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இது தினமும் ஆறு லிட்டர் மழை நீரைச் சேமிப்பதற்குச் சமம். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து எதுவும் செய்யாத தானியங்கு விவசாயமாக எனது வன விவசாயம் மாறியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் வன விவசாயத்தில், அறுவடை செய்ய மட்டுமே நாங்கள் உள்ளே செல்கிறோம். மற்ற வேலைகளை எல்லாம் இயற்கை செய்து கொள்கிறது. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது வன விவசாயத்தில் தென்னை, பாக்கு, மிளகு, காபி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் இருந்து இப்போதைக்கு வருமானம் வருகிறது” என்ற கிருஷ்ணப்பா, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
பாலேக்கரின் பாராட்டு!
“சில ஆண்டுகளுக்கு முன் பண்ணையைப் பார்வையிட்ட பாலேக்கர், சில திருத்தங்கள் சொன்னார். அதில் முக்கியமானது இரண்டடுக்கு உயிர்வேலி. எனது பண்ணையைச் சுற்றிலும் சில்வர் ஓக், தேக்கு, மலைவேம்பு மரங்கள் ஒரு அணியாகவும், அடுத்த வரிசையில் அகத்தி, சீத்தா, முருங்கை என்று உயிர் வேலிகளை அமைக்குமாறு சொன்னார். அதன்படியே நடவு செய்தேன். அவை இப்போது வளர்ந்து உயிர்வேலியாக நிற்கின்றன. சமீபத்தில் பண்ணைக்கு வந்த பாலேக்கர், ‘முழுமையான ஜீரோ பட்ஜெட் வன விவசாயம் என்பதற்கான மாதிரிப்பண்ணையாக மாறிவிட்டது’ என்று பாராட்டிச் சென்றார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று பலரும் எனது வன விவசாயப் பண்ணைக்கு வந்து பல விஷயங்களைத் தெரிந்து செல்கிறார்கள்” என்று பெருமையுடன் சொன்ன கிருஷ்ணப்பா நிறைவாக,
“2007-ம் ஆண்டு ‘பசுமை விகடன்’ மூன்றாவது இதழில் என்னைப்பற்றிய கட்டுரை வந்துள்ளது. அன்று சாதாரண ஜீரோ பட்ஜெட் பண்ணையாக இருந்த நிலம், இந்த 9 ஆண்டுகளில் மகசூல் விவசாயத்துடன் வன விவசாயம் அடங்கிய மாதிரிப்பண்ணையாக மாறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் மைசூரூ மாவட்டத்தில் மட்டும் 500 விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நான் பிறந்த இந்த மாவட்டத்தை முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாய மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைத் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி ‘ஜீரோ பட்ஜெட் ஹீரோ’வாக ஆக்கியது, பசுமை விகடன்தான். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல விவசாயிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். பசுமை விகடனுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.
இந்த கிருஷ்ணப்பா தன் அனுபவங்களை, திருச்சியில் பிப்ரவரி 12 அன்று துவங்க இருக்கும் ‘பசுமைவிகடன்’ அக்ரி எக்ஸ்போ-2016 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன் அனுபவங்களை நேரடியாக பகிர இருக்கிறார்.
தொடர்புக்கு, கிருஷ்ணப்பா, செல்போன்: 098805 87545.
முக்கியமானது, மூடாக்கு!
மூடாக்குகள் குறித்துப் பேசிய கிருஷ்ணப்பா, “ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மூடாக்கு ரொம்ப முக்கியமான ஒன்று. என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்கின் பங்களிப்பு அபரிமிதமான ஆற்றலைக் கொடுத்து வருகிறது. மண் மூடாக்கு, இலை மூடாக்கு, உயிர் மூடாக்கு, இயற்கை மூடாக்கு ஆகிய நான்கு வகை மூடாக்குகள்தான், எங்களது கலப்பு மர விவசாயத்துக்கான உரச்செலவை மிச்சப்படுத்தி வருகின்றன” என்கிறார். இதோ அந்த மூடாக்குகள் குறித்த விளக்கம்...
மண் மூடாக்கு: நிலத்தில் 25 அடி நீளத்தில், 3 அடி ஆழ, அகலத்தில் பள்ளம் வெட்டி அதில் காய்ந்த மரக்கிளைகள், தென்னை ஓலைகள், பழக்கழிவுகள் போன்றவற்றைப் போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். சில மாதங்களில் எல்லாம் மட்கி செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் சத்துக்களை பல ஆண்டுகளுக்குக் கொடுக்கும். இது, நீண்ட காலம் பலன் தரும் மூடாக்கு. இந்த வகை மூடாக்கு, நடவுக்கு முன்னரே அமைக்கப்படவேண்டும். செடிகள் வளர்ந்த பிறகு, அமைத்தால், வேர்கள் அறுந்து விடும்.
இலை மூடாக்கு: செடிகளில் இருந்து விழும் இலைகள், தரை முழுதும் பரவிக் கிடக்கும். தொடர்ந்து விழும் இலைகள், மட்கி மட்கி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உரமாகும். இது இலை மூடாக்கு.
உயிர் மூடாக்கு: தட்டைப்பயறு, உளுந்து... போன்ற இரு இலைத் தாவரப்பயிர்களை விதைப்பதுதான் உயிர் மூடாக்கு. இப்பயிர்கள், செடிகளுக்குத் தேவையான நைட்ரஜனை காற்றில் இருந்து கிரகித்துக் கொடுக்கும்.
இயற்கை மூடாக்கு: மரங்களின் நிழல் தோட்டத்தினுள் பரவி அதிக வெயிலைத் தடுத்து மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் இருக்கும்படி செய்கிறது. வெளியில் இருந்து வரும் நச்சுக்காற்றை தடுத்து நிறுத்துகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு வழி வகுக்கிறது. வருமானம் வரும் வழிகள்...!
தனது வருமானம் குறித்துச் சொன்ன கிருஷ்ணப்பா, “ஒரு ஏக்கர் நிலத்தில் 528 பாக்கு மரங்கள், 30 தென்னை மரங்கள், 30 சாத்துக்குடி மரங்கள், 250 காபிச்செடிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு பாக்கு மரத்திலும் 10 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பாக்கு 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 300 ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சத்து, 58 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
ஒரு தென்னையில் இருந்து 150 காய்கள் வீதம், 30 தென்னையில் இருந்து ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 காய்கள் கிடைக்கின்றன. ஒரு காய் 9 ரூபாய் என விலை போகிறது. அதன் மூலம் 40 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது.
ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 50 கிலோ வீதம் 30 சாத்துக்குடி மரங்களில் இருந்து 1,500 கிலோ மகசூல் கிடைக்கிறது. கிலோவுக்கு 10 ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 250 காபிச்செடிகளில் இருந்து தலா 2 கிலோ வீதம் 500 கிலோ காபிக்கொட்டை கிடைக்கிறது. கிலோ 60 ரூபாய் என விற்பனை செய்வதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆக, பாக்கு, தென்னை, சாத்துக்குடி, காபி ஆகிய பயிர்களில் இருந்து மட்டுமே ஆண்டு வருமானமாக, ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய் கிடைக்கிறது. குறுமிளகு, ஆரஞ்சு, இஞ்சி உள்ளிட்ட மற்ற பயிர்களில் அடுத்த ஆண்டு முதல் வருமானம் கிடைக்கும்” என்கிறார், கிருஷ்ணப்பா. 36 அடியிலே...
3 ஏக்கர் பரப்பளவில் வன விவசாயம் மேற்கொண்டாலும், அதை, ‘பாலேக்கர் மாடல்’ முறையில் 36 அடிக்கு 36 அடி என்கிற எல்லைக்குள் வடிவமைத்திருக்கிறார் கிருஷ்ணப்பா. இதுகுறித்து பேசும்போது, “36 அடிக்கு 36 அடி என்கிற சதுரத்தில் 130 மரங்கள் நடவேண்டும். அதில் ஒரு தென்னை, ஒரு ஆரஞ்சு, ஒரு சாத்துக்குடி, பாக்கு, காபி அல்லது கோகோ, கிளரிசீடியா, மிளகு, வெனிலா, முருங்கை ஆகியற்றில் தலா 21 மரங்கள் இருக்கும்படி நடவு செய்யவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான முறையில் தண்ணீர்ப் பாசனம் செய்து, அதில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலை கலந்து விடவேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பா.
ஆப்பிரிக்காவிலும் ஜீரோ பட்ஜெட்!
பன்னூர் கிராமத்தை, சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி சேத்தன் கெம்பே கவுடா. இவர், கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்திலிருக்கும் ருவாண்டா நாட்டில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த சேத்தனிடம் பேசினோம்.
“என்னோட நண்பர், 300 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். உதவிக்கு என்னையும் அழைத்தார். இப்போது அவரோடு பங்குதாரராக இருந்து நெல் விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். அங்கு முழுக்க முழுக்க ரசாயன விவசாயம்தான். அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அங்கும் மேற்கொள்ள விரும்பினேன். நண்பரின் அனுமதியுடன் 10 ஏக்கர் நிலத்தில் மட்டும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறேன். அங்குள்ள நாட்டு மாடுகளைப் பயன்படுத்தி இடுபொருட்கள் தயாரிக்கிறேன். அங்குள்ள விவசாயிகள் பலருக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைச் சொல்லித் தருகிறேன். வயலுக்கு வந்து பார்த்து வியந்து போகிறார்கள். இந்த ஆண்டு அறுவடை முடிந்ததும் ஜீரோ பட்ஜெட் அரிசியில் சமைத்த உணவை விருந்து வைக்க இருக்கிறேன். கண்டிப்பாக அந்த ருசி அவர்களை ஈர்க்கும். தொடர்ந்து, அங்கு பாலேக்கர் உள்ளிட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய வல்லுநர்களை அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க வைக்கும் யோசனையும் இருக்கிறது” என்றார், மகிழ்ச்சி பொங்க.
''விவசாயம் தொழிலும் அல்ல... கலாசாரமும் அல்ல... அது ஒரு வாழ்வியல்'' என்று சொல்வார் நம்மாழ்வார். இதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இயற்கை வழி வேளாண்மையை அசத்தலாக மேற் கொண்டிருக்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.பரிமளா தேவி.
''பழமை மாறாத, புதிய விவசாய யுக்திகளைக் கையாண்டு பார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் நம்முடைய வயலில் தைரியமாக செயல்படுத்தலாம்'' என்பதும் நம்மாழ்வார் சொல்லிச் சென்றதுதான். இதையும் தன்னுடைய வயலில் செயல்படுத்தி வெற்றிகரமாக வலம் வரும் பரிமளாதேவியை, நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.
முத்தூரில் இருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது, இவருடைய பண்ணை. ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சுழற்சிக்கான முக்கிய அம்சங்களுடன் திகழ்கிறது இப்பண்ணை! 'குட்டி நாதஸ்வரம்’ போன்ற மஞ்சள் பூக்கள் குலுங்க தோட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் பூவரச மர நிழலில் கட்டி இருந்த நாட்டு மாட்டுக்கு, பூவரச இலைகளை உண்ணக் கொடுத்து கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தோம். கணவர் பெரியசாமி மற்றும் மகன் ராம்குமார் இருவரும் இணைந்துகொள்ள, கடகடவென ஆரம்பித்தார் பரிமளாதேவி.
''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. இதுல மேய்ச்சல் நிலம் 4 ஏக்கர் போக, 6 ஏக்கர்ல விவசாயம் பண்றோம். வீடு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுபுழு வளர்ப்புமனைனு சில கட்டடங்களையும் கட்டி இருக்கோம். கடந்த நாலு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் எங்க பண்ணை நடக்குது. அதுவும் ஐயா நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியிலதான் அடி பிசகாம போயிட்டு இருக்கு. இதுக்கு முன்ன நாங்க செஞ்சிட்டு இருந்த ரசாயன விவசாயத்துல பட்ட துன்பங்கள் ஏராளம். பெற்ற கடன்களும் எக்கச்சக்கம். இதனால ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் படிப்படியா குறைஞ்சு, மனநிறைவோட இருக்கோம்னா, இதுக்குக் காரணம் ஐயாதான். ரசாயனத்தை விட்டு இயற்கைக்கு மாறிய காலகட்டத்தில் சில சமயம் சோர்வு வந்துச்சு. அந்த சமயம் எல்லாம், 'முயற்சி விதைபோல... முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்கிற ஐயாவோட வாக்கு நினைவுக்கு வரும். வந்த சோர்வைத் தூக்கிவீசிட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவேன்'' என்று குரலில் உறுதிதொனிக்க சொன்ன பரிமளாதேவி, தொடர்ந்தார்.
வீட்டுக்கு நாட்டுமாடு... விற்பனைக்குக் கறவை மாடு!
''நாட்டுமாடுகளை அழிவில இருந்து காப்பாத்தணும்னு அய்யா அடிக்கடி சொல்வார். அதனால, ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கினோம். இந்த மாடுகளோட சாணம், மூத்திரம் எல்லாம் அதிக வீரியமானது. இதை பயன்படுத்தித்தான் இடுபொருட்கள் தயாரிக் கிறோம். வீட்டுக்குத் தேவையான சத்து அதிகமான சுவையான பால், கைமணக்கும் நெய், தாகம் தீர்க்கும் மோர் எல்லாம் இதன் மூலமாவே கிடைக்குது. தவிர, பால் விற்பனைக்காக 4 கறவை மாடுகளை வெச்சிருக்கோம். சராசரியா, ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கிடைக்குது. அதை, லிட்டர் 36 ரூபாய்னு கொடுக்கிறோம். அதுக போடுற சாணியைத் தொழுவுரமா பயன்படுத்திக்கிறோம்.
