Monetize Your Website or Blog

Saturday, 6 February 2016

லண்டன் பொண்ணுக்கு கிருஷ்ணகிரியில் வளைகாப்பு!

மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் வளைகாப்பு போன்ற பாரம்பரிய சடங்குகளை சில தமிழ்ப்  பெண்களே தவிர்த்து வரும் இன்றைய சூழலில்  லண்டன் பெண்ணுக்கு தமிழ்க்  கலாச்சாரப்படி வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள தட்ரஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் காமராஜ்.  இயற்கை மற்றும் யோகா மருத்துவம் படித்துள்ள காமராஜ், கேரளாவில் மருத்துவராகப்  பணிபுரிந்து வருகிறார். 


கடந்த, 2007 ம் ஆண்டு,  இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பிரிஸ்டால் நகரத்தைச் சேர்ந்த இசைப்பள்ளி ஆசிரியையான   எலுயிஸ்,  புத்தாண்டைக்  கொண்டாடுவதற்காகக்   கேரளாவிற்கு வந்துள்ளார்.  அப்போது எலுயிஸும்  காமராஜூம் சந்தித்துக் கொண்டனர்.  அப்போது  இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காமராஜ் அவ்வப்போது  லண்டன் சென்று தனது காதலை வளர்த்துள்ளார் இவர்களின்  திருமணத்திற்கு இரு வீட்டாரும்  சம்மதம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து,   கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி, கிருஷ்ணகிரி அருகே உள்ள ஐகுந்தம் சீனிவாச பெருமாள் கோயிலில் இந்து முறைப்படி  இருவருக்கும் திருமணம் நடந்தது. 22 ம் தேதி நடந்த  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெண்வீட்டார் சார்பாக  லண்டனிலிருந்து  வந்திருந்த 20 பேரும்  இந்திய பாரம்பரிய உடையில் வந்து ஆச்சர்யம் தந்தார்கள். காமராஜுக்கு இன்னும் லண்டனில் குடியுரிமை வழங்கப்படாததால் டூரிஸ்ட் விசாவில் தான் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

ஏழு மாத கர்ப்பிணியான எலுயிஸிற்கு, வளைகாப்பு நடத்தவேண்டும் என்று காமராஜின் பெற்றோர்  லண்டனில் வசித்து வரும் எலுயிஸ் தந்தை ராபர்ட் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ஏஞ்சலா ஆடம்ஸ் ஆகியோரை அழைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு விசா கிடைக்காததால், எலுயிஸ் மட்டும் வந்திருக்கிறார்.  காமராஜின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் முன்னிலையில், எலுயிசிற்கு நேற்று மதியம் 1மணியளவில் வளைகாப்பு நடந்து முடிந்தது.

இதுகுறித்து எலூயிஸ் கூறும்போது,   “எனக்கு தமிழ்க்  கிராமிய கலாச்சாரப்படி வளைகாப்பு சடங்குகள் நடத்தியது  மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.   இங்கு உள்ளவர்களிடம் தமிழ் மொழியில் பேச முடியாமல் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.  இங்கிலாந்தில் தமிழ்ப்  பள்ளியில் தமிழ்க் கற்று வருகிறேன். விரைவில் உறவினர்களுடன்  தமிழ் மொழியில் பேசுவேன் என்றார்.


No comments:

Post a Comment