Monetize Your Website or Blog

Tuesday, 24 May 2016

'மோடிஜி ஏன் அவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதாவை வாழ்த்தினார்?!' குழம்பித் தவிக்கும் தமிழக பா.ஜ.க.



தமிழக அமைச்சரவை பதவியேற்பில் மோடி பங்கேற்காமல் தவிர்த்தது ஏன்? என்ற அரசியல்தான்  இப்போது பா.ஜ.க. வட்டார பட்டிமன்றம்.  அதற்குள் செல்வதற்கு முன் கொஞ்சம் பழைய பதவியேற்பை பார்ப்போம்.

2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் மந்திரி சபை  33 மந்திரிகளுடன் அமைக்கப் பட்டபோது, எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது  விஜயகாந்துக்கு. அன்றைய தினம் பதவியேற்பு விழாவின் போது  மந்திரிகளின் வரிசைக்கு இணையாக பிரதான வரிசையில் அமர வைக்கப் பட்டிருந்தார் தலைவரான விஜயகாந்த்.
   
2011-ல் குஜராத் அரசியலில் சூப்பர் ஸ்டாராக இருந்த நரேந்திர மோடி பிற மாநில முக்கியத் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, அஜீத் சிங்,  நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் ஆகியோருடன் ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அமைச்சரவைப் பதவியேற்பில் பங்கேற்றார். அதே போல இப்போதைய பதவியேற்பிலும் பங்கேற்பார் என அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் படபடத்தது. ஆனால், ஏனோ அது நிகழவில்லை! இத்தனைக்கும் தேர்தல் வெற்றிக்கு ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்னதே இந்தியப் பிரதமர் மோடிதான். ‘’அதுதான் சிக்கலாகிவிட்டது!’’ என்று காதைக் கடிக்கிறார்கள் உள்ளூர் பா.ஜ.கவினர்.

’’தேர்தல் முடிவுகள் முழுமையாய் வந்து முடிவதற்குள் 19-ந் தேதி காலை 11 மணிக்கே தொலை பேசியில் அவசர அவசரமாக  ஜெயலலிதாவின் 'வெற்றிக்கு வாழ்த்துகள்'  கூறியதே பல ஹேஷ்யங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்து விட்டது.  ஒரு பக்கம் பிரதமர் மோடி, ஜெயலலிதாவை வாழ்த்திக் கொண்டிருக்கும்போதே, அரவக் குறிச்சிக்கும், தஞ்சாவூருக்கும் நடக்கவிருந்த தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, பாஜகவும் அதற்குத் துணையாக பாமகவும் மனு கொடுத்தன. ’தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து திமுகவுக்கு எதிராக சதி செய்கிறது.  தேர்தலில் தோற்றிருக்கும் பாஜக, பாமக போன்ற கட்சிகளின் பேச்சைக் கேட்டு முடிவெடுக்கிற தேர்தல் ஆணையம், பெரும்பான்மையாக 98 இடங்களைப் பெற்றிருக்கும் எங்களிடம்  (திமுக)  ஏன் கருத்து கேட்க வில்லை ?" என்ற கேள்வியை இதன் பின்னர்தான் கருணாநிதி வலுவாக எழுப்பினார் . ஆக, தமிழக பா.ஜ.க. ஜெயலலிதாவுக்கு எதிராக வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்க, எங்கள் கட்சியின் டெல்லி தலைமையோ, ஜெயலலிதாவுடன் குபீரென நட்பு பாராட்டுகிறது. இத்தனைக்கும் தமிழக அரசியல் சூழ்நிலையே வேறு.  தமிழகத்தில் காங்கிரசை விட 'டெரர் ' கிளப்பும் கட்சியாக பாஜக இருக்க வேண்டும் என்றுதான் அகில இந்திய தலைமை விரும்பியது. அதனால்தான் எளிதில் காம்ப்ரமைஸ் ஆக விரும்பாத தமிழிசையை  தலைவராக்கியது. அவரும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முழங்கி வந்தார். இதனாலேயே என்னவோ, 2015-ல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மீண்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோது, அந்நிகழ்ச்சிக்கு தமிழிசையை அழைக்க வில்லை.  பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, வெங்கய்ய நாயுடு போன்றோர்தான் அழைக்கப் பட்டிருந்தனர்.  இவர்கள் ஒவ்வொருவரும் , தனித்தனி கோஷ்டி.  ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று திரும்பிய இல.கணேசனிடம் செய்தியாளர்கள், தமிழிசைக்கு ஏன் அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இல.கணேசன், அதற்கு பதில் சொல்லாமல்  'அவர் (ஜெயலலிதா) மீதான வழக்கை எதிர் கொண்டு அதில் வெற்றி கண்டிருக்கிறார். முதல்வராக மீண்டும் பதவியேற்கும் விழாவில் என்னை அதில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டார். ஆகவே இதில் பங்கேற்றேன். அவரது தலைமையிலான அரசுக்கு என் வாழ்த்துகள்' என்றார்.  ஆக, டெல்லி தலைமை தமிழக பா.ஜ.க. தலைமைக்கு ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் இல்லாமல் போனது.
   
இந்த சூழ்நிலையில்தான் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கணக்கு தலைகீழானது. அ.தி.மு.க. தனியாகவும், காங்கிரஸோடு தி.மு.கவும் கூட்டணி வைத்தது. பாஜகவோடு சேரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட தேமுதிக, கம்யூ.கட்சிகள், ம.தி.மு.க, த.மா.கா, வி.சி.கே ஆகியோருடன் கூட்டணி வைத்தது.  தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், தேமுதிகவை, பாஜகவோடு ஒட்ட விடாமல் பார்த்துக் கொண்ட அதிமுகவின் மாஸ்டர் பிளானை கண்டுகொள்ளாமல், ஜெயலலிதாவின் வெற்றிக்கு முதல் ஆளாக பிரதமரே வாழ்த்து சொல்லியது தமிழக பா.ஜ.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆக, பிரதமர் மோடியின் இந்த 'சேம் சைடு கோல்'  தமிழக பாஜகவுக்கு எதிராகவே திரும்பும். இனி தமிழக பாஜகவை லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டும்!" என்று உள்ளுக்குள் கொதிப்புடன் குமுறுகின்றனர் தமிழக பா.ஜ.கவினர்!

இதற்கு வலுசேர்ப்பதுபோல, தமிழக அமைச்சரவை பதவியேற்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆனால், பாஜகவின் மற்ற முன்னணி லீடர்களுக்கு எப்போதும் போல் அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
இனி, தமிழக பா.ஜ.கவின் கேம் பிளான் என்னவாக இருக்கும்?

No comments:

Post a Comment