ஆண்டு முழுவதும் வருமானம்!
பண்ணையில 20 வெள்ளாடு களை வளர்க்குறோம். பகல்ல மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை அடைச்சிடுவோம். இதுக மூலமா குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 20 குட்டிகள் கிடைக்குது. அதை விற்பனை செய்றதுல 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. நிலத்துக்கு எருவும் கிடைச்சுடுது. சிறுசும் பெருசுமா 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. தோட்டத்துல இருக்குற புழு, பூச்சிகளை மேய்ஞ்சே இதுக வளந்துடும். தினசரி ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீவனம் இறைப்போம். இதுகளுக்கு பெரிசா செலவு இல்லை. குஞ்சுகள், முட்டைகள்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் வரும்படி வருது. பயிருக்கு கோழி எரு போய் சேந்துடுது. 'ஒரு பண்ணை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைக் கொடுக்கணும். வருமானத்தை ஈட்டணும்’னு ஐயா சொல்வார். அந்த வகையில்தான் எங்க பண்ணையை வடிவமைச்சு இருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொன்ன பரிமளாதேவி, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
தற்சார்பு விவசாயம்!
''எங்க வீட்டு சமைய லுக்குத் தேவையான அரிசி, பயறு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், கால் நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களையும் சேமிச்சு வெச்சுக்கிறோம். கோ4 ரக மறுதழைவு பசுந்தீவனப்பயிரை ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இது, கறவைமாடுகளுக்கு அதிக புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் கொடுக்கும். 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். அடியுரமா ஆட்டு எரு போட்டிருக்கோம். அதனால வெட்ட வெட்ட தழைஞ்சு, வேண்டிய அளவுக்கு தீவனத்தை அள்ளி வழங்குது. இந்தக் கரணைகளையும் வெட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்றோம். இதுவரை 100 விவசாயிங்களுக்கு இந்த பசுந்தீவனக் கரணைகளைக் கொடுத்திருக்கோம். அவுங்க மூலமா மத்த விவசாயிங்களுக்கும் பரவுது. 'எதையும் இலவசமா கொடுக்காதே, நீயும் வாங்காதே’, 'விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு விதை, தொழில்நுட்பம் எல்லாம் பரவணும்’ங்கிற ஐயாவின் வார்த்தைகளை சரியா நாங்க நிறைவேத்துறோம்.
உரமும் நமது... உயர் விளைச்சலும் நமது!
வருஷம் முழுசும் எங்க நிலத்துல ஒரு இடம் பாக்கியில்லாமல் ஆட்டுக்கிடை போட்டுடுவோம். ஒரு இடத்துல பத்து நாள் வரை கிடைபோடுறதால, ஆட்டு எரு மண்ணு தெரியாத அளவுக்கு நெறைஞ்சிருக்கும். அதனால, எந்த வெள்ளாமை வெச்சாலும் மகசூல் பட்டைய கிளப்புது. அது போக பருவமழைக்கு முந்தி, சேமிச்சு வெச்சிருக்கிற கோழி எருவை பயிருக்குக் கொடுப்போம். அது இயற்கையான மேலுரமாக மாறி பயிருக்கு ஊக்கம் கொடுக்கும். ஆக, நம்மாழ்வார் சொன்ன 'ஒன்றின் கழிவு... மற்றொன்றின் உணவு’ என்கிற சுழற்சி முறை விவசாய விதி, ரசாயன உரத்துக்கு மாற்றா நின்னு. உற்பத்திச் செலவைக் குறைக்குது'' என்ற பரிமளாதேவி,
மாத வருமானத்துக்கு மல்பெரி!
''ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம் கிடைக்கும்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். ஆனா, போதிய மழை கிடைக்காம போனதால ஆண்டு வருமானம் கொடுக்கிற பயிர்களை இந்த போகம் நடல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமாக நிரந்தர மாத வருமானம் பார்க்க ஒரு வழி கிடைச்சுது. தாராபுரம் பக்கத்துல இருக்கிற காசிலிங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து பாப்பாத்தி தம்பதி, பட்டுப்புழு வளர்த்து மாநில விருது வாங்கினது பத்தி வந்த கட்டுரை, எங்களையும் மல்பெரி விவசாயியா மாத்திடுச்சு. அதுவும் முழுக்க முழுக்க இயற்கைதான். நாலு ஏக்கர்ல சொட்டு நீர் போட்டு மல்பெரி செடிய நட்டிருக்கோம். ஏற்கெனவே கிடைபோட்ட மண்ணு. அதோட அமுதக்கரைசலையும் கொடுக்கிறதால, மல்பெரி எல்லாம், சும்மா வெத்தலை மாதிரி 'தளதள’னு இருக்கு. ஐயா சொன்ன அத்தனை விஷயங்களையும் எங்க பண்ணையில தவறாம கடைபிடிக்கறதால எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் அவரை நாங்க தெய்வமா பாக்குறோம்'' என்றபடி விடைகொடுத்தார்.
தவறுகளும்... விளக்கங்களும்!
'34 சென்ட்... ஆண்டுக்கு ரூ 2. லட்சம்... ஒப்பற்ற ஒரு பண்ணை’ என்ற தலைப்பில், பசுமை விகடன், 25.12.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவரின் பண்ணை பற்றிய அக்கட்டுரையில் சில தகவல்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாக, நம்மிடம் குறிப்பிட்ட ஃபெலிக்ஸ், '’கட்டுரை நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்திருக்கு. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கு. ஆனா, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இதையெல்லாம் நான் பயன்படுத்துற மாதிரி கட்டுரையில வந்திருக்கு. இதையெல்லாம் நான் பயன்படுத்துறதில்ல. வடிகரைசலை மட்டும்தான் பயன்படுத்துறேன். இதேபோல வனராணி ரகக் கோழி 1,000 ருபாய் விலை போகும்னு வந்திருக்கிற தகவலும் தவறு. ஒரு கோழி 300 ரூபாய் வரைதான் விலை போகும்'' என்று தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ஃபெலிக்ஸ், '’இந்தப் பண்ணையை வருமான நோக்கத்துக்காக நான் உருவாக்கல. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தா, ஐ.டி.துறையிலேயே (தகவல் தொழில்நுட்பத்துறை) இருந்திருப்பேன். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாத்திக்க நினைச்சுதான் இந்த பண்ணையை உருவாக்கினேன். இதை முழுமையா புரிஞ்சுக்காத சிலர், 'ரெண்டு லட்சம்தான் வருமானம் கிடைக்குதா?னு கேக்கறாங்க. இந்த இடத்துல கழிவுகள் அத்தனையும் மறுசுழற்சி ஆகுது; இயற்கைக் காயப்படாம இருக்கு; தற்சார்பு விவசாயம் நடக்குது; எல்லாத்துக்கும் மேல மனநிம்மதியான வாழ்க்கை கிடைக்குது. இதுக்கு ரெண்டு லட்சம் இல்ல... ரெண்டு கோடி... ரெண்டாயிரம் கோடினு எப்படி வேணும்னாலும் மதிப்பு போட்டுக்கலாம். இயற்கை விவசாயத்தின் மூலமா வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதைவிட, வாழ்வியல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கறவன் நான். அதனால, இந்த வருமானக் கணக்குலயெல்லாம் எனக்கு விருப்பமே இல்ல'' என்று சொன்னார்.
