Monetize Your Website or Blog

Tuesday, 5 July 2016

சுவாதி கொலை வழக்கு: நீதிபதியிடம் ராம்குமார் 20 நிமிட ரகசிய வாக்குமூலம்!


சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் நேரடியாக நடத்திய விசாரணைக்குப்பின், அவரை  வருகிற 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி. சாப்ட்வேர் என்ஜினீயரான அவர், கடந்த மாதம் 24-ம் தேதி காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும்அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தக் கொலையில்,  செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

போலீசார் பிடிக்கச் சென்றபோது, ராம்குமார் தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


மறுநாள் ராம்குமார் ஓரளவு குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஒருதலைக்காதலில் சுவாதியை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மேல் விசாரணைக்காக இன்று(திங்கள்)அதிகாலை ராம்குமார் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். 

இதற்காக நெல்லை முதலாவது குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ராமதாஸ், நெல்லை அரசு மருத்துவமனை சென்றார். ராம்குமாரின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரி  பார்த்த பின்னர் அவரை சென்னை கொண்டு செல்ல ஒப்புதல் வழங்கினார். 

இன்று அதிகாலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு  மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி வார்டில் ராம்குமார் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்  மயில்வாகனன் தலைமையில் ராம்குமாரின் உடல் நிலையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


இன்று காலை முதல் ராம்குமார் நன்கு பேசும் நிலையில் இருந்ததால், அவரிடம் வாக்குமூலம் பெற எழும்பூர் 14-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி கோபிநாத், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் வந்தார். மருத்துவ ஆவணங்கள், போலீசாரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர் சரிபார்த்த பிறகு ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார். 

இந்த ரகசிய விசாரணை சுமார் 20 நிமிடங்கள் வரை நீண்டது. விசாரணைக்குப்பின் ராம்குமாரை வருகிற 18 ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். 

ராம்குமார் கழுத்தில் போடப்பட்டுள்ள தையலைப் பிரிக்க இன்னும் ஒருவாரம் ஆகும் என்பதால் சிகிச்சைக்குப்பின் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  




No comments:

Post a Comment