Monetize Your Website or Blog

Tuesday, 31 May 2016

ரேஷன் கடைக்கு செல்கிறீர்களா? ஆதார் அட்டை அவசியம்

 


நியாய விலை கடைகளில் இருக்கும் பொருட்களின் இருப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நாளை முதல் ஆதார் அட்டை நகலை வழங்க வேண்டும் என்று தமிழக உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. 



நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும்முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் குடும்ப அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக நியாய விலை கடைகளில் என்னென்ன பொருட்கள் இருப்பில் உள்ளது? என்பதை குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய உள்ளது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுடன் கூடிய ஆதார் அட்டை நகலை பெற உள்ளது. மாதம், மாதம் கடைகளுக்கு செல்பவர்கள் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை வழங்கப்படுவதில்லை என்று புகார் கூறி வருகின்றனர். இதனை முற்றிலுமாக தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டை அரசு செய்து வருகிறது. 

இதற்காக குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்களை வாங்க வேண்டும் என்று அனைத்து நியாய விலை கடைக்காரர்களுக்கும், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், நியாய விலை விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை தடுக்கவும், பேப்பர் இல்லா பணியை ஊக்கப்படுத்தவும் ஜி.பி.எஸ், தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படும் ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கருவியில் நியாய விலை கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து, குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படும். பொருட்கள் வாங்கும் போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும்.



குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதற்கு பதிலாக, பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, வாங்காத பொருட்களின் விவரங்கள் அவர்களது குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். முறைகேடுகளையும் தடுக்க முடியும்.

இதற்காக குடும்ப அட்டைகளின் விவரங்கள், ஆதார் அட்டை எண், செல்போன் எண் போன்றவை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களிடம் நாளை முதல் ஆதார் கார்டு நகல் மற்றும் செல்போன் எண்கள் வாங்கப்பட உள்ளது. அதுவும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளின் நகல்கள் பொருட்கள் வாங்கும் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்" என்று கூறினர்.




ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி


திருப்பூர் அருகே பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறாரே?

கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் 'தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளனர்.



          

அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்னை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்' என்று பினராயி விஜயன் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் கடிதங்கள் எழுதியவன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆலோசனைப்படியும் கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்ற முறையிலும், முல்லைப் பெரியாறு பிரச்னையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றவன் என்ற முறையிலும், இதை நல்ல முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டவன் என்ற முறையிலும் இதை நான் கூறுகிறேன்.

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி..?

இந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, நான் தகவல் வெளிவந்த 28-5-2016 அன்றே விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். இப்படித் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுவது இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகளின்போது பல்வேறு இடங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது. இந்த அளவுக்குக் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று அப்போதும் சொல்லப்பட்டது.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை யார் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அவர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி எடுத்த நடவடிக்கை என்ன? பணம் வைத்திருந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையாவது பதிவு செய்யப்பட்டதா? பணம் வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா? தகுந்த புலன் விசாரணைக்குப் பிறகு, உரிய நீதிமன்றத்திற்கு வழக்குகள் எடுத்துச் செல்லப்படுவதில் ஏன் இந்தத் தாமதம்? அ.தி.மு.க.வின் மூன்று அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவர்களுக்கு எல்லாமுமாகச் செயல்பட்டவருமான கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டிலிருந்தும், குடோனிலிருந்தும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி பல கோடி ரூபாய் மற்றும் வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்கள், கண்காணிப்புக் காமரா போன்றவை கைப்பற்றப்பட்ட நிகழ்வில் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?

அ.தி.மு.க.வின் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு நெருக்கமான ஒருவரின் சென்னை அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியதே! அந்த நிகழ்வில் இதுவரை சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை என்ன? கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு 

திருப்பூருக்கருகில் பிடிபட்ட 570 கோடி ரூபாய்
 விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் விபரங்கள் என்ன? இந்த விபரங்களையெல்லாம் வெளிப்படையாகத் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டாமா? அமைச்சர்களைப் போன்ற 'பெரிய இடங்கள்' சம்பந்தப்பட்டிருப்பதால், ஆறப் போட்டு மூடி மறைத்திட முயற்சிகள் நடப்பதாக விபரமறிந்தவர்கள் வேதனைப்படுகிறார்களே.

ரத்து செய்யப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன், இந்த நிகழ்வுகளில் தேர்தல் ஆணையம் சட்டப்படி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொன்னால் தானே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பெருமளவுக்கு நடந்த பண விநியோகம் தான் தேர்தலை ரத்து செய்யக் காரணம்; வேறு யாருக்கும் அனுசரணையாகவோ, உதவுவதற்கோ இந்த முடிவு மேற்கொள்ளப் படவில்லை, ஓட்டுக்குப் பணம் என்பதை எப்படியும் தடுத்தே தீருவோம் என்பனவற்றின் மீது உண்மையில் எல்லோருக்கும் நம்பகத்தன்மை ஏற்பட முடியும். முதல் முறை, முதல் முறை என்று சொல்லிக் கொள்வதற்கும் அப்போதுதானே பொருள் இருக்கும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவிகித தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்களே?


காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட மொத்தம் 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; அதுவே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கக் காரணமாகி விட்டது. எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தி.மு.க.வுக்குப் பேரிழப்பாக முடிந்து விடுகிறது என்று தி.மு.க. செயல்வீரர்கள் விவாதித்துக் கவலை கொண்டிருப்பதாக, ஒரு சில நாளேடுகளும், ஊடகங்களும் கருத்து தெரிவித்து கலக விதை ஊன்றி வருகின்றன.

ஆங்கில நாளேடுக்கு நான் அளித்த பேட்டியில், 'தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன; இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்டணிக் கட்சிகளை நான் சிறிதும் குறை கூற விரும்பவில்லை. அந்தத் தொகுதிகளில் தி.மு.க. உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச்செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்' என்று நான் சொன்னதை மறைத்து, தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த 'சேவை'யில் மத்திய அரசின் உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை ஆங்காங்கே ஊன்றி வருவதாகவும் எனக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய நோக்கமெல்லாம், தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை உருவாக்கி, ஊதிப்பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட வேண்டும். அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர லாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பது தான். இதனைத் தி.மு.க.வின் தொண்டர்களும், கூட்டணிக்கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.




தஞ்சை, அரவக்குறிச்சியில் செலவழித்த பணத்தை கேட்கும் தலைவர்!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் மற்ற வேட்பாளர்கள் செலவழித்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பித் தர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.





இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் 
தேர்தலை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தின் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் வேட்பாளர்கள் பணம் கொடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதென்பதை அனைவரும் அறிவோம். தேர்தல் ஆணையம் இதை ஒப்புக் கொண்டு இருப்பதால்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்படும்போது மீண்டும் அதே கட்சிகள் பணம் கொடுக்கத்தான் போகிறார்கள். தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது, வேடிக்கைதான் பார்க்கும் என்பது தமிழக மக்களின் கருத்து. 

