Monetize Your Website or Blog

Friday, 12 February 2016

போர்க்களத்தில் தீரமுடன் சண்டையிட புதிய மருந்து: இந்திய விமானப்படை அனுமதி!

ன்றைக்கு வளர்ந்திருக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு நாட்டின் ராணுவமும் தன்னை நவீனப்படுத்திக்கொண்டு வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் நாடான இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த வரிசையில் இந்திய விமானப்படையில் வீரர்களின் திறனை மேம்படுத்த, இரண்டு புதிய மருந்துகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது இந்திய ராணுவம். ஒன்று ‘கோ’(go). மற்றொன்று ‘நோ கோ’(no go).
என்ன செய்யும் இந்த மாத்திரைகள்?

கோ என்ற மாத்திரையின் பெயர் மோடஃபினில் (Modafinil). நோ கோ என்ற மாத்திரையின் பெயர்  ஜோல்பிடெம் (zolpidem). விமானப்படை வீரர்களை நீண்ட நாள் பயிற்சிகளுக்கோ, சண்டைகளுக்கோ அனுப்பும்போது உடலளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்ந்து விடுவர். அப்போது அவர்களின் செயல்திறனும் குறையும். திறன்வாய்ந்த ஆபரேஷன்களில் ஈடுபடும்போது இந்த பிரச்னைகள் வீரர்களை மிகவும் பாதித்துவிடும். அப்படி பாதிக்காமல் இருப்பதுடன், திறனுடன் தொடர்ந்து பணிபுரிய மற்றும் சண்டையிட இந்த ‘கோ’ என்னும் மாத்திரை தரப்படும். இப்படி நீண்ட நாள் பயிற்சிகள், போர்க்காலங்கள் ஆகியவை வீரர்களை மனரீதியாக பாதித்தால், உறங்குவதில் பிரச்னைகள் ஏற்படும். மிகக்குறைந்த இடைவெளியில்,  தேவையான அளவு ஓய்வெடுக்க முடியாத அளவு தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். இதை சரிசெய்து நிம்மதியாக தூங்கவைப்பதே ‘நோ கோ’ மாத்திரையின் நோக்கம். 

எப்படி செயல்படுகின்றன இந்த மாத்திரைகள்?


நமது உடலில் சுரக்கும் முக்கியமான ஹார்மோன்களில் ஒன்று அட்ரினலின். தேர்வு நெருங்கும் போது, “படி..படி” என நம்மை உந்துவதும், ஆபத்து வரும்போது உடலின் செயல்பாடுகளை துரிதமாக்கி நம்மை “ஓடு..ஓடு” என விரட்டுவதும் இந்த ஹார்மோன்தான். சில நொடிகளில் பயத்தை அடிவயிற்றில் சுரக்கச்செய்யும் இந்த ஹார்மோன்.  அதோடு, நம் உடலினை தூங்கவிடாமல், விழிப்பாக வைத்திருந்து நமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. ராணுவ வீரர்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டிய சமயங்களில் இந்த அட்ரினலின் ஹார்மோன் மூலம் அவர்களை சோர்வடையாமல் தடுக்கலாம். இதனால் தொடர்ந்து அவர்களால் பணியாற்ற முடியும். இதைத்தான் செய்கிறது ‘கோ’ என்னும் மோடஃபினில்.

‘நோ கோ’ என்னும் ஜோல்பிடெம் தூக்கத்தை தூண்டக்கூடியது. இதனை உண்ட சில நிமிடங்களில், உடலின் உறக்க செயல்பாடுகள் தூண்டப்படும். இதனால் 'இன்சோம்னியா' எனும் தூங்க சிரமப்படுபவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். மிகக் குறைந்த இடைவெளிகளில் ஓய்வெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது, இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

இதுதான் முதல் முறையா?


ஊக்கமருந்துகள் மூலம் வீரர்களின் செயல்திறனை அதிகரிக்கும் இந்த முறைகளுக்கு ஹிட்லர்தான் முன்னோடி. இரண்டாம் உலகப்போரின்போது, வீரர்கள் சோர்வடைவதுடன் காயங்களுக்கும் ஆளாகினர். அவர்களுக்கு வலிநிவாரணியாக இருக்க, சில போதை மருந்துகள் அனுமதிக்கப்பட்டன. அவர்களின் உறக்கத்திற்கு வழி செய்யும் வகையில் மருந்துகள் தரப்பட்டன. இப்படி ராணுவத்தில் நுழைந்த மருந்துகளின் ஆதிக்கம், வீரர்களுக்கு ஊக்கமருந்தாக பயன்படுத்தப்படுவதில் போய் முடிந்தது. போர் சமயங்களில் ஜெர்மனி வீரர்களுக்கு ஆம்பிடமைன் மற்றும் மெத்தாம்பிடமைன் போன்ற ஊக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. இவை நல்ல பலனைக்கொடுக்க,  பல நாட்டு ராணுவங்களும் இந்த முறையை பின்பற்றின. 

ஆனால் இந்த மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் மற்றும் மருந்துக்கு அடிமையாதல் போன்ற விஷயங்கள் இதன் மீது அச்சத்தை உண்டாக்கியது. இந்த பிரச்னைகளுக்கு மாற்றாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள மருந்துகள்தான்மோடஃபினில் மற்றும் ஜோல்பிடெம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாட்டு ராணுவங்களில் வீரர்களை ஊக்கப்படுத்த,மோடஃபினில் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. நீண்டநாட்கள் விண்வெளியில் தங்கிப்பணியாற்ற இருக்கும் விண்வெளி வீரர்களும் இந்த மருந்தை எடுத்துக்கொள்கின்றனர். முதன்முதலில் நார்கோலெப்சி என்னும் அடிக்கடி தூங்கும் வியாதி உடையவர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் இரவு நேரங்களில் பணிபுரியும் பணியாளர்களும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள பல நாடுகளும் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக காவல்துறை, கார் ஓட்டுனர்கள், பைலட்கள் போன்றவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்கின்றனர். ஜோல்பிடெம் மருந்து, கடின உழைப்பாலும், மன உளைச்சலாலும் தூக்கமின்றி இருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கவலைகளை மறக்கடித்து, தூக்கத்தினை தூண்டிவிடும் தன்மை கொண்டது இது. இந்த இரண்டு மருந்துகளின் சிறப்பே, பக்க விளைவுகள் இல்லாததுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

முழுப்பாதுகாப்பானதா இந்த மருந்துகள் ?

பல நாடுகளின் ராணுவங்களிலும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருக்கிறது இந்த மருந்துகள். இவற்றின் வெற்றியால், உலகின் பல்வேறு ராணுவங்களில் நடக்கும் முக்கிய வணிகமாக இவற்றின் விற்பனை இருக்கிறது.
“கடந்த ஆண்டுகளில் வீரர்களிடம் முறையான சோதனை நடத்தப்பட்டு, எந்தப்பாதிப்பும் இல்லை எனக்கண்டறியப்படுள்ளது. அதோடு இந்த மருந்துகள் ஒவ்வொரு வீரருக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பே வழங்கப்படும். அதேபோல, எல்லா சமயங்களிலும் இவற்றை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். சில முக்கியமான ஆபரேஷன்களுக்கு மட்டுமே, கண்காணிப்புடன் இதை வழங்குவோம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது” என்கிறது இந்திய விமானப்படை.


No comments:

Post a Comment