Monetize Your Website or Blog

Showing posts with label கால்நடை. Show all posts
Showing posts with label கால்நடை. Show all posts

Thursday, 18 August 2016

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.


கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.


ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.


தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.



Friday, 29 July 2016

கோவையில் மீண்டும் ஒரு யானை ரயில் மோதி பலி!

கோவை அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற யானை மீது  ரயில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.

கோவையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில் மோதி ஒரு கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் உயிர் இழந்தது. அதை தொடர்ந்து 2011-ல் ரயில் மோதி ஒரு யானை இறந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அடுத்தடுத்து இரு யானைகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. ரயில் மோதி அடுத்தடுத்து யானைகள் இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
 
இந்நிலையில், கோவையில் இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் இன்று(வெள்ளி) காலை நிகழ்ந்துள்ளது. இன்று காலை கோவையை அடுத்த வாளையார் பகுதியில், ரயில் பாதையை தனது குட்டியுடன் கடக்க முயன்றது பெண் யானை ஒன்று. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த 'வெஸ்ட்கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயில், பாதையைக் கடந்து கொண்டிருந்த யானை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நிலையில் அந்த யானை வனத்துக்குள் சென்றுவிட்டது.


யானை மீது ரயில் மோதிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துக்குள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்திய வனத்துறையினர், வனத்தில் யானை படுகாயமடைந்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கும் முன்னரே அந்த யானை பரிதாபமாக உயிர் இழந்தது.

இது தொடர்பாக ரயில்வே துறையினரிடம் பேசியபோது, ''யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் என சொல்லப்பட்ட பகுதியில் மிகவும் மெதுவாகவே ரயில் இயக்கப்படுகிறது. இன்று நடந்த சம்பவத்தின் போது, யானையைப் பார்த்ததும் இன்ஜினை நிறுத்த ரயில் டிரைவர் முயற்சித்துள்ளார். ஆனால், உடனடியாக ரயிலை நிறுத்த முடியாமல் அது யானை மீது மோதி இருக்கிறது. இதை ரயில்வே துறையின் அலட்சியம் என சொல்லி விட முடியாது" என்றனர். மீண்டும் ரயில் மோதி யானை இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


இதற்கிடையே மாங்கரை பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யானைக்குட்டி ஒன்று உலவி வருவது அனைவரிடத்திலும் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பன்றிக்கு வைத்த வெடியால் காயமடைந்த குட்டி யானை அது என கூறப்படுகிறது. அந்த குட்டி யானையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணியையும் வனத்துறையினர் வேகப்படுத்தி உள்ளனர்.இறந்த பெண் யானையை, பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.  




Tuesday, 7 June 2016

கழிவுநீரை நன்னீராக மாற்றும் கருவி: இன்ஜினியரிங் மாணவியின் அசத்தல் ப்ராஜெக்ட்!

ழிவுநீரை சுத்திகரித்து வீட்டுத் தேவைகளுக்கும், தோட்டங்களுக்கும் உபயோகப்படுத்துவதைத் தாண்டி அதை குடிநீராக மாற்றிப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை இன்ஜினியரிங் மாணவி கிரிட்டா. 

மதுரை சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் கிரிட்டா, தனது கல்லூரி ஆய்வுக்காக பெயருக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்து முடிப்பதில் விருப்பமின்றி சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டு அதுதொடர்பான ஒரு கண்டுபிடிப்பினையும் நிகழ்த்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார். 
 
தனது கண்டுபிடிப்பு கருவிக்கான ‘ பேட்டென்ட் ரைட்ஸ்’ வாங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள மாணவி கிரிட்டாவை சந்தித்தோம்.


“வெறும் மதிப்பெண்களுக்காக அல்லாமல் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் என்னுடைய ப்ராஜெக்ட் இருக்கணும் என்பது என் ஆசை. அந்த சிந்தனையால்தான் இப்போது ஒரு கருவியையே கண்டுபிடிக்க முடிஞ்சது. 

இன்றைக்கு தண்ணீர் பஞ்சம்தான் கிராம, நகர வித்தியாசமின்றி இருக்கக்கூடிய பிரச்னை. இன்றைய எல்லா சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் காரணம் நாம் இயற்கையை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்ததுதான். ஆனால் மறுபடியும் இயற்கையை தேடிப்போனால் நிச்சயம் எல்லா சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்னு நம்பி ஆய்வைத் தொடங்கினேன்.
 



இப்போ கண்டுபிடித்திருக்கும் கருவியில் கழிவுநீரை குடிநீரா மாற்ற மூன்று நிலைகள் இருக்கு. இதற்கான சாம்பிள் வாட்டராக நான் மருத்துவமனை கழிவுநீரை எடுத்துக்கொண்டேன். மருத்துவக் கழிவுகள் அனைத்தும் கலந்து வந்த நீரை எடுத்து வந்து எரிமலைக் கற்கள் என்று கூறப்படும் ‘பயோ ரியாக்டர்’ கற்கள் நிறைந்த பாத்திரத்தில் ஊற்றினேன். இப்படி நான்கு நாட்கள் அசைவற்ற நிலையில் வைத்திருந்தால், எரிமலைக் கற்களில் உள்ள பாக்டீரியாக்கள் கழிவுநீரிலுள்ள கிருமிகளுடன் எதிர்வினையாற்றி நீரின் நிறத்தையும், துர்நாற்றத்தையும் முழுமையாக நீக்கிவிடும். 

இதற்கடுத்து அந்நீரை நிலக்கரி, ஜல்லி, ஆற்றுமணல் நிறைந்த பாத்திரத்தில் ஊற்றிவைப்பதால் அதிலுள்ள கழிவுத்துகள்கள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த நீரினை தோட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் குடிநீராக்க வேண்டுமெனில் ‘ஓசோனேஷன்’ என்னும் மூன்றாம் நிலையை செயல்படுத்தணும். இதற்கான பிரத்யேகக் கருவியை தண்ணீருக்குள் செலுத்தும்போது கிருமிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு குடிப்பதற்கு ஏற்ற நன்னீராக மாறுகிறது. 

இந்த கருவியை சிறிய அளவில் செய்திருப்பதால் ஒரு குடும்பத்தின் வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு உதவியா இருக்கும். ஆனால் இதையே பள்ளி, கல்லூரி, பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பெரிய அளவிலும் செய்யலாம். வீட்டளவில் செய்துள்ள இந்த கருவியை உருவாக்குவதற்கான செலவு 15,000 ரூபாய். எதிர்காலத்தில் பெரிய அளவில் இந்தக் கருவியை செய்து செயல்படுத்திக் காட்டவேண்டும்  என்பதே என் கனவு" என்றார்.
 
கிரிட்டாவின் இந்த கண்டுபிடிப்புக்கு பல அமைப்புகளிலிருந்தும், தனிமனிதர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

கிரிட்டாவுக்கு நமது வாழ்த்துகள்!



Friday, 27 May 2016

படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி ! - சூப்பர் தொழிலதிபர்

''ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற  முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.



எப்படி சாத்தியமானது இது...?  அவரே சொல்கிறார் உற்சாகமாக....
''ஈரோட்டை அடுத்துள்ள தயிர்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். பரம்பரையாகவே விவசாயக் குடும்பம்தான். விவசாயத்துடன் சேர்த்து  பால் பண்ணை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வந்தார் அப்பா.
பண்ணையில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் பெங்களூருவுக்கு அனுப்பி வந்தார்.
அதில் பெரிய அளவு லாபம் கிடைக்கவில்லை. மேலும்,  நாள் தோறும் 1000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அதை  விடப் போவதாக அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்த எனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல்  படிக்க  விருப்பம் இல்லை. விவசாயத்தின் மீதும் பெரிய ஆர்வமில்லை. வேறு ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற பொறி மட்டும் மனதில்  இருந்தது.

சரி... அப்பா செய்யும் பால் தொழிலை தொடரலாம் என்று முடிவு செய்தேன். அதோடு நிற்காமல் எங்க பண்ணையில் இருந்து அனுப்பும் பாலை கொள்முதல் செய்ய வரும் பெங்களூரு வியாபாரியை போய் பார்த்தேன். அங்கு அவர், நாங்க அனுப்பும் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல், அதை மதிப்புக்கூட்டிய பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருவதை கண்டேன்.

அதில் குறிப்பாக, 'பனீர்' (Paneer ) எனப்படும் பாலாடைக்கட்டி தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து  நல்ல வருமானம் பார்த்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன். நாமும் அது போல் பனீர் தயாரித்து விற்பனை செய்தால் நாள் தோறும்  ஏற்படும் 1000 ரூபாய் இழப்பை தவிர்த்து,  கூடுதல் லாபம் பார்க்க முடியும் என முடிவு செய்து, அந்த பெங்களூரு வியாபாரியிடம் பனீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சொல்லித்தருமாறு கேட்டேன்.

அவர் அதை கற்றுத்தர மறுத்து விட்டார். அதுக்காக நான் சோர்ந்து போகவில்லை.
எப்படியாவது பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றாக வேண்டும் என்கிற ஆர்வம்தான் ஏற்பட்டது. பல இடங்களில் அலைந்து திரிந்து பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓரளவு கற்றுக்கொண்டேன். காய்ச்சிய  பாலில் வினிகர் சேர்த்து பனீர் தயாரிக்கலாம் என்கிற அடிப்படை தகவலை தெரிந்து கொண்டேன்.
அதை உடனே நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கினேன். அப்பா வீட்டில் இல்லாதபோது அந்த வேலையை செய்தேன். காய்ச்சிய பால் 300 லிட்டரை பனீர் தயாரிக்க பயன்படுத்தினேன். பனீருக்கு எப்படி வடிவம் கொடுப்பது என்பது தெரியாமல் எனக்கு தெரிந்த அளவில் அதை தயாரித்து முடித்தேன்.
இதை வந்து பார்த்த அப்பா, '300 லிட்டர் பால் வீணாயிடும் போல் இருக்கு' என்றார்.