ஃபெலிக்ஸ் கூறியவற்றில் இரண்டு விஷயங்கள், தவறாக இடம்பெற்றுவிட்டன. இப்படித் தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பணியாற்ற உறுதி ஏற்கிறோம்.
பச்சைப் பசேலென்ற வயல்வெளி ஓரமாக ராகி நடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே நெல்லும் கோதுமையும் எதிரே வந்தன. ராகியை கண்ட நெல், 'அடேய், நீயெல்லாம் இன்னும் ஊரில் தான் இருக்கிறாயா? என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தது.
பொறுமையுடன் கடக்க முயலும் ராகிக்கு வழிவிடாமல் கேலியை இன்னும் தொடர்ந்தது நெல். "உன்னையெல்லாம் ஊர்ல ஒரு பய மதிக்கறது இல்ல, சுத்த வேஸ்ட்டுடா நீ" என்றது நெல். அதுவரை பொறுமை காத்த ராகி நெல்லைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னது, "இந்த ஊருக்கு நீயெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வந்தவன் நான்".
"இருந்து என்ன பிரயோஜனம்? இதோ இவனைப் (கோதுமையைக் காட்டி) போல வலிமையா இருக்கியா .. இல்லை என்னைப் போல டேஸ்டான தானியமா இருக்கியா..சொல்லு என்றது.
"ஹலோ, உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியல ப்ரோ! அதான் இப்டியெல்லாம் பேசற... சொல்றேன் கேட்டுக்கோ... உங்க எல்லாரையும் விட என்கிட்டதான் அதிக புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதுவும் இல்லாம மிக அதிக மினரல் சத்தும் எனக்குள்ளதான் இருக்கு.." கோதுமை அதிர்ச்சியாகி, "அட... அப்பறம்..." என ராகி சொல்வதை கேட்கத் தயாரானது
"நான் வலிமையா இல்லாம இருக்கலாம் ப்ரோ, ஆனா என்னை சாப்பிட்டதால்தான் உங்க தாத்தா, பாட்டி எல்லாம் இன்னும் எனர்ஜிடிக்கா இருக்காங்க புரிஞ்சுக்க. என்னை சாப்டறவங்களுக்கு சர்க்கரை நோய் வராது. அதுமட்டும் இல்லாம.. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிற தன்மை என்கிட்டதான் அதிகமா இருக்கு.
இப்போது கோதுமை ராகியின் பக்கம் வந்து நின்றது.. தன் பேச்சை ராகி தொடர்ந்தது. “என்னை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு சேராம இருக்கறதால இதய நோய்கள் வராமலும் நான் தடுக்கறேன்”
"அதெல்லாம் சரி, இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கும் உன் டேஸ்ட் பிடிக்கலதானே” என தளர்ந்த குரலில் கேட்டது நெல்.
இப்போது, ராகிக்கு ஆதரவான குரல் கோதுமையிடமிருந்து வந்தது
"இல்ல மாம்ஸ்... நீ நினைக்கறது தப்பு. நிறைய குழந்தைகளுக்கு ராகில செஞ்ச 'லட்டு', 'குக்கி'கள் அப்பறம் 'ராகி பக்கோடா'லாம் ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாம ராகியினால் உருவாக்கப்படும் Cereal வகை உணவு, உடலுக்கு ஆரோக்கியமானதுங்கூட. குட்டீஸ்கள் மட்டுமில்லாம வீட்ல இருக்கற பெரியவங்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கு இந்த Cereal. அதுமட்டுமில்லாம உன்னை, என்னை போல அதிக கவனம் எடுத்துக்கவேண்டிய பயிர் இல்ல இவன்."
நெல் சோர்ந்துபோனது, ராகி மற்றும் கோதுமையின் பதில்களால். ராகியின் குணங்களைப் புரிந்துகொண்டது. “அப்ப இவன் சைல்டண்டா இருந்து சாதிக்கறவன்னு சொல்லு!” என்று கூறியபடி ராகிக்கு பெரிய சல்யூட் ஒன்றை அடித்தது. இப்போது ராகி முன்னே வர... நட்புடன் அதன் இரண்டு பக்கங்களிலும் நெல், கோதுமை தோளில் கை போட்டபடி நண்பர்களாக தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தன அந்த பாதையில்.
''ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.
எப்படி சாத்தியமானது இது...? அவரே சொல்கிறார் உற்சாகமாக....
''ஈரோட்டை அடுத்துள்ள தயிர்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். பரம்பரையாகவே விவசாயக் குடும்பம்தான். விவசாயத்துடன் சேர்த்து பால் பண்ணை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வந்தார் அப்பா.
பண்ணையில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் பெங்களூருவுக்கு அனுப்பி வந்தார்.
அதில் பெரிய அளவு லாபம் கிடைக்கவில்லை. மேலும், நாள் தோறும் 1000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அதை விடப் போவதாக அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்த எனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. விவசாயத்தின் மீதும் பெரிய ஆர்வமில்லை. வேறு ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற பொறி மட்டும் மனதில் இருந்தது.
சரி... அப்பா செய்யும் பால் தொழிலை தொடரலாம் என்று முடிவு செய்தேன். அதோடு நிற்காமல் எங்க பண்ணையில் இருந்து அனுப்பும் பாலை கொள்முதல் செய்ய வரும் பெங்களூரு வியாபாரியை போய் பார்த்தேன். அங்கு அவர், நாங்க அனுப்பும் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல், அதை மதிப்புக்கூட்டிய பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருவதை கண்டேன்.
அதில் குறிப்பாக, 'பனீர்' (Paneer ) எனப்படும் பாலாடைக்கட்டி தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன். நாமும் அது போல் பனீர் தயாரித்து விற்பனை செய்தால் நாள் தோறும் ஏற்படும் 1000 ரூபாய் இழப்பை தவிர்த்து, கூடுதல் லாபம் பார்க்க முடியும் என முடிவு செய்து, அந்த பெங்களூரு வியாபாரியிடம் பனீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சொல்லித்தருமாறு கேட்டேன்.
அவர் அதை கற்றுத்தர மறுத்து விட்டார். அதுக்காக நான் சோர்ந்து போகவில்லை.
எப்படியாவது பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றாக வேண்டும் என்கிற ஆர்வம்தான் ஏற்பட்டது. பல இடங்களில் அலைந்து திரிந்து பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓரளவு கற்றுக்கொண்டேன். காய்ச்சிய பாலில் வினிகர் சேர்த்து பனீர் தயாரிக்கலாம் என்கிற அடிப்படை தகவலை தெரிந்து கொண்டேன்.
அதை உடனே நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கினேன். அப்பா வீட்டில் இல்லாதபோது அந்த வேலையை செய்தேன். காய்ச்சிய பால் 300 லிட்டரை பனீர் தயாரிக்க பயன்படுத்தினேன். பனீருக்கு எப்படி வடிவம் கொடுப்பது என்பது தெரியாமல் எனக்கு தெரிந்த அளவில் அதை தயாரித்து முடித்தேன்.
இதை வந்து பார்த்த அப்பா, '300 லிட்டர் பால் வீணாயிடும் போல் இருக்கு' என்றார்.
'இல்லை...இது முதல் முயற்சிதான் தொடர்ந்து செய்யும் அடுத்த முயற்சிகளில் ஜெயித்து காட்டுகிறேன்' என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். சரி சரி என்று சொல்லிப்போனார். நானாக முயன்று தயாரித்த பனீரை, ஏற்கனவே அறிமுகமான பெங்களூரு ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பினேன். அதை வாங்கி விற்பனை செய்த ஹோட்டல்காரர்களும் சில ஆலோசனை சொன்னார்கள். அதையும் மேம்படுத்தி பனீர் தயாரித்து அனுப்பினேன். வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் டேஸ்ட் பிடித்துப்போனது. படிப்படியாக ஆர்டர்கள் வரத்தொடங்கின.
நிறைய ஆர்டர்கள் குவிந்ததால், எங்களின் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பால் போதாமல், வெளியில் இருந்தும் பால் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு மட்டுமே பனீர் சப்ளை பண்ணிவந்த நாங்கள், எல்லா மக்களுக்கும் பனீர் போய் சேரவேண்டும் என்கிற நோக்கில், சில்லரை விற்பனையிலும் கால் பதிக்க முடிவு செய்தோம்.
அப்படி சில்லரை வியாபாரத்தில் இறங்கும்போது, அதுக்கு ஒரு 'பிராண்ட் நேம்' வைத்து மார்க்கெட் செய்தால், பிசினஸ் ஓஹோனு போகும் என எண்ணி, பால் சம்பந்தப்பட்ட பெயர் ஒன்றை தேடும் படலத்தில் இறங்கினேன். அப்படி கூகுளில் தேடும் பொழுது கிடைத்த பெயர்தான் 'மில்கி மிஸ்ட்'. அந்த பெயரே நன்றாக இருந்ததால் அதையே பிராண்ட் நேமாக வைத்து சில்லரை விற்பனையை தொடங்கினோம். சில வருடங்கள் கழித்து சில்லரை விற்பனையை விரிவுபடுத்தும் விதமாக, 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மெஷின் வைத்து, பனீர் தயாரிக்க ஆரம்பித்தோம்.
தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரத்தில், ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரிடம் இது குறித்துபேசியபோது, 'விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால் விளம்பரம் கொடுப்பது அவசியம்' என்று 'ஐடியா' கொடுத்தார். அதே சமயம், ' நீங்க கடைக்கு கொடுக்கும் பனீர் எப்போதும் ஜில்லுனு ஃபிரஷா இருக்கவேண்டும். அதுக்கு முக்கியமான சில்லரை வியாபாரிகளுக்கு மினி ஃபிரிட்ஜ் வாங்கி கொடுங்கள்' என்றும் மேல் ஆலோசனை சொன்னார்.
நண்பர் சொன்ன ஆலோசனைப்படி விளம்பரமும் கொடுத்தோம். மினி ஃபிரிட்ஜும் கொடுத்தோம்.
ஆனாலும், பனீர் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. காரணத்தை அறிய, கடை கடையாய் போய் ஆய்வு செய்தோம். அப்படி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.
நாங்கள் கொடுத்த 'ஃபிரிட்ஜ்' அலமாரியில் பெரும்பகுதி இடத்தை வேறு உணவுப்பொருட்கள் அடைத்துக்கொண்டிருந்தன. மீதமுள்ள சிறிய இடத்தில் ஒரு மூலையில் மட்டும் எங்கள் தயாரிப்பான பனீர் வைக்கப்பட்டிருந்தது.
அப்படி செய்ய என்ன காரணம் என்று சில்லரை வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் எங்களை வேறு கோணத்தில் யோசிக்கவைத்தது.'பனீர்' என்பது அன்றாடம் தேவைப்படும் அத்யாவசிய உணவுப்பொருள் கிடையாது. அதனால்தான் வேகமான விற்பனை நடக்கவில்லை என்றார்கள்.
சரி, அத்யாவசிய பால்பொருட்கள் என்ன என்பதை யோசித்தபோது, முதலில் வந்து நின்றது தயிர்.
மேம்படுத்தப்பட்ட தயிர் விற்பனையில் இறங்க முடிவெடுத்தோம். அதன் மூலப்பொருளான பாலை, பால் வியாபாரிகளிடம் லிட்டர் கணக்கில் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். ஆனால், கொஞ்ச நாளில் ஒன்றை புரிந்துகொண்டோம். பால் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் சுத்தமானதாக இல்லை. எனவே, தயிர் உற்பத்தி செய்ய தேவையான பாலை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். அதற்கு எங்களுக்கு தோதான கிராமங்கள் தோறும் பால் கொள்முதல் மையங்களை திறந்தோம். கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்படவேண்டியது முக்கியம். அதற்கு என ஐந்து பால்குளிரூட்டு நிலையங்களை தகுந்த இடங்களில் அமைத்தோம்.
தமிழ்நாடு முழுவதும் 35,000 கறவையாளர்கள் எங்கள் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்கள். தயிர் போக பால் பொருளான பட்டர் தயாரிப்பிலும் இறங்கினோம். அதைத்தொடர்ந்து 110 வகையான பால் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். வியாபாரம் சூடு பிடித்தது.
இப்படியான சூழலில் இன்னொரு சவாலையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சில்லரை விற்பனையாளர்களுக்கு வேன் மூலம் கொண்டுசெல்லப்படும் பால் பொருட்கள், விரைவில் கெட்டுப்போவதாக கவலை தெரிவித்தார்கள் வியாபாரிகள் பலரும்.
அதனால், மொத்த விற்பனையாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கொடுத்தோம். தயாரிக்கும் அதே தரமுடன் பால் பொருட்கள், சில்லரை வியாபாரிகளை சென்றடைய ஏதுவாக அது அமைந்தது. நாளுக்குநாள் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. எல்லாத்தொழிலிலும் புதுப்புது டெக்னாலஜி புகுத்தப்பட்டு வருகிறது. அதை உடனுக்கு உடன் தொழிற்சாலைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாம் களத்தில் நிற்கமுடியும். தயாரிக்கும் உணவுப்பொருட்களை, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கமுடியும். அதே நேரம் தரம்தான் மிகமுக்கியம். அதை முதல் நோக்கமாக வைத்து செயல்படுவதால்தான் தொடர் வளர்ச்சியில் உள்ளோம்.