தவறு செய்தவர்களுக்கு இது தண்டனையாகாது என்பது ஒருபுறமிருக்க, உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும்தான். மற்ற வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தர வேண்டும். மற்ற நேர்மையான வேட்பாளர்கள் எதற்காக தண்டிக்கப்பட வேண்டும். மற்ற வேட்பாளர்கள் செலவழித்த பணம் தவறான வழியில் சம்பாதித்ததும் அல்ல.

தேர்தலில் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்க அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிமையிருக்கிறது. அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் மற்ற எல்லா வேட்பாளர்களுக்கும் தேர்தலில் செலவழித்த பணத்தை திருப்பித் தருவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.



முன்னேறுமா தமிழகம்? முதல்வர் கவனத்துக்கு...

ட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் செல்வி ஜெயலலிதா. கடந்த முறை அவர் முதல்வராக பதவியேற்றபோது அவர் சந்திக்க வேண்டியிருந்த சவால்களைவிட இப்போது அவர் சந்திக்க வேண்டிய சவால்கள் அதிகம். 

முக்கியமாக, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. கடந்த ஐந்து ஆண்டு களில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முக்கியமான பல நடவடிக்கைகள்  எடுக்கப் படாமலே காலம் கடந்துபோனது.  



குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆண்டு தோறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழகத்தில் அப்படியொரு வழக்கம் இல்லாமலே கடந்த ஆட்சி முடிந்தது. 

தமிழக அரசிடமிருந்து  பெரியதொரு ஊக்குவிப்பு இல்லாததால், கடந்த ஐந்து  ஆண்டு காலத்தில் தொழில் துறையானது சுமாரான வளர்ச்சியே கண்டது. 

இந்த நிலையை மாற்றி, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முக்கியமான பல பொருளாதார நிபுணர்களிடம் கேட்டோம். நாம் முதலில் பேசியது சென்னை பல்கலைக் கழகப் பொருளாதாரப் பிரிவு பேராசிரியர் ஜோதி சிவஞானத்துடன். அவர் சொன்னார்... 

‘‘தொழில் துறை மற்றும் சேவைத்துறை உலகப் பொருளாதாரத்தை சார்ந்துள்ளது என்றால், இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. தமிழகத்தில் டூவீலர் விற்பனை, டிராக்டர் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு காரணம், கிராமப்புறங்களில் தொழில்கள் நல்ல நிலைமையில் இல்லை. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது மட்டுமே அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்ளும். அரசுக்கும் வரி வருவாய் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இதுபோன்ற சமயத்தில் அரசுதான் அதிகமாக செலவு செய்ய வேண்டும்.
மத்திய அரசு தனது திட்ட செலவினங்களை குறைத்து வருகிறது. ஆகையால், மாநில அரசுதான் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு, நீர்ப் பாசன வசதி என அதிக அளவிலான செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிலையாக அதிகரித்திட விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் நீர்ப்பாசன வசதி அனைத்து விவசாயி களுக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும். சிறு சிறு ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வார வேண்டும்; குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து, பாதுகாக்க வேண்டும். இதனால உடனடியாக பொருளாதாரம் வளராது. ஆனால், இவை அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரம் வளர பயனளிப்பவை.
விவசாயிகளுடைய பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் சந்தையில் அதன் விலைச் சரிவை சந்திக்கும்போது விவசாயிகள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஆகையால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை போல விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து வழங்கிட வேண்டும்.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். விவசாயப் பொருட்களை சேமித்து வைக்க தேவையான குடோன்கள் உருவாக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை என விவசாயத் துறை சார்ந்த பல விஷயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும்.

முதலீடுகள் வேண்டுமென்றால் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். தாது மணல், கிரானைட் போன்றவற்றில் முறைகேடு களைத் தவிர்த்து வருவாய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவைத் துறை வளர மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேலும் மேம்படுத்த வேண்டும். 



தொழில் துறையைப் பொறுத்தவரை, தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதிக அளவிலான தொழில் பூங்காக்களை உருவாக்கிட வேண்டும்.  

தமிழகம் நகரமயமானபிறகு கிட்டதட்ட பாதி பேர் நகரத்தில் வசிக்கின்றனர். ஆனால், முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணம் அதிகளவில் வசூலாகி இருக்க வேண்டும். ஆனால், வரி வசூல் என்பது மிகக் குறைவாக உள்ளது. வணிக வரியில் வருவாயை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதையும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற வரி வசூலை ஒழுங்குபடுத்தி வருவாயை அதிகரிக்க வேண்டும்.
விற்பனைக்கான வரியை யார் செலுத்தாமல் போனாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று வரியைச் செலுத்தாமல் ஏமாற்றும் வியாபாரிகளிடம் வரியை ஒழுங்காக வசூலித்து வருவாயை அதிகரிக்கலாம்.

உள்கட்டமைப்பு, சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும். இது மட்டுமின்றி, வெளிப்படையான நிர்வாகம் அமைய வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றை நிறைவேற்றினாலே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும்” என்றார்.
அடுத்ததாக சென்னைப் பல்கலைக்கழகம் பொருளாதார அளவியல் துறை இணைப் பேராசிரியர் சீனுவாசனிடம் பேசினோம்.

“தமிழகத்தின் பொருளாதார நிலைமை தொய்வடைந்த நிலையில்தான் உள்ளது. விவசாயத்தின் வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பது, மின்சாரப் பற்றாக்குறை, முதலீடுகள் குறைவு, ஏற்றுமதி மந்தம், போதிய உள்கட்டமைப்பு இல்லாதது என பல காரணங்களால் உள்ளன. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இது போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

வரி வசூலை ஒழுங்குபடுத்தி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் அதிக அளவில் விற்கப்படும் தங்கத்துக்கு 1% விற்பனை வரியை ஒழுங்காக வசூலிப்பதில்லை. அதை யாரும் சரியாக செலுத்துவதும் இல்லை.  இதுபோன்ற பல வரி வசூலை சரியாக செய்து வரி வருவாயை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.
இறுதியாக, சென்னையின் பிரபல ஆடிட்டரும்  பொருளாதார சிந்தனை யாளருமான எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம். 

