Monetize Your Website or Blog

Saturday, 20 August 2016

கோக் விளம்பரத்தில் நடிக்க மறுத்த இரும்பு மனிதர்தான் சிந்துவின் கோச்!

பேட்மிண்டன்... கிரிக்கெட்டைத் தாண்டி இந்தியர்களிடையே மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. 130 கோடி மக்களின் வேண்டுதல்கள் ஆசிர்வாதங்களுடனும் ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இன்று சிந்து களம் காண்கிறார். இந்த ஆட்டத்தில், சிந்து வெற்றி பெற்றால். ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை இந்தியா கைப்பற்றும். ஒற்றைத் தங்கத்துக்காக காத்திருக்கும் இந்தியாவில் பேட்மிண்டன், இறகுப்பந்து என்ற பெயரில் பரவலாக விளையாடப்படும் ஒரு விளையாட்டுதான். காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஷட்டில் விளையாடினால் உடலுக்கும் மனதுக்கும் அத்தனை புத்துணர்ச்சி கிடைக்கும். நகரங்களில் உள்ளரங்கங்களிலும் கிராமங்களில் திறந்த வெளி மைதானங்களிலும் பேட்மிண்டன் விளையாடப்படுவதை பரவலாக காணலாம். வயது வரம்பு இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த விளையாட்டை விளையாடலாம்.  சரி.. இந்த பேட்மிண்டன் விளையாட்டின் வரலாறு என்ன?


19வது நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்த விளையாட்டு தோன்றியதாக கூறப்படுகிறது. சீனாவில் குழந்தைகள் விளையாடிய 'தை தியான் சை'  அல்லது ஜப்பானின் 'ஹெனட்சுகி ' விளையாட்டுகளில் இருந்து பேட்மிண்டன் விளையாட்டு உருவானதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான மன்னர் குடும்பத்தினர் உடற்பயிற்சிக்காக இந்த விளையாட்டை விரும்பி விளையாடி வந்துள்ளனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பேட்மிண்டன் விளையாட்டு பரவியுள்ளது. கடந்த1873ம் ஆண்டில் ஆசியா, ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த விளையாட்டு பரவலாக விளையாடப்பட்டது. கிரிக்கெட்டுக்கு முந்தைய 'ஜென்டில்மேன் கேம்' இந்த பேட்மிண்டன்தான்.
'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் ' தொடர்தான் இந்த விளையாட்டில் மிகவும் பழமையானது. கடந்த 1899ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் இன்று வரை நடந்து வருகிறது. 1834ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் ஃபெடரேசன் (ஐபிஎப்)தொடங்கப்பட்டது. கனடா,டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து நாடுகள் நிறுவனர் அங்கத்தினர் . 1936ம் ஆண்டு இந்தியா ஐ.பி.எப்.பில் இணைந்தது. சீனா, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகள் உலகத் தரத்திலான வீரர்- வீராங்கனைகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவும் இந்த நாடுகளுக்கு சளைக்காமல் பல பேட்மிண்டன் நட்சத்திரங்களை உலகுக்கு தந்துள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் முதன்முறையாக பேட்மிண்டன்  சேர்க்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு இடம் பெறுகிறது. பொதுவாகவே சீனா, ஜப்பானைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பேட்மிண்டனில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்தியாவை பொறுத்த வரை கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவே ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச சாதனை.
இந்தியாவில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளை உருவாக்கும் 'துரோணாச்சார்யா' கோபிச்சந்த். ஹைதராபாத்தில் உள்ள கோபிச்சந்த் பேட்மிண்டன் அகாடமிதான் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் வீராங்கனைகளை உருவாகும் களம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, சாய்னா நேவால் கூட கோபிச்சந்திடம் பயிற்சி பெற்றவர்தான். பெங்களுருவுக்கு சாய்னா இடமாறிய பிறகுதான் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து விமல் குமார், சாய்னாவுக்கு கோச்சாக இருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் நம்பிக்கையை விதைத்துள்ள சிந்து, கோபிச்சந்தின் சூப்பர் சிஷ்யைகளில் ஒருவர். ஸ்ரீகாந்த் கிடாம்பி, பாருபள்ளி காஷ்யப், குருஷாய் தத், தாருன் கானோ போன்றவர்களும் கோபிச்சந்த் பிராண்ட் தயாரிப்புகள்தான். 

