Monetize Your Website or Blog

Friday, 15 July 2016

தேசிய தினத்தில் ரத்தம் சிந்திய பிரான்ஸ்: தீவிரவாத தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாகி இருக்கிறார்கள்.  பிரான்ஸில் ஆண்டுதோறும், ஜூலை 14-ம் தேதி பாஸ்டில் தினமாகக் கொண்டாப்படுகிறது, பாரீஸில் இருந்து 932 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நகரம் நீஸ். வழக்கம் போல், நேற்று இரவு, பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினத்தைக் கொண்டாட மக்கள் குழுமி இருந்தார்கள். பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கொருவர் மக்கள் வாழ்த்துத் தெரிவித்தும் பாஸ்டில் தினத்தைக் கொண்டாடிக் கொண்டும் இருந்தனர். 

அப்போது அந்த இடத்திற்கு கனரக வாகனம் ஒன்றை ஓட்டிவந்த ஒரு நபர், துப்பாக்கியால் மக்கள் இருந்த இடத்தில் சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். இந்தத் திடீர் தாக்குதலில் அங்கிருந்தவர்கள் நிலைகுலைந்து போயினர். பின்னர் மக்கள் இருக்கும் திசை நோக்கி, வாகனத்தைச்  செலுத்தி இருக்கிறார் அந்த நபர். வாகனத்தை விரைவாகவும், மக்கள் திரளின் இடையே குறுக்கும் நெடுக்குமாகவும் ஓட்டி  பலரின்  உயிரைப் பறித்துள்ளார்.

வாகனத்தின் மூலம் படுகொலைகள் நடந்த இடத்திற்கு வந்த பிரான்ஸ் காவல்துறையினர், அந்த நபரை சுட்டுக் கொன்றனர். மர்ம நபர் ஓட்டிவந்த கனரக வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களும், ஆயுதங்களும் இருந்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.  வாகனத்தை ஓட்டிவந்த நபர், நீஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், 31 வயதானவர் போன்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு நலன் கருதி வரும் ஜூலை 26-ம் தேதி வரை, பிரான்ஸில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருந்தது. 'அதை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை' அன்று காலைதான் பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால், அவ்வளவு பாதுகாப்பிலும், இத்தகைய கோரச் சம்பவம் நடந்திருப்பது, பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த சம்பவம் பற்றிப் பேசிய பிரான்ஸ் அதிபர் , " தனது தேசிய தினத்தில், பிரான்ஸ் தாக்கப்பட்டு இருக்கிறது. இது தீவிரவாத தாக்குதல் இல்லை என நாம் மறுக்க முடியாது. தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி இருக்கும் பிரான்ஸ், இந்த தாக்குதல்களை எதிர்த்து கடுமையாகப் போராடும். அவசர நிலை, இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். ஈராக், சிரியா போன்ற நாடுகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து உதவும்.10000 ராணுவ வீரர்கள் கூடுதலாக பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் " என அறிவித்து இருக்கிறார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், " முதல் சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை , எந்தவிதமான பாதுகாப்பும் எங்களுக்கு இல்லை. பாதுகாப்பு வீரர்கள் வருவதற்கு 30 நிமிடங்கள் ஆனது. " என்றார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நீஸ் நகரத்து மருத்துவமனைகள் குருதிக் கொடையாளர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் இதுவரை 80 பேர் பலியாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். பலர் படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் இருக்கிறார்கள். 

உலக தலைவர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.

“அமெரிக்க மக்களின் சார்பாக, பிரான்ஸில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். தீவிரவாதத்தை எதிரக்க பிரான்ஸிற்கு உறுதுணையாக அமெரிக்கா இருக்கும்“ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

“மனிதாபிமற்ற இது போன்ற கொடூரமான செயல்களுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பிரான்ஸ் நாட்டு சகோதரர்களுடன், இந்தியா துணை நிற்கிறது” என மோடி தெரிவித்திருக்கிறார்.



டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்க போன்ற நாடுகள், இந்த அமைப்புகளுக்கு எதிராகப் போர் தொடுக்க ஆயத்தமாகவேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

“இஸ்லாம் என்னும் மதத்தை, தவறாகப் பயன்படுத்தும் சிலருக்கு எதிராக, நாம் போர் தொடுக்க வேண்டும். இது ஒரு நாட்டிற்கு எதிரான போராக இருக்காது” என ஹிலாரி கிளின்டன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுவரையில், இந்த அமைப்பும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. 

ஃபேஸ்புக் சிறப்பு ஏற்பாடு!

சென்னை மழைவெள்ளத்தின்போது, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கோடுகளை ஃபேஸ்புக் ஆக்டிவேட் செய்திருந்தது. தற்போது பிரான்ஸில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிடவும்,பாதிக்கப்பட்ட பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தமது நிலை குறித்தும் நண்பர்கள் நிலை குறித்து பதிவுகள்  செய்யவும் பேஸ்புக் தனி வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த லிங்க் இங்கே....     

https://www.facebook.com/safetycheck/nice-france-attack-jul14-2016/




No comments:

Post a Comment