Monetize Your Website or Blog

Friday, 12 February 2016

இப்படிதான் இருக்க வேண்டும் நவீன கழிப்பறைகள்!

து 2007-ம் ஆண்டு. கைபேசிகள் எல்லோர் கைகளிலும் தவழத் துவங்கிய காலம். நாங்கள் எங்கள் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பாக,  தஞ்சையின் ஒரு குக்கிராமத்தில், கழிப்பிடம் கட்டும் பணியில் அமர்த்தப்பட்டோம். காலையில் அந்த கிராமத்தை நண்பர்களுடன் மிதிவண்டியில் சுற்றி வருவது எங்கள் பழக்கம். அப்போது பலர்,  நீர் நிலைகள் அருகே மலம் கழிப்பதை கண்டோம். 

அவர்களிடம் பேச்சு கொடுத்தோம், “அண்ணே... ஏன் இந்த செல்போன் காலத்திலும் வீட்டில் டாய்லெட் இல்லாம இருக்கீங்க...?”. அப்போது அவர்கள் சொன்ன தகவல் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால், பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் சுற்றியபோது அவர்கள் சொன்னதுதான் உண்மை என்று உணர்ந்தேன்.

“வீட்டுக்குள்ளயே டாய்லெட் போறது ஒரு மாதிரி இருக்கு சார்... அது வீட்டையே அசுத்தப்படுத்துற மாறி இருக்கு. அதுவும் இல்லாம அதிக தண்ணீர் செலவு ஆவுது...” - இதுதான் அவர்கள் கூறிய பதில். இன்றும் பல கிராமத்து மக்களின் மனநிலை இதுதான். பல கிராமங்களில் அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறைகள்,  பழைய பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூமாகதான் இருக்கிறது. இந்த மனநிலையை மாற்றாமல் நாம் இந்த ஆண்டுக்குள் இத்தனை கழிப்பறைகள் கட்டி விட வேண்டும் என்று இலக்கு மட்டும் நிர்ணயத்து எந்த பலனும் இல்லை.

இந்திய கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும்?

அரசு கட்டி தரும் அல்லது நிதி உதவி அளிக்கும் கழிப்பறைகளை பற்றி பேசும் போது, இதை குறிப்பிடுவது இன்றியமையாதது ஆகிறது. இந்த நவீன காலத்தில் கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும். இங்கு நவீனம் என நான் குறிப்பிடுவது திடக்கழிவு மேலாண்மையில் படு தோல்வி உற்று, தண்ணீரை நிர்வகிக்க தெரியாமல், வீணடிக்கும் இந்த 'இந்திய நவீன'  காலத்தில், நம்முடைய கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும்...?. அதற்கான பதில் மிகவும் எளிமையானது, நமது கழிப்பறைகள், இந்திய கழிப்பறைகளாக இருக்க வேண்டும்.

இந்திய கழிப்பறைகள் என நான் குறிப்பிடுவது, கால்களை அகட்டி வைத்து நாம் அமரும் வழமையான இந்திய கழிப்பறைகள் மட்டும் அல்ல. அது ஒப்பீட்டு அளவில் சிறந்ததாக இருந்தாலும்,  தண்ணீர் தட்டுபாட்டில் நாம் தவிக்கும் இந்த காலத்தில் அந்த கழிப்பறைகளும் தீர்வாக இருக்காது.

சரி... கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும்...? இதற்கு நான் தீர்வாக முன்மொழிவது அண்மையில் நான் நண்பரின் கூட்டுறவு பண்ணையில் பார்த்த ‘கரி கழிப்பறை’. அதுவே, காந்திஜி முன் மொழிந்த கழிப்பறையின் நவீன வடிவமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
அந்த கழிப்பறை, நாம் வழமையாக பயன்படுத்தும் இந்திய வகை கழிப்பறைதான் என்றாலும், அதன் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி (Septic Tank), நவீனமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதன் வடிவம் இதுதான்... கழிவு நீர் தொட்டி, இரண்டு அடுக்காக கட்டப்பட்டு இருந்தது. அதன் முதல் தளத்தில், அடுப்பு கரி போடப்பட்டு இருந்தது. கழிவு நீர் அந்த கரியால் சுத்திகரிக்கப் பட்டு, கீழ் தளம் வழியாக வெளியே செல்லும். கரி நல்ல சுத்திகரிப்பான் என்பதால் அந்த கழிவு நீரில், துர் நாற்றம் வராது. அந்த நீர் செடிகளுக்கு பாயும். அதுபோல் முதல் தளத்தில் கரியுடன் மண் புழுவும், கொஞ்சம் சாம்பலும் போடப்படும். சில நாட்களில் அந்த கழிவு என்பது தரமான உரமாக மாறும். அதை நம் வெறும் கையாலேயே கூட எடுக்கலாம். அதனை அந்த நண்பர் அள்ளியும் காண்பித்தார்.

இதில் தண்ணீர் மறுசுழற்சி ஆகிறது. கழிவு உரமாக மாறுகிறது.

கக்கா போவதற்கு கூட வெளிநாட்டு மாதிரியா...?

நாம் கக்கா போவதற்கு கூட வெளிநாட்டு மாதிரியை இறக்குமதி செய்யாமல், இது போல் நமக்கான கழிப்பறைகளை வடிவமைக்கலாம். அரசும், இத்தனை கழிப்பறைகள் கட்ட வேண்டும் என இலக்கு மட்டும் வைக்காமல், அதை செயல்படுத்தும்போது, இது போன்ற கழிப்பறைகளை கட்டி தரலாம். 'இது கிராமங்களுக்கு சரி, நகரத்திற்கு பொருந்துமா...?' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், இதையே நாம் நகரத்திற்கு ஏற்ற மாதிரி வடிவமைத்துக் கொள்ள வேண்டும். 

மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு ஆய்வு என்ற பெயரில் பல கோடிகளை செலவு செய்யும் அரசு, அதை நம் தினத்தேவையான கழிப்பறைக்கும் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment