Monetize Your Website or Blog

Wednesday, 24 August 2016

போலீஸ் பயிற்சியின்போது இதைச் செய்வீர்களா?' -மேனகா காந்தியிடம் ஆதங்கப்பட்ட மாணவிகள்


தெருவோரக் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் மனுக் கொடுத்துள்ளனர் சென்னை மாணவிகள். ' குழந்தை வன்கொடுமைகளைத் தடுக்க இ-பாக்ஸ் என்ற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம். குழந்தை கடத்தலைத் தடுப்பது மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி  தனிச்சட்டமே கொண்டு வர இருக்கிறோம்' என அவர்களிடம் உறுதியளித்திருக்கிறார் மேனகா காந்தி. 


லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' நிறுவனம்,கடந்த மார்ச் மாதம் தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியை பிரேசிலில் நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்பட 9 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர். இதில், சென்னையில் வீடற்றோர் விடுதியில் தங்கியிருக்கும் ஹெப்சிபா என்ற மாணவி 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் குவித்தார். அதேபோல், பாரிமுனை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பின்புறம் சாலையோர ஷெட்டில் குடியிருக்கும் சிநேகா, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வாங்கினார். ஆதரவற்றோர் விடுதி மாணவரான அசோக், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். போட்டியின் முடிவில், தெருவோரக் குழந்தைகளைக் காப்பது தொடர்பான ' ரியோ தீர்மானம்' இயற்றப்பட்டன. இதுகுறித்து மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியில் கருணாலயா என்ற அமைப்பு இறங்கியது. 
ரியோ தீர்மானத்தின் நகலை கடந்த வாரம் மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் வழங்கினார்கள் தெருவோர சிறுமிகள். இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் கருணாலயா அமைப்பின் பால்சுந்தர் சிங். " தெருவோரக் குழந்தைகள் படும் துன்பங்களில் மூன்று முக்கிய விஷயங்களை ரியோ தீர்மானம் அலசுகிறது. அவர்களின் பாதுகாப்பு, கல்வி, அடையாள உரிமை ஆகிய மூன்றும் மிக முக்கியமானது. இந்த மூன்றும் இல்லாமல்தான் தெருவோரக் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள தெருவோரக் குழந்தைகளால்தான், ரியோ தீர்மானம் உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் லதா ரஜினிகாந்த் நடத்திய அபயம் விழாவிற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி வரும் தகவலைக் கேள்விப்பட்டு, அவரை சந்திக்க முடிவு செய்தோம். தெருவோரத்தில் வசிக்கும் மாணவிகளே அவரிடம் மனு கொடுத்தனர்.


பிறகு, ' நாங்கள் படும் துன்பங்களைப் பற்றித்தான் ரியோ தீர்மானம் பேசுகிறது. இந்தத் துன்பங்களுக்கு தீர்வைக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள். பிறப்புச் சான்றிதழ்கூட கிடைப்பதில்லை' என வேதனைப்பட, அவர்களிடம் பேசிய அமைச்சர், ' தெருவோரக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதில் இனி எந்தவிதச் சிரமமும் இருக்காது. ஆதார் அட்டை எளிதாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கிறேன்' என உறுதியளித்தவர், தொடர்ந்து பேசும்போது, ' குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தலைத் தடுப்பதற்காக முதன்முறையாக கடத்தல் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறோம். குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக இ-பாக்ஸ் என்ற திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தப் பெட்டியில் புகார் சொல்லும் குழந்தைகளின் அடையாளம் யாருக்கும் தெரியாது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 
இதையடுத்து, அவரிடம் பேசிய சென்னை தெருவோர சிறுமிகள், ' போலீஸ் பயிற்சியின்போது எங்களுடைய அனுபவங்களையும் தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். இதனால் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக வரும் போலீஸாருக்கு, ' எங்களைக் காக்க வேண்டும்' என்பதில் தனிக் கவனம் செலுத்துவார்கள்' எனத் தெரிவித்தனர். அதையும் அமைச்சர் ஏற்றுக் கொண்டார். குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் தடுப்பு மசோதா, இ-பாக்ஸ் போன்றவை மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். இந்த நிகழ்ச்சியில் ரியோ தீர்மானத்திற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த லண்டனைச் சேர்ந்த ஜான் ரோவும் பங்கெடுத்தார். தெருவோரக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த நம்பிக்கை ஒளியை மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஏற்படுத்திக் கொடுத்தது" என நெகிழ்ந்தார். 




No comments:

Post a Comment