Monetize Your Website or Blog

Monday, 8 February 2016

ஆசை இல்ல பசி சார்... புனே அணியில் ரவிச்சந்திர அஸ்வின் போல் ஒருவன்!

‘எந்தக் குப்பனோ சுப்பனோ இத செய்ய முடியுமா?’- உன்னைப்போல் ஒருவன் படத்திற்காக எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய ஃபேமஸ் டயலாக். நேற்று நடந்த ஐ.பி.எல் ஏலத்தைப் பார்க்கும்போது நமக்கும் இந்தக் கேள்வி நமக்கும் எழுகிறது. தமிழக அணிக்காக வெறும் 3 ரஞ்சி போட்டிகள், இரு  50 ஓவர் போட்டிகள், 6 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடிய ஒரு வீரரால், ஐ.பி.எல்யில் நான்கரைக் கோடிக்கு ஏலம் போக முடியுமா என்று நினைக்கையில் நமக்குள்ளும் அக்கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், அது சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார் அதை எழுதிய வசனகர்த்தாவின் மகன் அஸ்வின் முருகன். ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி இவரை அவ்வளவு பெரிய தொகைக்கு அஸ்வினை வாங்க கிரிக்கெட் உலகமே வாய் பொழந்து நிற்கிறது. 

மார்டின் குப்தில், உஸ்மான் கவாஜா, ஆரோன் ஃபின்ச் என உட்ச நட்சத்திரங்கள் எல்லாம் விலை போகாமல் ஏமாற்றமடைந்து கொண்டிருந்த ஏலத்தில், அஷ்வின் முருகன் என்ற பெயர் 10 லட்சம் என்ற அடிப்படை விலையோடு அறிவிக்கப்படுகையில், இவர் இவ்வளவு விலை« பாவாரென்று யாரும் பெரிதாய் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். பத்தெடு ஒன்று பதினொன்று என்று நினைத்தார்கள்.  ஆனால் நடந்ததோ வேறு. புனே அணி ஏலத்தைத் தொடங்க, ராயல் சேலஞ்சர்சும் கோதாவில் இறங்க, ஜெட் வேகத்தில் எகிறியது அஸ்வினின் மதிப்பு. கடுமையான போட்டிக்கு மத்தியில் அடிப்படை விலையிலிருந்து 45 மடங்கு அதிகமாக நாலரைக் கோடிக்கு புனே அணியால் வாங்கப்பட்டார் இவர்.


ஆசை இல்ல பசி
கடந்த 2012ம் ஆண்டு பெரும் கனவோடு தமிழக ரஞ்சி அணியில் இடம்பெற்றார் அஸ்வின். விளையாடிய மூன்று போட்டிகளில் 246 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்ற, அத்தோடு அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகள் தமிழக அணியில் வாய்ப்பே இல்லை. இரண்டு ஆண்டுகள் ஒரு வீரர் ரஞ்சி அணியில் ஆடாமல் விட்டுவிட்டால் அவரது எதிர்காலமே பாழகி விடும்.  ஆனால் அஸ்வின் ஒயவில்லை. பில்லா-2 படத்தில் அஸ்வினின் தந்தை முருகன் ஒரு வசனம் எழுதியிருப்பார் - “ இது ஆசை இல்ல அண்ணாச்சி பசி” என்று. ஒருவேளை அது தன் மகனைப் பார்த்து தான் எழுதினாரோ என்னவோ? அடங்காத  பசியின் காரணமாக, பந்தை அவர் சுழற்றிக் கொண்டேதான் இருந்தார்.  தானும் சுழன்றுகொண்டே இருந்தார்.வாய்ப்பு இல்லையென்றாலும் கிரிக்கெட்டை ஒரு போதும் இவர் விடவேயில்லை. ஒவ்வொரு தொடரிலும் இவர் ஜொலிக்க, மீண்டும் தமிழக அணியில் வாய்ப்பு கிடைத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியில் அஸ்வின் இடம்பெற்றார்.முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார். காலிறுதியில் இவர் மட்டுமின்றி தமிழக அணியும் சொதப்ப ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த நிலையில் தான் தொடங்கியது சையது முஸ்தாக் அலி டி20 போட்டிகள். தமிழக அணி குரூப் பிரிவை தாண்டாத நிலையிலும் அஷ்வினின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 6 போட்டிகளில் 23 ஓவர்கள் பந்துவீசி, 127 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஷ்வின். சராசரியாக ஒரு ஓவருக்கு 5.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மிகச்சிக்கனமாய்ப் பந்துவீசினார். அதில் இரண்டு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி, கவனம் ஈர்த்தார் அஷ்வின். இவரது திறமையை அறிந்த ரவிச்சந்திரன் அஷ்வினே, புனே அணியில் இவரை சேர்க்க சிபாரிசு செய்திருக்கலாம் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூட முருகன் அஷ்வினைப் 
பாராட்டியுள்ளார். வெறும் 23 ஓவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இவரைப் புனே அணி அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்க வாய்ப்பில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு தான் இன்று அஷ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பின் காரணம்.
அஷ்வின் அன்ட் கோ
லெக் ஸ்பின்னரான அஸ்வின் கூக்ளி வீசுவதில் வல்லவர். டி20 போட்டிகள் இந்த வகையான பந்துகள் விக்கெட் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையுமென்பதால், 20 ஓவர் போட்டிகளில் அஸ்வின் சாதிக்க வாய்ப்புகள் அதிகம். ஃபேஸ்புக்கில் கிரிகின்ஃபோவின் படங்களை ஷேர் செய்து கொண்டிருந்த அஸ்வின், இன்று ஃபேஸ்புக்கில் சென்சேஷனாக வலம் வருகிறார். 25 வயதான முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் படித்த அதே எஸ்.எஸ்.என் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படித்தவர். அஷ்வினுக்கும் இவருக்குமிடையே நல்ல நட்பு உள்ள நிலையில், ‘இவரும் அவரைப் போலவே முன்னனி பந்துவீச்சாளராய் வரவேண்டும் என்பது தான் தமிழர்கள் அனைவரின் ஆசையும்.


உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 போன்ற படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இரா.முருகனின் மகன் தான் அஷ்வின். மூன்று விரல், அரசூர் வம்சம், விஸ்வரூபம் போன்ற நூல்களின் ஆசிரியரும் இவரே. புனே அணிக்குத் தன் மகன் தேர்வான செய்தியை ஃபேஸ்புக்கில் அறிவிக்க தமிழகமே கொண்டாடத் தொடங்கிவிட்டது. இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகப் பந்துவீசும் பட்சத்தில் தமிழகம் மட்டுமின்றி மகராஸ்ட்ரமும்  அஸ்வினைக் கொண்டாடும். ஆப் ஸ்பின்னரான ரவி அஸ்வினோடு கூட்டணி போட்டு எதிரணியை சூறையாடுவாரா இந்த லெக் ஸ்பின்னர் அஸ்வின்?

 இதற்கான விடையை பந்தைச் சுழற்றும் அஸ்வினின் விரல்கள் தான் சொல்ல வேண்டும்!


No comments:

Post a Comment