Monetize Your Website or Blog

Friday, 26 August 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.


1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.


2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.
3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்
பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.
4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​
`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.
7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​


8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.
9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.


10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.

ப்ளீஸ் ஹெல்ப்!' நில நடுக்க மணிப்பூரிலிருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான்


சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களையும் காரில் பயணித்தவாறே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.அதன்படி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருக்கும் வங்காளதேசம், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காரில் பயணித்தவாறு பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.



ஆகஸ்டு மாதம் ஆரம்பித்த பயணத்தில், தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜிப்ரான் குழு இருக்கிறது. கடந்த 23-ம் தேதி மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுகள் தொடர்ந்து அங்கு இருப்பதால், மணிப்பூரில் சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

அது பற்றி ஜிப்ரான் தனது ஃபேஸ்புக் தளத்தில் வீதியில் நடந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "மணிப்பூரில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.மியான்மர் செல்வதற்கு நாங்கள் மோரே பார்டரை கடக்க வேண்டியுள்ளது.சில முறை அங்கு செல்ல முயன்ற போது, எங்களது பெர்மிட்டை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.அங்கே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் , நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு நாட்டிற்கும் காரில் செல்ல, கார்னெட் என்னும் பெர்மிட் அவசியம்.எங்களிடம் அந்த பெர்மிட் இருந்தாலும், மியான்மர் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். சென்னைக்கு திரும்பி விடுங்கள் என பலர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், அடுத்த பாடலான 'போகாதே'வை எப்படியும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். எவ்வளவு முயன்றாலும் செப்டம்பர் 2-ம் தேதி தான் மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எங்களது விசா செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களில் 1800 கிலோமீட்டர்களை நாங்கள் கடக்க வேண்டும். பல இடங்களில் உதவிகள் கேட்டு வருகிறோம். நாகாலாந்து பழங்குடியினருக்கும் , மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.அதனால் , மோரே பார்டர் வழியாக மீண்டும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என சொல்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், எங்கள் கார் நுழையும் போதும் பாடல் வெளியாகும் என உறுதியளித்துவிட்டோம். அதனால், இதை தொடரப் போகிறோம்.இங்குள்ள சூழ்நிலை மோசமானதாக இருக்கிறது.ஆனால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்




கூடா நட்பு கேடாய்தான் முடியும்..! வில்லங்கத்தில் முடிந்த விபரீதக் காதல்

கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட காதலால் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் சென்னையை சேர்ந்த பேராசிரியை ஒருவர். கணவன் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார் பேராசிரியை.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மகன் அரவிந்த்குமார். இவர், செம்பாக்கத்தில் உள்ள அத்தை ராஜேஸ்வரி வீட்டில் தங்கி கௌரிவாக்கத்தில் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அரவிந்த்குமாருக்கு பாடம் கற்றுக்கொடுத்தவர் பேராசிரியை கனிமொழி. இவரும் செம்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். கனிமொழிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் ஹரிகரன், இன்ஜினீயர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி கனிமொழியின் வீட்டுக்குச் சென்ற அரவிந்த்குமார் அவரை ஒருதலையாக காதலித்துள்ளார். முதலில் காதலை ஏற்றுக் கொள்ளாத கனிமொழி, அரவிந்த்குமாரின் பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகு காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.


