2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான தேர்வுதான் நேற்று முடிந்த U19 உலகக் கோப்பை என்று கூறலாம். பந்துகளை சிக்சருக்கு விரட்டும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேன், புயல் வேகத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர், தெறிக்க விடும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என துருப்புசீட்டுகளை கண்டுபிடித்து தந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், U19 பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்.
பெரிய பேட்டிங் வரிசை...விளம்பரத்தில் வரும் வீரர்கள்... இப்படியெல்லாம் இல்லாமல், வழி நடத்தும் பயிற்சியாளர் மட்டுமே பிரபலமானவர் என்ற தகுதியுடன் களமிறங்கியது U 19 அணி. இறுதிப் போட்டி தவிர, அனைத்து போட்டிகளையும் வென்று கெத்தான அணியாக முன்னேறியது இந்தியா மட்டுமே.
பயிற்சி ஆட்டத்தில் 485 ரன்களை குவித்து உலக சாதனை படைத்ததும் இந்திய அணிதான்.
பேட்டிங், ஃ பீல்டிங், பெளலிங் என மூன்று பிரிவுகளிலும் சரிசமமான பங்களிப்பை அளித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஸ்டார் பிளேயர்களை மட்டும் நம்பாமல், அனைத்து வீரர்களாலும் அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது இந்தியா. ட்ராவிட்டின் கோச்சிங்கும் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - உலகக் கோப்பையில் ஆடிய ஆறு போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் என கெத்தான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 104. இவரைதான் இந்திய அணிக்கு தயாராகும் அடுத்த விராட் கோலி என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
சர்ஃபராஸ் கான் அனைவருக்கும் தெரிந்த முகம், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியில் அனைவரையும் கவர்ந்த ஸ்கூல் பாய். இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில், 5 அரை சதங்களுடன் இந்திய அணியின் லீடிங் ரன் ஸ்கோரர், ஒருவேளை இந்தியா கோப்பையை வென்றிருந்தால் இவர்தான் ஆட்டநாயகன். மிடில் ஆர்டரில் இப்படி கில்லியான ஒரு வீரரைதான் இந்தியாவும் தேடி வருகிறது.
இந்திய அணிக்கு எப்போதாவதுதான் ஒரு வெங்கடேஷ் பிராசத்தும், ஒரு ஜாகிர் கானும் கிடைப்பார்கள் என்பது எழுதப்படாத வரலாறு. அதேபோல்தான் அவேஷ் கான். இவர் துல்லியமாகவும், சிறப்பான வேகத்திலும் பந்துவீசி எதிரணியினரை கலங்கடிகிறார். மேலும் இறுதி ஓவர்களில் சிறப்பாக ஆடும் இவரை மெருகேற்றினால் இன்னொரு ஜாகிர் கான் ரெடி.
வாஷிங்டன் சுந்தர், அன்மோல் ப்ரீத் சிங் என ஆல்ரவுண்டர்களும், லோமர், அன்சாரி போன்ற வீரர்களையும் தந்திருக்கிறது U19 உலகக் கோப்பை. இவரைகளை எல்லாம் தேர்வுக்குழு மனதில் கொண்டு வாய்ப்பளிக்க வேண்டும் . இவர்களும் வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலியாக மாற வேண்டும். இந்தியாவுக்கு U19 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன்களில் ஒருவரான கோலி, இன்று டெஸ்ட் கேப்டன். இன்னொருவரான உன்முக்த் சந்த் வெறும் ரஞ்சி ப்ளேயராக உள்ளார். தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் உள்ளது.
ட்ராவிட் இந்திய அணிக்கு நல்ல தயாரிப்புகளை வழங்கியுள்ளார். பயன்படுத்தினால் 2019 உலகக் கோப்பையின் வின்னிங் ஷாட்டை ஒரு சர்ஃபராஸ்கானோ, ரிஷப்போ அடிக்கலாம். இறுதி விக்கெட்டை அவேஷ் கான் வீழ்த்தலாம்.
No comments:
Post a Comment