Monetize Your Website or Blog

Friday, 26 August 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.


1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.


2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.
3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்
பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.
4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​
`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.
7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​


8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.
9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.


10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.

ப்ளீஸ் ஹெல்ப்!' நில நடுக்க மணிப்பூரிலிருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான்


சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களையும் காரில் பயணித்தவாறே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.அதன்படி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருக்கும் வங்காளதேசம், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காரில் பயணித்தவாறு பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.



ஆகஸ்டு மாதம் ஆரம்பித்த பயணத்தில், தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜிப்ரான் குழு இருக்கிறது. கடந்த 23-ம் தேதி மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுகள் தொடர்ந்து அங்கு இருப்பதால், மணிப்பூரில் சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

அது பற்றி ஜிப்ரான் தனது ஃபேஸ்புக் தளத்தில் வீதியில் நடந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "மணிப்பூரில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.மியான்மர் செல்வதற்கு நாங்கள் மோரே பார்டரை கடக்க வேண்டியுள்ளது.சில முறை அங்கு செல்ல முயன்ற போது, எங்களது பெர்மிட்டை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.அங்கே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் , நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு நாட்டிற்கும் காரில் செல்ல, கார்னெட் என்னும் பெர்மிட் அவசியம்.எங்களிடம் அந்த பெர்மிட் இருந்தாலும், மியான்மர் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். சென்னைக்கு திரும்பி விடுங்கள் என பலர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், அடுத்த பாடலான 'போகாதே'வை எப்படியும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். எவ்வளவு முயன்றாலும் செப்டம்பர் 2-ம் தேதி தான் மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எங்களது விசா செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களில் 1800 கிலோமீட்டர்களை நாங்கள் கடக்க வேண்டும். பல இடங்களில் உதவிகள் கேட்டு வருகிறோம். நாகாலாந்து பழங்குடியினருக்கும் , மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.அதனால் , மோரே பார்டர் வழியாக மீண்டும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என சொல்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், எங்கள் கார் நுழையும் போதும் பாடல் வெளியாகும் என உறுதியளித்துவிட்டோம். அதனால், இதை தொடரப் போகிறோம்.இங்குள்ள சூழ்நிலை மோசமானதாக இருக்கிறது.ஆனால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்




கூடா நட்பு கேடாய்தான் முடியும்..! வில்லங்கத்தில் முடிந்த விபரீதக் காதல்

கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட காதலால் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் சென்னையை சேர்ந்த பேராசிரியை ஒருவர். கணவன் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார் பேராசிரியை.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மகன் அரவிந்த்குமார். இவர், செம்பாக்கத்தில் உள்ள அத்தை ராஜேஸ்வரி வீட்டில் தங்கி கௌரிவாக்கத்தில் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அரவிந்த்குமாருக்கு பாடம் கற்றுக்கொடுத்தவர் பேராசிரியை கனிமொழி. இவரும் செம்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். கனிமொழிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் ஹரிகரன், இன்ஜினீயர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி கனிமொழியின் வீட்டுக்குச் சென்ற அரவிந்த்குமார் அவரை ஒருதலையாக காதலித்துள்ளார். முதலில் காதலை ஏற்றுக் கொள்ளாத கனிமொழி, அரவிந்த்குமாரின் பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகு காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.


ஒருக்கட்டத்தில் கனிமொழி, தன்னுடைய கணவரின் பைக்கில் கூட அமர சம்மதிக்காத அரவிந்த்குமார், அதுதொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளார். இவ்வாறு இவர்களது காதல் இலைமறை காயாக இருந்து வந்தது.  தன்னுடனே வாழும்படி அரவிந்த்குமார், கனிமொழியிடம் சொல்ல.... அது அவர்களுக்குள் தகராறாக மாறியது. இந்த சமயத்தில் அரவிந்த்குமார் எடுக்கும் அஸ்திரம், தற்கொலை முயற்சி. உடனே கனிமொழி, அவரை சமரசப்படுத்துவது வழக்கம். இவ்வாறு சென்ற இவர்களது காதல் பயணத்தில் சமீபத்தில் சிக்கல் எழுந்தது. அதாவது, ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டை விட்டு கனிமொழியும், அரவிந்த்குமாரும் வெளியேறினர். பாண்டிச்சேரிக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து தூத்துக்குடி, மேல்மருவத்தூர், திண்டிவனம் என பல ஊர்களுக்கு ஒன்றாக பயணித்தனர். கனிமொழி மாயமானதால் அவரது கணவர் ஹரிகரன் சேலையூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸார், விசாரணை நடத்திய நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி கனிமொழி வீட்டுக்கு திரும்பினார். பிறகு சேலையூர் போலீஸில் ஆஜராகி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். இதன்பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதன்பிறகு கடந்த 21ம் தேதி சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே அரவிந்த்குமார், தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கனிமொழியும், அரவிந்த்குமாரும் பேராசிரியை, கல்லூரி மாணவர் என்ற மரபை மீறி காதலித்துள்ளனர். இதற்கு கனிமொழியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரவிந்த்குமாரின் காதலை நிராகரிக்கத் தொடங்கினார் கனிமொழி. ஆனால் விடாமல் அவரை காதலித்துள்ளார் அரவிந்த்குமார். இந்த சமயத்தில் தான் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தூத்துக்குடியிலிருந்து பஸ்சில் திண்டிவனத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

அப்போது கால் டாக்சி மூலம் கனிமொழி வீட்டுக்கு திரும்பி விட்டார். ஆனால் அரவிந்த்குமார், மீண்டும் பாண்டிச்சேரிக்கு சென்று ஒரு லாட்ஜில் ஆகஸ்ட் 20ம் தேதி தங்கினார். அன்று மாலையே அவர் லாட்ஜை காலி செய்து விட்டு மேல்மருவத்தூர் வந்துள்ளார். கால்போல போக்கில் அவர் சென்றுள்ளார். அவர் கடைசியாக வந்த இடம் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம். அங்கு அதிகாலை நேரத்தில் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் என்பதை தெரிந்த அரவிந்த்குமார், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக காலில் அணிந்திருந்த ஷுவை கழற்றி, பேக்கில் வைத்துவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார். கனிமொழி தன்னை விட்டு பிரிந்து சென்றதே அவரது தற்கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கனிமொழியும், அரவிந்த்குமாரும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் காதலித்தற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை கனிமொழி ஒப்பு கொண்டு வாக்குமூலமாக எங்களிடம் தெரிவித்துள்ளார். கனிமொழியை பலமுறை காதலிக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார். ஜூலை 9ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் அமர்ந்து கொண்டு 'உடனடியாக தனியாக நீ (கனிமொழி) வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று கனிமொழி செல்போனுக்கு மெஜேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெஜேஜை கனிமொழி அரவிந்த்குமாரின் அத்தை ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த தகவலையும் கனிமொழி எங்களிடம் சொன்னார்.

இவர்களது காதல் விவகாரம் கனிமொழியின் கணவருக்கு தெரிந்த பிறகு அவருடன் வாழ விரும்பவில்லை என்று அவர் தெரிவித்து விட்டார். இதனால் வேளச்சேரியில் உள்ள தாய்வீட்டில் தற்போது கனிமொழி இருக்கிறார். தான் செய்த தவறை இப்போது அவர் உணர்ந்தாலும் தனிமையில் குழந்தைகளை பிரிந்து தவிக்கிறார். கனிமொழியின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் கனிமொழி மீது அரவிந்த்குமார் தரப்பில் யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும் இருவரும் மேஜர். அதோடு, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அரவிந்த்குமாரை அவர் தற்கொலைக்கு தூண்டியதாக எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.