ஒருக்கட்டத்தில் கனிமொழி, தன்னுடைய கணவரின் பைக்கில் கூட அமர சம்மதிக்காத அரவிந்த்குமார், அதுதொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளார். இவ்வாறு இவர்களது காதல் இலைமறை காயாக இருந்து வந்தது.  தன்னுடனே வாழும்படி அரவிந்த்குமார், கனிமொழியிடம் சொல்ல.... அது அவர்களுக்குள் தகராறாக மாறியது. இந்த சமயத்தில் அரவிந்த்குமார் எடுக்கும் அஸ்திரம், தற்கொலை முயற்சி. உடனே கனிமொழி, அவரை சமரசப்படுத்துவது வழக்கம். இவ்வாறு சென்ற இவர்களது காதல் பயணத்தில் சமீபத்தில் சிக்கல் எழுந்தது. அதாவது, ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டை விட்டு கனிமொழியும், அரவிந்த்குமாரும் வெளியேறினர். பாண்டிச்சேரிக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து தூத்துக்குடி, மேல்மருவத்தூர், திண்டிவனம் என பல ஊர்களுக்கு ஒன்றாக பயணித்தனர். கனிமொழி மாயமானதால் அவரது கணவர் ஹரிகரன் சேலையூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸார், விசாரணை நடத்திய நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி கனிமொழி வீட்டுக்கு திரும்பினார். பிறகு சேலையூர் போலீஸில் ஆஜராகி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். இதன்பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதன்பிறகு கடந்த 21ம் தேதி சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே அரவிந்த்குமார், தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கனிமொழியும், அரவிந்த்குமாரும் பேராசிரியை, கல்லூரி மாணவர் என்ற மரபை மீறி காதலித்துள்ளனர். இதற்கு கனிமொழியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரவிந்த்குமாரின் காதலை நிராகரிக்கத் தொடங்கினார் கனிமொழி. ஆனால் விடாமல் அவரை காதலித்துள்ளார் அரவிந்த்குமார். இந்த சமயத்தில் தான் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தூத்துக்குடியிலிருந்து பஸ்சில் திண்டிவனத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

அப்போது கால் டாக்சி மூலம் கனிமொழி வீட்டுக்கு திரும்பி விட்டார். ஆனால் அரவிந்த்குமார், மீண்டும் பாண்டிச்சேரிக்கு சென்று ஒரு லாட்ஜில் ஆகஸ்ட் 20ம் தேதி தங்கினார். அன்று மாலையே அவர் லாட்ஜை காலி செய்து விட்டு மேல்மருவத்தூர் வந்துள்ளார். கால்போல போக்கில் அவர் சென்றுள்ளார். அவர் கடைசியாக வந்த இடம் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம். அங்கு அதிகாலை நேரத்தில் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் என்பதை தெரிந்த அரவிந்த்குமார், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக காலில் அணிந்திருந்த ஷுவை கழற்றி, பேக்கில் வைத்துவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார். கனிமொழி தன்னை விட்டு பிரிந்து சென்றதே அவரது தற்கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கனிமொழியும், அரவிந்த்குமாரும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் காதலித்தற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை கனிமொழி ஒப்பு கொண்டு வாக்குமூலமாக எங்களிடம் தெரிவித்துள்ளார். கனிமொழியை பலமுறை காதலிக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார். ஜூலை 9ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் அமர்ந்து கொண்டு 'உடனடியாக தனியாக நீ (கனிமொழி) வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று கனிமொழி செல்போனுக்கு மெஜேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெஜேஜை கனிமொழி அரவிந்த்குமாரின் அத்தை ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த தகவலையும் கனிமொழி எங்களிடம் சொன்னார்.

இவர்களது காதல் விவகாரம் கனிமொழியின் கணவருக்கு தெரிந்த பிறகு அவருடன் வாழ விரும்பவில்லை என்று அவர் தெரிவித்து விட்டார். இதனால் வேளச்சேரியில் உள்ள தாய்வீட்டில் தற்போது கனிமொழி இருக்கிறார். தான் செய்த தவறை இப்போது அவர் உணர்ந்தாலும் தனிமையில் குழந்தைகளை பிரிந்து தவிக்கிறார். கனிமொழியின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் கனிமொழி மீது அரவிந்த்குமார் தரப்பில் யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும் இருவரும் மேஜர். அதோடு, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அரவிந்த்குமாரை அவர் தற்கொலைக்கு தூண்டியதாக எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார். 



சசிகலா புஷ்பாவுக்கு உச்ச நீதிமன்றம் 'செக்'..! மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பாலியல் புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரரின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரிய மூவரும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டதாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூவரும் சிங்கப்பூரில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போதும் அவர்கள் வெளிநாட்டில் தான் உள்ளனர். முன்ஜாமீன் பெறுவதற்கான சில வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும், அவ்வாறு கையெழுத்திட வர முடியாத பட்சத்தில் அதற்கென தனி மனு தாக்கல் செய்யப்படுவது அவசியம், இல்லையெனில் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.  இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இது போலியான மனு என்ற எண்ணம் எழுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சசிகலா புஷ்பாவின் அறிவுறுத்தலின்படியே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்களைப் பெற்றுத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இல்லையெனில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி வேலுமணி, வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் சசிகலா புஷ்பா, தமிழகம் வந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம்

சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான்.
 இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம்.