'இல்லை...இது முதல் முயற்சிதான் தொடர்ந்து செய்யும் அடுத்த முயற்சிகளில் ஜெயித்து காட்டுகிறேன்'  என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். சரி சரி என்று சொல்லிப்போனார். நானாக முயன்று தயாரித்த பனீரை, ஏற்கனவே அறிமுகமான பெங்களூரு ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பினேன். அதை வாங்கி விற்பனை செய்த ஹோட்டல்காரர்களும் சில ஆலோசனை சொன்னார்கள். அதையும் மேம்படுத்தி பனீர் தயாரித்து அனுப்பினேன். வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் டேஸ்ட் பிடித்துப்போனது. படிப்படியாக ஆர்டர்கள் வரத்தொடங்கின.

நிறைய ஆர்டர்கள் குவிந்ததால், எங்களின் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பால் போதாமல், வெளியில் இருந்தும் பால் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு மட்டுமே பனீர் சப்ளை பண்ணிவந்த நாங்கள், எல்லா மக்களுக்கும் பனீர் போய் சேரவேண்டும் என்கிற நோக்கில், சில்லரை விற்பனையிலும் கால் பதிக்க முடிவு செய்தோம்.


அப்படி சில்லரை வியாபாரத்தில் இறங்கும்போது,  அதுக்கு ஒரு 'பிராண்ட் நேம்' வைத்து மார்க்கெட் செய்தால், பிசினஸ் ஓஹோனு போகும் என எண்ணி, பால் சம்பந்தப்பட்ட பெயர் ஒன்றை தேடும் படலத்தில் இறங்கினேன். அப்படி கூகுளில் தேடும் பொழுது கிடைத்த பெயர்தான் 'மில்கி மிஸ்ட்'. அந்த பெயரே நன்றாக இருந்ததால் அதையே பிராண்ட் நேமாக வைத்து சில்லரை விற்பனையை தொடங்கினோம். சில வருடங்கள் கழித்து சில்லரை விற்பனையை விரிவுபடுத்தும் விதமாக, 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மெஷின் வைத்து, பனீர் தயாரிக்க ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரத்தில், ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரிடம் இது குறித்துபேசியபோது, 'விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால் விளம்பரம் கொடுப்பது அவசியம்' என்று 'ஐடியா' கொடுத்தார். அதே சமயம்,  ' நீங்க கடைக்கு கொடுக்கும் பனீர் எப்போதும் ஜில்லுனு ஃபிரஷா இருக்கவேண்டும். அதுக்கு முக்கியமான சில்லரை வியாபாரிகளுக்கு  மினி ஃபிரிட்ஜ் வாங்கி கொடுங்கள்' என்றும் மேல் ஆலோசனை சொன்னார்.

நண்பர் சொன்ன ஆலோசனைப்படி விளம்பரமும் கொடுத்தோம். மினி ஃபிரிட்ஜும் கொடுத்தோம்.
ஆனாலும், பனீர் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. காரணத்தை அறிய,  கடை கடையாய் போய் ஆய்வு செய்தோம். அப்படி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.
நாங்கள் கொடுத்த 'ஃபிரிட்ஜ்' அலமாரியில் பெரும்பகுதி இடத்தை வேறு உணவுப்பொருட்கள் அடைத்துக்கொண்டிருந்தன. மீதமுள்ள சிறிய இடத்தில் ஒரு மூலையில் மட்டும் எங்கள் தயாரிப்பான பனீர் வைக்கப்பட்டிருந்தது.

அப்படி செய்ய என்ன காரணம் என்று சில்லரை வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் எங்களை வேறு கோணத்தில் யோசிக்கவைத்தது.'பனீர்' என்பது அன்றாடம் தேவைப்படும் அத்யாவசிய உணவுப்பொருள்  கிடையாது. அதனால்தான் வேகமான விற்பனை நடக்கவில்லை என்றார்கள்.

