Monetize Your Website or Blog

Monday, 1 February 2016

நேதாஜியின் தங்கப்பல் ஜப்பானில் உள்ளது... பிரிட்டன் இணையதளம் புதிய தகவல்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தங்கப்பல், ஜப்பான் கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது அஸ்தியில் இருக்கலாம் என்று பிரிட்டன் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது.

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி பற்றிய ஆவணங்களை, அவரது பிறந்த தினமான கடந்த 23-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார். அதில், தைவானில் கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை, நேதாஜி பற்றிய ரகசியத் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 'bosefiles.info' என்ற இணையதளம் உறுதிப்படுத்தி உள்ளது.


மேலும் அது தொடர்பாக அந்த இணையதளத்தில், அதன் ஆசிரியர் ஆஷிஸ் ராய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவில், ''நேதாஜியுடன் அவரது தளபதிகளில் ஒருவரான ஹபிபுர் ரெஹ்மானும் விபத்தில் சிக்கி காயமடைந்தார். விபத்தில் உயிரிழந்த நேதாஜியின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு, தைபேயில் அவரது அஸ்தியை ஜப்பானிய அதிகாரிகளிடம் இருந்து ஹபிபுர் ரெஹ்மான் பெற்றுக் கொண்டார்.

நேதாஜியின் அஸ்தியில், அவரது தங்க உறையுடன் கூடிய பல்லைப் போட்டு வைத்திருப்பதாக ரெஹ்மான், தனது மகன் நயீமுர் ரெஹ்மானின் கூறியிருந்தார். அந்த அஸ்தி, டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் தற்போது பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஹபிபுர் ரெஹ்மான், கடந்த 1978ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த 1990-ம் ஆண்டுக்கு பின், இஸ்லாமாபாதில் நயீமுரைச் சந்தித்தபோது, நேதாஜியின் தங்கப்பல் பற்றிய தகவலை என்னிடம் அவர் கூறினார். அதை தொடர்ந்து, கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவ், எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய், மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு உள்ளிட்ட தலைவர்களின் கவனத்துக்கு இதை கொண்டு செல்லும் விதமாக கடிதம் எழுதினேன்.

ஆனால், நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை அவர்கள் கைவிட்டு விட்டனர். தற்போது, நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள மண்பாண்டத்தை எளிதில் ஸ்கேன் செய்துவிட முடியும்.
மேலும், அந்தத் தங்கப்பல் மூலம் அவரது மரபணு சோதனை கிட்டத்தட்ட வெற்றியடைந்து விடும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.



No comments:

Post a Comment