Monetize Your Website or Blog

Tuesday, 5 April 2016

அழகிரி கண்டுபிடித்த தேர்தல் சுற்றுலா!


தை கண்டுபிடித்தது அழகிரி. இன்று ஒட்டுமொத்த கட்சிகளும் இதை மிகச்சரியாக பின்தொடர்ந்து வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பார்முலாவுக்குப் பெயர் தேர்தல் சுற்றுலா. ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, பசுமை சுற்றுலா என்று செல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த தேர்தல் ஜாலி சுற்றுலா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


தென் மாவட்டங்களில் சமீப காலமாக மிகப்பெரிய அளவில் இந்த சுற்றுலா பிரபலமாகி வருகிறது. பல வருடங்ளாக சிறிய அளவில், ரகசியமாக நடந்து வந்தாலும், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின் மிகவும் பிரபலமாகிவிட்டது இந்த சுற்றுலா.

தென் மாவட்ட மக்கள் விவசாயம் பொய்த்ததாலும், சரியான வேலை வாய்ப்பு இல்லாததாலும் பஞ்சம் பிழைக்க மும்பை, சென்னை, கோவை, திருப்பூர் என்று நகரங்களை நோக்கி வேலை தேடி செல்ல ஆரம்பித்தனர். இப்படி தனியாகவும், குடும்பத்துடனும் இடம் பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை,  ஒரு தொகுதிக்கு பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரத்திற்கும் மேல் இருக்கும். இந்த புலம் பெயர்ந்த வாக்களர்களை குறிவைத்து,  அவர்களை அழைத்து வந்து தங்களுக்கான வாக்குளை வாங்கிக்கொள்வதுதான் இந்த தேர்தல் சுற்றுலாவின் பார்முலா!

ஒரு சட்டமன்ற தொகுதியில் வெற்றி, தோல்வியை பத்தாயிரம் வாக்குகளிலிருந்து நூறு வாக்குகள் கூட தீர்மானிக்கும். முன்பெல்லாம் கள்ள ஓட்டுப் போடுவது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருந்தது. இன்று தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிற கடுமையான விதிமுறைகளால்,  கள்ள ஓட்டு போடுவது மிகவும் சிரமமாகி விட்டது. அதனால்தான் இப்படி ஒரு டெக்னிக். இந்த நிலையில், தங்களுக்கு வரும் வகையில் வாக்குகளை கவர்வது எப்படியென்று அரசியல் கட்சிகள் யோசித்தபோது உதித்ததுதான் வெளியூரிலிருக்கும் மக்களை தேர்தலன்று ஊருக்கு அழைத்து வரும் ஏற்பாடு.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது,  தென் மாவட்டத்தில் அழகிரி பெரும் சக்தி படைத்தவராக இருந்தார். அந்த நேரத்தில் திருமங்கலம் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய பொறுப்பு அழகிரிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் இந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போதுதான் வாக்காளர்கள் பலரும் குடும்பத்துடன் வெளியூர்களில் இருப்பது தெரிய வந்தது. உடனே தன்னுடைய ஆட்களை தயார் செய்து,  வெளியூர் வாக்காளர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை சேகரித்தார். சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு ஆட்களை அனுப்பி அட்வான்ஸாக 500 கொடுக்க உத்தரவிடப்பட்டது. ''தேர்தல் நாளுக்கு முதல் நாள் வாகனங்கள் வரும், அதில் ஏறி வந்து விடுங்கள்'' என்று அவர்களுக்கு நினைவுப்படுத்தி விட்டு வருவார்கள்.

அதேபோல் தேர்தலுக்கு முதல் நாள் அனைத்து ஊர்களிலிருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்தார்கள். அன்று அவர்களுக்கு சாப்பாடு, பணம் வழங்கப்படும். ஓட்டுப்போட வண்டி ஏற்பாடு பண்ணி, சாப்பாடு போட்டு, செலவுக்கு பணமும் கொடுத்ததால் அவர்கள் சொல்கின்ற சின்னத்தில் மறுப்பேதும் சொல்லாமல் முத்திரையிட்டு விடுவார்கள். கூடவே தங்களுடைய வீடுகளுக்கு சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு மகிழ்ச்சியாக ஊர் திரும்புவார்கள்.


அழகிரியின் இந்த திட்டம் அதிரடி வெற்றியை கொடுத்தது. திருமங்கலம் வெற்றியில் இந்த பார்முலாவும் கைகொடுத்தது. இதற்குப்பின் அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும், இதே திருமங்கலம் பார்முலாவைத்தான் பல இடைத்தேர்தலிலும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் வரைக்கும் கூட இது பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வருகின்ற தேர்தலிலும் இந்த பார்முலாவை கடைபிடிக்க அனைத்து கட்சிகளும் ரெடியாகி வருகின்றன. வருகிற தேர்தலிலும் வெளியூர் வாக்காளர்களை கொண்டு வருவதற்கு கட்சியினர் தனி பட்ஜெட்டே போடுகிறார்கள்.

சென்னையில் கூட, ரங்கநாதன் தெரு கடைகளில் வேலை பார்க்கிற வெளியூர் இளைஞர்கள் பலரையும் குறிவைத்து, ஓட்டுப்போட அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. கட்சிகள் அதற்கான பேச்சுவார்த்தை பேரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் ஒருபக்கம் நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக என்னென்னவோ செய்து வரும் நிலையில்,  நூறு சதவீத வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாக அமையவேண்டும் என குறி வைக்கின்றன சில அரசியல் கட்சிகள்.
இதை தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது?



No comments:

Post a Comment