சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாறு போன்ற முக்கிய ஆறுகளை ஆக்கிரமித்து அதிகமான கட்டிடங்கள் கட்டப்பட்டதாலும் சென்னை, வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளத்தில் முடிச்சூர், மணிமங்கலம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா சாலை, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அரசு கண்டுகொள்ளாத பாதிக்கப்பட்ட மக்களில் அதிகமானோர் சாலை ஓரங்களில் குடியேறினர்.
இதையடுத்து, அரசு தரப்பில் வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் குடிசைகளை அமைத்து குடியேறினர்.
இதற்கிடையே, வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கணக்கெடுத்து, கரையோர மக்களை காலி செய்ய அறிவிப்பு விடுத்து இருந்தனர். இது நடந்து முடிந்து 75 நாட்களுக்கு பின்னர் நேற்று (16.02.2016) சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்திற்கு கீழே ஆற்றில் இருந்த வீடுகளை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இது குறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ''அரசு எங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தந்துள்ளது உண்மைதான். சிலருக்கு நான்கிற்கு மேற்பட்ட வீடுகளை ஒதுக்கியுள்ளனர். இதனால் அதிகமான மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில்லை. இத்தனை காலமாக நாங்கள் வாழ்ந்த இடத்தை காலிசெய்ய வைக்கிறார்கள்.
எங்களால் மட்டுமா வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பெரிய அரசியல்வாதிகள், பணபலம் மிக்கவர்கள் இவர்களின் கட்டிடங்களும் ஆற்றில்தான் உள்ளது. இதனை அகற்ற தைரியமில்லாதவர்கள் எங்களை மட்டும் ஏனோ காலிசெய்ய சொல்கிறார்கள். வீடுகள்கூட முறையாக வழங்கப்படவில்லை" என்றனர் சோகத்துடன்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் இது குறித்து பேசினோம், ''கடந்த முறை பெய்த மழையின்போது சைதாப்பேட்டை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. அப்போதே நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவித்துவிட்டோம்.
இங்கே உள்ள 1,176 குடும்பங்களுக்கு வீடுகள் பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களில் பெரும்பாலோனோர் நான்கிற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை வைத்துருக்கிறார்கள். சிலர் காலி செய்கிறார்கள், பெரும்பாலோனோர் காலிசெய்ய மறுக்கிறார்கள். அதனால்தான் காவல்துறையின் உதவி மூலம் ஆக்கிரமிப்பை எடுத்து வருகிறோம்.
மொத்தமாக 225 மீட்டர் அகலம் இருந்த அடையாறு ஆறு, இப்போது 45 மீட்டராக உள்ளது. சைதாப்பேட்டை அடையாற்றிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் 225 மீட்டராக அகலப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.
அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவீர்களா?, ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காட்டும் முனைப்பு, மக்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் காட்டுவீர்களா? என்ற மக்களின் கேள்விகளுக்கு பொதுப்பணித்துறையிடம் பதில் இல்லை.
அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவீர்களா?, ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காட்டும் முனைப்பு, மக்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் காட்டுவீர்களா? என்ற மக்களின் கேள்விகளுக்கு பொதுப்பணித்துறையிடம் பதில் இல்லை.
சாமானியர்களின் ஆதங்க குரலுக்கு அரசு செவி சாய்க்குமா?
No comments:
Post a Comment