“தமிழ்நாட்டின் மொத்த வருமானம் 1.5 லட்சம் கோடி. இதில் மானியமாக ரூ.60 ஆயிரம் கோடியும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியமாக ரூ.60 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகையை வைத்து எப்படி அரசாங்கம் பாலம் கட்டுவது, திட்டங்களைத் தீட்டுவது, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது? இதை அரசு நிர்வாகமும் மக்களும் நன்கு யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை என அனைத்து இடத்திலும் லஞ்ச லாவண்யங்கள் இருக்கிறது. தமிழகத்தில் தொழிலை லாபகரமாக நடத்த முடியாது என்ற சிந்தனை பரவலாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

தற்போது 100 யூனிட் வரை இலவசம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் இலவசம் என்பதற்கே இடமில்லை. இந்த 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தொழில் நிறுவனங்கள் தலையில்தான் கைவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தொழில் நிறுவனங்களுக்கு 7 ரூபாய் என உள்ள ஒரு யூனிட் மின் கட்டணம் 8 ரூபாய் என அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு பொருளை 11 ரூபாயாக அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இதன் பாதிப்பு இறுதியில் பொதுமக்களைத்தான் சென்றடையும்.
தமிழகத்தில் தொழிலை லாபகரமாக செய்ய முடியாத சூழலே உள்ளது. இதை எப்படி சீர் செய்ய வேண்டும் என்றால் மானியம் மற்றும் அநாவசியமான செலவுகளை அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அரசாங்கம் வேண்டுமென்றால் மறுக்கலாம். ஆனால், மின்வெட்டு இன்னும் பல இடங்களில் இருக்கிறது. மின்வெட்டைத் தடுக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும். காற்றாலைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் தேங்கி இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங் களுக்கான நில ஒதுக்கீட்டில் தெளிவாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் திறனறிவு என்பதும் மிகவும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இதிலிருந்து வெளிவரும் பல மாணவர் வேலைக்கான தகுதியை முழுமையாக பெற்ற பாடில்லை. ஆகையால் தொழில் நிறுவனங்களும், கல்லூரியும் இணைந்து மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். 



தமிழகத்தில் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை கள் ஓரளவுக்கு நன்றாக உள்ளன. ஆனால், மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் காட்சி அளிக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளின் பாதையை மேம்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டால் ஓரளவு வருவாய் கூடலாம்’’ என்றார்.

தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தெரியாததல்ல. ஆனால், அதை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் நினைத்ததே இல்லை. இந்த முறையாவது முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.


வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!



கவிப்பேரரசு வைரமுத்து. திரையிசைப் பாடல்களில் கதைக்களத்துக்கு மட்டுமல்லாமல், திரைக்கு வெளியே சமூகத்துக்கும் தன் வரிகள் மூலம் செய்தி சொல்லிக்கொண்டே இருக்கும் 62 வயது இளைஞர். தான் எழுதிய பாடல்களில், சில சுவாரஸ்யப் பகிர்வுகளை அங்கங்கே பகிர்ந்திருந்தார். அவற்றிலிருந்து சில;  


வர் ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல்களில் ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது. ஜீன்ஸ் படத்தில் இரட்டை கிளவி. ராவணன் படத்தின் ‘கள்வரே கள்வரே’வில் வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி சொல்லும்போது ‘காதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிறபோது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று சேர்வதாய் உணர்கிறேன். இலக்கணக்குறிப்புகளை ஆசியர்கள் சொல்லிக்கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்கொடுத்தால் சுவை’ என்கிறார்.

* ‘ஹோஹோ கிக்கு ஏறுதே’ பாடலில் ‘ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்குமட்டும் இதுதான்  ரஜினிச்சித்தர் பாட்டு’ என்றுதான் எழுதியிருந்தாராம். இயக்குநர், இசையமைப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு. ‘சித்தராவது அத்தனை சுலபமல்லவே.. ரஜினிச்சித்தர் என்பதெல்லாம் வேண்டாமே’ என்று அன்போடு கேட்டுக்கொள்ள ‘இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’ என்று மாற்றினாராம்.

வைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள் பெண்பால்’ ஒரு மாணவன் குறும்பாகக் கேட்கிறான்.. ‘குழந்தை எந்தப் பாலில் அடங்கும்?’ ஆசிரியர் திகைக்க, வைரமுத்து பதில் சொன்னாராம்: ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்’. மின்னலைப்பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது ஞாபகம் வந்ததாம் கவிஞருக்கு

*  சிங்கப்பூரில் நண்பரோடு நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் வழிமறித்து, ‘நீங்கதானே வைரமுத்து? உங்களோட ஒரு பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்லி,  ஒரு பாடலை வரிக்கு வரி பாராட்டிவிட்டுச் சென்றாராம். உடனிருந்த நண்பர் கொஞ்சம் மரியாதையாக விலகி நிற்கிறார். ‘யார் இந்தப் பெரியவர்’ என்று வைரமுத்து கேட்க ‘எஸ்.ஆர்.நாதன்’ என்கிறார் நண்பர். ‘என்ன செய்துகொண்டிருக்கிறார்?’ இவர் திரும்பக் கேட்க, நண்பர் சொல்கிறார். ‘சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருக்கிறார்’. அப்படி ஜனாதிபதி பாராட்டிய பாடல் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’

சில பாடல்கள் கதைக்குப் பொருந்துவதைவிட, வாழ்க்கைக்கு பொருந்திப் போகிறது. முரளியின் படமொன்றில் கதைச்சூழலுக்கு வைரமுத்து எழுதிய பாடலொன்று, முரளியின் இறுதி ஊர்வலத்தின்போது ஒலிபரப்பப்பட்டு கண்ணீர்ச்சூழலுக்கும் பொருந்திப் போனது குறித்து வருந்தியிருக்கிறார் கவிஞர். அந்த வரிகள்: ‘ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம் துளி கண்ணீரும் விடவேண்டாம்..’ அதேபோலவே பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட பாடல் ‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு..’


னிதன் படத்தின் ‘மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்’ பாடல் நீளம் கருதி படத்தில் இடம்பெறாது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு விட்டது. பிறகு படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினியின் காதில் இந்தப் பாடல் விழ, ‘நல்லாருக்கே’ என்று இயக்குநரிடம் பேசி டைட்டில் பாடலாக சேர்த்தினார்களாம்.

* தமிழில் ராவணனுக்கு வைரமுத்து எழுத, இந்தியில் ராவனுக்கு குல்சார் எழுதுகிறார். ‘என்னைவிட நிச்சயமாக வைரமுத்துதான் அருமையாக எழுதியிருக்கிறார்’ என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் குல்சார். இதைக் கேட்ட வைரமுத்து சொன்னாராம்: ‘என்னைவிட நிச்சயம் குல்சார் திறமையான கவிஞர்தான். ஆனால் இந்தியைவிட நிச்சயமாக தமிழ்தான் சிறந்தமொழி என்பதால் என் எழுத்து விஞ்சி நிற்கிறது’ 

விஞர் கிராமத்திலிருக்கும்போது பாரதிராஜா ‘உடனே பாடல் வேண்டும் என்று மெட்டனுப்புகிறார். எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கு உள்ளூர் ஒலிபெருக்கியின் ஓசை தொந்தரவு கொடுக்கிறது. நண்பர்களை அழைத்து சொன்னபோது ஒலிபெருக்கி நின்று, பாட்டு பிறக்கிறது. 3 மாதம் கழித்து திரும்ப கவிஞர் கிராமத்துக்குப் போனபோது அதே ஒலிபெருக்கியில் அவர் அன்று எழுதிய பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததாம். அந்தப் பாடல்: ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..’

