Monetize Your Website or Blog

Monday, 15 February 2016

விசாரணை' படம் பற்றி போலீஸ் என்ன நினைக்கிறது? - நிஜ என்கவுன்டர் பின்னணி!

காவல்துறையின் அதிகார மீறல், என்கவுன்ட்டர் பலிகளின் பின்னணி பற்றி பேசி,  பரபர கவனமும் அங்கீகாரமும் குவித்த ‘விசாரணை’ படம் பற்றி காவல்துறையின் கருத்து என்ன?
நிஜ என்கவுண்டர்கள் இப்படித்தான் நடைபெறுகிறதா? போலீஸ் லாஜிக்குடன் சினிமா லாஜிக் செட் ஆகியிருக்கிறதா? - என்கவுன்டர் குழுக்களில் இடம் பெறும் சில அதிகாரிகளிடம் பேசினோம்... 
’’எல்லாரும் ‘விசாரணை’ உண்மைக்கு அருகே இருக்கிறது. என்கவுன்ட்டர் காட்சிகள் தத்ரூபமாக இருக்கிறது’ என்று சிலாகிக்கிறார்கள். ஆனால், அது எல்லாமே அபத்தம்!’’ என்று சொல்லி வைத்தது போலச் சிரிக்கிறார்கள். 

’’ஒருவரை 'முடிக்க'ச் சொல்லி உத்தரவு வந்துவிட்டால், இவ்வளவு சின்ன பிள்ளைத்தனமாக நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்! படத்தில் வருவதுபோல வாழை மட்டையில் அடிக்கவே மாட்டோம். மொழு, மொழுனு எண்ணெய் போட்டு சைனிங்காக இருக்கும் சவுக்குக் கட்டை அல்லது கனமான பிரம்புதான் பயன்படுத்துவோம்.  மேலே பத்து சுத்துக்கு தண்ணில நனைச்ச காட்டன் துணி சுத்தி வைச்சுட்டு அதுலதான் அடிப்போம். எவ்ளோ அடிச்சாலும் வலியே தெரியாது. மொத்து மொத்துனு சத்தம் லேசாதான் கேட்கும். அரை மணி நேரத்துக்கு வெளுத்துட்டு விட்ருவோம். அப்புறம் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தா, எலும்புங்க மாவாகி இருக்கும். ஆனா, எல்லாமே உள்குத்து, ஊமைக் குத்து காயம்தான். சின்ன புண்ணு கூட வெளிய தெரியாது. இல்லேன்னா, படத்துல காட்டுறது மாதிரி அவன் போய் கோர்ட்டுல சட்டையைக் கழட்டி காமிச்சா, சீன் ஆகிரும்!
அப்புறம்... என்கவுண்டர்லாம்.... நிஜத்துல அப்படி நடக்கவே நடக்காது. அக்யூஸ்ட்டை ஃபிக்ஸ் பண்ணும் போதே 'இது அறுக்குற கோழியா இல்லையா'னு மேல இருந்து தகவல் வந்திரும். அப்போ  ஹேண்ட்-கஃப் (கை விலங்கு) போட்டு, வாய்ல துணி வைச்சு அடைச்சு, கை-கால்களை கட்டிதான் ’ஆபரேஷன்' செய்வோம். அதுவும் சைலன்சர் இருக்கிற பிஸ்டல்தான் பயன்படுத்துவோம். ஏன்னா, 20 வருசத்துக்கு முன்னாடி ஒரு சம்பவமாச்சு. சென்னைல ஒரு பிரபல ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு தாதாவை போட்டோம். பொது இடத்துல நடந்த ஓப்பன் ஃபயரிங் அது.  அப்போ  எதார்த்தமா கல்யாண நோட்டீசை எடுத்துக்கிட்டு சைக்கிள்ல வந்த ஒரு அப்பாவி பப்ளிக் மேல மிஸ்-ஃபயர் ஆகி கபிலனோடு இறந்துட்டார். இதுல என்ன ரொம்ப வருத்தம்ன்னா, கல்யாண மாப்பிள்ளையே அவர்தான். அதுக்குப் பிறகுதான் ஓப்பனில் 'செய்வதை'யே விட்டுட்டோம். கொஞ்சம் அசந்தாலும் சிக்கல் ஆகிடுது. 

என்னதான் சைலன்ஸர் பிஸ்டல் வைச்சு சுட்டாலும், என்கவுன்டர் முடிஞ்சதுமே ஊர்ல இருக்குற பாதி பேரு இப்படிப் பேசுவாங்க... ’திடீர்னு ’டமால்’னு சுடுற சத்தம் கேட்டுது. நாங்கள்லாம் ஓடிப்போய் கதவை மூடிக்கிட்டோம். ஜன்னல் ஓட்டை வழியா வெளியே பார்த்தப்போ அங்கே போலீசை துப்பாக்கி காட்டி ரெண்டு பேர் மிரட்டிட்டு இருந்தாங்க...!' இந்த ’டாக்’ கிளப்ப நாங்களே ஆள் செட் பண்ணியிருப்போம். அவர் அங்கங்கே அதைச் சொல்ல, அது அப்படியே பரவிரும்.   
சமீபத்துல அஞ்சு வட இந்திய வாலிபர்கள் கேஸ்ல நடந்த மாதிரி படத்துல காட்ட  ஒரு ஏரியா, ஒரு வீடுனு செட்டப் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. நீங்க உத்துக் கவனிச்சா தெரியும்...சென்னைல செத்துப் போனதில் ஒரு வளர்த்தியான பையன்,  சாகும்போது போட்டிருந்தது ரோஸ் கலர்  சட்டை. பாங்க் ராபரி குற்றவாளிகள்னு நாங்க ஃபிக்ஸ் பண்ணி, அதுக்கு நாலு நாளைக்கு முன்னால கொடுத்த போட்டோவுல அதே நிறத்துலதான் சட்டை போட்டிருப்பான். ஸ்கெட்ச் போடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நாங்க அவ்வளவு தெளிவா பிளான் பண்ணிருவோம்.

ஒரு ஆபரேசனை முடிக்கும் கடைசி நிமிஷம் வரை வேட்பாளர் லிஸ்ட் மாதிரி என்கவுன்ட்டர் நபர் பேரை ரொம்ப ரகசியமா வைச்சிருப்போம். ஸ்பாட் இதான்னு சொல்லவே மாட்டோம். எங்களுக்கும் அது பெரும்பாலான நேரங்களில் கடைசி நிமிசம்தான் தெரியவரும்.

பல கொலை, ரேப் பண்ண கிரிமினலை கூட ’அக்யூஸ்ட்’னு சொல்லாம, "நம்ம தம்பி இவரு... ஊர்ல இருந்து வந்திருக்காரு"னு  மட்டும் சொல்லி வைப்போம். அப்புறம் ஸ்பாட்ல எல்லாமே தன்னால நடக்கும். தனக்கு என்ன நடக்குதுனு தெரிஞ்சாலும், அதைப் பத்தி எதுவும் சொல்லக் கூட முடியாமலே இறந்துருவாங்க பலர். ஆனா, பொதுவா சமூகத்தில் ரொம்ப கொடூரமானவர்களை மட்டும்தான் எங்க துப்பாக்கி குறி வைக்கும். அதையெல்லாம் என்கவுன்ட்டர்னு சொல்ல முடியாது. ஒரு புண்ணுக்கு மருந்து போடுற மாதிரிதான் அது!’’ என்று இறுதியில் தங்கள் செயல்களுக்கு வக்காலத்து வாங்கி முடித்துக் கொண்டார்கள்.

ஹ்ம்ம்..! 


No comments:

Post a Comment