Monetize Your Website or Blog

Thursday, 11 February 2016

'பட்டனை தட்டுங்களேன் மேடம்!'- ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளின் குரல்!

வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது' என்ற வார்த்தை,  இந்திய அளவில் தமிழகத்தின் நிலையை ஒப்பீடு செய்து பார்த்துக் கூறப்பட்ட வார்த்தை. தமிழக அளவில்,  அதுவும் தலைநகர் என்ற அளவில் பார்க்கும் போது,  "வீணாய்ப் போன வடசென்னை" என்ற வார்த்தைதான் மிஞ்சுகிறது. 
பட்டினத்தார், வியாச முனிவர், வள்ளலார், காரைக் காலம்மையார், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்ளிட்டோர் ஆன்மிகப் பணியை மேற்கொண்ட பூமி மட்டுமல்ல, சைவ சிந்தாந்தப் பொக்கிஷங்கள் தோன்றியதும் வடசென்னையில்தான் என்பது வரலாறு.
இன்று அந்த வடசென்னையின் நிலை என்ன? அதிக அளவில் புழுதி, ரசாயனக் கலவை, நூற்றுக்கணக்கிலான தொழிற்சாலைகள் என்று சத்தமே இல்லாமல் தொழிற்பேட்டையாக மாறிப்போக, பூர்வகுடி மக்கள் வசிக்கும் தகுதியற்ற பூமியாக மாறி விட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கண்மாய்கள், ஆயிரக்கணக்கான குளங்கள் தொழிற்சாலைகளாகி விட்டிருக்கின்றன. அத்தனை சோதனைகளையும் கடந்து "ஊர்ப்பாசம்" கொண்டு வாழ்கிற சில லட்சம் பேர்கள்,  தங்களின் அடிப்படைத் தேவைகளை போராடித்தான் பெற்று வருகின்றனர். இன்னமும் பெரும்பாலான வீடுகளில் குடிநீருக்குப் பதில் கழிவு நீரும், கம்பெனிகளில் வெளியேறும் ஆயிலும்தான் வருகிறது.

தங்கசாலை (பார்த்தசாரதி) மேம்பாலம், ஐ.ஓ.சி. மேம்பாலம், எண்ணூர் மேம்பாலம், ராயபுரம் மேம்பாலம், ஸ்டான்லி சுரங்க பாலம், வியாசர்பாடி மற்றும் மூலக்கடை மேம்பாலம் (கட்டி முடிக்கப்பட்டும் நீண்ட காத்திருப்பில் இருந்த இவைகள் அண்மைய பெருமழையின் போது திறக்கப்பட்டவைகள்), எம்.கே.பி.நகர் மேம்பாலம் போன்ற அனைத்து மேம்பாலங்களின் திறப்பு பின்னணியில் பெரும் போராட்ட வரலாறே இருக்கிறது. இங்கே போராடாமல் எந்த வசதியையும் மக்கள் அனுபவிக்கவில்லை.
இந்த பட்டியலில் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆர்.கே.நகரில் இருக்கும் கொருக்குப்பேட்டை மேம்பாலம் முதல்வரின் தேதிக்காக திறக்கப்படாமல் காத்துக் கிடக்கிறது.
கொருக்குப்பேட்டை மேம்பாலம் குறித்த ஒரு குறிப்பு:
வடசென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும், அந்தப் பாதையை கடக்கும் இரண்டு லட்சம் மக்களுக்கான பயன்பாட்டிற்கு,  தி.மு.க. ஆட்சி காலத்தில் (2007) இதற்கு அடித்தளம் போடப்பட்டது. சென்னை மாநகராட்சியும், தென்னக ரயில்வேவும் சேர்ந்து 16.66 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இதை கட்டும் திட்டத்துடன் பணிகள் தொடங்கின. 12 தனியார்களின் நிலத்தை கையகப்படுத்தினால்தான் பாலம் கட்ட முடியும் என்பது நிலை. அவர்கள் இதற்கு சம்மதிக்க மறுத்து கோர்ட்டுக்கு போயினர். பின்னர் சமாதானத்துக்கு வந்து, அரசின் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்க ஒப்புக் கொண்டனர். மேம்பாலப் பணிக்கு நிலத்தை வழங்க முடியவே முடியாது என்று இரண்டு பேர் மட்டும் உறுதியாய் நின்றனர். நில ஆர்ஜித சட்டத்தின்படி நடவடிக்கை பாயும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எச்சரித்தது. இதே நிலை தொடர்ந்து நீடித்தது. 

வடசென்னையின் தி.மு.க. எம்.பி.யாக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், "நிலம் வழங்குபவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை அளிக்க முன் வந்தும் அவர்களை திருப்திப்படுத்த முடியாததால்தான் மேம்பாலப் பணி தொடர முடியாமல் நிற்கிறது" என்றார். (2011-ல் அளித்த பேட்டி)
சென்னை மேயராக இருந்த மா.சுப்பிரமணியன், "அரசின் நலத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. எது எப்படியாயினும் அடுத்த ஐந்து மாத காலத்துக்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிடும்" என்றார். (2011-ல் அளித்த பேட்டி)
ஆட்சி அதிகாரம் மாறியது, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது... ஆனாலும் இருந்த நிலையிலேயே இருந்தது கொருக்குப்பேட்டை மேம்பாலம். ஐந்தாண்டு வரையில் இங்குள்ள இருப்புப் பாதையை கடக்கும் மோட்டார் சைக்கிள்களை  தண்டவாளத்தைக் கடந்து 'தூக்கி விட' , இளம் சிறார்கள் 'தொழிலாளி'களாக மாறி நாளொன்றுக்கு நூறு ரூபாய் வரை வருமானம் பார்த்தனர். எதிர்த்தரப்பில்,  "இது தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், ஆளும் அ.தி.மு.க. கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை கட்டி முடிக்காமல் சதி செய்கிறது" என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. இதற்கு ஆளுங்கட்சி சார்பில் உரிய பதிலை யாரும் கொடுக்கவில்லை. மாறாக, அந்தப் பகுதி மக்களை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டு கால அதிகாரத்தின் இறுதிக்காலம் நெருங்கும் வேளையில், அதாவது 2015-ல்  வந்தது, இடைத்தேர்தல். கொருக்குப்பேட்டையை உள்ளடக்கிய அந்த இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி  வேட்பாளராக ஜெயலலிதா  நின்றார், வென்றார். ஜூன்-29, 2015-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா பெற்ற வெற்றியால் தொகுதியே மின்னத் தொடங்கியது. இறங்கி வரமறுத்த நில உரிமையாளர்கள் வேகமாக இறங்கி வந்தனர். மேம்பாலத்தைத்  தொடங்கும் பணிகளில் வேகம் பிடித்தது. யாரும் எதிர்பாராத வேகம் அது.

இதோ, இந்தப் படங்களைப் பாருங்கள்... மக்களே இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சிறுவர்கள் பம்பரமும், கிரிக்கெட் மட்டையுமாய் வாகன பயமில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
'குடி'மகன்கள் மதுபாட்டில்களை உருளவைத்து விட்டு தாங்கள் ஒரு பக்கம் புரண்டு கொண்டிருக்கின்றனர். 

ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள் குரல் இதுதான் -  "சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டீர்கள்... மிக சிரமமான பணிதான் அது... ஆனால், அதை "ரிமோட்"டில் கோட்டையில் இருந்தபடியே திறக்கிற 'சின்ன' பணிதானே மிச்சமிருக்கிறது... எப்போது பட்டனை அழுத்துவீர்கள்...?" 

பட்டனை தட்டுங்களேன், மேடம்!


No comments:

Post a Comment