80க்கும் மேலான நாடுகளில் இருந்து கிட்டதட்ட 100க்கும் மேலான செய்தி நிறுவனங்களின் 400 ரிப்போர்ட்டர்கள் இறங்கி, கடந்த 40 வருடங்களாகச் சட்டத்திலிருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து சேர்த்த பெரும்புள்ளிகளின் அட்டூழியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த அதிரடி அன்டர்கவர் ஆப்பரேஷனில் வெளியிடப்பட்ட ஆவணங்களே 'பனாமா பேப்பர்ஸ்' என்று கூறப்படுகின்றன.
பனாமா பேப்பர்ஸ்:
பனாமா சிட்டியில் உள்ள மொசாக் ஃபான்செகா என்ற சட்ட உதவி நிறுவனம், கம்பெனிகள் வாங்க விற்க பதிவு செய்ய, உள்ளிட்ட சேவைகளைச் செய்து வருகிறது. உலகின் மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் நான்காவதாக உள்ள இந்த மொசாக் ஃபான்செகா நிறுவனத்திடமிருந்து ஏறக்குறைய 11.2 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த 11.2 மில்லியன் ஆவணங்களில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் முறைகேடாகவும் வரி கட்டுவதிலிருந்து தப்பிக்கவும், கருப்புப் பணத்தை பதுக்கவும் வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதல்முறை:
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. இந்த 11.2 மில்லியன் 'பனமா பேப்பர்ஸ்' ஆவணங்களின் அளவு கிட்டதட்ட 2.6 டெராபைட். இவை கடந்த 40 வருடங்களாகச் சேர்க்கப்பட்டு வந்தவை.
இவற்றை எலக்ட்ரானிக் வடிவில் படிக்கும் வகையில் மாற்றி, கடந்த ஒரு வருடமாக வெளியிடாமல் மொத்த செய்தி நிறுவனங்களும் பாதுகாத்து வந்துள்ளன. ஆனால் அவை தற்போது வெளியாகியுள்ளன.
வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism) இந்த தகவல்களை “பனாமா பேப்பர்ஸ்” எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.
இதுவரை உலகை உலுக்கிய பல ஆவணங்கள் விக்கிலிக்ஸ் போன்ற இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். ஆனால் இந்த பனாமா பேப்பர்ஸ் அது போன்ற ஒரு வெளியீடு அல்ல. இவை எல்லோரும் படிக்கும் வகையில் ஆன்லைனில் பொதுவாக வெளியிடப்படவில்லை.
இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் சொத்து வாங்கிய நிறுவனங்கள் பெயர்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்னும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படாமல், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 'இது வெறும் ஆரம்பம்தான்' என்கிறார்கள் அதனைக் காத்துக்கொண்டிருப்பவர்கள்.
சொத்து குவித்த பிரபலங்கள்:
இந்த பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எஃப். நிறுவனர் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இத்தகைய மாபெரும் மோசடிகளுக்கு உதவியாக கடந்த 40 வருடங்களாக இருந்து வந்த பனாமாவின் மொசாக் ஃபான்செகா சட்ட உதவி நிறுவனத்தின் மீது இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment