நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று புதிய அமைச்சர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை 2வது முறையாக நேற்று பெரியளவில் மாற்றியமைத்துள்ளார். இதில் எஸ்.எஸ்.அலுவாலியா, எம்.ஜே.அக்பர் உட்பட19 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அத்துடன் சிறப்பாக செயல்படாத ஐந்து அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையைக் கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, புதிய அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் ''புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நீங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவும் கடின உழைப்புடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக பணியாற்ற வேண்டும். உங்களது பொறுப்புள்ள செயல்பாடுகளால், அரசின் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் பாமரனுக்கும் சென்றடைய வேண்டும். மாதம்தோறும் உங்களின் செயல்பாடுகளை நான் ஆய்வு செய்து உங்களின் பணித்திறன் குறித்து விவாதிப்பேன்.
எனது நோக்கம், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை செய்வதுதான். எனது ஆட்சியின் முடிவில், நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று, நான் மட்டுமே மாற்றத்தை உணர்ந்தால் அது வெற்றி அல்ல. மாற்றத்தை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர வேண்டும். அதுவே எனது வெற்றி.
ஊழலை வேரடி மண்ணாக வீழ்த்திவிட முடியும் என்று மக்களை எனது அரசால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. இந்த மாற்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. அது நடந்திருக்கிறது என்று சொன்னால், நான் செய்ய விரும்புகிற பிற மாற்றங்களும் நடக்கும்" என்று சில செயல்பாடுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
No comments:
Post a Comment