சரி, அத்யாவசிய பால்பொருட்கள் என்ன என்பதை யோசித்தபோது, முதலில் வந்து நின்றது தயிர்.
மேம்படுத்தப்பட்ட தயிர்  விற்பனையில் இறங்க முடிவெடுத்தோம். அதன் மூலப்பொருளான பாலை,  பால் வியாபாரிகளிடம் லிட்டர் கணக்கில் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். ஆனால், கொஞ்ச நாளில் ஒன்றை புரிந்துகொண்டோம். பால் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் சுத்தமானதாக இல்லை. எனவே,  தயிர் உற்பத்தி செய்ய தேவையான பாலை, விவசாயிகளிடம் இருந்து  நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். அதற்கு எங்களுக்கு தோதான கிராமங்கள் தோறும் பால் கொள்முதல் மையங்களை திறந்தோம். கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்படவேண்டியது முக்கியம். அதற்கு என  ஐந்து பால்குளிரூட்டு நிலையங்களை தகுந்த இடங்களில் அமைத்தோம்.
தமிழ்நாடு முழுவதும் 35,000 கறவையாளர்கள் எங்கள் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்கள். தயிர் போக பால் பொருளான பட்டர் தயாரிப்பிலும் இறங்கினோம். அதைத்தொடர்ந்து 110 வகையான பால் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். வியாபாரம் சூடு பிடித்தது.
இப்படியான சூழலில் இன்னொரு சவாலையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சில்லரை விற்பனையாளர்களுக்கு வேன் மூலம் கொண்டுசெல்லப்படும் பால் பொருட்கள், விரைவில் கெட்டுப்போவதாக கவலை தெரிவித்தார்கள் வியாபாரிகள் பலரும்.

அதனால், மொத்த விற்பனையாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கொடுத்தோம். தயாரிக்கும் அதே தரமுடன் பால் பொருட்கள், சில்லரை வியாபாரிகளை சென்றடைய ஏதுவாக அது அமைந்தது. நாளுக்குநாள் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. எல்லாத்தொழிலிலும் புதுப்புது டெக்னாலஜி புகுத்தப்பட்டு வருகிறது. அதை உடனுக்கு உடன்  தொழிற்சாலைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாம் களத்தில் நிற்கமுடியும். தயாரிக்கும் உணவுப்பொருட்களை, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கமுடியும். அதே நேரம் தரம்தான் மிகமுக்கியம். அதை முதல் நோக்கமாக வைத்து செயல்படுவதால்தான் தொடர் வளர்ச்சியில் உள்ளோம்.
இன்றைய தேதியில் எங்கள் தொழிற்சாலையில் 450 பேர் வேலை பார்க்கிறார்கள். 2007-08ம் ஆண்டுகளில் 14 கோடியாக இருந்த எங்கள் பால் பொருட்கள் வர்த்தகம், இன்றைய தேதியில் 290 கோடிரூபாய் என்று உயர்ந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு தொழில் மேல் வைத்திருக்கும் நேசம்தான் காரணம். லாபம் வருகிறது என்பதால் வேறு தொழில்களில் இறங்கலாம் என்கிற எண்ணம் என்னிடம் துளியும் இல்லை. வெற்றிகரமாக செய்துவரும் இந்த தொழிலை, எப்படி மேம்படுத்துவது என்கிற யோசனைதான் எனக்கு உள்ளது.



மனிதனுக்கு கல்வி என்பது அவசியம்தான். அது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள பேருதவி புரிகிறது. அதற்கு மேலாக நாம் பெறும் அனுபவக் கல்விதான் நம்மை பக்குவப்படுத்தி  நம்மை மேம்படுத்துகிறது. குறைவான படிப்பு உள்ளவர்கள் முன்னேற முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனெனில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னிடம் இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். மொத்த சிந்தனையும் நாம் செய்கின்ற தொழில் மீது இருக்கவேண்டும். அதில் புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டும். அத்துடன் செய்யும் தொழிலில் ஈடுபாடும், பொறுமையும், மனம் தளராமையும் இருந்தால் நிச்சயம் சிகரங்களை தொடமுடியும். அதுக்கு நானே நல்லதோர்  உதாரணம்'' என்றார் பொங்கும் உற்சாகத்துடன்.


Thursday, 26 May 2016

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

‘‘பால்பண்ணை வைத்துள்ளோம். இந்த ஆண்டு அடிக்கும் கடுமையான வெயிலில் மாடுகள் ரொம்பவே களைத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’
ரா.ஞானதேசிகன், திருநெல்வேலி.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடற்செயலியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.ஈஸ்வரி பதில் சொல்கிறார்.


