Monetize Your Website or Blog

Thursday, 7 April 2016

ஜெயலலிதா வரலாறு படைக்க வாசன்தான் கிடைத்தாரா?' -தகிக்கும் த.மா.கா


'அமாவாசை தினமான இன்று போயஸ் கார்டனில் ஜெயலலிதா-வாசன் சந்திப்பு நடக்கும்' என நம்பிக் கொண்டிருந்த த.மா.காவினருக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. 'சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது' எனச் சொல்லிவிட்டார் வாசன்.
அ.தி.மு.க அணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இணைவது என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில், கார்டனின் 'திடீர்' மனமாற்றத்தை வாசன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'என்னதான் நடந்தது கார்டனில்?' என த.மா.கா மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டோம். " வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக மாறிவிட்டது. எட்டு சீட், ஐந்து சீட் என அ.தி.மு.க பேச்சுவார்த்தை குழுவினர் பேசிக் கொண்டிருந்தாலும், ஒருகட்டத்தில் பதினைந்து சீட்டுகளுக்கு ஜெயலலிதா சிக்னல் கொடுத்துவிட்டார். 'தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதில் ஆட்சேபனை இல்லை' என்று சொன்னதால், வாசனும் மகிழ்ச்சியில் இருந்தார். 


இன்றைக்கு திடீரென்று வாசனிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 'நீங்கள் கூட்டணிக்குள் வருவதில் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் சொல்லச் சொன்னார். தமிழக தேர்தல் வரலாற்றில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியிட்டதில்லை. அத்தனை தொகுதியிலும் இரட்டை இலை சின்னமே இருக்க வேண்டும் என அம்மா விரும்புகிறார். மிஷன் 234 என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. உங்களுக்கு ஒதுக்கப்படும் 15 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வேண்டும்' எனச் சொல்ல, கொந்தளித்துவிட்டார் வாசன். 

'இரட்டை இலை சின்னத்தில் செ.கு.தமிழரசன் நிற்கலாம், ஷேக் தாவூத் நிற்கலாம், தனியரசு நிற்கலாம். நான் எப்படி நிற்க முடியும். என்னை நம்பி திரண்டு வந்துள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் நான் எப்படித் தலைகாட்ட முடியும்?. எங்களுக்கென்று தனியான அடையாளம் வேண்டும் என்றுதான் தென்னந்தோப்பு சின்னத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறோம். கடைசி நேரத்தில் இப்படிச் சொல்வது ஏற்புடையதல்ல' எனக் காட்டமாகவே பேசிவிட்டார். இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தேனாம்பேட்டை அலுவலத்தில் கூடியிருக்கிறோம். ஜெயலலிதாவின் முடிவால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்" என்றவரிடம்,
" அப்படியே பார்த்தாலும், உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?" என்றோம். " நிறைய ஆப்ஷன்கள் கண்ணுக்கு முன்னால் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் வைகோவின் பேச்சால் பெரிய அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. திருமாவளவன், ஜி.ஆர் போன்றோர் அவருடைய பேச்சைக் கண்டித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் நம்பிக்கையைப் பெற்ற வாசன், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகக்கூட நியமிக்கப்படலாம்" என அதிர வைத்தார்.

இதனிடையே "எந்தக் கட்சியுடன் நான் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி வைப்பேன் என்பதை விரைவில் அறிவிப்பேன். கட்சியின் வளர்ச்சி மற்றும் தொண்டர்களின் எதிர்கால நலன் கருதி நல்ல முடிவை எடுப்பேன்" என இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த வாசன் கூறினார்.
அரசியல் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து செல்லும் கலை என்பார்கள். வாசன் விஷயத்தில் அது ரொம்பவே பொருந்துகிறது. 


No comments:

Post a Comment