Monetize Your Website or Blog

Thursday, 7 April 2016

வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றும் மர்மம் இதுதான்..! - மீண்டும் தலையெடுத்த திவாகரன்

' எப்போது யார் மாற்றப்படுவார்கள்?' என 24 மணிநேரமும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள். போயஸ் கார்டனுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தின் ரகசியம் புரியாமலும் அவர்கள் தவிக்கிறார்கள்.

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியான நாள்முதல் தொடர்ந்து வேட்பாளர்களை மாற்றிக் கொண்டு வருகிறார் ஜெயலலிதா. நேற்று ஒரேநாளில் மூன்று முறை வேட்பாளர்களை மாற்றியமைத்தார் ஜெயலலிதா. இத்தனைக்கும், 'அம்மா உங்களை சந்திக்க நேரம் கொடுத்துவிட்டார். உடனே கார்டனுக்கு வாருங்கள்' என வேட்பாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட, பூந்தொட்டிகளோடு கார்டன் வாசலில் காத்துக் கிடந்தனர் 224 வேட்பாளர்களும். அவர்கள் அத்தனை பேரிடம் இருந்தும் பூங்கொத்து மட்டும் வாங்கப்பட்டது. 'நிறைய வேட்பாளர்கள் மீது புகார் வருவதால் களையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் உங்களுக்கு அழைப்பு வரும். அப்போது வாருங்கள்' எனத் திருப்பி அனுப்பப்பட்டனர். 'அம்மாவிடம் உண்மையிலேயே பூங்கொத்து கொடுக்கப் போவது யார்? ' என்ற கேள்விகளோடு கலைந்தனர் வேட்பாளர்கள். 

"கார்டனில் நடக்கும் அதிரடிகளின் ரகசியம் சாதாரணத் தொண்டனுக்குப் புரியாமல் இருக்கலாம். வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் தம்பி திவாகரன் சாதுர்யமாக விளையாடுகிறார். ஓ.எஸ்.மணியன், காமராஜ், வைரமுத்து ஆகியோருக்கு கிடைத்திருக்கும் எம்.எல்.ஏ சீட்டுகளின் பின்னணியில் திவாரகன் இருக்கிறார். இந்தத் தேர்தலிலும் சுந்தரக்கோட்டைதான் ராஜ்ஜியம்தான் நடக்கிறது" என முன்னோட்டம் கொடுத்துவிட்டுப் பேசினார் அ.தி.மு.கவின் சீனியர் நிர்வாகி ஒருவர். 

"கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டு, போலீஸ் நடவடிக்கைக்கு ஆளான பிறகு எந்த விஷயத்திலும் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார் திவாகரன். தேர்தல் நெருக்கத்தில் அவருடைய சுந்தரக்கோட்டை வீட்டுக்கு ஆதரவாளர்கள் படையெடுப்பது வழக்கமாக இருந்தது. அவர்களிடம் ஒன்றை மட்டும் சொன்னார். 'இந்தமுறை நாம் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும். அதன்பிறகு நடக்க வேண்டியவை நல்லபடியாக நடக்கும்' என்றவர், யாருக்கு சீட் கிடைக்கும்? என்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. வேட்பாளர் பட்டியலை அதிரடியாக மாற்றிக் கொண்டே இருப்பது செண்டிமென்டாக வெற்றியைக் கொடுக்கும் என்பதால்,தனக்கு பக்கத்தில் மாற்று வேட்பாளர் பட்டியலையும் தயாராகவே வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அவர் கையில் இருக்கும் அந்தப் பட்டியல் முழுக்க மன்னார்குடி வாரிசுகளின் திருவிளையாடல்கள்தான்" என்றவர், 

