சென்னையை அடுத்த ஆழ்வார் திருநகர் விரிவுப் பகுதியை சேர்ந்தவர் குமாரதேவன். இவரது வீட்டுக்கு, கடந்த 11.7.2016 அன்று மதியம் 1.30 மணியளவில், டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்தார். மாநகராட்சி அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், வீட்டின் சொத்து வரி, குடிநீர் வரி சரியாக செலுத்துகிறார்களா என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார். பிறகு, அதற்கான ரசீதையும் அவர் கேட்டதை அடுத்து, ரசீதை குமாரதேவன் பீரோவிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்தவாறே அந்த டிப்டாப் ஆசாமி, வீட்டின் பின்பக்கத்துக்கு குமாரதேவனை அழைத்துச் சென்றுள்ளார். 'அனைத்தும் சரியாக இருக்கிறது' என்று சொல்லி விட்டு, டிப்டாப் ஆசாமி கிளம்பி சென்றுவிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பீரோவை பார்த்த குமாரதேவன், அதிர்ச்சியடைந்துள்ளார். பீரோவிலிருந்த 45 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் குமாரதேவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குமாரதேவனின் வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை போலீஸார் ஆராய்ந்து பார்த்தபோது, அதில் டிப்டாப் ஆசாமி ஆட்டோவில் வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவருடன் ஒரு பெண்ணும், இன்னொரு நபரும் வந்தது தெரிய வந்தது. டிப்டாப் ஆசாமியை பார்த்ததும், போலீஸாருக்கு அந்த நபர் பல கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கணேசன் என்று தெரியவரவே, அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் விருகம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக பைக்கில் வந்த கணேசன், போலீஸாரைப் பார்த்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அப்போது குமாரதேவன் வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
கணேசன் கொடுத்த தகவலின்படி வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, சுத்திப்பட்டியை சேர்ந்த காந்திராஜன் மற்றும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக கணேசன் மற்றும் மல்லிகாவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் காந்திராஜனை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சி.சி.டி.வி கேமரா பதிவுகளைப் பார்த்தும் குற்றவாளி கணேசன் என்பது தெரிந்தது. அவர் மீது சென்னையில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து 160 சவரன் நகைகளை ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளோம். கணேசன், தே.மு.தி.கவின் முன்னாள் உறுப்பினர். அவரது மனைவி சுவீதா, பேரணாம்பட்டு தேமுதிக ஒன்றிய கவுன்சிலர். அந்த ஏரியாவில் மூன்று அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளையும் சொந்தமாகக் கொண்டுள்ளார். வரும் உள்ளாட்சித் தேர்தலில், மனைவியை போட்டியிட வைப்பதற்குத் தேவையான பணத்துக்காகத்தான் தற்போது கொள்ளையடித்து வருவதாக போலீஸாரிடம் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபோல காந்திராஜன், மல்லிகா ஆகியோரும் கணேசனின் கூட்டாளிகள். தனியாக வீடுகளில் இருக்கும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையடிப்பதே இவர்களது தனி ஸ்டைல்" என்றார்.

No comments:
Post a Comment