‘‘தட்பவெப்பப் பருவகால நிலையில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழ்நிலைகள் போன்றவற்றினால், கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதிகமான மூச்சிரைப்பு ஏற்படும். தீவனம் உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். இதனால் பால் உற்பத்தியும் குறையும். அனைத்து உடல் உறுப்புகளும் சோர்வடைந்து இனவிருத்தித் திறனிலும், கன்று ஈனும் திறனிலும் பாதிப்பு ஏற்படும். வேலைத்திறனும் குறைந்துபோய், அவற்றின் ரத்தத்தில், ‘கார்டிசால்’ எனும் ஹார்மோனின் அளவு அதிகமாகவும், தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தும், நோய் எதிர்ப்புத் திறனின் அளவிலும் குறைபாடு காணப்படும்.
கோடை காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, மனிதர்களுக்குத் தோலுக்கு அடியில் உள்ள வியர்வைச் சுரப்பியில், வியர்வை சுரந்து உடலின் வெப்பநிலையைக் குறைத்துவிடும். ஆனால், கால்நடைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அவை வாய் மூலமாகவும், சுவாசிப்பதன் மூலமாகவும் காதை அசைப்பதன் மூலமாகவும்தான் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். ஆகவே, மாடுகளுக்கு கோடை காலத்தில் நல்லவிதமாக கீற்றுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும். கொட்டகையின் அமைப்பு,  தெற்கு-வடக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான், காலை மற்றும் மாலை வேளைகளில் வெயில் கொட்டகைக்குள் வராது.
மதிய வேளைகளில் மாடுகளைக் குளிப்பாட்டலாம். இந்தச் சமயத்தில் மாடுகளுக்கு எந்நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தைக் குளுமையாக வைக்க, சுற்றிலும் மரங்களை வளர்க்கலாம். இதனால், குளுமையான காற்று பண்ணைக்குள் வீசும். வேம்பு, சூபாபுல், கிளரிசீடியா, அகத்தி, முருங்கை, வாகை, தென்னை, எலுமிச்சை ஆகிய மரங்களை வளர்க்கலாம். கோடை காலத்தில் அதிகமாக பசுந்தீவனம் கிடைக்காது. அந்தச் சமயத்தில், இந்த மரங்களின் இலைகளைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.’’
‘‘மரச்செக்கு மூலம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்க உள்ளோம். லாபகரமாகத் தொழிலை நடத்த ஆலோசனை சொல்லுங்கள்?’’
சிவசங்கர், ஈரோடு.
மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுத்து வரும் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரைச் சேர்ந்த சதீஷ் பதில் சொல்கிறார்.


‘‘தற்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.
காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.  மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
மரச்செக்கு எண்ணெய்க்கு நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன. முதலில், வாடகைக்கு எடுத்து மரச்செக்கு மூலம் எண்ணெயை ஆட்டி விற்பனை செய்யுங்கள். இதன் மூலம் அனுபவம் கிடைத்த பிறகு, சொந்தமாக அமைத்துக் கொள்ளலாம். விற்பனை வாய்ப்பு என்று பார்த்தால், இயற்கை அங்காடிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள்.... மரச் செக்கு எண்ணெயை விரும்பி வாங்கிக் கொள்கின்றன. சில ஹோட்டல்களில் மரச்செக்கு  எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அறிவிப்புப் பலகைகூட வைத்துள்ளார்கள்.’’
தொடர்புக்கு, செல்போன்: 94435-88224.
‘‘எங்களிடம் நிறைய பசு மாடுகள் உள்ளன. இதன் சிறுநீரைச் சேகரிப்பது சிரமமாக உள்ளது. இதற்கு எளிய வழிமுறைகள் இருந்தால், சொல்லுங்கள்?’’
சேலம் மாவட்டம் ‘சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி. ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.
‘‘பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும்,  கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம்.
சிறுநீரைப் பிடிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு, விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவக் குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், 3 நாட்களில் அதன் மூலம் மருந்து தயாரித்துவிட வேண்டும்.
வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் சிறுநீர் கொடுத்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.’’


தொடர்புக்கு, செல்போன்: 94432-29061


அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..!

மாடு மறுவருஷம்... ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொலவடை சொல்வார்கள். அதாவது, மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி... ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.


இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.  
வழிகாட்டிய கருத்தரங்கம்!
''விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன்.  ஆரம்பத்துல இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத்தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா 'பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன்.
அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்கற முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படிச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக்கிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார்.
செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி!
''ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள்கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை வாங்குறது, விக்கிறதுல இருக்குற நடைமுறை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எப்படி ஆடுகளைத் தேர்வு செய்றது, எந்த சமயத்துல ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்குங்கிறது மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.
இரண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை. நான் கிடாக்களை வாங்கி வளர்த்து வித்துட்டு இருக்கேன். இதுல கொஞ்சம் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம். ஒவ்வொரு முறையும் சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து வித்துட்டிருக்கேன். 25 சென்ட்ல சூபாபுல்,


20 சென்ட்ல வேலிமசால் பயிர் பண்ணியிருக்கேன். இதைத்தான் பசுந்தீவனமா கொடுத்துட்டு இருக்கேன். தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமா இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தான் அதிக கிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமா வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாத்தான் வளர்க்குறேன்' என்ற பரமசிவம் ஆடு வளர்ப்பு முறை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
கொட்டகையே போதும்!
''கிடாக்களை வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செல வில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.
புதிய ஆடுகள் கவனம்!
புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கெனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்து களைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக் கொட்டகையில் வைத்திக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.  
கொட்டகை சுத்தம் அவசியம்!
கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக் காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக
5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்
சுழற்சி முறையில் நல்ல லாபம்!


நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், ''30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். 'கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1,750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்கலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்'' என்ற பரமசிவத்துக்கு 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சிறந்த ஆடு வளர்ப்பு விவசாயி’ விருது கிடைத்திருக்கிறது.
''ஆடு வளர்ப்பு விருது வாங்க டெல்லி போய், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கையால வாங்கினேன். டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோபிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்'' என்று பெருமையோடு சொன்னார்.
தொடர்புக்கு, பரமசிவம், செல்போன்: 97879-82183.




