Monetize Your Website or Blog

Monday, 22 August 2016

சட்டசபை நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்ப தயக்கம் ஏன்?

சொந்தப் பிரச்னை காரணமாக வீட்டுக்குள் சண்டை நடக்கும்போதுகூட ஒரு தொலைகாட்சிக்கு போன் போட்டு, ‘லைவ் வேனை அனுப்புங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் லைவ் ஆகிவிட்டன.
“நாங்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக்கொண்ட சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்வதில் என்ன தயக்கம்?” என்பதுதான் இப்போதைக்கு மக்களின் கேள்வியாக இருக்கிறது.
br />
அரசுக்குச் சாதகமான காட்சிகள்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. ஆந்திரா, கேரளா, பீகார், ஜம்மு - காஷ்மீர் போன்ற சில மாநிலங்களில் சபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.
 
தமிழகத்தில் ஆளுநர் உரை, பட்ஜெட் உரை போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது மட்டும் பொதிகை தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் பிலிம் டிவிஷன் மூலம் அவை நடவடிக்கைகள் வீடியோவாக எடுக்கப்பட்டுத் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த வீடியோவில் அரசுக்குச் சாதகமான காட்சிகள் மட்டுமே இருக்கும்.
வெளிப்படைத்தன்மை இல்லை!
தமிழகத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளின் சார்பில் சபை நடவடிக்கைகளை நேரலை செய்ய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசுத் தரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப முந்தைய தி.மு.க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை, இந்த முறை தி.மு.க ஆட்சி அமைந்திருந்தால் பல்வேறு மட்டத்திலும் எழும் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்த்திருக்கக் கூடும்.
அ.தி.மு.க சார்பில் ஏன் இந்த முயற்சிக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூற முடியும். அ.தி.மு.க அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள்வரை அனைத்துத் தரப்பிலுமே சாதாரணச் செய்திகளை மீடியாக்களிடம் சொல்வதற்குக்கூட யாரும் முன்வருவதில்லை. வெளிப்படைத்தன்மையை விரும்பாத ஓர் அரசாங்கத்திடம் எப்படிச் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் அரசு சொன்னது...
80 சதவிகித மாநிலங்களில் நேரடி ஒளிபரப்பு இல்லை.
மொத்தமாக ரூ.60 கோடி முதலீடு தேவை.
நேரடி ஒளிபரப்புச் செய்ய கேமராமேன், லைட்டிங் இன்ஜினீயர்கள், எடிட்டர்கள் என 82 பேர் தேவை.
ஒரு மாதத்துக்கு ரூ.20 கோடி செலவாகும்.
தற்போது மீடியாக்களுக்கு கிளிப்பிங்கள் தரப்படுகிறது.
எனவே, நேரடி ஒளிபரப்புத் தேவை இல்லை.

விஜயகாந்த்தின் முயற்சி!
கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின்போது தே.மு.தி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைச் சபையில் பேசவிடாமல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய விஜயகாந்த், ‘சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இப்போதும் வலியுறுத்தி வருகிறார். தனது கட்சியின் சார்பில் அவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையிட்டார். அரசு சார்பில், “ஒளிபரப்புச் செய்ய முடியாது” என்று வெவ்வேறு வடிவங்களில் சொன்னார்கள்.
br />
இதே கோரிக்கையைத் தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வைத்திருக்கின்றனர்.
என்ன சொல்லப்போகிறார்கள்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 10-ம் தேதி இதுதொடர்பாக மீண்டும் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது மனுதாரர் தரப்பில், “கேரளாவில் இணையதளத்தின் மூலம் ஒளிபரப்புகிறார்கள். அவ்வாறுகூட ஒளிபரப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், “இதுகுறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இப்போதைய அழுத்தங்கள் காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு அரசு அனுமதி அளித்தாலும் ஆச்சர்யம் இல்லை அல்லது மீண்டும் கோரிக்கைகள் அனைத்தையும் மறுக்கவும் வாய்ப்பிருக்கிறது. என்ன சொல்லப்போகிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.
சந்திக்கு வந்துவிடும்!
சரி, இதுகுறித்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போது தி.மு.க-வில் இருக்கும் பழ.கருப்பையா சொல்வது இதுதான்: ‘‘சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்புச் செய்தால் ஆளும் கட்சியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும் என்று நினைக்கிறார்கள். முதல்வர் முதல் கடைசி நாற்காலி எம்.எல்.ஏ வரை அனைவரின் விகாரங்களும், பொக்கைத் தன்மைகளும் சந்திக்கு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். 110 விதியின் கீழ் ஒளிந்துகொண்டு ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவது எல்லாம் எதிர் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமையின் வெளிப்பாடுதான். ‘இவர்களை வெளியேற்றுங்கள்’ என்று எதிர்க் கட்சியினரை வெளியேற்றச் சொல்லி சபாநாயகருக்கு முதல்வர் உத்தரவிடுகிறார்... சபாநாயகர் டவாலிகளுக்கு உத்தரவிடுகிறார். ‘எதிர்க் கட்சிகளை ஏன் வெளியேற்ற வேண்டும்’ என்று கேட்கும் உரிமை டவாலிகளுக்குக் கிடையாது. டவாலி அணியாத சபாநாயகருக்கும் அந்த உரிமை இல்லை. நேரடி ஒளிபரப்பு என்று வந்துவிட்டால், இவையெல்லாம் வெளிப்பட்டுவிடுமே என்று பயப்படுகிறார்கள்” என்றார் பழ.கருப்பையா.
நேரம் வரும்போது ஒளிபரப்பு!
அ.தி.மு.க தரப்பில் அதன் செய்தித் தொடர்பாளர் சமரசத்திடம் பேசினோம். “சபையில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த, இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தி.மு.க., தன் அனுபவங்களுக்கு ஏற்றச் செயல்பாடுகளைச் சபையில் எடுத்துக் கூறவேண்டும். மாறாக, சபையை நடக்கவிடாமல் இடையூறு செய்வது ஜனநாயகப் படுகொலை. நேரமும், காலமும் கனிந்து வரும்போது சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்வது குறித்து அரசு தகுந்த முடிவு எடுக்கும். இப்போது எதிர்க் கட்சிகளின் இடையூறு காரணமாக சட்டசபை, ‘சத்த’ சபையாக இருக்கிறது. இப்போதைக்கு நேரடி ஒளிபரப்புத் தேவை இல்லைதான்” என்றார்.
br />


No comments:

Post a Comment