இன்றைய தேதியில் எங்கள் தொழிற்சாலையில் 450 பேர் வேலை பார்க்கிறார்கள். 2007-08ம் ஆண்டுகளில் 14 கோடியாக இருந்த எங்கள் பால் பொருட்கள் வர்த்தகம், இன்றைய தேதியில் 290 கோடிரூபாய் என்று உயர்ந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு தொழில் மேல் வைத்திருக்கும் நேசம்தான் காரணம். லாபம் வருகிறது என்பதால் வேறு தொழில்களில் இறங்கலாம் என்கிற எண்ணம் என்னிடம் துளியும் இல்லை. வெற்றிகரமாக செய்துவரும் இந்த தொழிலை, எப்படி மேம்படுத்துவது என்கிற யோசனைதான் எனக்கு உள்ளது.
மனிதனுக்கு கல்வி என்பது அவசியம்தான். அது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள பேருதவி புரிகிறது. அதற்கு மேலாக நாம் பெறும் அனுபவக் கல்விதான் நம்மை பக்குவப்படுத்தி நம்மை மேம்படுத்துகிறது. குறைவான படிப்பு உள்ளவர்கள் முன்னேற முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னிடம் இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். மொத்த சிந்தனையும் நாம் செய்கின்ற தொழில் மீது இருக்கவேண்டும். அதில் புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டும். அத்துடன் செய்யும் தொழிலில் ஈடுபாடும், பொறுமையும், மனம் தளராமையும் இருந்தால் நிச்சயம் சிகரங்களை தொடமுடியும். அதுக்கு நானே நல்லதோர் உதாரணம்'' என்றார் பொங்கும் உற்சாகத்துடன்.
எண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள். தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் புதிய நிலக்கடலை ரகத்தை வெளியிட்டுள்ளது பாபா அணு ஆராய்ச்சி நிலையம்.
ஒரு ஏக்கர் பரப்பில் ஒட்டு ரகம் தரும் மகசூலை 50 சென்ட் நிலத்தில் இந்த ரகம் தருகிறது என்கிறார், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் தாலூகா, வத்திராயிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, டபிள்யூ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுகேந்திரன்.
கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து அறுவடை செய்திருந்த கடலை வயலில், சில தப்புச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றிலிருந்து கடலைகளைப் பறித்தபடி நம்மிடம் பேசிய சுகேந்திரன்,
‘‘இதுதான் என்னோட பூர்வீக கிராமம். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். வழக்கமா நெல், பருத்தி, தென்னை விவசாயம் செய்வோம். காலேஜ்ல படிக்கும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில கலந்துகிட்டேன். அதனால, காலேஜில டி.சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அந்த நேரத்துல போலீஸ் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டு செலக்ட் ஆகிட்டேன். ஆனா, அந்த வேலை அப்பாவுக்குப் பிடிக்கலை. ‘போலீஸ் வேலையெல்லாம் வேண்டாம், ஒழுங்கா விவசாயத்தைப் பாரு...’னு சொல்லிட்டாரு. அப்பா பேச்சைத் தட்ட முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன்.
அப்பா காலத்துல சாணம் போட்டு செய்யுற இயற்கை முறை விவசாயம்தான் நடந்துச்சு. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் எங்க நிலத்துலயும் ரசாயனத்தைக் கொட்டி மண்ணைப் பாழாக்கினோம்.
2003-ம் வருஷத்துக்குப் பிறகுதான் இயற்கை விவசாயம், நஞ்சில்லா விவசாயம்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டேன். நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும், அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயத்தைப் பற்றியும் தினசரிகளில் படிச்சேன். தொடர்ந்து, ‘பசுமை விகடன்’ இதழ் வெளிவரவும், இயற்கை விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் கிடைச்சது.
‘ரசாயனம் உரம் போட்ட இடத்துல ஒரு மண்புழுவைக்கூடப் பார்க்க முடியாது’னு ஒரு கட்டுரையில் நம்மாழ்வார் அய்யா சொல்லியிருப்பார். என் தோட்டத்துலயும் மண்புழுவை நான் பார்த்ததே இல்லை. அப்போதான் அவர் சொன்னதை உணர்ந்தேன். அதுல இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி பத்து வருசம் ஆகுது’’ என்று முன்கதை சொன்னவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
வழக்கத்தை விட கூடுதல் மகசூல்!
‘‘அப்பாவோட மறைவுக்குப் பிறகு அண்ணன் தம்பிகளுக்கு பாகம் பிரிச்சது போக எனக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல, ரெண்டு ஏக்கர் நிலத்துல லக்னோ-49 ரக கொய்யாவை நட்டு இருக்கேன். அதுக்கு ரெண்டு வயசாகுது. மீதமுள்ள நாலு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல மொச்சை, உளுந்து, தட்டாம்பயறு (தட்டைப்பயறு)னு சீசனுக்கு ஏத்தமாதிரி போடுவேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. அதனால இப்போ நாலு வருசமா நிலக்கடலையை சாகுபடி செய்றேன்.
இது, மணல் கலந்த செம்மண் நிலம். ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு ஆங்கில செய்தித்தாள்ல, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ‘டி.ஜி-37-ஏ’ ரக நிலக்கடலை வறட்சியைத் தாங்கி வளர்றதோட, அதிகமான மகசூலையும் தரும். மானாவாரி நிலத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளதுனு ஒரு செய்தியைப் படிச்சேன். உடனே காந்திகிராம பல்கலைக்கழகத்துக்குப் போயி பத்து கிலோ விதைக்கடலை வாங்கிட்டு வந்து, பத்து சென்ட் நிலத்துல மானாவாரியாக விதைச்சேன். 110 கிலோ வரை மகசூல் கிடைச்சுது. அந்தக் கடலையை விதைக்காக சேமிச்சுவச்சு ஆடிப்பட்டத்துல விதைச்சேன். வழக்கமான ஒட்டு ரகத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்சது. மூணு ஏக்கர் இடத்துல ஒட்டு ரக கடலையும், 50 சென்ட் நிலத்துல அணு ஆராய்ச்சி மையத்தின் கடலையும் போட்டு அறுவடை செய்திருக்கேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன சுகேந்திரன், வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
ஒரு ஏக்கர் மகசூல் அரை ஏக்கரில் கிடைக்கும்!
‘‘ஒரு ஏக்கர் பரப்புல ஒட்டு ரக நிலக்கடலை சாகுபடி செஞ்சதுல 1,150 கிலோ கிடைச்சுது, ஆனா, அணு ஆராய்ச்சி மைய கடலை 50 சென்ட் பரப்புலயே 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ரெண்டு ரக கடலைக்குமே ஒரே விலைதான். கிலோ 30 ரூபாய்னு வியாபாரிகிட்டயே விற்பனை செய்திட்டேன். பருப்பா உடைச்சு வித்தா கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும். கிடைச்சது போதும்னு கடலையாவே வித்துட்டேன். கடலைச்செடிகளை நிலத்தில் அப்படியே காய விட்டு அடுத்த முறை விதைக்கும் போது அடியுரமாக மடக்கி உழுறதுக்காக போட்டிருக்கேன்.