முதல்வன் படத்திற்காக,
‘ஓலைக்குடிசை.. ஒற்றை ஜன்னல்.. துண்டு மேகம்.. தூரத்து வானம்!
கொஞ்சம் வெற்றிலை.. நிறைய மல்லிகை.. கிழிந்தபாயில் கிளியோ பாட்ரா!’  -
என்று வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டார். பாடி, பாடலும் ரெடி. ஆனால் ஷங்கர் அழைத்து, ‘இவ்ளோ மென்மையான பாட்டு. அதும் க்ளைமாக்ஸ் முன்னால. ரசிகன் எழுந்துபோய்டுவான்’ என்று சொல்ல வேறு எழுதிக் கொடுத்தார். அதுதான்... ‘உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு ஊட்டிவிட நீ வேணும் எனக்கு’

சூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் ரசித்து ரசித்து கவிஞர் எழுதிய பாடல் ‘காடு திறந்தே கிடக்கிறது..’ இசையமைப்பாளர் பரத்வாஜும், இவரும் ‘இந்தப் பாடலை தேசமே கொண்டாடப்போகிறது’ என்று சிலாகித்துக் கொண்டிருக்க, பாடல்கள் வெளியாகி ஒரு குத்துப்பாடல் மற்ற எல்லாப் பாடல்களையும் அடித்துக் கொண்டு போனது. அது ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய்!’

யக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி, ‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள். அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின் அவளே விதவையாக இருப்பாள். தற்கும் பொருந்தவேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்; ‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’

பாடலின் மெட்டுக்கு ‘மெல்லினமா, வல்லினமா எது பொருந்தும்?’ என்ற அறிவியலை அறிந்து அதற்குத் தகுந்தபடி தான் எழுதிக்கொடுப்பாராம் கவிஞர். அதனால்தான் ‘அன்புமிக்க மங்கையே.. ஆசையுள்ள தங்கமே இன்பமெல்லாம் அள்ளித்தாடி..’ என்று எழுதலாமா என்று யோசித்து,  இந்த மெட்டு வல்லினத்தைத்தான் கேட்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக யோசித்து, ‘ஒட்டகத்தக் கட்டிக்கோ’ என்றெழுதினார்.

விஞர் சின்னவயதில் கேட்ட நாட்டுப்பாடலில் வரும் ‘வாய்க்கா கரையோரம் வந்து நின்னான் அய்த்த மகன் வந்து நின்ன அய்த்தமகன் வாடபட்டுச் சூலானேன்’  வரிகளை ஞாபகப்படுத்திதான் அதன் நீட்சியாக ‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ பாடலில் ‘நீ ஓரக்கண்ணால் பாத்தாலே நான் புள்ளத்தாச்சி’ என்று எழுதினாராம். காத்தடித்து கர்ப்பமானது அந்தப் பெண்.. கண்ணடித்தே கர்ப்பமானது இந்தப்பெண் என்பார் கவிஞர்.

   

ருபாடல் ஒலிப்பதிவு முடிந்து வந்து ‘முழுப்பாடலையும் கேட்கமுடியுமா?’ என்று கேட்கிறார் எஸ்பிபி. உடன் ஜானகி. இசையமைப்பாளர் வித்யாசாகர் போட்டுக்காட்டியதும், அதே ஒலிப்பதிவுக்கூடத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து, ‘ஆண்டுக்கு இப்படி ஒரு பாட்டு கிடைத்தால் போதும். வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கலாம்’ என்று வித்யாசாகர், வைரமுத்து எல்லாரையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகிறார். அந்தப் பாடல் ‘மலரே மௌனமா..’


சாதிக்கெதிரான சாட்டையடி!

பூமியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐம்பெரும் நில பிரிவுகள் இருக்க, பூமியில் வசிப்பவர்களுக்கு இடையே தவறுதலாக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவினை தான் “சாதியும் சாதி சார்ந்த இடமும்” என்பதைச் சொல்லும் சாதி சார்ந்த பல படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், மாறுபட்ட கோணத்தில் மீண்டும் ஒரு முயற்சி தான் உறியடி.. மைம் கோபியை தவிர அனைவருமே புதுமுகங்களாக கொண்டு திரைக்கு வந்திருக்கிறது. 



சாதிய அமைப்புகளும் அதன் கட்டுப்பாடுகளும் இன்று வரையிலும் தளர்த்தவோ, உடைத்தெறியவோ முடியாத ஒரு சமூகத்தில் நாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரையிலும் கொலைகள், கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் என வெடித்துச் சிதறுவதற்கு மூலகர்த்தாவாக பல இடங்களில் சாதிய பிரச்னைகளே காரணியாக இருக்கிறது. 1999-ல் இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கிய, தீண்டாமையை எதிர்க்கிற  நான்கு மாணவர்களைச் சுற்றியே உறியடி படத்தின் கேமிரா நகரத்தொடங்குகிறது. 

வெளியூர்களிலிருந்து, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பொறியியல் படிக்க வரும் நான்கு மாணவர்கள், தாபா (மதுவுடன் கூடிய உணவு விடுதி), கல்லூரி, காதல் என்று ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அதே ஊரில் சாதிச் சங்கத்தினர் வைக்கும், தங்கள் தலைவரின் சிலையை அரசு சில காரணங்களால் சீல் வைத்துவிடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைக்கிறார் மைம் கோபி.  இதற்கு நடுவே, தனிப்பட்ட பகை காரணமாக அந்த நான்கு மாணவர்களையும் கொல்லத் துடிக்கும் மைம்கோபியின் சாதிக்காரர் சுருளி. இவர்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும் இந்த நால்வரும், எல்லாம் இந்த சாதியினால்தான் என்றறிந்த மாணவர்கள் எடுக்கும் முடிவும்தான் உறியடி!
 
”என்னத்துக்கு வம்பு” என்ற காரணத்தாலேயே 1999-ல் நடப்பது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்கான சூழ்நிலை சரியாக காட்சியில் அடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த சாதிய நிலைப்பாடுகள் என்னென்ன என்பதை லைட்டாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தாழ்ந்த சாதி மக்களை ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுப்பது, அவ்வாறு சாப்பிட நேர்ந்தாலும் காசு வாங்க அருவெறுப்பது என்று பிரச்னைகளை கண்ணாடி போலச் யாக சொல்லிச்செல்கிறது திரைப்படம். 

மாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் எல்லோருமே அவர்களுக்கான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். “நீங்களாம் எதிர்காலத்துல என்னவாக போறீங்க?” என்று கேட்க, ஒவ்வொருவராக  “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா?’ என்று நண்பன் சொல்வதும் என்று பல இடங்கள், நம் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும்



பிரச்னையில் சிக்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும், சண்டை போட ஆள் வருவார்கள் என்று முன்கூட்டியே சண்டைப் போட தயாராகும் காட்சிகள், எதற்கெடுத்தாலும் அடிக்க கிளம்புவது என்று படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வன்முறை காட்சிகள் அரங்கேறுவது கொஞ்சம் வருத்தம். இவர்களெல்லாம் வகுப்பறைக்கு செல்ல மாட்டார்களா? அந்த ஊரில் போலீசாரே இல்லையா என்ற சில கேள்விகளும் எழுகிறது. ஹீரோயினாக வரும் ஹெல்லா பென்னா கதாபாத்திரம் படத்தோடு ஒட்டாமல், வந்து போகிறது. 

இதுவரை வெளியான பல சாதியப் படங்களின் முடிவு நிச்சயம் கொலையாகவோ, டிராஜடியாகவோ தான் முடியும். ஆனால் இதில் வித்தியாசமான நோக்குகளைக் கையாட்டிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி இசையமைப்பாளர் என்று எடுத்த அனைத்தையும் கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய்குமார் 

“நம்ம ஜாதிப்பெயரை சொன்னாலே நாம தான் தலைவரா இருக்கணும், எவனையும் வளர விட்டுறக்கூடாது” என்று சாதியை பகடையாக கொண்டு தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கும் சாதித்தலைவர்களின் மனநிலையை ஒற்றை வசனத்தில் சொன்னது நச்.  சமீபகாலத்தில் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் பல சாதியக் கட்சிகளின் வரலாற்று பின்னணியில் நிச்சயம் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பிய விதத்தில் உறியடி, சாதிக்கெதிரான சாட்டையடி... 




காபி பிரியரா நீங்க...சுற்றுச்சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க!

வ்வொரு நாளும் உலகம் முழுக்க அகற்றப்பட முடியாமல்  குவிந்துவரும்​ ​குப்பைகள் ஒருபுறம் என்றால்... எதிர்காலத்தையும்​,​வருங்கால சந்ததியினரைப் பற்றியும் ​கொஞ்சம் கூட கவலைகொள்ளாமல் சரமாரியாக மரங்கள் வெட்டப்படுவது மறுபுறம்... மரங்கள் வெட்டப்பட்டதனால் இன்று  உலகம் சந்தித்துவரும் பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல!


மத்தியப் பிரதேசத்தில் கிசிபுரா என்ற பகுதியில் மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் மரக்கன்றுகளை சீராக கேட்கும் அளவு மரத்தின் தேவை  பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மரங்கள் காணாமல் போவிட்டன.

உலகின் இந்த இரு மிக முக்கியமான பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே தீர்வு இருந்தால்?

“இருந்தால் என்ன, தீர்வு இருக்கிறது” என்கின்றது கலிபோர்னியாவை சேர்ந்த ‘Reduce Reuse Grow’ என்கின்ற ​தன்னார்வ தொண்டு நிறுவனம். 

பயன்படுத்திய பின் மண்ணுக்குள் நடக்கூடிய 'பயோ காபி கப்' (bio coffee cup)​என்ற காபி கோப்பைகளை உலகிலேயே முதன்முறையாக​ வடிவமைத்துள்ளனர் இவர்கள். காபி அருந்திய பின்னர் அந்த காபி கோப்பையை மண்ணுக்குள் புதைத்துவிட்டால் ​போதும். அது செடியாக வளர்ந்துவிடும். 

ஆய்வு ஒன்றில், சராசரியாக ஒரு நாளைக்கு அமெரிக்காவில் மட்டும் ​400 மில்லியன் காபி கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.​ ​இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மண்ணில்​ ​புதைந்த பின் மட்குவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ​ஆனால் இவர்கள்​ ​வடிவமைத்துள்ள இந்த பயோ காபி கப்​,​மூன்று மாதங்களுக்குள் மட்கி செடியாகவே முளைத்து விடுகிறது. 

இந்த பயோ காபி கோப்பைகள் PLA என்கிற ஒரு வகையான மட்கும் பிளாஸ்டிக்கால் கோட்டிங் செய்யப்படுகிறது. அதனோடு அறிய​வகை பூச்செடிகளின்​ ​விதைகளும் செலுத்தப்படுகின்றன. காபி அருந்திய பின் இந்த கப்புகளை​ ​தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வரை ஊறவைத்து மண்ணுக்குள் புதைத்து விட்டால்போதும். அவை மட்கி, விதைகள் மண்ணுக்குள் புதைந்து கொஞ்சநாளில் செடியாக கிளர்ந்து நிற்கும்.

மண்ணில் புதைக்கப்படும் ஒவ்வொரு பயோ காபி கப்புக்குள் இருந்தும் ஒரு​செடியாவது முளைக்கும். சிலசமயம், பல நூறு வருடங்கள் வாழப்போகும் ​மரங்கள்கூட வளரலாம். இந்த காபி கோப்பைகளை தோட்டங்கள், திறந்தவெளி என​ எங்கு வேண்டுமானாலும் புதைக்கலாம். 

அப்படி காபி குடித்துவிட்டு கோப்பைகளை மண்ணில் புதைக்க கூட முடியாமல் சோம்பேறித்தனமாய் இருப்பவர்களுக்காக ​'​Reduce​ ​ Reuse Grow’ நிறுவனம் அங்கங்கே குப்பை தொட்டிகளை​ நிறுவி, அதில் சேரும் கோப்பைகளை​ ​மண்ணில் புதைத்து செடியாக்கி வரும் சேவையையும் செய்துவருகின்றது.

 

இந்த புதுமையான விஷயம் மெல்ல​ மக்களிடம் பரவி இப்போது பலரும் இந்த யோசனையை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கடந்த சில மாதங்களில் இப்படி அங்கு ​கிட்டத்தட்ட ஒரு​ ​லட்சம் கோப்பைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன . கலிஃபோர்னியா மட்டுமின்றி பிற இடங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சித்து வருகின்றனர்.

“ஒருசமயம் தெருவில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை கண்டபோது, 'தேவையில்லாத இந்த​ஒவ்வொரு குப்பையும் ஒரு மரமாய் முளைத்திருந்தால் இந்நேரம் இந்த பூமி​​எப்படி மாறியிருக்கும்” என்று தோன்றியது. இந்த ஒரு சிறு எண்ணத்தின் செயலாக்கம்தான் இந்த ​'​பயோ காபி கப்’ என்கிறார் இந்த ஐடியாவை செயலாக்கிய ‘Reduce Reuse Grow’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் ஹெனிகே. 

சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய திட்டங்களையே செயல்படுத்திக்கொண்டிருக்காமல் நம்மூரிலும் இப்படி புதுமையான விஷயங்களை யோசித்து செயற்படுத்தினால் ஒவ்வொரு காபி பிரியரும் சுற்றுச்சூழலின் சிறந்த நண்பனாக முடியும்...

நாமும் செயல்படுத்தலாமே..


கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!

வெகு விரைவில் ​ஜாம்ஷெட்பூர் (​Jamshedpur​)​, கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக புகழ்பெறப் போகிறது. ஆம்.., ​ஜாம்ஷெட்பூர் ​நிர்வாகம் ஒரு மிகப் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. நகரத்தின் மொத்த கழிவுகளையும் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை ​தொழிற்சாலைகளுக்கு​ தரப்போகிறது இந்த ஆலை.

இதனால் இரண்டு பயன்கள் ஏற்படப்போகின்றன. இனி, கழிவுநீர் சுத்தமான நீர்​நிலைகளையோ, கடலையோ, நிலத்தையோ மாசுபடுத்தாது. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தண்ணீரை​ வழங்குவதுடன், இயற்கைக் கும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கு தேவைக்குறைவு இன்றி வழங்க முடியும். ஆக, ஒரே கல்லில் இரு மாங்காய்கள்!



TATA steel நிறுவனத்தின் துணை நிறுவனமான JUSCO​ ​வின் (Jamshedpur Utilities and Services Company- Jamshedpur) முயற்சியால் ​பாராவில்​(Bara)​, நிறுவப்பட்டுவரும் இந்த சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் ஏற்கெனவே 2015ல், ஜாம்ஷெட்பூர் சாலைகளில், ​பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கழிவுநீர் ஆலை, சுமார் 30 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது என்கிறார்கள்  JUSCO​ நிறுவன அதிகாரிகள்.​

ஏற்கெனவே நிர்மாணிக்கக்கப்பட்ட Biatupur​​​ சுத்திகரிப்பு ஆலையைச் சேர்த்து​,​மொத்தமாக 40 மில்லியன் லிட்டர் நீரைச் இனி சுத்திகரிக்கலாம். இது, ​ஜாம்ஷெட்பூரில் உள்ள மொத்த கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுதமானதாகும். இந்த சுத்திகரிப்பு ஆலைகள் ZLD (Zero Liquid Discharge) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ​அதிநவீன, மேம்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் ​இது. கிட்டத்தட்ட அனைத்து கழிவுநீரையும் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கும்​ செயல்முறை.


அதாவது, கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளை சிறிதாக மாற்ற, Ultra filtration மற்றும் Reverse osmosis ஆகிய இரண்டிற்கும் அந்த நீர் உட்படுத்தப்படுகிறது. இந்த நீர்​,​ பிறகு கொதிக்கும் நிலைக்கு (ஆவியாகும் நிலை) கொண்டுசெல்லப்பட்டு, அதில் கலந்திருந்த திடக் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இப்படி ஆவியான நீர், condense செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி பல நிலைகளில் சுத்தம் செய்யப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.

தனிநபர் நீர் நுகர்வில் ஜாம்ஷெட்பூர் இந்திய அளவில் நான்காவது ​இடத்தில் ​இருப்பதாக​கூறப்படுகிற நிலையில் இந்த சுத்திகரிப்பு ஆலை எதிர்காலத்தில் ​கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஜாம்ஷெட்பூரை தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.



இத்திட்டத்திற்கான பணிகள் 2017ன் ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே முடிவடையும். JUSCOவின் இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கையோடு, நம் மாநிலத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாமே!

காலில் விழுந்த எம்.எல்.ஏ: மற்றவர் காலில் விழக்கூடாது... பதிலுக்கு காலில் விழுந்த கிரண்பேடி!

 மற்றவரின் காலில் விழக் கூடாது என அறிவுறுத்தும் வகையில், தன் காலில் விழுந்த பெண் சட்டமன்ற உறுப்பினரின் காலில் கிரண்பேடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தின் புதிய கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்று கொண்டார். 





கிரண்பேடி பதவி ஏற்றதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, புதிதாக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, கிரண்பேடி காலில் விழுந்து சில எம்.எல்.ஏ.க்கள் ஆசிர்வாதம் பெற முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், ''மக்கள் பிரதிநிதிகள் யாருடைய காலிலும் விழக்கூடாது" என்று கிரண்பேடி அறிவுறுத்தி கொண்டிருந்தார்.

அந்த நேரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயவேணி, வரிசையில் வந்து திடீரென கிரண்பேடி காலில் விழுந்து வணங்கினார். உடனே அவரை தடுத்த கவர்னர் கிரண்பேடி, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென எம்.எல்.ஏ. விஜயவேணி காலில் விழுந்து அவரது காலை தொட்டு வணங்கினார்.



இதனை சற்றும் எதிர்பாராத விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் மேடையில் இருந்த நாராயணசாமி உள்ளிட்டவர்களும் சங்கடத்தில் நெளிந்தனர். அதோடு காலில் விழுந்த கவர்னர் கிரண்பேடியை உடனடியாக தூக்கினார் விஜயவேணி. இதனால் பதவி ஏற்பு விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்... அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!

தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவதற்காக புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை மற்றும் எரிசக்தி துறை (பொறுப்பு) கூடுதல் தலைமைச்செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



        

அப்போது, தமிழகத்தை மிகை மின் மாநிலமாக மாற்றுவதற்காக அனைத்து மின் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேணடும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரித்து, மிகை மின்மாநிலமாக மாற்றுவதுடன், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மாசு இல்லா மின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

ரூ.3 ஆயிரத்து 921 கோடி மதிப்பில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கம் திட்டம், ரூ.6 ஆயிரத்து 376 கோடி மதிப்பில் 3,800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின்நிலையம், ரூ.12 ஆயிரத்து 778 கோடி மதிப்பில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்ள உப்பூர் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின்திட்டம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து பணியை விரைவு படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



இதேபோல், உடன்குடியில் தலா 1,320 மெகாவாட் உற்பத்தி செய்யும் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, எண்ணூரில் மாற்றியமைக்கப்படும் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலைய பணிகள், 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் கடலாடி அனல்மின்நிலையம், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் குந்தா நீர்மின்சார உற்பத்தி நிலையம், 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சில்லகல்லா சூப்பர் நீர்மின்சார உற்பத்தி நிலையம், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்திறன் கொண்ட மத்திய அரசு திட்டமான செய்யூர் அல்ட்ரா மெகா திட்டம் ஆகியவற்றில் பைப்-லைன் அமைக்கும் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.



கங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்?படகுகள் மூலம் தேடுதல் தீவிரம்

காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் சினிமா நிறுவன அதிபர் எஸ். மதனை, போலீசார் மற்றும் உறவினர்கள் தீவிரமாக கங்கை நதியில் தேடி வருகிறார்கள். இதற்கென 5 படகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

         




நேற்று(ஞாயிறு) வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்பட்ட  கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவி தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் மதன், தனக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை எல்லாம் ஐ.ஜே.கே. நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து,அந்தக் கடிதத்தை வேந்தர் மூவிஸ் மதன்தான் எழுதினாரா? உண்மையில் அது அவரின் 'லட்டர்பேடு' தானா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மதன் தனது குடும்பத்தாரோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பதற்றமான மதனின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் வாரணாசி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மதனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து வாரணாசி சென்றுள்ள சினிமா தயாரிப்பாளர் சிவாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.



