பாலியல் புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரரின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரிய மூவரும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டதாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூவரும் சிங்கப்பூரில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போதும் அவர்கள் வெளிநாட்டில் தான் உள்ளனர். முன்ஜாமீன் பெறுவதற்கான சில வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும், அவ்வாறு கையெழுத்திட வர முடியாத பட்சத்தில் அதற்கென தனி மனு தாக்கல் செய்யப்படுவது அவசியம், இல்லையெனில் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இது போலியான மனு என்ற எண்ணம் எழுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சசிகலா புஷ்பாவின் அறிவுறுத்தலின்படியே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்களைப் பெற்றுத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இல்லையெனில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி வேலுமணி, வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் சசிகலா புஷ்பா, தமிழகம் வந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment