ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போன்றே, மாதிரி கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகம முறைப்படி அக்கோயில் திறக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல், கிருஷ்ணா ஆற்றில் புஷ்கரம் தொடங்க உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பக்தர்கள் குளிக்க வசதியாகப் படித்துறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.
சில கரையோரங்களில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற புனித ஸ்தலங்களின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஏழுமலையான் மாதிரி கோயிலை அங்கு ஏற்படுத்தத் திட்டமிட்டது. அதற்காக விஜயவாடாவில் உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில், ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்கும் பணிகள் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்கும் பணி, இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்பதால், ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகம முறைப்படி கோயில் திறக்கப்பட உள்ளது. இதற்காக, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இருந்து புஷ்கர யாத்திரை தொடங்கி ஒண்டிமிட்ட, அகோபிலம், ஸ்ரீசைலம் வழியாக விஜயவாடாவில் உள்ள ஏழுமலையான் மாதிரி கோயிலை ஆகஸ்ட் 4-ம் தேதி வந்து அடைய உள்ளது. அத்துடன், ஏழுமலையான் கோயில் வளாகத்தில் தேவஸ்தானம் சார்பில் புகைப்பட, நிழற்பட, புத்தகக் கண்காட்சி என ஒரு ஆன்மிக கண்காட்சிக்கே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு போலவே, இங்கும் ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இவற்றுடன், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் தினசரி 30 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வசூலாவதாகவும், கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, பக்தர்கள் 3.4 கோடி ரூபாய் பணத்தை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment