Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

கொலையை கொண்டாடும் சமூகத்திலா நாம் வாழ்கிறோம்?

ல நூறு கண்கள் உற்று நோக்க அரங்கேறியுள்ளது அந்த கொடூரக் கொலை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் கண்களில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது. சர்வ சாதாரணமாக கணவனையும், மனைவியையும் அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு, நிதானமாக இரு சக்கர வாகனத்தில் ஏறி மூன்று பேர் தப்பி செல்லும் காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. சாதியின் வெறியாட்டத்தால் நிகழ்ந்த இந்த கொடூரக் கொலையால் தேசமே அதிர்ந்து நிற்கிறது.


இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக  திகழ்ந்த தமிழகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி,  தமிழகம் பின்னோக்கி செல்வதாக தேசிய ஊடகங்கள் விமர்சிக்க துவங்கி விட்டன. எல்லோரும் வெட்கி தலை குனிய வேண்டிய தருணம் இது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு தரப்பு இந்த கொடூரக் கொலையை கொண்டாடுகிறது என்றால், நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி உருவாவதை தவிர்க்க முடியவில்லை.
கொலையாளிகளை வாழ்த்தி பதிவு

உடுமலையில் காதல் ஜோடியை வெட்டி வீழ்த்திய சில நிமிடங்களில் முகநூல் புத்தகத்தில் 'வெட்டியவர் நீடூடி வாழ்க' என பதிவிட்டார் ஒருவர். இந்த கொடூரக் கொலையை வரவேற்பதாகவும், இதைத்தான் எதிர்பார்த்தோம் என்ற ரீதியிலும் பல பதிவுகள் குவிந்தன. இதற்கு வந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்தன. அடுத்த சில நிமிடங்களில் பதிவுகள் இன்னும் மோசமான நிலையை எட்டியது.

'இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. எந்த சாவு விஷயமும் காதுல விழலையேனு இருந்தேன். அப்பாடா. இந்த கருமாந்திரங்களை வெட்டி என் காதுல தேன் ஊத்திட்டாங்க. அவர்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்" என்றும், 'எவனாவது எங்க *** பொண்ணை தொட்டா அந்த இடத்துல அருவா மட்டும்தான் பேசும்' என துவங்கி அச்சிட முடியாத வார்த்தைகளால் விரிகிறது அந்த பதிவு. இந்த கொலை தங்கள் சாதியின் பெருமையை உயர்த்தி விட்டதாக பெருமை பீத்திக்கொண்டனர். இவர்கள் அனைவரும் சாதி அமைப்புகளிலும், கட்சியிலும் அங்கம் வகிப்பவர்கள். சுருக்கமாக சொன்னால் சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள்.
சாதி அமைப்புகள் மட்டுமா காரணம்?

தமிழகத்தில் சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் தந்தை பெரியார். கலப்பு திருமணம் என்ற வார்த்தையே அவர் எதிர்த்தார். 'மாட்டுக்கும் மனிதருக்குமா கல்யாணம் பண்றோம். மனிதருக்கும் மனிதருக்கும் தானே' என சொன்னவர் சாதி மறுப்பு திருமணம் என்ற பெயரையும் முன்மொழிந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் மட்டுமல்லாது,  பொதுவுடமை இயக்கங்களும், காங்கிரசும் கூட தமிழகத்தில் சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்தன.

இன்னும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதியை இட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சாதி பெருமையை பின்னால் போட்டுக்கொள்வது என்பது இழிவான ஒன்றாக கருதப்படும் நிலை உருவானது என்றால், அதற்கு பெரியார் போன்றவர்கள் மேற்கொண்ட சாதி ஒழிப்பு போராட்டங்களே காரணம். 

இதற்கு சாதிக்கட்சிகள்தான் காரணமா என்றால், இருக்கலாம். ஆனால், அவர்கள் மட்டுமே காரணமில்லை என்பதுதான் முக்கியம். பெரியார், சாதியை எதிர்த்து போராடியபோது சாதி அமைப்புகள் இருந்தன. சொல்லப்போனால் வலுவாக இருந்தது. ஆனால், அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் சாதியை நேரிடையாக எதிர்த்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.

உடுமலை ஆணவக்கொலை குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி கேட்டால், 'முக்கியமான செய்தி சொல்லியிருக்கிறேன். முதலில் அதைப் போடுங்கள்' எனச்சொல்லி வெளியேறுகிறார். ராமதாஸூக்கு, தேசத்தையே உறைய வைத்த செய்தி முக்கியமாக படவில்லை. ராமதாஸூக்கு சாதி பின்புலம் இருக்கிறது. அவர் சாதி அரசியல் மேற்கொண்டவர் என்பதால் அவர் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளின் நிலை இதில் என்னவாக இருந்தது? கோவையிலும், உடுமலையிலும் தேசிய ஊடகங்கள் எல்லாம் படையெடுத்துள்ளன. தமிழக தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, வட இந்திய ஊடகங்களிலும் பெரும் விவாதப்பொருளானது இந்த சாதியப் படுகொலை. ஆனால், தமிழகத்தில் ஆண்ட, ஆள்கின்ற கட்சிகள் இதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளவில்லை. இப்போது சொல்லுங்கள் நாம் பின்னோக்கி செல்ல சாதிய கட்சிகள் மட்டுமா காரணம்?
சாதி ரீதியிலான ஒரு கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுக்கொண்டிருந்த ஒருவர், அந்த கொலைக்கு காரணமானவர் என நம்பப்படும் ஒருவர், வாட்ஸ் அப் வழியாக பேட்டிக் கொடுக்கிறார்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்.  அவர் ஒரு கதாநாயகன் போல போலீசில் சரணடைகிறார். இவரை ஒரு தரப்பு கொண்டாடுகிறது. தொலைக்காட்சியிலும், வாட்ஸ் அப்பிலும் பேட்டிக்கொடுப்பவரை ஆளும் அரசின் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கும் துணிவும் எதிர்கட்சியான தி.மு.க.வுக்கோ, இன்னும் சில கட்சிகளுக்கோ இல்லை. இவர்கள் இயங்குவது எல்லாம் சாதி ரீதியில்தான்.

கொலையை ஊக்குவிக்கும் முயற்சிதான் இது

முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு பெரும் சாதி கலவரம் ஏற்படும் போது அதை தடுக்க எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பார் முதல்வர் ரகுவரன். 'என் நாற்காலியில இருக்குற 4 கால்ல ஒரு கால் சாதி அமைப்புகளோடது. அவர்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது' என சொல்வார். அந்த நிலைதான் இப்போது நடக்கிறது. வாக்கு வங்கியை குறிவைத்தே அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதுதான் இப்படி ஒரு மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.


சாதிய கட்டமைப்பில் இருந்து நாம் மெல்ல மெல்ல விடுபட்ட நிலை மாறி, மீண்டும் பின்னோக்கி சென்று சாதிய கட்டமைப்பில் சிக்கிக்கொள்ளுவோமா என்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது தற்போது நிகழும் சம்பவங்கள். சமூக வலைதளங்களில் இந்த கொடூர கொலையை ஆதரித்து எழும் குரல்கள், அடுத்தடுத்த கொலைகளை ஊக்குவிக்கும் முயற்சிதான் என்பதை நாம் உணர்ந்தபாடில்லை.
இந்த கொலைக்காட்சியை கண்டு மிகப்பெரும்பாலானோர் துடிக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரின் இந்த பதிவு வேறு வகையிலான கற்பிதங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆண்ட, ஆளும் கட்சிகள் மவுனமாய் இருந்து அதற்கு துணைபோகிறார்கள். நாம் தெளிவாக இருக்க வேண்டிய தருணம் இது. சாதிய கட்டமைப்பை உடைத்து மனிதம் வளர்க்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் நாம் கற்காலத்தை நோக்கி பயணிப்பவர்களாக மாறி விடுவோம்.

சாதி மறந்து மனிதம் வளர்ப்போம் வாருங்கள்...!


No comments:

Post a Comment