Thursday, 12 May 2016

பாடில்லா மகசூல் கொடுக்கும் பாரம்பர்ய ரகம்! ஆத்தூர் கிச்சலி சம்பா... 2 ஏக்கர்... 140 நாட்கள்... 84,000 ரூபாய் லாபம்...

*150 நாள் வயது

*அனைத்து மண்ணிலும் வளரும்

*ஏக்கருக்கு 3 கிலோ விதை

*ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல்

*அரிசியாக விற்றால் கூடுதல் லாபம்

"பொ
றுமை இல்லாத விவசாயிகள்தான், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயனங்களை அள்ளிக் கொட்டுறாங்க. அப்படி கொட்டுனா முதல் அறுவடையில வேணா நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்து இப்படி செய்றப்போ, மண் மலடாகி மகசூல் குறைஞ்சுக்கிட்டேதான் போகும். ஆனா, இயற்கை விவசாயத்துல அப்படியில்லை. நாளாக நாளாக மகசூல் கூடத்தான் செய்யுமே ஒழிய குறையாது. அதோட, பாரம்பர்ய ரகங்களை விதைச்சா கண்டிப்பா லாபம் கிடைக்கும்” என் தேர்ந்த விவசாயியாகப் பேசுகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி. 

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், திருப்புலிவனம் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையங்குளம் கிராமத்தில்தான் மகாலட்சுமியின் தோட்டம் இருக்கிறது. ஏரிப்பாசனம் மூலம்தான் நெல் சாகுபடி நடக்கிறது. மகாலட்சுமி, பாரம்பர்ய ரகமான ஆத்தூர் கிச்சலி சம்பாவை இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயலில் இருந்த மகாலட்சுமியை சந்தித்துப் பேசினோம். 


பசுமை விகடன் கொடுத்த விவசாய ஆசை!


“இந்த ஊர் (மலையங்குளம்) என் கணவரோட சொந்த ஊர். என் மாமனார் காலத்துல விவசாயம்தான் பிரதானம். ஆனா, என் கணவர் சென்னைக்கு வேலைக்கு வந்துட்டதால விவசாயத்தை விட்டுட்டார். அதுக்காக அவர் அடிக்கடி வருத்தப்படுவார். நானும், துணி ஏற்றுமதித் தொழில்ல இருக்கேன். விவசாய ஆர்வத்தால ‘பசுமை விகடன்’ புத்தகத்தை ஆரம்பத்துல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கிறோம். அதைப்படிக்க ஆரம்பிச்சப்பறம் விவசாய ஆசை வந்துடுச்சு 9 வருஷத்துக்கு முன்னால, இங்க இந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். வாங்கி 5 வருஷமா அப்படியேதான் போட்டு வெச்சிருந்தோம். விவசாய ஆசை அதிகமாகவும் நாலு வருஷமா விவசாயத்தையும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இங்க எப்பவும் ஏரிப்பாசனம்தான். ஒருபோகம்தான் சாகுபடி பண்ண முடியும். வருஷத்துக்கு ஒரு போகம்னு இதுவரைக்கும் நாலு போகம் நெல் போட்டு எடுத்துட்டேன். முதல் வருஷம் விளைச்சல் சரியில்லை. அப்பறம் ‘பசுமை விகடன்’ மூலமா சாகுபடி நுட்பங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். ரெண்டாவது வருஷம், இரண்டு ஏக்கர்லயும் சேர்த்து 14 மூட்டை நெல் கிடைச்சது. மூணாவது வருஷம் 20 மூட்டை நெல் கிடைச்சது. இந்த வருஷம், எப்படியும் 30 மூட்டை வரும்னு பக்கத்துத் தோட்டத்து அனுபவ விவசாயிங்க சொல்றாங்க.
சாதிக்க வைத்த இயற்கை!

நான் இங்க வந்து ‘இயற்கை விவசாயம் செய்யப்போறேன்’னு சொன்னப்போ, பக்கத்துத் தோட்டத்துக்காரங்க  எல்லாரும் ஒரு மாதிரியா பார்த்தாங்க. ‘இந்த பொம்பளைக்கு என்ன பைத்தியமா... பட்டணத்துல சம்பாரிச்ச காசை வயல்ல வீணா இறைக்குது’னு என் காதுபடவே பேசினாங்க. அதனால, ‘இவங்க முன்னாடி சாதிச்சுக் காட்டணும்’னு வெறியா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். மூலிகைப் பூச்சி விரட்டியை மட்டும் அடிச்சா பத்தாதுனு கூட சொன்னாங்க. இப்போ, நான் எடுத்திருக்கிற மகசூலைப் பார்த்து 2 பேர் இயற்கை விவசாயத்துக்கே மாறியிருக்காங்க. இத்தனைக்கும் ஜீவாமிர்தம் தயாரிக்கிறதுக்கு மாடுங்க கூட என்கிட்ட இல்ல. பக்கத்துத் தோட்டத்துல இருந்துதான் சாணம், மாட்டுச் சிறுநீர் வாங்கி தயார் செய்றேன். இடுபொருட்கள் தயாரிக்க வாய்ப்பு குறைவு இருந்தாலும், நல்லபடியா விவசாயம் செய்துகிட்டிருக்கேன். இயற்கையை நம்பினா அது நம்ம கை விடாதுங்கிறது அனுபவ உண்மை” என்று பெருமிதத்துடன் சொன்ன மகாலட்சுமி, தொடர்ந்தார்.

