பிளாஸ்டிக் பைகளை நாம் அனைவரும் ஒரு சாபமாகக் கருதி வரும் நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், வால்னி என்னும் கிராமவாசிகளுக்கு அது வரமாக மாறியிருக்கிறது. ஆம், பிளாஸ்டிக் பைகளை ஒரு வரமாகக் கருதுகின்றனர் அந்த கிராம மக்கள். அங்கு குளம் குட்டைகளில் தேங்கும் நீர் விரைவில் மண்ணில் வடிந்து நிலத்தடிக்குச் சென்று விடுவதால் மழைநீரைச் சேமிக்க முடியாமல் அவர்கள் பல வருடங்களாக தண்ணீர் பிரச்னையை சந்தித்து வந்தனர்.
நாக்பூரில் இருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள இக்கிராமத்தில், ஏறத்தாழ 30 நீர்நிலைகள் உள்ளன. ஆனால், அங்கு நீரைச் சேமிக்க முடிவதில்லை. அங்குள்ள மாநில அரசு, Shet Tale Yojana என்னும் திட்டத்தின்படி, பிளாஸ்டிக் ஷீட்களை மானிய விலையில் அளித்து, அந்த குளங்களுக்கு அடிப்பகுதியில் போடும்படி அறிவுறுத்தியது. ஆனால், அந்த ஷீட்களின் விலை அதிகம் என்பதால், கிராமத்து மக்கள் அதை உபயோகிக்க முடியவில்லை. அதனால், இதற்கு ஒருதீர்வை அவர்களே கண்டுபிடித்தனர்.
பயன்படுத்தப்பட்டு, தூக்கி வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சேகரித்து, வீட்டுப் பெண்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அதைத் தைத்து, பெரிய ஷீட் போல மாற்றி விடுவார்கள். பிறகு அதை குளத்தின் அடியில் விரித்து, அதன்மேல் ஒரு அடிக்கு மண்ணைப் போட்டு விடுவார்கள்.
இதன்மூலம், மழைக்குப் பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை நீரை சேமிக்க முடிகிறது. இத்திட்டம் வெற்றி அடைந்ததைக் கண்டு, பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது இதைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதன்மூலம், இரண்டு பயன்கள்.
* பிளாஸ்டிக் பைகளை எரித்து, அதனால் உருவாகும் மாசினை தடுக்கமுடிகிறது. அதுமட்டுமின்றி, பைகள் எந்தவிதத்திலும் குப்பைகளாகச் சென்றடையாமல் பயன்படுகின்றன.
* நீரை பல மாதங்கள் சேமிக்க முடிகிறது. இதனால், வால்னி கிராம மக்கள் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் வாழ்கின்றனர்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகிலேயே, பிளாஸ்டிக் பைகள் மிகப் பெரிய அபாயமாக மாறி விட்டன. பிளாஸ்டிக்கை புதைக்க முடியாது, காரணம் மட்காது. எரிக்க முடியாது, காரணம் காற்று மாசுபடும். நீர்நிலைகளில் போட முடியாது காரணம் நீர்வாழ் உயிர்களுக்கு ஆபத்து.
ஆனால், மறுபுறம் இப்படி பிளாஸ்டிக்கை உபயோகமாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதைக் கண்டறிந்து நாம் செயல்பட்டாலே, பிளாஸ்டிக் குப்பைகளை இயற்கைக்கு பங்கமில்லாமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment