அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மகனை காரில் அழைத்து வந்த தந்தை விபத்தில் உயிரிழந்தார். ஆனாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மகன் கலந்தாய்வில் கலந்துகொண்டு, சிவில் என்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனா குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் சிவகங்கை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். அவருடைய மகன் பிரதியுனன் (17), பிளஸ்-2 முடித்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் தந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களது கார் உளுந்தூர்பேட்டை அருகே திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஏட்டு ரவீந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை இறந்துவிட்டாலும், அவரது ஆசையை நிறைவேற்ற கலந்தாய்வில் கலந்துகொள்ள பிரதியுனன் நேற்று அண்ணா பல்கலைக்கழகம் வந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு, சிவில் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்து எடுத்துள்ளார்.
இது பற்றி பிரதியுனன் கூறும்போது, ''புதுக்கோட்டையில் இருந்து கடந்த புதன்கிழமை (13-ம் தேதி) இரவு 11-30 மணிக்கு நாங்கள் காரில் புறப்பட்டோம். காரை எனது தாய்மாமா பாக்கியராஜ் ஓட்டி வந்தார். எனது அப்பா ரவீந்திரன் காரின் முன் சீட்டில் அமர்ந்து இருந்தார். நானும் எனது சித்தப்பா அனீசும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தோம்.
காரில் வரும்போது என் அப்பா, நன்றாக படித்து என்ஜினீயர் ஆகவேண்டும் என்று என்னிடம் கூறிக்கொண்டே வந்தார். சிறிது நேரத்தில் அவர் தூங்கிவிட்டார். நான் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு வந்தேன். கார் நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கூட்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ஒரு லாரி திடீரென எங்கள் காரின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் எங்கள் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இதில் நிலைகுலைந்த நாங்கள், செய்வது அறியாமல் அச்சத்தில் எங்களை காப்பாற்றும்படி கூச்சல் போட்டோம். ஆனால் எனது அப்பா மட்டும் எந்த அசைவும் இன்றி அப்படியே இருந்தார். நான் பலமுறை கூப்பிட்டும் அவர் பதில் பேசவே இல்லை. அதன் பிறகுதான் அவர் இறந்துவிட்டது எங்களுக்கு தெரிந்தது. எனக்கும், மாமாவுக்கும், சித்தப்பாவுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றோம்.
காரில் என்னுடன் வந்த என் அப்பா இறந்துவிட்டாரே என்று நான் கதறி அழுதேன். அதன்பின் ஊரில் பஞ்சாயத்து துணைத்தலைவராக உள்ள எனது அம்மா ரேணுகாவுக்கு, அப்பா இறந்தது பற்றி கூறினோம். அவர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதபடி உடனடியாக புறப்பட்டு உளுந்தூர்பேட்டை வந்தார். அப்போது என் அம்மா, உன் அப்பாவின் ஆசையை நீ நிறைவேற்ற வேண்டும் அதனால் உடனே நீ சென்னைக்கு சென்று கலந்தாய்வில் கலந்துகொள் என்றார்.
அதைத் தொடர்ந்து, என்னை ஒரு என்ஜினீயர் ஆக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற நான் கலந்தாய்வில் கலந்துகொள்ள அங்கிருந்து அரசு பஸ்சில் ஏறி சென்னையை அடுத்த பெருங்களத்தூருக்கு வந்தேன். அங்கிருந்து காஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் என்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வுக்கு அழைத்து வந்தார். கலந்தாய்வில் நான் தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவை தேர்ந்து எடுத்துள்ளேன். இனி நன்றாக படித்து எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்" என்று கண்ணீர் வழிய தெரிவித்தார்.
No comments:
Post a Comment