அப்போது அவர் கூறுகையில், "மதன் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்துவிட்டோம்.அங்கு அவர் அறையைக் காலி செய்யவில்லை. அவரின் பேக் மற்றும் உடைமைகள் அறையிலேயே உள்ளன. மதனைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம்.ஆனால் முடியவில்லை.இதனால் பதற்றமான நாங்கள் உள்ளூர் நபர்கள் மற்றும் போலீசாரின்  உதவியோடு, 5 படகுகள் அமைத்து கங்கை நதியில் தேடிவருகிறோம். மேலும்,வாரணாசிக்கு  மதன் அடிக்கடி வரும் பழக்கம் உடையவர்.அதனால் அவருக்கு இங்குப் பழக்கம் உள்ள நண்பர்கள் மூலமும் தேடி வருகிறோம். சினிமாக்களுக்கு உதவும் லொகேஷன் மேனேஜர்கள் மூலமும் மதனைத்  தேடிவருகிறோம்" என்றார்.

இது தான் இந்த ஐபிஎல்லில் பெஸ்ட் லெவன்!

சுமார் இரண்டு மாத காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் திருவிழா முடிவுக்கு வந்துவிட்டது. பெங்களூர் அணியை வீழ்த்திஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடிவர்களை கொண்டு உருவாக்கிய  ஐபிஎல் 2016 கனவு அணி இங்கே!  



டேவிட் வார்னர் (கேப்டன்)

இந்தத் தொடரின் ஒரே  அயல்நாட்டு  கேப்டனாக இருந்தாலும் தனி ஒருவனாக  நின்று பெரும்பாலான போட்டிகளில்  ஹைதரபாத் அணியை வெற்றிபெற வைத்தார் வார்னர். பந்துவீச்சு மிகவும் பலமாக இருந்தாலும், பேட்டிங்கில் இவருக்கு யாரும் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தரவில்லை. ஆனால் வார்னர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் 17 போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 843 ரன்கள் குவித்து, ஒரு சீசனில் 800 ரன்னைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் . குறிப்பாக குவாலிஃபயரில் குஜராத் அணிக்கு எதிராக, தனியொருவனாகப் போராடி 93 ரன்கள் எடுத்த வார்னரின் அந்த இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் வார்னர்  சிறப்பாக செயல்பட்டார். பவுலர்களை பயன்படுத்துவதில் இவர் பயன்படுத்திய  ட்ரிக்ஸ் வாவ் ரகம்.

குவின்டன் டிகாக்:-
இந்தத் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டி காக் தான். 23 வயதுதான் என்றாலும் இவரது ஆட்டத்தில் அவ்வளவு முதிர்ச்சி. அதுவும் குறிப்பாக இவரது கட் ஷாட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. டெல்லி அணி சேஸ் செய்த பல போட்டிகளில் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் டிகாக். ஆர்.சி.பி- க்கு எதிராக இவர் அடித்த சதம், வோர்ல்டு கிளாஸ்! டி காக்குக்கு இந்த ஐ.பி.எல்லில் மூன்று முறை தவறாக அவுட் கொடுக்கப்பட்ட நிலையிலும் மூன்று அரை சதம், ஒரு சதம் உட்பட 445 ரன்கள் குவித்திருக்கிறார் டி-காக்.

விராட்  கோஹ்லி
கிரிக்கெட் விளையாடுவது போலவா கோஹ்லி இந்த சீசனில் விளையாடினார்?  'பேட்மேன்' எதிரிகளைப் பந்தாடுவது போல், சர்வதேச பவுலர்கள்  பலரையும்  உரித்துத்தள்ளினார் கோஹ்லி. ஒரே சீசனில் 973 ரன்கள், 4 சதங்கள், ஏழு அரைசதங்கள்,  38 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடினார் வி.கே.! ' அரையிறுதிக்குத் தகுதி பெறுமா' என்று பலரும் இவரது அணி குறித்து நினைத்துக்கொண்டிருக்க, தானே முன்னின்று  அணியை இறுதிப் போட்டி வரையிலும் அழைத்துச் சென்றார். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார் கோலி. 20 ஓவர் போட்டியில் சதமடித்தால் சரி, 15 ஓவர் போட்டியில் கூட சதமடித்து பிரமிக்க வைத்த கோஹ்லியின் பேட்டிங் மாஸ்டர்கிளாசை வர்ணிக்க புதுப்புது வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் வர்ணனையாளர்கள் .

ஏ.பி.டிவில்லியர்ஸ்:-,..
கோலி பேட்மேன் என்றால்,  டிவில்லியர்ஸ் சூப்பர்மேன் . குவாலிஃபயரில் குஜராத் அணியின் ,வெற்றியை அவர்களிடமிருந்து வம்படியாய் பறித்த  அந்த   இன்னிங்க்ஸ், ஏ.பி.டியின் மிகச்சிறந்த டி-20 இன்னிங்க்சில் ஒன்று.  வெறும் அதிரடி மட்டுமென்று இல்லாமல், அணியின் நிலை உணர்ந்து ஒவ்வொரு கியராக மாற்றி வேறொரு ஏ.பி.டியை இம்முறை நமக்குக் காட்டினார். 6 அரைசதங்கள் 1 சதம் என 687 ரன்கள் குவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஸ்ட்ரைக் ரேட் - 168,  கோஹ்லியுடன் இவர் அமைத்த கூட்டணி  எதிரணி பவுலர்களுக்கு   வேற லெவல்  தலைவலியாக அமைந்தது .களத்தில் என்ன வேலை செய்தாலும் அங்கு ஏ.பி.டி மேஸ்ட்ரோதான்! ஆம் இந்தத் தொடரில் மொத்தம் 19 கேட்சுகள் பிடித்து அதிலும் முதலிடம் வகிக்கிறார்  இந்த  சூப்பர்மேன்.



டுவைன் ஸ்மித்,
சென்னை அணியில் இருந்த  ஃபார்மை அப்படியே குஜராத்த்துக்கு எடுத்து வந்தார் ஸ்மித். ஓப்பனிங்காக இருந்த போதிலும் சரி, மிடில் ஆர்டரில் இருந்த போதும் சரி, ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. 3 முறை பவர்பிளேவில் லயன்ஸ் அணி 70 ரன்களைக் கடந்ததே, ஸ்மித்தின்  அசுர வேக அதிரடி ஆட்டத்துக்கு  உதாரணம்.  பேட்டிங்(324 ரன்) மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் (8 விக்கெட்) மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். ஓரிரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய போதும், அணிக்குத் தேவையானபோது விக்கெட்டுகள் எடுக்க இவர் தவறவில்லை. கொல்கத்தாவுக்கு எதிராக
 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஐந்தாம் நிலையில் களமிறங்க தகுதியான சிறந்த ஆல்ரவுண்டர் இவர்.

