Monetize Your Website or Blog

Wednesday, 20 July 2016

போலி ஆவணம், 24 மணி நேர மௌனம், அதிகாரி மாற்றம்! - ரூ.570 கோடி கன்ட்டெய்னர் மர்மம்


திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்ட்டெய்னர் பணம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.' சட்டரீதியிலான பணம் என்றால், இவ்வளவு மர்மங்களோடு ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமா?' என கேள்வி எழுப்புகின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். 





2016 சட்டமன்றத் தேர்தல் சமயம், மே 13-ம் தேதி அன்று திருப்பூர் அருகில் மூன்று கன்ட்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை.அந்த  கன்ட்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த லாரிகள் பறிமுதல் சம்பவத்தின் பின்னணியில்,உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வருவதற்காக, சி.பி.ஐ விசாரணை கோரியிருந்தார் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்.
அவர் தன்னுடைய மனுவில், 'மூன்று கன்ட்டெய்னர்களிலும் ரூ.570 கோடி பணம் இருந்துள்ளது. இதைக் கொண்டு செல்ல, ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் இந்தப் பணத்திற்குக் காலதாமதமாக உரிமை கொண்டாடியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, 'இந்த வழக்கை விசாரிப்பதற்கு முகாந்திரம் இருக்கிறதா என சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து கன்ட்டெய்னர் விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், தற்போது சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் கூறும்போது, "கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கன்ட்டெய்னரில் பணம் கொண்டு செல்லப்பட்டது. சட்டரீதியாகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என வங்கி அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால், பிடிபட்ட கன்ட்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை. விசாகப்பட்டினம் முகவரியில் உள்ள அந்த லாரிகளில் போலியான நம்பர் பிளேட்டுகள் (AP 13 X 5204, 8650, 5203) பொருத்தப்பட்டுள்ளன. இதுதான் எங்களது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. பணம் பிடிபட்டதில் இருந்து 24 மணி நேரம் வரையில், அந்தப் பணத்திற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.


ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு வங்கியில் இருந்து இன்னொரு மாநில வங்கிக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்போது, மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில எல்லையைக் கடப்பது வரையில், அவர்களது பாதுகாப்பில் பணம் இருக்கும். அதன்பிறகு, பணம் சென்று சேரும் மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பை வழங்குவார்கள். இவை எதுவுமே திருப்பூரில் பிடிபட்ட கன்ட்டெய்னர் விவகாரத்தில் கடைபிடிக்கப்படவில்லை. சட்டரீதியான பணத்தைக் கொண்டு செல்ல, சட்டத்தை மீறி வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டது ஏன்? பணம் பிடிபட்ட நேரத்தில் யார் யாருக்கு போன் மூலம் பேசினார்கள்? வங்கி அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது ஏன்? 570 கோடி மட்டும்தான் கன்ட்டெய்னரில் இருந்ததா என்பதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்கின்றனர். 
"கோவை மாவட்டத்தில் நீண்டகாலமாக கோலோச்சி வந்த மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் அவர், கோவை திரும்புவதற்கு முன்னதாகவே புதிய அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் நியமித்துவிட்டார். கன்ட்டெய்னர்  பணம் பிடிபட்ட நேரத்தில், முந்தைய அதிகாரி சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருக்கிறது. வேறு எந்த மாவட்டங்களின் முக்கிய அதிகாரியும் மாற்றப்படாமல், கோவைக்கு மட்டும் புதிய அதிகாரியைக் கொண்டு வந்ததே, கன்ட்டெய்னர் ரகசியங்களைக் காப்பதற்குத்தான். அரசுக்கு மிகுந்த விசுவாசமாக இருக்கும், அந்த அதிகாரிக்கு மட்டும் இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுவது ஏன்?" என  கேள்வி எழுப்புகிறார்கள் கோவை வருவாய்த்துறை அதிகாரிகள். 

'கன்ட்டெய்னர்  பணம் வங்கியின் பணம்தானா?' என்ற கேள்வியை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் கேட்டோம். "கண்டெய்னர் பணம் முழுக்க முழுக்க வங்கியுடையதுதான் என அதிகாரிகள் தெளிவாகக் கூறுகின்றனர். பணம் கொண்டு செல்லப்படும்போது முறையான கேஷியர் இல்லாமல் இருந்திருக்கலாம். லாரியின் உரிமையாளர் போலியான நம்பர் பிளேட் வைத்திருந்ததோ, ஒரே பதிவு எண்ணில் மூன்று வாகனங்களும் இருந்ததோ வங்கியின் குற்றம் என்று சொல்ல முடியாது என ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சொல்கின்றனர். 'பணம் எங்களுடையதுதான்' என ஸ்டேட் வங்கி வைத்திருக்கும் ஆதாரங்களை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இந்த வழக்கில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. சி.பி.ஐ அதிகாரிகளே அந்த மர்மத்தை உடைக்கட்டும்" என்றார் தெளிவாக.




No comments:

Post a Comment