Monetize Your Website or Blog

Saturday, 6 February 2016

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

‘மாரி அம்மா உத்தரவு’ குழு! பெயரைக் கேட்டுவிட்டு ஏதோ இது சித்தர் பீடம் செல்லும் பக்தர் குழு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளப்போகிறீர்கள். இது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புறப்பட்டிருக்கும் சூழலியல் குழு. 

“மாரி என்றால் மழை. மாரியின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததால் “என் இருப்பிடத்தை காலி செய்” என்பதை வெள்ளமாக வந்து உணரத்தி உத்தரவிட்டிருக்கிறது. அதனை மக்களிடமும் மாவட்ட நிர்வாகங்களிடமும் எடுத்துக் கூற பயணப்பட்டிருக்கும் குழு நாங்கள். அதனால் ‘மாரி அம்மா உத்தரவு’ குழு.” என்கிறார்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னை நோக்கி சைக்கிளில் பேரணி சென்று கொண்டிருக்கும் ‘மாரி அம்மா உத்தரவு’ குழுவினர்.

பயணத்திட்டத்தின்படி இன்று வேலுார் வந்த அவர்கள் மூன்று சக்கர சைக்கிளை மிதித்துக்கொண்டு முன்னூறு கிலோமீட்டர் கடந்து வந்து பொதுமக்களிடம் நீர் நிலை ஆக்கிரமிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அளித்துக்கொண்டிருந்தனர். 

இந்த பயணத்தை தொடங்கி நடத்தி வரும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்தவருமான பியூஷ் மானுஷிடம் பேசினோம் “ சேலத்தில் பல ஏரி, குளங்கள், ஓடைகள் குப்பை மேடுகளாகவும் பட்டா நிலங்களாகவும் ஆக்கிரமிப்பாலும் அழிந்து வருகிறது. சேலத்தில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரி, அரிசிப்பாளையம் தெப்பகுளம் தர்மபுரி இலக்கியம்பட்டி குளம் போன்றவற்றை எங்கள் குழு சார்பில் சுத்தப்படுத்தி பராமரித்தோம் சமீபத்தில் பெய்த மழையில் இவற்றில் எல்லாம் கரை ததும்ப நீர் உள்ளது. இலக்கியம்பட்டி ஏரி 32 லட்சம் கண அடி தண்ணீர் தேங்கும் அளவுக்கு உள்ளது. 

எங்களை போன்ற சிறிய குழுக்களாலேயே இத்தனை நீர் நிலைகளை மீட்டெடுக்கும் போது அரசு மனது வைத்தால் எல்லா ஏரி குளங்களையும் பராமரித்து தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கொஞ்சம் கூட முயற்சிக்க மறுத்து முடங்கிப்போயுள்ளது நிர்வாகம்.” என்றவர், “சேலத்தில் ஏரிக்குள் பட்டா கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு தனியார் மருத்துவமனை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. தேமுதிக எம்.எல்.ஏவிற்கு 6 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி மூன்று சக்கர சைக்கிளில் பிரசாரம் செய்தேன். கண்டுகொள்ளவே இல்லை. 

அனைத்து மக்களிடமும் இது பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னைக்கு பேரணி புறப்பட்டோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் என்று வரும் வழியில் எல்லாம் பொது மக்கள், இளைஞர்கள் கல்லூரிகள் பள்ளிகளில் நீர் நிலைகளின் நிலைமையையும்…அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தையும் பேசி வருகிறோம். பள்ளி கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக எங்கள் பயணத்தில் பங்கேற்கிறார்கள்.
சென்னை பெருமழையால் பாதிக்கப்பட்டது. பாதிப்பிற்கு மழை மட்டும் காரணம் அல்ல, ஆக்கிரமிப்புகளால்தான் அதிகம் பாதிப்பு. ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்கள். இவ்வளவு பெரிய அழிவிற்கு பிறகும் இன்னும் பல இடத்தில் ஏரிகளில் கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. நாங்கள் ஆம்பூர் வரும் போது பாலாற்றை பார்த்தோம்.
நகராட்சியின் கழிவுகள் எல்லாம் பாலாற்றங்கரையில் தான் கொட்டப்படுகிறது. கழிவு நீர் அதில் தான் கலக்கிறது. இவ்வளவிற்கு பிறகும் நம் அரசு பாடம் கற்கவில்லை. அடுத்து காஞ்சிபுரம் செல்கிறோம். ஆக்கிரமிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர் காஞ்சிபுரம். 

சென்னை முழுக்க சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஏரி குளங்களை பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுவரை எங்கள் பிரச்சாரம் ஓயாது. தூய்மையான நீரினை அடுத்த சந்ததிக்கு அளிப்போம்.” என்றார். 

மாரி அம்மா மனசு வைத்தால் போதுமா மாநிலத்தை ஆளும் அம்மாவும் மனசு வைக்க வேண்டுமே!


No comments:

Post a Comment