Monetize Your Website or Blog

Wednesday, 20 July 2016

ஏழ்மையிலும் நேர்மை... சென்னை தம்பதிக்கு கிடைத்த பெருமை!


சென்னை மெரீனா கடற்கரையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 27 பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த  பெண்ணை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரில் அழைத்துக் கௌரவித்தார்.


சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே சர்வீஸ் சாலையில் அமுதா  என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறன்று அவரது டீக்கடை அருகே பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த அமுதா உள்ளே திறந்து பார்த்துள்ளார். பையினுள் தங்க நகைகள், செல்போன் மற்றும் பணம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா, அது குறித்து தனது கணவர் திருமலையிடம் தெரிவித்துள்ளார்.
தவறவிட்ட பையைத் தேடி யாராவது வருகிறார்களா என சிறிது நேரம் இருவரும் காத்திருந்துள்ளனர். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து போலீஸ் அதிகாரி ராஜாராமை தொடர்பு கொண்ட திருமலை, பை குறித்து தகவல் அளித்துள்ளார். அந்தப் பையை அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில்  ஒப்படைக்குமாறு அவர் அறிவுரை வழங்கியதன்பேரில் தம்பதியர்  அந்த பையை உடனடியாக அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒப்படைத்தனர்.இந்தக் காலத்தில் இப்படி ஒரு அரிய குணமா என்று அங்கிருந்த போலீசார் தம்பதியரின்  நேர்மையைப் பாராட்டினர்.


இதற்கிடையே கடந்த 18ம் தேதி ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகீமுனா ராணி என்பவர் தனது 27 பவுன் நகைகள் கொண்ட பையைத் தவறவிட்டது குறித்துப் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மகீமுனா ராணியை அழைத்த போலீசார்  முறையான விசாரணைக்குப் பின், நகைகளுக்கு அவர்தான் சொந்தக்காரர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு 27 பவுன் நகை, ரூ.750 பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை அவரிடம் ஒப்படைத்தனர். 

அத்துடன் அமுதாவின் நேர்மை குறித்தும் போலீசார், மாநகர கமிஷனருக்கு அறிக்கை அளித்திருந்தனர். இதையடுத்து நேற்று அமுதாவைத் தனது  அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்த சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன், அவரது நேர்மையைப் பாராட்டியதோடு பரிசும் அளித்து கௌரவித்தார்.

ஏழ்மையிலும் நேர்மையைக் கடைப் பிடித்த அமுதா தம்பதியரை அக்கம் பக்கத்தினரும் பாராட்டினர். 



No comments:

Post a Comment