
பி.இ. மாணவர்கள் ஐ.இ.எஸ் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். "பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் Indian Engineering Service Exam-ல் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளி நாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும். இம்மையம் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் ஒருங்கிணைக்கும். சிறநஙத திட்டங்கள் காப்பீடு உரிமை பெறவும் இம்மையம் உதவி புரியும். நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்கள், அடைகாக்கும் மையம் பற்றிய விழிப்புணர்வு; தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் இம்மையத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment