நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்னை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை அரசுகள் நியமிக்காததை கண்ணீருடன் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், இமாசலபிரதேச தலைநகர் சிம்லா அருகே உள்ள காந்தல் என்னும் இடத்தில் முதல் தேசிய சட்டப்பல்கலைக் கழகம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கலந்து கொண்டு பேசும்போது, ''இமாசலபிரதேச உயர் நீதிமன்றங்களிலும், துணை நீதிமன்றங்களிலும் போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் உள்ளனர். இது, நீதித்துறையை பலப்படுத்துவதாக அமையும்.

ஆனால், மற்ற மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் போதிய அளவில் இல்லை. நீதிபதிகள் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்னை. இதனால்தான் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை கவனத்தில் கொண்டுதான் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகிறேன்.
V
நாட்டில் உள்ள 8 மாநில உயர் நீதிமன்றங்களில் மட்டும் 80 சதவீத வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. மற்ற மாநிலங்களில் அவ்வளவாக வழக்குகள் தேங்கவில்லை. ஒட்டுமொத்த வழக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் உத்தரபிரதேசத்தில் 25 சதவீத வழக்குகள் தேங்கி உள்ளன. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இந்த வரிசையில் வருகின்றன. இதனால் நீதித்துறை விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யும்போது, நீதிபதிகள் தங்களுடைய பணியை மிகுந்த நேர்மையான முறையில் செய்ய வேண்டும். கல்வி அறிவும், வசதியும் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வசிக்கும் கேரளாவில், நிறைய வழக்குகள் பதிவாகிறது. கல்வி அறிவு அதிகம் இல்லாத ஜார்கண்டில் வழக்குகள் குறைவாக உள்ளன. வசதி கொண்டவர்களும், தங்களது உரிமைகளுக்காக அதிக எண்ணிக்கையில் நீதிமன்றங்களை நாடுகின்றனர்" என்றார்.

No comments:
Post a Comment