 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் அவர் கொடுத்த டீ என்ட்ரியை டேபிளில் பாருங்கள்.

 அனைத்து பந்தயங்களிலும் போல்ட் தன் முழு திறனை செலுத்தி இருந்தால் இந்த நேரம் இன்னும் குறைந்திருக்கும். ஆனால் போல்ட் ஒரு வின்னிங் பேட்டர்னை பின்பற்றுகிறார்.
 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் போட்டியில் போல்ட்டின் டைமிங்கை எடுத்துக் கொள்வோம். முதல் தகுதிச் சுற்றில் இலக்கை 20.64 விநாடிகளில் கடக்கிறார். காலிறுதியில் 20.29 வினாடிகளில் கடக்கிறார். அரையிறுதியில் 20.09 வினாடிகளில் கடக்கிறார். இறுதிச் சுற்றில் 19.30 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். முதல் சுற்றுக்கும் இறுதி சுற்றுக்கு 1.34 வினாடிகள் வித்தியாசம். இதே வின்னிங் பேட்டர்னை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு போட்டியிலும் பார்க்கலாம். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையிலான இடைவேளை குறைவு. எனவே முதல் சுற்றிலேயே முழு சக்தியையும்  வெளிப்படுத்தினால், குறுகிய நேரத்தில் அடுத்த சுற்றுக்கு தேவையான முழு எனர்ஜியை மீட்டெடுப்பது சிரமம். ரியோவில் 4*100 மீட்டர் போட்டியில் தங்கம் குறைந்த வேகத்தில் ஓடியதற்கு, அரையிறுதிக்கும் காலிறுதிக்குமான இடைவேளை குறைவே காரணம் என்றார்.

100 Meters 200 Meters 4*100 Meters
OlympicRoundsTiming OlympicRoundsTiming OlympicRoundstiming
2008Round One10.2 2004Round one21.05 2008Final8.98
2008Quater Finals9.92 2008Round one20.64 2012Final8.7
2008Semi Finals9.85 2008Quater Finals20.29 2016Final8.97
2008Finals9.69 2008Semi Finals20.09    
2012Round One10.09 2008Finals19.3    
2012Semi Finals9.87 2012Round one20.39    
2012Finals9.63 2012Semi Finals20.18    
2016Round One10.07 2012Finals19.32    
2016semi Finals9.86 2016Round one20.28    
2016Finals9.81 2016semi Finals19.78    
    2016Finals19.78    



போல்ட் ஓடியது 5.77 நிமிடங்கள் தான் என்றாலும், அதற்குள் 12 ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது.


காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

த்திய அரசின் பாராமுகம், கர்நாடகா அரசின் தந்திரம், தமிழக அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றால் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது.
210 ஆண்டுகளைக் கடந்தும் கொதிநிலையில் இருக்கிறது காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அந்த மாநிலத்துக்குள்ளேயே 800 கி.மீ பயணித்து, தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியே பயணத்தைத் தொடங்குகிறது. ஒகேனக்கல் அருவி வழியே மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.


இயற்கை தந்த கொடையான காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான தகராறு நீண்ட நெடிய காலமாக முடிவுக்கு வராமல் நீடித்துவருகிறது. தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்பப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, வெளிவந்து 10வது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு, பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்து நாளுக்குநாள் விலகிச் செல்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தில் தொடர்புடைய காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான சிக்கலை, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பு, தீர்ப்புக்குப் பின்பு என்றே அணுகலாம்.
காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கு முன்பு...

காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பிருந்தே மைசூர் அரசாக இருந்தபோதிலிருந்தே தமிழகத்துக்கான உரிமையைத் தருவதில் கர்நாடகா மாநிலத்தின் பிடிவாதங்களும், மறுப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 1807-ம் ஆண்டு அப்போது இருந்த மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையேதான் காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 87 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஆங்கில அரசின் கீழ் 1892-ல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அந்தத் திட்டத்தைச் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 1910-ல் மைசூர் அரசு, கன்னம்பாடி என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கேட்டது. (இந்த இடத்தில்தான் பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைக்கப்பட்டது.) இதற்கு, சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆங்கிலேய அரசு தலையிட்டு, ‘கன்னம்பாடியில் 11 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவைப் புறந்தள்ளிய மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட ஆரம்பித்தது. இரு அரசுகளுக்குமிடையே முரண்பாடு உருவானதால் கிரிஃபின் என்பவரை நடுவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. ஆனால், அவராலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. மீண்டும் இரண்டு அரசுகளுக்கும் பிரச்னை வெடித்தது. 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1929-ல் ஒரு துணை ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன்படி, ‘மைசூர் அரசு தனது எல்லைக்குள் திட்டமிட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைப்பது என்றும், சென்னை மாகாண அரசு மேட்டூர் அணை கட்டிக்கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரியின் சிக்கல்கள் மேலும் தீவிரத்துடன் தொடர்ந்தன.
1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 1972-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்படி 1976-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரி இரு மாநிலங்களும் சேர்த்து 393 டி.எம்.சி முதல் 414 டி.எம்.சி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதை அமல்படுத்த கர்நாடகா அரசு முன்வரவில்லை.

நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசால் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு மே மாதம் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னது என்ன?

இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் முதல் பிப்ரவரி வரை 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்கள். தமிழகத்தின் பங்கில் இருந்து பாண்டிச்சேரிக்கு 6 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.


மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தங்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்றத்தின் நீதிபதிகள் அப்போதே கூறினர். அதுதான் இப்போது நடக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்பு...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான உடன் அதற்கு கர்நாடகா அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இங்கிருந்துதான் கர்நாடகா அரசின் இழுத்தடிக்கும் அரசியல் தொடங்கியது என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், நடுவர் மன்றத்தில்தான் அப்பீல் செய்து தீர்வுகாண வேண்டும். நடுவர் மன்றத்திலேயே கர்நாடகா அரசு அப்பீல் செய்திருந்தால் 6 மாதங்களுக்குள் பிரச்னை முடிவடைந்திருக்கும். பிரச்னையைத் உடனடியாகத் தீர்க்க விரும்பவில்லை என்பதால்தான் கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அமல்படுத்தப்படாததற்கு கர்நாடகா அரசின் தந்திரம்தான் காரணம்.
காவிரிப் பிரச்னை இப்போது...

தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகா அரசு தராததால், காவிரி டெல்டா பாசன சாகுபடிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகக் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி நடக்கவில்லை. இப்போது 6-வது ஆண்டாகவும் குறுவைச் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் இந்த ஆண்டும் தீவிரம் அடைந்துள்ளன. சுதந்திர தினத்தன்று பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “மேகதாட்டூ அணை கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் மாநிலத்தில் மழை இல்லை. தண்ணீர் இல்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியும்” என்று கைவிரித்திருக்கிறார்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கம்போல உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. மறுப்புகளும், பிடிவாதங்களும், வழக்குகளும் எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுமா, என்கின்றனர் விவசாயிகள்.
நடுவர் மன்றத்துக்குப் போகாதது ஏன்?
காவிரிப் பிரச்னையில் என்ன நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘காவிரிப் பிரச்னையில் முக்கியமான திருப்பமாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. தீர்ப்பு வந்த உடன் அப்போது இருந்த தி.மு.க அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘தீர்ப்பில் குறைபாடு இருக்கிறது. நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்’ என்று கூறினர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க பிரதிநிதி, ‘உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். மேலும், கர்நாடகா தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். எனவே, தமிழகம் மட்டும் காவிரி நடுவர் மன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்காது என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது.

அதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. முதலில் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றம் போனது தவறானது. இதனால்தான் தமிழக அரசும் போனது. அப்போதே உச்ச நீதிமன்றம், இரண்டு அரசுகளிடமும், நீங்கள் நடுவர் மன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதைச் சொல்லவில்லை.
அரசிதழில் வெளியிட்டு என்ன பயன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதனால் என்ன பயன் விளைந்தது என்பதுதான் எங்கள் கேள்வியாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் கடந்த 40 வருடங்களில் 12 வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இந்தப் பணத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியிருக்கலாம். கர்நாடகா அரசு இப்போது புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, அங்கு உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளையும், பாசன மேம்பாட்டையும் அதிகரித்துவிட்டது.
அரசியல் ஆதாயம் கருதும் மத்திய அரசு!

ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணையைக்கூடத் தூர்வாரவில்லை. அதன் உயரத்தையாவது அதிகரித்திருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. காவிரிப் பாசனப்பகுதி வாய்க்கால்களையும் தூர் வாரவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும் ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ‘நான்தான் செய்கிறேன்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். ஆனால், எங்கு அரசியல் வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு இருக்கிறது” என்றார்.
தமிழகம் என்ன வடிகாலா?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு சொல்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அந்த மாநிலத்தில் கபினி அணை உள்ளிட்ட 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. நமக்கான உரிமையை அவர்கள் தர வேண்டும். ஆனால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரைத்தான் அவர்கள் திறந்துவிடுகிறார்கள். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். நடுவர் மன்றத் தீர்ப்பை அவர்கள் கடுகளவுகூட மதிப்பதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசும் ஏற்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு ஏற்பட உதவி செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறது.
ராஜதந்திரம் இல்லை!

‘நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல் ஒன்றும் செய்யமுடியாது’ என்று முன்பு மத்திய அரசு கூறி வந்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நீர் திறப்பு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிரச்னை இருக்காது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது கர்நாடகா அரசுடன் ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசுடன் பேசி இருக்கிறார்” என்றார்.
செயலற்ற தமிழக அரசு!
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும்” என்கிறார். மேலும் அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழில் செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிழைப்புத்தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தச் சூழலில் நமது தமிழக அரசு காவிரிப் பிரச்னையை ஒரு கிளரிக்கல் வேலையைப் போலத்தான் அணுகுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 28-ல் வழக்கு விசாரணை நடந்தபோது, அடுத்த விசாரணை ஜூலை 18-க்குத் தள்ளிவைக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றோ, அதற்குள் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. ஜூலை 18-ம் தேதி வழக்கு வந்தபோது, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போதும் தமிழக அரசு வக்கீல் ஒன்றும் பேசவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறியாளர் குழுவை கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி, அங்குள்ள அணைகளின் நிலவரத்தை ஆய்வு செய்து நமக்கான உரிமையை கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


ஆக, காவரி நதிநீர் விவகாரம் அப்போதும், இப்போதும் தீர்வை நோக்கி நகராததற்குக் கர்நாடகா அரசின் பிடிவாதம் மட்டும்தான் காரணம். அந்தப் பிடிவாதத்தை அரசியல் ஆதாயம் கருதி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக அரசோ, இதனை ஒட்டுமொத்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதாமல் தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறது.
- கே.பாலசுப்பிரமணி
காவிரி டெல்டா பகுதிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 14.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்றன. காவிரி டெல்டாவில், குறுவை பருவத்தில் (மே - ஜூலை) 1.68 லட்சம் ஹெக்டேரிலும், தாளடிப் பருவத்தில் (பிப்ரவரி - ஏப்ரல்) 1.44 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் - ஜனவரி) 2.99 லட்சம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல் தவிர, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
காவிரியின் கிளை நதிகளில் கர்நாடகா அமைத்த அணைகள்!

காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான ஹேமாவதி ஆற்றில், ஹேமாவதி அணையை கட்டி இருக்கின்றனர். அதேபோல Harangi என்ற கிளை ஆற்றின் குறுக்கே, Harangi அணையை அமைத்துள்ளனர். கேரளாவில் உற்பத்தி ஆகி கர்நாடகா வழியே பாயும் கபினி ஆறு, காவிரி ஆற்றில் சேருகிறது. இந்த இடத்தில்தான் கபினி அணையை கர்நாடகா அரசு அமைத்துள்ளது. இப்போது மேகதாட்டூ என்ற இடத்தில், மேலும் ஓர் அணைகட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் தண்ணீர் மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52.65 டி.எம்.சி-யாகவும் இருக்கும்போது பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர், ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். 236 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.




ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.


1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.


க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.


ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 


விஜயகாந்துக்கு கேக் ஊட்டிய வைகோ..! கலகலத்த பிறந்தநாள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்துக்கு, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். பின்னர் விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார். மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு திருமாவளவன் கேக் ஊட்டினார். பதிலுக்கு அவரும் கேக் ஊட்டினார்.


விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்ததால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் கலகலப்புடன் காணப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலக்கூட்டியக்கம் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும்,
மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக முதல்வர் வர வேண்டும் என்றார்.



பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.