Monetize Your Website or Blog

Tuesday, 19 July 2016

துருக்கியில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிப்பு!

துருக்கியில் நடத்தப்பட்ட ராணுவ புரட்சி, மக்கள் துணையுடன் முறியடிக்கப்பட்டு உள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவிலும், இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள், குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. வீதிகளில் ராணுவத்தினர் அணிவகுத்தனர். அங்காரா நகரின் மீது ராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன. அதைத் தொடர்ந்து அங்கு ராணுவ புரட்சிக்கான முயற்சி நடைபெறுவதாக பிரதமர் பினாலி இல்டிரிம் அறிவித்தார். ராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசு படைகள் பதிலடி தருவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கிளர்ச்சி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ராணுவ பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாட்டை அமைதிக்கவுன்சில் வழி நடத்துகிறது. ஊரடங்கும், ராணுவ சட்டமும் அமல்படுத்தப்படும்; அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி" என கூறப்பட்டு இருந்தது.


ராணுவ புரட்சி முயற்சிக்கு மத்தியில், அதிபர் தய்யீப் எர்டோகன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி புரட்சி நடைபெற்றிருப்பதாக ராணுவ தரப்பில் வெளியான தகவல், ராணுவ தலைமையின் அங்கீகாரத்தை பெறாத ஒன்று என கூறப்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

ராணுவ புரட்சிக்கான முயற்சி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நாட்டின் அதிபர் எர்டோகன், மார்மாரிஸ் என்ற சுற்றுலா தலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். புரட்சி முயற்சி பற்றி தகவல் கிடைத்ததும், அவர் தனது செல்போன் வழியாக நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்தார். அது டெலிவிஷனில் ஒளிபரப்பானது. அதில் அவர், ராணுவ புரட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டு வந்தார். அவரது அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் களத்தில் இறங்கி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டனர். இதனால் பல இடங்களில் ராணுவத்தினர் கிளர்ச்சியை கை விட்டு சரண் அடைந்தனர்.

அங்காராவில் உள்ள அதிபர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம் கடுமையாக தாக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பும் நடந்தப்பட்டது. இதனால நாடாளுமன்றம் பெரும் சேதம் அடைந்தது. அந்த நகரின் மத்தியில் பெரும் சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இஸ்தான்புல் போலீஸ் தலைமையகத்தின் வெளியே துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றது. விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்புக்காக டாங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இஸ்தான்புல் நகரின் மையத்தில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் கடுமையான துப்பாக்கிச் சண்டையும், குண்டுவெடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றன. அங்காராவில் கிளர்ச்சியாளர்களின் ஹெலிகாப்டர் ஒன்று, படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. நள்ளிரவு 12.45 மணிக்கு ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவின் ஒரு குழு, போலீஸ் படைகளிடம் சரண் அடைந்தது.

இதனிடையே இஸ்தான்புல் வந்து சேர்ந்த அதிபர் எர்டோகன், விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ''நடந்து கொண்டிருப்பது தேசத்துரோகமும், கிளர்ச்சியும் ஆகும். ஊரடங்கு உத்தரவை மதிக்காதீர்கள்.ராணுவ புரட்சியை எதிர்த்து தெருவில் வந்து போராடுங்கள். இதை நடத்துகிறவர்கள், அதற்கான கடும் விளைவை சந்திப்பார்கள்" என எச்சரித்தார்.



கோல்கக் என்ற கடற்படை தளத்தில் ஒரு போர்க்கப்பலை அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக கிரீஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரவில் நடந்த மோதல்களில் மட்டுமே 104 கிளர்ச்சி படையினர் கொல்லப்பட்டனர் என தகவல்கள் கூறுகின்றன.

அதிபரின் அழைப்பை ஏற்ற பொதுமக்கள், ராணுவ புரட்சியாளர்களுக்கு எதிராக களத்தில் குதித்தனர். ஒட்டுமொத்த மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிராயுதபாணியாக ராணுவ புரட்சியாளர்களை எதிர்த்து நின்றனர். அவர்கள் மீதும் புரட்சியாளர்கள் தாக்கியதால் பலர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

ஆனாலும், ராணுவ டேங்குகள் முன்பு படுத்தும், கூட்டம், கூட்டமாக ராணுவ புரட்சியாளர்களை எதிர்த்தும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒருபுறம் மக்களின் எதிர்ப்பையும், மறுபுறம் அரசு படைகளின் தாக்குதல்களையும் சமாளிக்க முடியாத ராணுவ புரட்சியாளர்கள், 5 மணி நேரத்துக்கு பிறகு சரணடைந்தனர். இதனால் ராணுவ புரட்சி தோல்வியில் முடிந்தது.

நேற்று காலையிலும் சிறிது நேரம் பல இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் ராணுவ புரட்சி முயற்சியை மக்கள் முறியடித்து விட்டதாகவும், அதிபரும், அரசாங்கமும் நாட்டின் பொறுப்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

''நிலைமை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது, அரசு படைத்தளபதிகள் மீண்டும் பொறுப்புக்கு வந்து விட்டனர். ராணுவ புரட்சி முயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 2,839 பேர் கைது செய்யப்பட்டனர்” என பிரதமர் பினாலி இல்டிரிம் அறிவித்தார். ஆனாலும், 265 பேர் பலியாகி உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.



இந்த புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் தங்கியுள்ள துருக்கி மத குரு பெதுல்லா குலன் என்பவர் தான் காரணம், அவர் பல்லாண்டு காலமாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெதுல்லா ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார். அவருக்கு பின்னணியில் உள்ள எந்த நாட்டையும் துருக்கி தனது நட்பு நாடாக கருதாது. இது துருக்கிக்கு எதிரான போராக கருதுகிறோம் எனவும் பிரதமர் பினாலி இல்டிரிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

No comments:

Post a Comment