" திவாகரனின் முதல் வெற்றி தொடங்கியது திருமயத்தில்தான். எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைரமுத்து, அடிப்படை உறுப்பினரில் இருந்து நேரடியாக மாவட்ட செயலாளராக ஆனவர். இதற்குக் காரணம். திவாகரனின் ஆசிதான். கடந்த முறை எம்.எல்.ஏவாகி வெற்றி பெற்றாலும், திவாகரன் தொடர்பால், கட்டம் கட்டி வைக்கப்பட்டார் வைரமுத்து. இன்றைக்கு கார்டனில் சமையல் வேலை பார்ப்பவர்கள் பலர் வைரமுத்துவின் ஆட்கள்தான். எந்தப் பதவியும் இல்லாமல் முடங்கிக் கிடந்த வைரமுத்துவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடித்தது. அ.தி.மு.க விவசாய அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் பின்னால் அமரும் பத்து பேரில் ஒருவராக வைரமுத்து மாறிவிட்டார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்த விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு, அந்தப் பதவியை வைரமுத்துவுக்கே கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இப்போது திருமயம் வேட்பாளரும் வைரமுத்துதான். இப்படியெல்லாம் ஆச்சரியம் நடக்கும் எனக் கட்சியின் சீனியர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

மன்னார்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுதா அன்புச் செல்வனை மாற்றிவிட்டு, எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இவர் திவாகரனின் வலதுகரம் என்பது ஊருக்கே தெரியும். திவாகரன் மீது கார்டன் நடவடிக்கை எடுத்தபோதும்கூட, தினமும் சுந்தரக்கோட்டை வீட்டிற்குச் சென்று தவறாமல் அட்டெண்டென்ஸ் போட்டவர் இவர். வேதாரண்யத்திற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.மணியன், திவாகரனோடு நெருக்கமாக இருந்த காரணத்தால்தான் கட்டம் கட்டப்பட்டார்.
நாகை மாவட்ட செயலாளர் ஜெயபாலுக்கு சீட் கொடுத்துவிட்டு, அதை மாற்றிவிட்டு எம்.எல்.ஏ சீட்டும், மா.செ பொறுப்பும் மணியனுக்கு கிடைக்கிறது என்றால், பின்னணியில் திவாகரன் தவிர வேறு யார் இருக்க முடியும்? அதேபோல், விவசாய பிரச்னைகள் தலைதூக்கியிருப்பதால், 'ஒரத்தநாடு தொகுதியே வேண்டாம். பேராவூரணி வேண்டும்' என விருப்பத்தோடு கேட்ட வைத்தியலிங்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, கட்சியின் சீனியரான 70 வயது கோவிந்தராஜூக்கு சீட் ஒதுக்கியதன் பின்னணியிலும் திவாகரன்தான் இருக்கிறார். வைத்தியலிங்கத்தின் மீதான வெறுப்புதான் இதற்குத்தான் காரணம். சசிகலாவின் உறவினரான டாக்டர்.வெங்கடேஷின் தீவிர ஆதரவாளரான வைகைச்செல்வனும் அருப்புக் கோட்டை தொகுதியின் வேட்பாளராகியிருக்கிறார். 'வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரையில், நாங்கள் நினைப்பது மட்டும்தான் நடக்கும்' என மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார் திவாகரன். சசிகலாசின் ஆசிர்வாதத்தோடு வேட்பாளர் தேர்வில் மன்னார்குடியின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வருவார் திவாகரன்" எனச் சொல்லி முடித்தார் அவர். 

இதுபற்றி நம்மிடம் பேசிய திவாகரன் தரப்பினர், " அவர் எந்த தலையீடும் செய்யாமல் அவருடைய தொழிலை கவனித்து வருகிறார். புதிதாக மாற்றப்பட்ட வேட்பாளர்கள் கட்சியின் சீனியர்கள். மாற்று என்று வரும்போது அவர்களைத்தான் நியமிக்க முடியும். இது முழுக்க அம்மா எடுத்த முடிவு. இதில் எங்கே திவாகரன் வந்தார்? அவருடைய எதிரிகள் திட்டமிட்டு பரப்பும் தகவல் இது" என்கின்றனர். 

ஒவ்வொரு தேர்தலிலும் மன்னார்குடியின் பெயர் அடிபடுவதும், ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் அவர்கள் ஒதுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான் சாதாரண அ.தி.மு.க தொண்டன். 



No comments:

Post a Comment