யூசுப் பதான்
பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது  ஓரிரு போட்டிகளில் மாஸ் காட்டும் யூசுப், இம்முறை முழு பார்முக்கு வந்து முழு  தொடரிலும் தன் திறமையை நிரூபித்தார். இத்தொடரில் அவர் அடித்தது வெறும் 361 ரன்கள் . ஆனால், அவரது சராசரி 72.20. எதிரணி வீரர்களால் 5 முறை மட்டுமே இவரை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. லீக் போட்டியொன்றில்  பெங்களூரு அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் சிக்சர் மழையாய்ப் பொழிந்து, தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை வெற்றி பெற வைத்தார். மழையால் பாதிக்கப்பட்ட புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் இடியாய் இடித்தார் யூசுப். இவரது ஆப் ஸ்பின்னும் அணிக்கு அவ்வப்போது உதவியது.சிக்கனமாக பந்து வீசினார். ஃபினிஷர் ரோலுக்கு பக்கா ஃபிட் யூசுப் பதான்.

ஆந்த்ரே ரசல்
கடந்த சீசனின் தொடர் நாயகன், இம்முறையும் சூப்பர் நாயகன்தான். இவரால்  நட்சத்திர பந்துவீச்சாளர் மோர்னே மோர்கெலின் தேவை கொல்கத்தாவுக்கு குறைந்தது.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அமர்க்களப்படுத்திய ரசல், காயத்தால் அவதிப்பட்டது, நைட் ரைடர்சுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ரஸ்ஸல் காயத்துக்குப் பிறகு கொல்கத்தா சரியான வேகப்பந்து ஆல்ரவுண்டர்  இல்லாமல் திணறி தோல்விகளை தழுவியது.  15 விக்கெட்டுகளும், 8 இன்னிங்ஸ்களில் 188 ரன்களும் குவித்து இத்தொடரின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். இவரது இடத்தை எந்தவொரு வீரராலும் நிச்சயம் நிரப்ப முடியாது என்பதே உண்மை. 

கிறிஸ் மோரிஸ்
இந்த சீசனின் ஏலத்தில் 7 கோடிக்கு மோரிஸ் வாங்கப்பட்ட போது எத்தனையோ கேள்விகள் எழுந்தன. அதெற்கெல்லாம் தனது திறமையால்  பதில் சொல்லிவிட்டார் மோரிஸ். 150 கி.மீ பந்து வீசி அசத்தியதுடன், அசால்டாக சிக்சர்களைப் பறக்கவிட்டும் அமர்க்களப்படுத்தினார்.  தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்டம் கண்ட டெல்லி அணிக்கு,  தற்போது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறார் மோரிஸ். 13 விக்கெட்டுகள் அள்ளிய மோரிஸ் 7 இன்னிங்ஸ்களில் 195 ரன் எடுத்தார். வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்து, இத்தொடரின் அதிவேக 50-ஐ பதிவு செய்தார். குறிப்பிட்ட அந்த போட்டியில் குஜராத் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்து கடைசிப் பந்துவரை இவர் ஆடிய ஆட்டம் மிரட்டலின் உச்சம்,

புவனேஷ்வர் குமார்
ஸ்விங்காலும், யார்க்கர்களாலும் எதிரணியை மிரட்டிய புவனேஷ்தான் இந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் வின்னர். முதல் போட்டியில் பெங்களூருவின்  சர்ஃபராசால் சூறையாடப்பட்ட பிறகு, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார் புவி. கடைசி தருணங்களில் ஏற்பட்ட இக்கட்டான சூழல்களிலும் முதிர்ச்சியோடு பந்து வீசிய புவனேஷ், நிச்சயம் பர்ப்பிள் கேப் வெல்லத் தகுதியானவர்தான். பவர் பிளேயில் மெயிடென்கள், டெத்தில் யார்க்கர்கள் என 23 விக்கெட்டுகள் அள்ளிய புவி, இந்திய அணியில் தான் இழந்த ஸ்டார்டிங் பெர்த்தை நிச்சயம் கைப்பற்றி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

யுஸ்வேந்திர சஹால்.
ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணியின் டாப் பவுலராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் சஹால். திடீரென்று வேகம் காட்டுவது, கூக்ளி, ஐந்தாவது ஸ்டம்ப் லென்தில் வீசுவது போன்றவை  இவரது மிகப்பெரிய பலங்கள். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர்  (21 விக்கெட்டுகள்) இவர்தான்.பேட்டிங்குக்குச் சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கூட விக்கெட் வேட்டை நடத்தும் சஹால், ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பெங்களூரு அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரே  சஹால்தான். டி-20  பார்மேட்டுக்கு ஏற்ற ஸ்பின் பவுலர் என்பதால், சிறந்த லெவனில் கண்டிப்பாக இவருக்கு இடம் உண்டு.

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் :-



இந்திய அணியை வங்கதேச மண்ணில் துவைத்தெடுத்த  இந்த இளம் புயலிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி மிகச்சிறப்பாக செயல்பட்டார்  முஸ்தாபிசுர். மொத்தமாக 17 விக்கெட்டுகள்  அள்ளினார் . ரஹ்மானின் வேரியேஷன்கள் அனைத்து  பேட்ஸ்மேன்களையும் திணறடித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர்  ரஸ்ஸல்லை தனது யார்க்கரால் இவர்  நிலைகுலைய வைத்தது, இந்த ஐ.பி.எல் லின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. கடைசி கட்ட  ஓவர்களில் மிகச்சிக்கனமாகப் பந்துவீசி  இத்தொடரில் சன்ரைசர்சின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் முஸ்தாஃபிசுர். சராசரியாக ஒரு ஓவருக்கு 6.90 ரன்கள் மட்டுமே கொடுத்த ரஹ்மான் இத்தொடரின் சிறந்த இளம் வீரர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத்  தவிர ஆடம் சம்பா, நெஹ்ரா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் சிறப்பாகவே விளையாடினர். எனினும் குறைந்த போட்டிகளில் மட்டுமே இவர்கள் விளையாடியதால்  லெவனில் சேர்ப்பது சரியாக இருக்காது. இவ்வணியில் 4 இந்தியர்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது  மிகவும் கவலைக்கு உரிய விஷயம். இன்னும் ஐ.பி.எல் அணிகள் வெளிநாட்டு வீரர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. இந்நிலை மாறி இந்திய வீரர்கள் ஜொலித்தால்தான் உலக அரங்கிலும் இந்தியா ஜொலிக்க முடியும். அதற்குத்தானே ஐ.பி.எல் நடத்துறோம் யுவர் ஆனர்?!