
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யமூர்த்திபவன் கலகலக்கத் தொடங்கிவிட்டது. ' நான் இல்லாவிட்டால் அறையை உடைக்கும் அளவுக்குச் சென்றுவிடுவீர்களா?' என நிர்வாகிகளிடம் கொந்தளித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்தார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன். அவருடன் வந்தவர்கள், பூட்டிக் கிடந்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா அறையை உடைக்க முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு விரைந்தார். ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை இல்லை. சாவியைக் கேட்டதால் யாரும் கொடுக்கவில்லை. எனவே உடைக்கிறோம்' என சுத்தியலுடன் வந்தவர்கள் பதில் அளிக்க, கொதித்துப் போனார் ஈ.வி.கே.எஸ். அவர்களிடம், ' அறையை உடைக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? நான் இருக்கும்வரையில் அப்படி எதுவும் நடக்கவிட மாட்டேன். புதிய தலைவரை மேலிடம் நியமனம் செய்யட்டும். அதன்பிறகு யாருக்கு அறை ஒதுக்குவது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இனியொரு முறை இவ்வாறு நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்' எனக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர்.
காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். " தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். அவரோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எதிராகச் சிலர் செயல்படுகின்றனர். தினம்தோறும் என்னுடைய அறைக்குள் அமர்ந்து கட்சி அறிக்கையைத் தயார் செய்து வருகிறேன். ' அந்த அறைக்குள் நான் இருக்கக் கூடாது' என்பதற்காக, அறையை உடைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். என்னுடைய அறையைப் பறிக்கும் நோக்கில், ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை வேண்டும்' என்று சென்னா ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும், ' புதிய தலைவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். ' அதற்குள் அறையைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்' என்ற முனைப்பில் சிலர் வந்துள்ளனர். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ் ராஜினாமா செய்துவிட்டாலும், புதிய தலைவர் வரும் வரையில் அவர் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கும். அதற்குள் தேவையற்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராக இருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை" என்றார்.

No comments:
Post a Comment