“இப்போ, என் கணவர், என் பொண்ணு எல்லாருமே விவசாயத்துல ஆர்வமாகிட்டாங்க. போன வருஷத்துக்கு முந்தின வருஷம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்துல இருந்து ஆத்தூர் கிச்சலி சம்பா விதைநெல்லை வாங்கிட்டு வந்து விதைச்சேன். விளைஞ்ச நெல்லை அரிசியாக்கிட்டோம். எங்களோட வீட்டுத் தேவை போக கொஞ்சத்தை சொந்தக்காரங்களுக்கும் கொடுத்தோம். எல்லாருமே, ‘சுவை நல்லா இருக்குது’னு சொன்னாங்க. அதனாலதான், அடுத்த போகத்துலயும் அதையே விதைச்சேன். அதுல கிடைச்ச நெல்லை அரைச்சு அரிசியாக்கி கிலோ 70 ரூபாய்னு விற்பனை செய்தோம். இந்த போகத்துலயும் அதே ரகத்தைத்தான் விதைச்சிருக்கேன்” என்ற மகாலட்சுமி நிறைவாக, 

“இதை அறுவடை செஞ்சா உத்தேசமா 30 மூட்டை (80 கிலோ மூட்டை) கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 2 ஆயிரத்து 400 கிலோ நெல்லை அரைச்சா, 1,400 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசியை 70 ரூபாய்னு விற்பனை செய்தா... 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடை செய்றதுக்கும் சேர்த்து, 14 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா இந்த வருஷம் ரெண்டு ஏக்கர் நிலத்துல 84 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

மூலிகைப் பூச்சிவிரட்டி

நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை, தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. இதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஏழு நாட்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஓர் ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஓர் ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சலி சம்பா ரக நெல்லை சாகுபடி செய்யும் விதம் குறித்து, மகாலட்சுமி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கருக்கு 10 சென்டில் நாற்றங்கால்!

“ஆத்தூர் கிச்சலி சம்பா ரக நெல்லின் வயது 135 முதல் 150 நாட்கள். இது கதிர் முற்றிய நிலையில் காற்றடித்தால் கூட சாயாத உறுதித் தன்மையைக் கொண்டது. அனைத்து மண்வகைகளும் இந்த ரகத்துக்கு ஏற்றவை. ஓர் ஏக்கர் பரப்பில் விதைக்க, 10 சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். பாத்தி முழுவதும் விழுமாறு ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து தூவி விட வேண்டும். 3 கிலோ விதைநெல்லுடன் அரை கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து மூன்று நாட்கள் வைத்திருந்து... அதை நாற்றங்காலில் தூவி தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 3-ம் நாளில் இருந்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தொடர்ந்து தெளிக்க வேண்டும். 
22-ம் நாளுக்கு மேல் எடுத்து வயலில் நடவு செய்யலாம். 

நாற்று தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்து விட வேண்டும். தேர்வு செய்த ஓர் ஏக்கர் நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, ஒரு டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்ப வேண்டும். பிறகு, நிலத்தை சேறாக்கி 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 

நாற்று நடவு செய்த 10, 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 30-ம் நாளில் எஞ்சியுள்ள களைகளை ஆட்கள் மூலம் அகற்றி விட்டு... இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகவும் கொடுக்கலாம். நெற்கதிர், பால் பிடிக்கும் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 135-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். முற்றிய பிறகு, நிலத்தைக் காயவிட்டு அறுவடை செய்யலாம்.”


தொடர்புக்கு,
மகாலட்சுமி,
செல்போன்: 98414-42193.




Wednesday, 11 May 2016

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

குறைந்த இடவசதியே போதும்.  ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ.  மாதம்ரூ.10 ஆயிரம் வருமானம். 

''
விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில்ஆனாலும்அதுல தொடர் நஷ்டம்ஏற்படவேவிவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன்அதுக்குப் பிறகு,ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துலகால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன்இதுக்கெல்லாம் காரணம்...பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும்வழிகாட்டுதலும்தைரியமும்தான்'' என்றுநெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம்சாணார்பட்டி அருகேயுள்ளகன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி. 