ஒரு ஏக்கர், ஒட்டு ரக கடலை மூலமா 34,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு போக, 14,900 ரூபாய் லாபமா கிடைச்சுது. அணு ஆராய்ச்சி மைய ரகத்துல, 50 சென்ட்ல 33,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக 24,450 ரூபாய் லாபமா கிடைச்சுது. தண்ணீர் செலவே இல்லாம மானாவாரியா வெறும் 50 சென்ட் இடத்துல இது, நல்ல லாபம்தான்’’என்றவர் சந்தோஷத்தில் கை நிறைய கடலைகளை அள்ளிக் காட்டினார்.
தொடர்புக்கு, சுகேந்திரன், செல்போன்: 99940-65759.
இப்படித்தான் செய்யணும் சாகுபடி!
50 சென்ட் நிலத்தில் அணு ஆராய்ச்சி மைய ரகமான ‘டி.ஜி.37-ஏ‘ ரக நிலக்கடலையை மானாவாரியில் சாகுபடி செய்யும்விதம் குறித்து சுகேந்திரன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பாடமாக இங்கே...
ஆடிப்பட்டம் ஏற்றது..!
சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர வெயிலில் உழவு செய்தால், மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்கள், கூடுகள் வெயிலில் பட்டு சுருண்டு சாகும். உழவு செய்த பிறகு, ஆறு நாள் இடைவெளி விட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். இதேபோல, 6 நாள் இடைவெளியில் மொத்தம் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நான்கு டிராக்டர் மட்கிய குப்பையை சிதறி விட்டு ஓர் உழவு ஓட்டவேண்டும். அப்போதுதான் மண் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால்தான் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஆடி மாத தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் புல், களைகள் முளைத்து நிற்கும். களையை அழிப்பதற்காக, ஆடி மாதக் கடைசியில் ஓர் உழவு உழுதுவிட்டு, மீண்டும் ஒரு மழை பெய்ததும் ஒரு சால் ஓட்டி சாலில் விதைக் கடலையைப் போட வேண்டும். 50 சென்ட் நிலத்துக்கு 25 கிலோ (அணு ஆராய்ச்சி மைய ரகம்) விதைக் கடலை தேவைப்படும். ஆடி மாதக் கடைசியில் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.
இரண்டு முறை களையெடுப்பு..!
விதைத்த 8 முதல் 10 ம் நாளில் முளைப்பு தெரியும். 25 மற்றும் 35 ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். முதல் களை எடுக்கும் போது லேசாக மணலைச் சுரண்டி களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை எடுக்கும் போது நிலத்தை சற்று ஆழமாகக் கொத்தி மண்ணை பொலபொலப்பாக்கி வைக்க வேண்டும். 35 முதல் 40 நாளில் பூ பூத்து விடும். 40-ம் நாள், ஏற்கெனவே களை எடுக்கும் போது பொலபொலப்பாக்கி வைத்திருக்கும் மண்ணை செடியோடு அணைத்து விட வேண்டும். மண் அணைத்த பகுதியில்தான் கடலைச்செடி வேர்பிடித்து மண்ணில் இறங்கி வளரும்.
இரண்டு முறை இ.எம்..! மண் அணைத்தவுடன் 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி இ.எம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். அதேபோல, 55-ம் நாளும் இ.எம் தெளிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்தில் நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. 100 முதல் 105 நாட்களுக்கு மேல்மட்ட இலைகளில் கரும்புள்ளி மற்றும் மஞ்சள் நிறம் தென்படும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பறித்து கடலைக் காய்களை உரித்தால், ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருந்தால், அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.’’
திரட்சியான காய்கள்!
‘டி.ஜி.-37-ஏ‘ ரக கடலைச்செடியின் வேர் மற்றும் தண்டு மிக தடிமனாகவும், நீளமாகவும் உள்ளது. தடிமனான தண்டுகளில் நீரைத் தேக்கி வைத்து வறட்சியைத் தாங்கி வளர்கிறது. இதன் அடிப்பரப்பில் கடலைகளும் திரட்சியாக கொத்தாக முளைத்துள்ளன. குறைவான மழைநீரில் நல்ல மகசூலை இந்த ரகம் தந்துள்ளதோடு அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டதாக இருக்கிறது என்பது சுகேந்திரனின் அனுபவம்.
‘‘விதை நிலக்கடலை விற்பனைக்கு’’
பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டி.ஜி.,37 நிலக்கடலை ரகத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த திண்டுக்கல் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது,
‘‘நீர் பற்றாக்குறையால் பணப்பயிராக இருந்த நிலக்கடலை நஷ்டபயிராக மாறியுள்ளது. புதிய ரகத்துக்கு நீர் தேவை குறைவு. மற்ற ரகங்களை போல், புதிய ரகத்தையும் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். நிலக்கடலை திரட்சியாக இருக்கும். எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆடி மற்றும் கார்த்திகைப் பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இப்போது விலைக்கு விற்பனை செய்கிறோம்’’ என்றார்.
தொடர்புக்கு, செல்போன்: 94425-42915.
“பாதிப்பு இல்லை!”
‘கதிரியக்க முறையில் உருவாக்கப்படும் விதைகளில் ஏதேனும் ஆபத்து உண்டா?’ என்று திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். வைத்தியநாதனிடம் கேட்டோம், அதற்கு “கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க வேண்டுமென்பதற்காக பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்க முறையில் சில வீரிய ஒட்டு ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
எண்ணெய் வித்துக்களான நிலக்கடலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது என தமிழ்நாட்டில் பரவலாக விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோ-6 மானாவாரி நிலத்துக்கும், கோ-7 மானாவாரி இறவையிலும் வரும். அதேபோல திண்டிவனம் TMV-6 மற்றும் 7 ஆகியவை மானாவாரிக்கும் இறவைக்கும் வரும். விருத்தாச்சலம் VRI-7 மானாவாரிக்கும், விருத்தாச்சலம்-6 மற்றும் விருத்தாச்சலம்-8 மானாவாரி, இறவைக்கும் வரும். விருத்தாச்சலம்-8 வீரிய ஒட்டு ரக நிலக்கடலை. இந்த ரகம்தான் புதிதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருத்தாச்சலம்-8 ரகமும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைத் தரக்கூடியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தபட்ட ரகங்கள் அனைத்தும் ஆடி, கார்த்திகை ஆகிய இரண்டு பட்டத்துக்கும் வரும். வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகத் செய்த தேர்வு செய்யப்பட்ட ரகங்கள், கலப்பு செய்து உருவாக்கப்பட்ட ரகங்கள். இவற்றின் விளைச்சலோடு கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகங்களின் விளைச்சலையும் ஒப்பிடக்கூடாது’ என்றார்.
