Monetize Your Website or Blog

Thursday, 18 August 2016

சென்னை மழை சேதம்: தமிழகத்திற்கு உடனே நிதியளிக்க மத்திய அரசுக்கு நிலைக்குழு வலியுறுத்தல்!

டந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசு கோரிய நிதியை உடனே தாமதமின்றி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.    




கடந்த ஆண்டு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல நாட்கள் கனமழை கொட்டியது.இதனால் சென்னையின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு 12ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.இந்நிலையில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்) தாக்கல் செய்யப்பட்டது.
 
பி.பட்டாச்சாரியா எம்.பி. தலைமையில் சுப்பிரமணியசாமி, டாக்டர் வி.மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 10 மாநிலங்களவை எம்.பி.க்களும், பி.நாகராஜன் உள்ளிட்ட 21 எம்.பி.க்களும் இந்த நிலைக்குழுவில் இடம்பெற்று உள்ளனர். இந்தக்  குழு தாக்கல் செய்த அறிக்கையில்,


 
" சென்னையில் கடந்த ஆண்டின் இறுதியில் பெருவெள்ளம் எதிர்பாராது பெய்த வடகிழக்கு பருவ மழையால்  ஏற்பட்டது ஆகும். இந்த வெள்ளம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரையோர பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
 
சேதம் குறித்து, தமிழக அரசு அளித்த தகவலின் அடிப்படையில் 470 பேர் வெள்ள பாதிப்பால் இறந்துள்ளனர். 12 ஆயிரம் கால்நடைகள் காணாமல் போயின. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம் பெயர்ந்தனர். 5 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. இது தவிர பொது சொத்துகளுக்கும்  பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. சுமார் 3.83 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்தன.
 
விடாது கொட்டிய கனமழையால், நீர்நிலைகளின் கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டது.ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் வடிகால்களில் உண்டான அடைப்புகள் ஆகியவை சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு காரணமாக அமைந்தன. இதனால் பல இடங்களில் மக்கள் வசிப்பிடங்கள் துண்டிக்கப்பட்டு தீவுகள் போல இருந்தன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட நேர்ந்தது.  
 
நவம்பரில் பெய்த பெருமழையைத்  தொடர்ந்து டிசம்பரில் பெய்த கனமழை நிலைமையை மேலும் மோசமாக்கியது. சென்னை நகரின் நீர் வடிகால் முறையும் வெள்ளத்துக்குப் பிரதான காரணமாகவும்  அமைந்தது. கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகிய சிற்றாறுகளின் நீர்ப்  படுகை மிகவும் சிறியவை. நீளம் மிகவும் குறைந்த இந்த சிற்றாறுகள் வெறும் சில நூறு கன அடி தண்ணீரை மட்டுமே வெளியேற்றும் வகையில் உள்ளன. பெருவெள்ளத்தால் இந்த சிற்றாறுகள் மூலம் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. இது மிகப்பெரிய பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.
 
சென்னை நகரின் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடையாறு கரையோரத்தில் 839 மீட்டர் பரப்பளவில் 4,046 வீடுகள் சட்டவிரோதமாகக்  கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
எனவே சென்னையில் நீர்நிலைகளை யாரும் ஆக்கிரமிக்காத வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக்  கழிவுநீர் வடிகால்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத்  தவிர்க்கலாம். மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பேரிடர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற பேரிடர்கள் நிகழும்போது வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நிலையை உருவாக்க வேண்டும்.
 
பெருவெள்ளத்தால் தமிழகத்துக்கு பெருமளவில், பலவகையிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் மாநில அரசு கூறியபடி, வேண்டிய நிதி உதவியை தாமதம் இன்றி விரைவில் வழங்க இந்தக்  குழு பரிந்துரை செய்கிறது. 
 
மேலும் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment