இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பீதி அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து கொண்டு இன்னமும் வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு 247 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அம்ரியா, மார்சே, லாஸியோ ஆகிய பகுதிகள், கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவை. அந்த நிலநடுக்கத்தில் 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment