Monetize Your Website or Blog

Tuesday, 5 April 2016

ஜெயலலிதா தெரிந்தேதான் தவறு செய்தாரா?' -செ.குவுக்கு எதிராக சீறும் எதிரணி

அ.தி.மு.கவின் தோழமைக் கட்சியான செ.கு.தமிழரசனின் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு மதுராந்தகம்(தனி) தொகுதியை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. ' கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு கட்சியின் பெயரில் எப்படி சீட் கொடுக்கலாம்?' எனக் கொந்தளிக்கின்றனர் குடியரசு கட்சியினர். 

வேலூர், கே.வி.குப்பம் தொகுதியில் கடந்த முறை வென்ற செ.கு.தமிழரசனுக்கு இந்தமுறை மதுராந்தம் தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ அ.தி.மு.கவின் கணிதா சம்பத் மீது மணல் கடத்தல் உள்பட ஏராளமான புகார்கள் இருப்பதால், அவருக்குத் தலைமை சீட் கொடுக்கவில்லை. அதேநேரத்தில், செ.கு.தமிழரசனுக்கு சீட் கொடுத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய குடியரசு கட்சி நிர்வாகி ஒருவர், " செ.கு.தமிழரசனின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரைக் கடந்த 31-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கி, அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும், காரில் கட்சி கொடி கட்டிக் கொண்டுதான் வலம் வருகிறார். நேற்று ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்தியக் குடியரசுக் கட்சி என்ற பெயர் உள்ளது. கட்சியிலேயே இல்லாத ஒருவரை, எப்படிக் கூட்டணிக் கட்சி என்று சொல்ல முடியும்? அவரைக் கட்சியில் இருந்து நீக்கிய தகவலை ஜெயலலிதாவின் கவனத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லையா? என்ற சந்தேகம் உள்ளது.
தலித் அமைப்பு என்ற பெயரில் ஒரு கட்சி இருக்கட்டும் என ஜெயலலிதா நினைக்கிறாரா? ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக இந்த ஆட்சியில் ஏராளமான கொடுமைகள் நடந்தன. பரமக்குடி கலவரம் முதல் விஷ்ணுபிரியா தற்கொலை வரையில் அ.தி.மு.க ஆட்சியின் தலித் விரோத செயல்களுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது தமிழரசன் பேசியிருப்பாரா? மாறாக, தொலைக்காட்சி விவாதங்களில் இந்த செயல்களை நியாயப்படுத்தும்விதமாகத்தான் நடந்து கொண்டார். அதனால்தான், எங்கள் கட்சித் தலைமை அவரை நீக்கியது. இப்போது இந்தியக் குடியரசுக் கட்சி என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் தமிழரசன். அதற்குப் பதிலாக அவர் அ.தி.மு.கவில் ஐக்கியமாகிவிடலாம். அவரது தலித் விரோத போக்குகளை மதுராந்தகம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்" என அதிர வைத்தார். 

இதுதொடர்பாக, செ.கு.தமிழரசனிடமே பேசினோம். " ஒடுக்கப்பட்ட மக்களின் பிரநிதியாகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். யார் இப்படி தகவல்களை பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. 'என்னை நீக்கிவிட்டோம்' என்று எங்காவது பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருக்கிறாரா? அவர் தனித்து செயல்படுகிறார். நான் தனித்து செயல்படுகிறேன். இரண்டு பேரும் தோழமையோடு செயல்பட்டு வருகிறோம். அவர் பரிபா பகுஜன் மகாசங் மகாராஷ்ட்ரா என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நான் இந்தியக் குடியரசுக் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். அவர் அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மதிப்பிற்குரியவர். அதைத்தவிர, அவருக்கு கட்சியில் வேறு எந்த பொறுப்புகளும் இல்லை. அதனால், நான் அவரை விமர்சிக்க விரும்பவில்லை. அவர் எந்த இடத்திலும் என்னை நீக்கியதாகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. எங்கள் கட்சியில் முன்பிருந்த சிலர்தான் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இப்போதுள்ள அரசியல் சூழல்கள் நமக்குத் தெரியும். கட்சியின் அடிப்படைக் கொள்கைளை வைத்துக் கொண்டுதான் அரசியலை முன்னெடுக்க முடியும். இந்த விவகாரத்தில் பிரகாஷ் அம்பேத்கரை ஒரு வணிகப் பொருளாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். வேறென்ன சொல்வதற்கு இருக்கிறது?" என்றார் செ.கு.தமிழரசன். 


தேர்தல் பிரசாரத்தில், செ.கு.வுக்கு எதிராக எதிரணியினர் செய்யப் போகும் பிரசாரம் மதுராந்தகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? என்பதையும் விரைவில் பார்க்கலாம். 



No comments:

Post a Comment