நண்பர் மோகன்தாஸோடுதோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக்காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும்துபாய்லடிரைவர் வேலைக்குப் போயிட்டேன்இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாயஅனுபவத்தையும்அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல.துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்படிக்கறதுக்குவாய்ப்பு கிடைச்சுதுஅதைப் படிக்கபடிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி.திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டுவிவசாயத்துலயே மறுபடியும்இறங்கிட்டேன். 
இணைந்த கைகள்! 
என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துலஅரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்துகத்திரிக்காய் போட்டேன்காரல் இல்லாதபசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால,மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசுகொண்டு போனதுமேமொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுதுஅதைத்தொடர்ந்துவிவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன். 
ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ்அடிக்கடி என்தோட்டத்துக்கு வருவார்அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம்அதிகம்அவரும் 'பசுமை விகடன்இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார்அதுலஇருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம்அதையெல்லாம்வெச்சுமேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம்ஒரு தடவைகாளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துதுஅதிக முதலீடு இல்லாமகுறைஞ்சஇடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமாபோச்சுஅந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம். 
காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டுவந்தோம்எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவுசெஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம்முதல்ல என்னோட தோட்டத்துலசின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம்அக்கம்பக்கத்துலஇருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னுரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்' என்று ராமசாமி குஷியோடு சொல்லிநிறுத்தினார். 
கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமாநம்மளாலகாளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கைவந்துச்சுஉடனே வேலையை விட்டுட்டுநானும் ராமசாமியோட கைகோத்தேன்எங்கவீடு இருக்கறது திண்டுக்கல்உழவர் சந்தைக்கு பின்னாலதான்வீட்டுக்கு முன்னகொஞ்சம் காலி இடம் உண்டுஅதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்கஆரம்பிச்சோம்அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம்.இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம்அப்படியிருந்தும்கூட சப்ளை செய்யமுடியலஅந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார். 
அடுத்துநண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்தஅதற்குசெவிமடுத்தோம்... 
குளுகுளுனு இருக்கணும் குடிசை! 

'
சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னைஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும்தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம்அமைத்துஅதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும்.இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடுதண்ணீரும் குறைவாகச்செலவாகும்குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும்காற்றின்ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்கவேண்டும்இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்நூல்சாக்குகளை கட்டித் தொங்கவிட்டுஅதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்லபலன் தரும்காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம்அது இல்லாவிட்டால்,அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சிபாதிக்கப்படும். 

200 
கிராம் விதை...3 கிலோ வைக்கோல்! 
அறை தயாரானதும்காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும்அதற்கு முன்பாக,காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை)வாங்கவேண்டும்காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்கவேண்டும்இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள்கடைகளில் கிடைக்கின்றனஒரு சுற்று வைக்கோல்அதற்கு மேல் காளான் விதை,மறுபடியும் வைக்கோல்மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப்படுகைகளாகத் தயாரிக்க வேண்டும்ஒரு படுகை தயாரிக்க, 

200 
கிராம் விதைப்புட்டிமூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும்மேலேசொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம்அதாவது ஒருகுடிசையில்அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாதுதினமும்பத்துபத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும்அப்போதுதான் சுழற்சி முறையில்தினமும் காளான் மகசூல் கிடைக்கும். 

25 
நாளில் அறுவடை! 
படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போடவேண்டும்ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது.படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும்ஒரு கயிற்றில் நான்கு படுகைதொங்கவிடலாம்பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும்அதுபரவியதும்படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும்மேல்பக்கம் நனையும்படிதினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும்.அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சிஅடைந்துவிடும்இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். 

முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும்ஒரு அறுவடை முடிந்த பிறகு,தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால்அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடைசெய்யலாம்இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவைஅறுவடை செய்யலாம்ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான்இந்த 60நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும்ஒருபடுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும்.கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும்பெரிய அளவில் இடவசதிஇல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம்கணக்குப் போட்டுப் பார்த்தால்ஒருகுடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். 
நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலைஅதிகமாயிருக்குறதாலகாளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு.முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்குநகரம்கிராமம்னு கணக்கில்லாம எங்கயும்காளான் பண்ணை ஆரம்பிக்கலாம்அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னுஇருக்கோம்அதோடஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டுஇருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம்அடுத்ததா பால்மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சிநேரடியா மக்கள்கிட்ட விற்பனைபண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள், 
தொடர்புக்கு : ராமசாமி: 96882-16058, 
மோகன்தாஸ்: 97889-44907 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் “காளான் வளர்ப்பு” பற்றிய ஒரு நாள் பயிற்சி டிசம்பர் மாதம் 15ம்நாள் (புதன் கிழமை) 15.12.2010 அன்று நடைபெறவுள்ளது.இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர்,மாணவர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு,கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu 0Agricultural 0University,

New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, 0Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.


Training Programme on “Mushroom Cultivation”