நமது கடின உழைப்பால் நம்மிடம் இருந்து பாடம் கற்க தற்போது உலகமே காத்திருக்கிறது என்று ஒடிஸா மாநிலம் ஜட்ணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலம் ஜட்ணியில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, ''வருகின்ற 2022-ம் ஆண்டு வாக்கில் அனைவருக்கும் வீடு கட்டித் தர தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதி பூண்டிருக்கிறது. எனவே, குறைந்த செலவில் வீடுகள் கட்டுவதற்கு கழிவுகளில் இருந்து புதுப்பிக்கவல்ல கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்க வழிவகைகளை காண வேண்டும்.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தற்போதைய அவசியத் தேவை புதிய கண்டுபிடிப்புகள்தான். இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்களை நாம் முதலில் தொடங்கியபோது, அவை நமக்கு புதிதாகத்தான் இருந்தன. நமது கடின உழைப்பால் நம்மிடம் இருந்து பாடம் கற்க தற்போது உலகமே காத்திருக்கிறது.
இளம் விஞ்ஞானிகள் கடினமாக பாடுபட்டு சாதனை மேற்கொள்ள வேண்டும். தங்களது ஆய்வுப் பணிகள் மூலம் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். நமது மாணவர்களும் ஆசிரியர்களும் மிகத் தீவிரமாக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களது பொன்னான நேரத்தில் சில மணி நேரத்தை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் செலவழித்து அவர்கள் மத்தியில் அறிவியல் உணர்வை ஊட்ட வேண்டும். அதுவே அவர்கள் நாட்டுக்கு ஆற்றும் அரிய சேவை.
பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை வளர்த்தெடுக்க வேண்டும். குறிப்பாக சுரங்கத்தைத் தோண்டாமல் நிலக்கரியை அப்படியே எரிவாயுவாக மாற்ற முடியுமா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மாசுவை ஏற்படுத்தாத சுத்தமான எரிசக்தி நமக்கு கிடைக்கும். இந்தத் துறையில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளைத் தேடலாம்" என்றார்.
No comments:
Post a Comment