தொடர்புக்கு, வைத்தியநாதன், செல்போன்: 94424-72103.
மருத்துவ பயன்கள்!
நிலக்கடலை, வேர்க்கடலை, கடலை, மணிலாகொட்டை (மல்லாட்டை ), மல்லாங்கொட்டை, கடலைக்காய் என இதற்கு பல பெயர்கள் உண்டு. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், பித்தப்பைக் கல் உருவாவதைத் தடுக்கலாம்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இருப்பதால், இதய வால்வுகளைப் பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பெண்களின் இயல்பான ‘ஹார்மோன்‘ வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன், மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பாதாம், பிஸ்தா, முந்திரியை விடவும் நிலக்கடலையில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆனால், நிலக்கடலையை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.
கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!
உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது. நிலக்கடலைக்கு ஊடுபயிராக தட்டைப்பயறு, கம்பு, உளுந்து, துவரை, சூரியகாந்தி ஏற்றது. இதனால் நோய்த்தாக்குதல் குறைவதுடன் உபரி வருமானமும் பெறலாம். அறுவடை நேரத்தில் தண்ணீர் தெளித்தால், கடலைச் செடியைப் பறிக்க சுலபமாக இருக்கும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால், தண்ணீர் தேவையில்லை.
பறித்த செடிகளைக் குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. ஈரமாக இருக்கும்போது செடி வளரத் தொடங்கும். அறுவடை செய்த கடலைக் காய்களை 4 முதல் 5 நாட்கள் வெயிலில் காய வைத்துத் தான் சேமித்து வைக்க வேண்டும். கடலை மீது ஈரப்பதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறவை சாகுபடியை விட மானாவாரி சாகுபடியில் அடியுரம் கூடுதலாகப் போட்டால்தான் வறட்சியைத் தாங்கி வளரும். செம்மண் நிலத்தைப் பொறுத்தவரையில் மண் இறுக்கம்தான் கடலையின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே, மண் இறுக்கம் போக்க, ஆழமான உழவு மற்றும் குறுக்கு உழவு அவசியம். மானாவாரியைப் பொறுத்தவரை மழை தாமதமாக பெய்தால்கூட கவலையில்லை. முளைத்து, பூத்த பிறகு மழை கிடைத்தால் போதும். காய்ச்சலுக்குப் பிறகான தண்ணீர் பாய்ச்சலும் நல்ல மகசூலைத் தரும்.
‘‘பால்பண்ணை வைத்துள்ளோம். இந்த ஆண்டு அடிக்கும் கடுமையான வெயிலில் மாடுகள் ரொம்பவே களைத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’
ரா.ஞானதேசிகன், திருநெல்வேலி.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடற்செயலியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.ஈஸ்வரி பதில் சொல்கிறார்.
‘‘தட்பவெப்பப் பருவகால நிலையில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழ்நிலைகள் போன்றவற்றினால், கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதிகமான மூச்சிரைப்பு ஏற்படும். தீவனம் உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். இதனால் பால் உற்பத்தியும் குறையும். அனைத்து உடல் உறுப்புகளும் சோர்வடைந்து இனவிருத்தித் திறனிலும், கன்று ஈனும் திறனிலும் பாதிப்பு ஏற்படும். வேலைத்திறனும் குறைந்துபோய், அவற்றின் ரத்தத்தில், ‘கார்டிசால்’ எனும் ஹார்மோனின் அளவு அதிகமாகவும், தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தும், நோய் எதிர்ப்புத் திறனின் அளவிலும் குறைபாடு காணப்படும்.
கோடை காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, மனிதர்களுக்குத் தோலுக்கு அடியில் உள்ள வியர்வைச் சுரப்பியில், வியர்வை சுரந்து உடலின் வெப்பநிலையைக் குறைத்துவிடும். ஆனால், கால்நடைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அவை வாய் மூலமாகவும், சுவாசிப்பதன் மூலமாகவும் காதை அசைப்பதன் மூலமாகவும்தான் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். ஆகவே, மாடுகளுக்கு கோடை காலத்தில் நல்லவிதமாக கீற்றுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும். கொட்டகையின் அமைப்பு, தெற்கு-வடக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான், காலை மற்றும் மாலை வேளைகளில் வெயில் கொட்டகைக்குள் வராது.
மதிய வேளைகளில் மாடுகளைக் குளிப்பாட்டலாம். இந்தச் சமயத்தில் மாடுகளுக்கு எந்நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தைக் குளுமையாக வைக்க, சுற்றிலும் மரங்களை வளர்க்கலாம். இதனால், குளுமையான காற்று பண்ணைக்குள் வீசும். வேம்பு, சூபாபுல், கிளரிசீடியா, அகத்தி, முருங்கை, வாகை, தென்னை, எலுமிச்சை ஆகிய மரங்களை வளர்க்கலாம். கோடை காலத்தில் அதிகமாக பசுந்தீவனம் கிடைக்காது. அந்தச் சமயத்தில், இந்த மரங்களின் இலைகளைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.’’
‘‘மரச்செக்கு மூலம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்க உள்ளோம். லாபகரமாகத் தொழிலை நடத்த ஆலோசனை சொல்லுங்கள்?’’
சிவசங்கர், ஈரோடு.
மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுத்து வரும் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரைச் சேர்ந்த சதீஷ் பதில் சொல்கிறார்.
‘‘தற்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.
காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது. மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
மரச்செக்கு எண்ணெய்க்கு நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன. முதலில், வாடகைக்கு எடுத்து மரச்செக்கு மூலம் எண்ணெயை ஆட்டி விற்பனை செய்யுங்கள். இதன் மூலம் அனுபவம் கிடைத்த பிறகு, சொந்தமாக அமைத்துக் கொள்ளலாம். விற்பனை வாய்ப்பு என்று பார்த்தால், இயற்கை அங்காடிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள்.... மரச் செக்கு எண்ணெயை விரும்பி வாங்கிக் கொள்கின்றன. சில ஹோட்டல்களில் மரச்செக்கு எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அறிவிப்புப் பலகைகூட வைத்துள்ளார்கள்.’’
தொடர்புக்கு, செல்போன்: 94435-88224.
‘‘எங்களிடம் நிறைய பசு மாடுகள் உள்ளன. இதன் சிறுநீரைச் சேகரிப்பது சிரமமாக உள்ளது. இதற்கு எளிய வழிமுறைகள் இருந்தால், சொல்லுங்கள்?’’
சேலம் மாவட்டம் ‘சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி. ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.
‘‘பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம்.
சிறுநீரைப் பிடிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு, விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவக் குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், 3 நாட்களில் அதன் மூலம் மருந்து தயாரித்துவிட வேண்டும்.
வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் சிறுநீர் கொடுத்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.’’