1973 ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் பிறந்த கோபிச்சந்த்துக்கு சிறுவயதில் கிரிக்கெட்தான் பிடித்த விளையாட்டு. அவரது சகோதரர்தான் கோபிச்சந்தை பேட்மிண்டன் பக்கம் திருப்பினார். உலகின் பழமையான பேட்மிண்டன் தொடரான 'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரகாஷ் படுகோன். இந்த பிரகாஷ் படுகோன்தான் கோபிச்சந்தை பட்டைத் தீட்டினார். 1996 ம் ஆண்டு, முதன் முறையாக தேசியச் சாம்பியன் ஆன கோபிச்சந்த், அதற்கு பின் தொடர்ச்சியாக 5 முறை, அதாவது 2000ம் ஆண்டு வரை அதே பட்டத்தை தன்னிடம் வைத்திருந்தார். 'சார்க் ' விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தாலும், கடந்த 2001ம் ஆண்டுதான் கோபிச்சந்துக்கு பொற்காலம்.


இந்த ஆண்டில் நடந்த 'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்' தொடரில் கோபிச்சந்த் பட்டையை கிளப்பினார். அந்த காலக்கட்டத்தில் உலகின் முதல் நிலை வீரராக திகழ்ந்த டென்மார்க்கின் பெடர் கெடை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கோபிச்சந்த், சீனாவின் சென் ஹாங்கையும் வீழ்த்தி சாம்பியன் ஆனார். அப்போது பேட்மிண்டன் உலகமே மிரண்டு போனது. இதற்கு முன், 1980 ம் ஆண்டு கோபிச்சந்தின் குருநாதர் பிரகாஷ் படுகோன் , 'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் ' தொடரில் சாம்பியன் ஆகியிருந்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு குருநாதர் சாதனையை கோபிச்சந்த் எட்டினார். பேட்மிண்டன் உலகில் கோபிச்சந்த அடைந்த உச்சகட்ட வெற்றி இது.

கடந்த 2003ம் ஆண்டு, அப்போதைய ஆந்திர அரசு, கோபிச்சந்துக்கு ஹைதரபாத்தில் 5 ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் வழங்கியிருந்தது. ஓய்வுக்கு பிறகு, கடந்த 2008 ம் ஆண்டு, அந்த இடத்திலேயே  தனது பெயரிலேயே பேட்மிண்டன் அகாடமியைத் தொடங்கினார். சுமார் 2.5 மில்லியன் டாலர் செலவில் 8 கோர்ட்கள், நீச்சல் குளம், பிசியோதெரபி மையம் என சர்வதேச தரத்தில் இந்த அகாடமி மாறியது. 
பேட்மிண்டனில், சம்பாதித்த பணத்தின் பெருந் தொகையை நாட்டின் நலனுக்காக செலவழிக்கும் ஒரு சில விளையாட்டு வீரர்களில் கோபிச்சந்த் முக்கியமானவர். கார்கில் போர், குஜராத் நிலநடுக்கத்தின்  போது  தன்னால் முடிந்த நிதியை நாட்டுக்காக வழங்கியவர். கடந்த 2001ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் கோபிச்சந்த், சாம்பியன் ஆன பிறகு, கோக் நிறுவனம், கோபிச்சந்தை தங்கள் விளம்பரங்களில் தோன்ற அழைப்பு விடுத்தன. ஆனால், ''இந்த பானங்கள் மக்களுக்கு தீங்கை விளைவிப்பதாக தான் நம்புவதாக கூறி'', அதில் நடிக்க மறுத்தவர் கோபிச்சந்த். அதனால்தான் விளையாட்டு உலகின் 'இரும்பு மனிதர் 'என்ற பட்டப் பெயரும் உண்டு.
கோபிச்சந்தின் வாழ்க்கையே பேட்மிண்டனுடன் பின்னி பிணைந்ததுதான். இவரது மனைவி பி.வி.வி. லட்சுமியும் பேட்மிண்டன் வீராங்கனைதான். கடந்த 2002ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.  பேட்மிண்டன் தம்பதியின் மூத்த மகள் காயத்ரி 13 வயதுக்குட்பட்டோருக்கான  பேட்மிண்டன் போட்டியில் தேசியச் சாம்பியன். ரியோவுக்கு சிந்துவை தயார் செய்த கோச் கோபிச்சந்த், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு காயத்ரியை இப்போதே தயார் செய்து விட்டார்.பேட்மிண்டனில் பல சாதனைகளை புரிந்த கோபிச்சந்த். அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா ,பதம்ஸ்ரீ, சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது, பத்மபூசன் விருதுகளை பெற்றுள்ளார்.



முன்பு வீரராக வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமைச் சேர்த்த கோபிச்ந்த், இப்போது சிந்து போன்றவர்களை உருவாக்கி  ஒரு கோச்சாக நாட்டுக்கு கவுரவம் சேர்க்கிறார்...  நன்றிகள் பல கோபிச்சந்த்!

No comments:

Post a Comment