Monetize Your Website or Blog

Saturday, 16 July 2016

அருகாமைப் பள்ளிகள்...பள்ளிக் குழந்தைகளை காக்க அரசு கையாள வேண்டிய உபாயம்!


டந்த 2004 ஆம் ஆண்டு இதே நாளில்தான் எதிர்காலக் கனவுகளை மனதில் தேக்கிக் கொண்டு மகிழ்வுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த 94 பெற்றோர்கள், கொஞ்சநேரத்தில் கதறித்துடித்து கண்ணீர் விட்டுத் தீர்த்த நாள்... கும்பகோணம் என்றால் மகாமகம் என்பது மறந்துபோய் 94 பிஞ்சுகளின் கதறல்தான் கடந்த 12 ஆண்டுகளாக நம் மனதை வதைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 2004 ஜூலை 16 ந்தேதியை அத்தனை சீக்கிரத்தில் யாரும் மறந்துவிடமுடியாது. ஒரே வளாகத்தில் இயங்கிவந்த ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் அன்றைய தினம் எதிர்பாரதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், இந்த விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க பரிந்துரைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதியின் பரிந்துரையை ஏற்க முடியாது எனக் கூறி, இன்பராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 



அந்த மனுவில், "இந்த விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.24 கோடியே 95 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்" என கோரப்பட்டது. தொடர்ந்து மேல்முறையீடுகள், பள்ளியின் நிர்வாகிகள், பொறியாளர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு சிறைத் தண்டனை, பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை, விடுதலையை எதிர்த்து அரசு மேல் முறையீடு என்றெல்லாம் பல வாரங்கள், மாதங்கள் ஓடி 12 ஆண்டுகள் காணாமல் போயிருக்கிறது.

மார்ச் 7, 2016 அன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன் பேரில் இந்த வழக்கு ஜூலை, 13. 2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கில் எப்போது நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதோ அந்த நாளில் இருந்துதான் வட்டியை கணக்கிட ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், சம்பவம் நடந்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், "இந்த 9% வட்டியை சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கையை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து உரிய பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். 

"ஒவ்வோர் ஆண்டும், அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு கடமை முடிந்து விடுகிறதா?... இதுபோன்ற துயரங்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசின் தொலைநோக்கு திட்டம்தான் என்ன? அரசு என்ன செய்தால் இதற்கான தீர்வு முழுமை பெறும்?" என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளரான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்...


''பொதுப்பள்ளி மூலம் அருகாமை கல்விக் கூடங்கள் அமைப்பதே இதற்கான முழுமையான தீர்வு. ஒரு ஸ்ருதி இறப்புக்குப் பின்னரே பள்ளிப்பேருந்துகளுக்கு, வேன்களுக்கு கம்பி அமைக்கணும், டோர் போடணும் என்றெல்லாம் அரசு சொல்ல ஆரம்பித்தது. இப்போது அதற்கு தீர்வு முழுமையாகக் கிடைத்து விட்டதா? அதே போன்ற வேன்கள், பஸ்களில் பயணம் செய்து இந்த ஆண்டு கூட மூன்று வயது, நான்கு வயது பிள்ளைகள் பரிதாபமாக இறந்து போயினர். அரசால் இதை தடுக்க முடிந்ததா? சாலையைக் கடந்து பள்ளிக்கு பிள்ளைகள் சென்றால் விபத்தின் மூலம் உடல் ஊனமோ, மரணம் சம்பவித்தலோ தவிர்க்க முடியாததாகி விடும்

ஜியாகரபிகல் ஏரியா என்று எல்லா நாட்டிலும் உண்டு. குறிப்பிட்ட ஒரு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அந்த வட்டத்தில் வருகிற ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும், அந்த வட்டத்தில்தானே போய் கம்யூனிட்டி சான்று வாங்க முடியும், ஈ.பி. பில் கட்ட முடியும்.
"நெய்பர் ஸ்கூல்" (அருகாமை பள்ளி) என்பது அனைத்து நாடுகளிலும் உள்ளது, நம்முடைய நாட்டைத் தவிர... புவியியல் எல்லை ஒன்றை வரையறுத்து அந்த எல்லைக்குள் உள்ளவர்கள் அந்த எல்லைக்குள் வருகிற குறிப்பிட்ட பள்ளியில்தான் படிக்க வைக்க முடியும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரம் இருந்தால்தானே, பெற்றோர்கள் எந்தப் பள்ளியிலும் சேர்க்க ஏதுவாக இருக்கும்.

இதை யாரால் செய்ய முடியும்...அரசு சக்திகள்தானே செய்ய முடியும்! தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வசதிகளை தருகிறார்கள். இந்த சூழலை உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த அரசுகள்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அனைவருக்கும் சமமான கல்வியை கொடுக்க வேண்டியதும், பொதுப்பள்ளி மூலமாக அருகாமை பள்ளிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அரசின் கடமைதானே...

தீர்வு என்பது முந்தைய அனுபவத்தில் கிடைத்த பலன். இந்தியாவிலுள்ள கல்விக் குழுக்களின் பரிந்துரை, அரசு தன் பொறுப்பில் வழங்கும் கல்வியே தீர்வு, அதுவே பாதுகாப்பு. உலகம் முழுமைக்கும் பொருந்தும் இது இந்தியாவுக்கு ஏன் பொருந்தாது. அஞ்சலி செலுத்துவதும், நஷ்ட ஈடு கொடுப்பதும் தேவைதான். ஆனால் அதுவே தீர்வல்ல" என்றார்.



No comments:

Post a Comment