Monetize Your Website or Blog

Wednesday, 10 February 2016

அழகிரி இல்லாதது தேர்தலை பாதிக்குமா? துரைமுருகன் பதில்!

ட்சி பொதுக்கூட்டமோ, சட்டமன்றமோ மட்டுமல்ல, துரைமுருகன் கொடுக்கும் பேட்டியிலும் கிண்டல் கேலிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியும் அப்படி ஒரு பேட்டிதான்.
துரைமுருகனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...

வரும் சட்டமன்ற தேர்தலில் யாரோடு தி.மு.க கூட்டணி அமைக்கும்?


யாரோடு கூட்டணி என உங்களிடம் (செய்தியாளர்கள்) சொல்லமுடியாது. நான் இவரோடு என சொல்வேன். நீங்க உடனே அவர்கிட்ட போய், அவரோட நீங்க சேரப்போறீங்கனு துரைமுருகன் சொன்னாருனு கேப்பீங்க. வர்ற கூட்டணியை க்ளோஸ் பண்ணீடுவீங்க. அதனால அதெல்லாம் சொல்ல முடியாது. கூட்டணி என்பது உருவாகிறது. யாரோடு என்பதை சொல்ல முடியாது. அது ஒரு வடிவத்துக்கு வந்து விட்டது என்பதை மட்டும் சொல்ல முடியும்.

கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்க தயங்குகிறீர்களே?

அதான் நான் சொல்லிட்டனே. பத்திரிகைகள் மூலமாக ஒரு கூட்டணி அமைவது குறித்து முடிவு செய்தால் அந்த கூட்டணி உருப்படாது. கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் தேர்தல் ராஜதந்திரங்கள். கூட்டணி அமைவதில் ரொம்ப பெரிய டிப்ளமசி எல்லாம் கையாள வேண்டி இருக்கிறது. அதனால இவர்கள் இருப்பார்கள். அவர்கள் இருப்பார்கள்னு எல்லாம் சொல்ல முடியாது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

தேர்தல் அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கிறது. அது ரகசியம். அதையும் இப்போது சொல்ல முடியாது. 

அழகிரி இல்லாதது தேர்தலை பாதிக்குமா?

அழகிரி இயக்கத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பல மாதமாகி விட்டது. இப்போது எங்களுக்கு இழப்பா இழப்பில்லையா என்றால் எப்படி? உங்களின் கேள்வியே தவறு. அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைப்பற்றி ஏன் கேட்கிறீர்கள். கட்சியில் இல்லாத அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் எப்படி?

இப்போது உள்ள அமைச்சர்கள் எல்லோருக்கும் திறமை இல்லை என நான் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு அமைச்சர்களும் பதிலளிக்கும் போது அதை நான் கூர்ந்து கவனிப்பேன். சிலர் உள்ளபடியே சொல்ல வேண்டும் என நினைத்தாலும், அதை விரிவாக சொல்லக்கூட உரிமை இல்லாத நிலை உள்ளாது. பலமான வாய்ப்பூட்டு அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. குனிந்து நிமிரக்கூட உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் பாவம். அவர்களை பற்றி என்ன சொல்வது?

சட்டசபை எப்படி நடக்கிறது?

நான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் சட்டசபையில் பங்கு பெற்றிருக்கிறேன். இப்போதைய சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு அடுத்து சீனியர் மோஸ்ட் மெம்பர் என்ற முறையில் சபையில் நான் இருக்கிறேன். நான் பார்த்தவரையில் பேச்சுரிமையே இல்லாத சட்டசபை இதுதான். விளக்கத்தை கேட்க கூட விடமாட்டார்கள். ஏதாவது ஒன்று பேசினால் குறுக்கீடு என வர்ணனையோடு ஆரம்பித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு உறுப்பினர் பேச்சுக்கு குறுக்கிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், 1.10 மணி நேரம் பேசினார். இது தான் குறுக்கீடா? எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச விடாமல் தடுப்பதில் கவனமாக இருக்கிறார்கள் அமைச்சர்கள். கூச்சல் போட்டு அடக்கபார்க்கிறார்கள். அதையும் மீறி பேசினால் வெளியேற்றப்படுகிறோம். அவர்களை அடக்கி எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சபாநாயகர், முழுக்க முழுக்க அ.தி.மு.க.காரராகவே செயல்படுகிறார். எனது அனுபவத்தில் இப்படி முழுக்க முழுக்க அ.தி.மு.க.காரனாக இருந்த சபாநாயகரை நான் பார்த்ததில்லை. சட்டத்தை கொஞ்சம் கூட பின்பாற்றாத சபை.

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் செயல்பாடு?

முதலமைச்சர் சட்டசபைக்குள்ளேயே வருவது கிடையாது. சட்டமன்றத்தில் முதல் இரண்டு கேள்வி முதல்வருக்கு இருக்கும். ஆனால், அந்த கேள்விக்கு பதில் கிடையாது. அமைச்சர்கள் எதைக்கேட்டாலும் அம்மாவை கேட்க வேண்டும் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். எந்த கேள்விக்கும் பதில் கிடையாது. கேள்வி நேரத்தில் இந்த அம்மா (ஜெயலலிதா) வருவது கிடையாது. எல்லாவற்றையும் 110-ல் படிக்கிறார்கள்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மை இடங்களை சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும். தனித்தே ஆட்சியமைக்கும்.


ஆனால் கோஷ்டி பூசலில் தி.மு.க சிக்கித் தவிக்கிறதே?

பெரிய பிளவை ஏற்படுத்தும் எந்த கோஷ்டியும் இல்லை. நான் ஓப்பனா சொல்றேன். கோஷ்டி பூசல் எதுவும் இல்லை. நான் ஏதோ கட்சிக்காக சொல்லவில்லை. கட்சியினரிடையே கொஞ்சம் போட்டி இருந்தால் தான் கட்சி உயிர்ப்போடு இருப்பது தெரியும். ஆனால், பிளவு ஏற்படும் வகையிலோ, பாதிப்பு ஏற்படும் வகையிலோ கோஷ்டி பூசல் இல்லை.

கட்சி தொண்டர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?

வருகிற தேர்தலில் வெற்றி பளிச்சிடுகிறது. எனவே அயராமல், எந்தவித மனமாச்சரியத்துக்கும் ஆட்படாமல் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும். கழகம் ஆட்சியமைக்க வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக அமர வேண்டும் என பஞ்சாக முடித்தார் துரைமுருகன்.


No comments:

Post a Comment